Monday 29 June 2009

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி சுவையான தவகல்கள்!! ஒரு சிறப்பு பார்வை..

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது கிராமிய மக்கள் மத்தியிலும் வெகுகாலமாகப் புழங்கும் ஓர் அற்புதமான அனுபவப் பழமொழியாகும்.மனிதர்களிடம் உள்ள நகைச்சுவை உணர்வு (Sense of Humour) என்பது அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும்; அவர்களை மட்டுமல்ல, அவர்களுடன் பழகுபவர்களிடமும்கூட இதன் தாக்கம் ஏற்பட்டு அவர்களது வாழ்வும் நோயற்ற வாழ்வாக அமையும்.தமிழக மக்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிடங்களேனும் மறக்கச் செய்யும் வித்தை புரிந்த நகைச்சுவை மருத்துவர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றிய சிறு புத்தகம் “அவர்தான் கலைவாணர்’.
இன்று நகைச்சுவை என்ற பெயரில் வெறும் அங்க சேஷ்டைகளையும், மற்றவர்களைக் கிண்டலடித்து சிரிக்கவைப்பதும், அடிவாங்கி சிரிக்கவைப்பதுமாக தமிழ்த் திரைப்பட நகைச்சுவை உலகம் சீரழிந்து கொண்டிருக்கும் வேளையில், இதுதான் சிரிப்பு என்று இன்றைய இளைஞர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் என்.எஸ்.கே. ஒரு மாபெரும் சரித்திரம் என்று அறைந்து சொல்கிறது நமது பதிப்பு.
சினிமாவுக்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் என்.எஸ்.கிருஷ்ணன்! இவர்  நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘சிரிப்புமேதை’, ‘வள்ளல்’, ‘கலைவாணர்’ என்றெல்லாம் மக்களால் புகழப்பட்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் விமரிசனம் செய்த மேதை அவர். ‘என்.எஸ்.கே. நாடக சபா’ என்ற பெயரில் ஒரு நாடகக்குழுவை அமைத்து, அதில் கிடைத்த வருமானம் முழுவதையும் நலிந்த கலைஞர்களுக்காக உதவியது, நாடக உலகிலிருந்து திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் பல புதுமைகளைப் புகுத்தியது, ஒரு கொலைவழக்கில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்தது, அழுதுகொண்டே மற்றவர்களைச் சிரிக்க வைத்தது 
கலைவாணரின் இளம் பிராயத்து வாழ்க்கை தொடங்கி அவரின் இறுதிக் கால வாழ்க்கை வரையாக மிகச் சுருக்கமாகவும், அதே நேரம் செறிவாகவும் பல அறிய தகவல்களோடும் விவரித்திருக்கிரேன் 
ஜெர்மன் ஹிட்லர் ஆட்சிக்காலத்தை சார்லி சாப்ளின் தனது நகைச்சுவையால் கிண்டலடித்து காலி செய்தது போல… அதுவும் எப்படி ஹிட்லரே ரசிக்கும் படி அவரின் நகைச்சுவை அமைந்திருக்கும். அதுபோல தமிழ் நாட்டின் அப்போதைய இழிவுகளை, அவலங்களைத் தனது நகைச்சுவையால் வாழைப்பழத்தில் ஊசி போட்டது போல மன மருத்துவம் செய்தவர் என்.எஸ்.