Wednesday 26 November 2008

மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள் !! ஒரு விழிப்புணர்வு பார்வை..

Image result for Most common rainy season diseasesதமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது.மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். இந்தக் காலத்தில் பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக்கூடும்.

ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும் இழுத்துக் கொண்டோடும் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாக மாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கிய வர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும். 

மழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடிக்கொண்டே இருக்கும். இதனால் எளிதில் நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.. தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா.  இன்ஃபுளூயன்ஸா வைரஸ் நோய்க் கிருமிகள் முதலில் வயதானவர்களையும், குழந்தை களையும் தாக்கும். அதேபோல ஏற்கெனவே நோயுற்றிருப்ப வர்களிடமும் தன் கைவரிசையைக் காட்டும்.

இன்ஃபுளூயன்ஸா தாக்கியப்பின் உடலின் நோய் எதிர்ப்புசக்தியைக் குறைத்து, பாக்டீரியா தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தித் தரும். இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை சாதாரண காய்ச்சலாக நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும் அபாயமும் இருக்கிறது. அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

பொதுவாகவே நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான் நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அதுமட்டுமில்லாது வீட்டை சுற்றி நீர் தேங்கி இருப்பின் அதில் கொசுக்கள் உருவாகின்றன.


* நாளடைவில் தேங்கி இருக்கும் நீர் சாக்கடை போல் மாறி விடுகின்றது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்கிறோம். இவ்வாறு இருக்கும் போது வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி நோய்களை ஏற்படுத்துகிறது.
* சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.
* மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள்  மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரலாம். மழை காலத்தில் தான் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வரலாம்.
* காய்ச்சல், சலதோஷம், இருமல் ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று தகுந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.
* சரியாகிவிடும் என்று வீட்டிலேயே ஏதேனும் மாத்திரை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.
* தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் ரத்தப் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். மழைக் காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
* கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வீட்டில் காய்ச்சிய தண்ணீரை கொண்டு சென்று குடித்தால் மழை கால நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* மழைக் காலத்தின் போது சுத்தமாக இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* வீட்டைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடுவது நல்லது. 
* வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அவர்களுக்கே அறியாமல் கீழே இருப்பதை வாயில் எடுத்து வைத்துக் கொள்வர், எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

வைரஸ் கிருமிகள் காற்றில் துகள்கள் வடிவில் பரவும். எனவே ஒருவர் பயன்படுத்திய டவல், கைக்குட்டை ஆகியவற்றை மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும் தும்மல், இருமல் போன்ற காரணத்தினாலும் வைரஸ் காய்ச்சல் பிறரை எளிதில் தாக்கும்.

கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை  குறைத்து விடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.


மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால் பரவக்கூடியதுதான்.  அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் தும்மல் இருமல் அலர்ஜி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். 


மூன்றுவித பிரச்னைகள் பொதுவாக மழைக்காலத்தில் 3 விதமான பிரச்னைகள் ஏற்படும். மாசுபட்ட சூழ்நிலை, மாசுபடும் குடிநீர், தண்ணீர் சார்ந்த உயிரினங்கள் ஆகியவற்றின் மூலம் நோய்கள் பரவுகின்றன. இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள பழகிவிட்டாலே, நாம் எளிதில் நோய்களை வென்று விடலாம். நிச்சயம் நம் குழந்தைகளுக்கும் இவற்றை கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

நன்றி : டாக்டர்  பீ.பஷீர் அஹமது. விஜயா மருத்துவமனை, சென்னை .

Saturday 22 November 2008

ஜும்மாவை தாமதமாக தொழலாமா ?...



வெளிநாட்டில் வாழும் என் போன்ற சகோதரர்களுக்கு குறிப்பாக பிரான்ஸ் இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவோருக்கு ஜும்மா கிடைப்பது அரிது. அதனால் வேலை நேரத்தில் நேரம் கிடைக்கும் போது 15 அல்லது 30 நிமிடங்கள் முன்னாலோ பின்னாலோ தொழுதால் ஜும்மா கூடுமா? குறிப்பிட்ட மூன்று நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழத் தடை இல்லை என்பதால் இப்படி தாமதமாகத் தொழலாம் அல்லவா?



ஜுமுஆத் தொழுகையை சூரியன் உச்சியிலிந்து சாய்ந்த உடனே சீக்கிரமாகவும் தொழலாம். சற்று நேரம் கழித்தும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (904), திர்மிதீ (462), அபூதாவூத் 916), அஹ்மத் (12057)

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது.

அறிவிப்பவர் : ஸலமா (ரலி),
நூல்கள் : புகாரீ (4168), முஸ்லிம் (1424?)

ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (940)

ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),
நூல்கள் : புகாரீ (939), முஸ்லிம் (1422?)

நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- வெப்பம் தணிந்த பின் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (906)

பொதுவாக ளுஹர் நேரம் சூரியன் உச்சிக்கு வந்த பிறகு தான் ஆரம்பமாகும் என்றாலும் அதற்கு பகரமாக தொழும் ஜும்மா தொழுகை நேரம் லுஹர் நேரத்தை விட விசாலமானதாகும். அதாவது சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பே ஜும்மா தொழலாம். காலை உணவையே ஜும்மாவுக்குப் பின்னர் தான் உட்கொண்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதில் இருந்து காலையிலேயே ஜும்மா தொழுதுள்ளனர் என்பது தெரிகின்றது.

சூரியன் உச்சிக்கு வரும் நேரத்தில் மட்டும் தொழுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.

1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.

2. சூரியன் உச்சிக்கு வந்து சாயும் வரை.

3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1373

Thursday 6 November 2008

தமிழகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிய இஸ்லாமியர்...?

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ - பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ - பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் - துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட - இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க - மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.


நன்றி : தினமணி.