கே. “வாளால் அறுத்துச் சுடிணும், மருத்துவன்பால் மாளாக் காதல் கொள்வதுபோல்’ இந்த சிரிப்பு மருத்துவன் செய்த சமூக சார்ந்த நகைச்சுவையையும் தமிழக மக்கள் ரசித்தார்கள். ஏற்றுச் சிரித்தார்கள். சிந்தித்தார்கள்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்றவுடன், என்னடா இது! ஒரு திரைப்பட நகைச்சுவை நடிகரைப் பற்றியதல்லவா இந்தக் கட்டுரை என்று இளைஞர் சமுதாயத்தைச் சார்ந்த யாராவது சிலர் கேட்டுவிடலாம். ஆகையால் எடுத்த எடுப்பிலேயே, ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெளிவு படுத்த விரும்புகிறேன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சாதாரண சினிமா நடிகர் மட்டும் அல்ல! அவருடைய பன்முகப் பெருமைகள் அதிகம். அவரையும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போல ஒரு சிரிக்க வைக்கும் நடிகராக எண்ணிவிடாதீர்கள். அவரும் சிரிக்க வைத்தவர்தான்; அதோடு மக்களைச் சிந்திக்க வைத்தவர். 'உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைய' ஓடோடிச் சென்று உதவி புரிந்த வள்ளல். துன்பத்திலும் தன் இயல்பான நகைச்சுவையை இழக்காத மன உறுதி படைத்தவர். முந்தைய தலைமுறைக் கலைஞர்தான் என்றாலும் இவரைப் பற்றி ஓரளவாவது இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று உலகம் மிகச் சுருங்கி இருக்கிறது. அன்று, தான் இருக்கும் ஊர்தான் ஒருவனுக்கு எல்லாம். சென்னைக்குச் சென்று வரவேண்டுமானால் கூட அது அன்று பலருக்குக் கைகூடும் காரியமாக இருந்ததில்லை. நாகர்கோயிலுக்கு அருகில் ஒழுகினசேரி எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்து, இளம் வயதில் வறுமையில் கஷ்டப்பட்டு, நாடகக் கம்பெனியில் சேர்ந்து, இயற்கையாக இறைவன் அவருக்கு அளித்திருந்த அளவற்ற திறமையினால் முன்னுக்கு வந்து, வாழ்க்கைப் பாதையில் பல மேடு பள்ளங்களைத் தாண்டி, இன்ப துன்பங்களைத் தாங்கி முதுமை அடையாமலே காலமாகிப் போன ஒரு மாணிக்கம் அவர். அவரைப் பற்றி சில விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பிறப்பு :
நாகர்‌கோயில் அருகே ஒழுகினசேரியில் தந்தையார் சுடலைமுத்துப் பிள்ளை, தாயார் இசக்கி அம்மாள். இவர்களுடைய மூத்த மகன் தான் தமிழகத்தில் புகழின் உச்சியில் இருந்த என்.எஸ்.கே. எனும் என்.எஸ்.கிருஷ்ணன்1908ம் ஆண்டு நவம்பர் ஆம் நாள் பிறந்தார். . இவர் படித்தது என்னவோ நான்காம் வகுப்புதான். தமிழும் மலையாளமும் இவருக்கு நன்கு தெரியும். தந்தைக்கு பெயருக்கு ஒரு வேலை இருந்தது. தாயார் ஒரு குடும்பத் தலைவிதான். மேல் வருமானத்துக்காக இவர் ஒரு சோற்றுக்கடை வைத்து நடத்தி வந்தார். மிக ஏழ்மையான குடும்பம். கிருஷ்ணன் நாடகக் கொட்டகைக்குச் சென்று அங்கு சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் சினிமா கொட்டகைகள் கிடையாது. எல்லா ஊர்களிலும் நாடகம் போட் ஒரு கொட்டகை இருக்கும்.
இளமை பருவம் :
1924இல் கிருஷ்ணனின் தந்தை தன் மகனை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றார். அந்தக் காலத்தில் பல ஊர்களில் பாய்ஸ் நாடகக் குழுக்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலும் சிறுவர்கள்தான் நடித்து வந்தனர். அவர்களுக்குப் பகலில் ஒரு வாத்தியார் பாடம் எடுத்து கதை, வசனங்கள் என்று சொல்லிக் கொடுப்பார்கள். பாடத் தெரிந்த பையன்களுக்கு கிராக்கி அதிகம். அப்படியொரு நாடகக் கம்பெனியில் கிருஷ்ணன் சேர்ந்தார். அங்கு பின்னாளில் பிரபல நகைச்சுவை நடிகராம இருந்த டி.எஸ்.துரைராஜ் என்பவரும் இருந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.


பிரபல நாடக, சினிமா நடிகரும், தேசியவாதியுமான டி.கே.சண்முகம் அவர்கள் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தார். டி.கே.எஸ். அண்டு பிரதர்ஸ் என்று இவர்கள் பிரபலமானார்கள். அவருடைய நாடகக் குழுவின் என்.எஸ்.கிருஷ்ணன் சேர்ந்தார். அங்கு என்.எஸ்.கே. சகலகலா வல்லவனாக விளங்கினார். எந்த நடிகராவது இல்லையென்றால், அவருடைய பாத்திரத்தை ஏற்று நடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.

பல ஊர்களிலும் நாடகங்கள் நடித்து வந்த இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி இவர் நடித்த முதல் தமிழ்ப்படம் 'சதி லீலாவதி' எனும் படம். எம்.ஜி.ஆர். அவர்களும் அந்தப் படித்தில்தான் முதன்முதலாக நடித்துப் புகழ்பெற்று, சினிமாத் துறையின் உச்சிக்குச் சென்றார். திரைப்படங்களில் நடித்தாலும் என்.எஸ்.கே. அவர்களுக்கு நாடகம்தான் முக்கியம். 
திருமண வாழ்க்கை :
இவர் ஒரு முறை புனே நகருக்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது உடன்வந்த ஒரு நடிகையின் நட்பு கிடைத்தது. அவர்தான் டி.ஏ.மதுரம். இவர் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். புனேயில் இருந்த நாளிலேயே இவ்விருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்பாகவே என்.எஸ்.கே. 1931இல் நாகம்மை எனும் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். டி.ஏ.மதுரம் இரண்டாம் மனைவி. அதன்பின் மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாகவும் திருமணம் செய்து கொண்டார்.

நாகம்மைக்கு கோலப்பன் எனும் மகனும் டி.ஏ.மதுரத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. வேம்புவுக்கு ஆறு குழந்தைகள், நான்கு மகன்கள், இரண்டு பெண்கள். மதுரத்தைத் திருமணம் செய்து கொண்ட பிறகு இவ்விருவரும் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்கத் தொடங்கினர். இவர்களுக்கு நல்ல புகழ் கிடைத்து வந்தது. ஓடாத படங்களில் கூட கிருஷ்ணன் மதுரை ஜோடியின் நகைச்சுவைக் காட்சிகளை ஓட்டி வெற்றி பெற்ற படங்களும் உண்டு.
இவருடைய நகைச்சுவைக் குழுவில் பல நடிகர்கள் சேர்ந்து கொண்டார்கள். புளிமூட்டை ராமசாமி, சி.எஸ்.பாண்டியன், (குலதெய்வம்) ராஜகோபால், கவிஞர் சுப்பு ஆறுமுகம் போன்றோர் இவருடன் இருந்தவர்கள். இவருடைய மூளையில் உதயமாகி திரையில் உலாவந்து பிரபலமான சில நிகழ்ச்சிகள் உண்டு. அவை "கிந்தனார் காலக்ஷேபம்", "ஐம்பது அறுபது" நாடகம் போன்றவற்றைச் சொல்லலாம். இவருடைய பாடல்கள், நாடகங்கள் இவற்றில் புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்கள் இருக்கும். ஆகையால் இவரை உரிமை கொண்டாடி பல அரசியல் கட்சிகளும் முயன்றாலும், இவர் திராவிட இயக்கத்தின் பால் இருப்பதைப் போன்ற ஒரு நிலைமையை உருவாக்கி யிருந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்களிடம் இவருக்கு இருந்த நெருக்கமும் அந்த நிலைமையை உறுதி செய்வதாக இருந்தது.
"நல்லதம்பி", "பணம்", "மணமகள்" போன்ற இவருடைய படங்கள் அன்றைய நாளில் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தின. இந்தச் சூழ்நிலையில் தான் யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்

சினிமா வாழ்க்கை :
சாதாரண வில்லுப்பாட்டுபக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
`வசந்தசேனா’ படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!
   

·தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
   
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்
அம்பிகாபதி
மதுரை வீரன்
நல்லதம்பி
இவர் இயக்கிய படங்கள்
பணம்
மணமகள்

இவர் பாடிய பாடல்கள்
ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
ஆரவல்லியே (ஆர்ய மாலா)
கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
கண்ணனெந்தன் (கண்ணகி)
இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
சந்திர சூரியர் (அம்பிகாபதி)
தீனா…மூனா…கானா…(பணம்)
உன்னருளால் (ரத்னமாலா)
என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
நாலுக் கால் குதிரை (ஆசை)
தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
நல்ல பெண்மணி (மணமகள்)
ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)
 சமூக சீர் திருத்தம் :
கருத்துகள் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.
1957 –ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். `இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு  அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்’ என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!
காந்தியவாதி :
அண்ணல் காநதியடிகளிடமும் காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பினனர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தமது ஊரான அண்ணல் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பியவர்.
கொலைக் குற்றச்சாட்டு:
 சென்னையில் 1944இல் "இந்துநேசன்" பத்திரிகை ஆசிரியர் லக்ஷ்மிகாந்தன் கொலைசெய்யப்பட்ட வழக்கில் இவரும் அன்றைய காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் கோவை திருப்பட முதலாளி, இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைதாகினர். சென்னையில் வழக்கு நடந்து முடிந்து என்.எஸ்.கே., பாகவதர் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தமிழ் நாடே அழுதது. இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்தனர். முடிவில் 1946இல் இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார்
இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. . எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.விடுதலைக்குப் பின் என்.எஸ்.கிருஷ்ணன் சோர்ந்துவிடவில்லை. புதிய நட்புகள், ஆதரவாளர்கள், திரைப்படத் துறையில் புதிய சிந்தனை, புதிய வளர்ச்சி இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு என்.எஸ்.கே. தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டார். சமூகப் படங்களை எடுத்து வெளியிட்டார். நன்றாக சம்பாதித்தார், நன்றாகவும் தான தர்மங்களைச் செய்து, பிறருக்கு உதவிகள் செய்து அவற்றை நல்ல முறையில் செலவிடவும் செய்தார். தன் கையில் இருப்பதை அப்படியே தானம் செய்துவிடும் நல்ல பண்பு அவரிடம் இருந்தது. அவரால் பயனடைந்தவர்கள் ஏராளம்.
கலைவாணர் பட்டம் :   
சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு `கலைவாணர்’ என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
   
 ``என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!’’ என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!

  1957 –ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். `இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு  அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்’ என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!


 கொடை வள்ளல் :        

·         தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். `அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்’ என்று வீட்டில் உள்ளவர்கல் சொல்லவே, `அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே’ என்பாராம்!

·         ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், `எனக்குத் திருமணம்’ என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, `இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்’ என்றார்!   

·         `தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!’ என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
   

மறைவு:

கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார், `நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன்.
அவருக்கு வயிற்றில் ஒரு கட்டி வந்து தொல்லை கொடுத்தது. சென்னை பொது மருத்துவ மனையில் சேர்ந்து வைத்தியம் செய்து கொண்டும் பலன் இல்லாமல் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி   தனது 49-வது வயதில் என்.எஸ்.கிருஷ்ணன் இப்பூவுலக வாழ்வை நீத்து புகழுடம்பு எய்தினார். 
கலைவாணர் அரங்கம்:
தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது. தற்போது அது இடிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் புதிய கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகிறது.
முடிவுரை 
லைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் கலைத்துறையில் நாடகம், சினிமா போன்ற துறைகளில் எளிதில் காணமுடியாத கொள்கை வைரமாகும்!
அவரது நகைச்சுவைக் காட்சிகள் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இராது; மாறாக, வாழ்வியலை மற்றவர்களுக்கு ஒரு சில நொடிகளில் பதிய வைக்கும் ஆற்றலை உள்ளடக்கியவையாகும்!
அவர் மறைந்து சுமார் 50 ஆண்டுகளுக்குமேல் ஆன போதிலும்கூட, கலையுலகில் அவர் சாகா சரித்திரமாக வாழ்ந்து வருகிறார்கள்!
அவரது வாழ்க்கையில் பல்வேறு பழிகளுக்கு ஆளாகி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதை உள்ளபடி ஏற்றும்கூட, சிறையேகிய பின்னரும் உறுதி குலையாது, உண்மையை நிலைநாட்டி விடுதலையாகி வந்தும் தனது தொண்டறத்தைத் தொடர்ந்தவர்!
தனது பொருளையெல்லாம் தாராளமாக வாரி வழங்கிய ஒப்புவமை இல்லாத வள்ளல் அவர்! 


எந்தெந்த வள்ளல்களைப்பற்றியெல்லாம் படிக்கிறோம்; ஆனால், நம் கண்ணெதிரே வாழ்ந்த கலைவாணர் அவர்கள் தமது பொருள், செல்வத்தை ஊருணி நீராக மக்களுக்குத் தந்த மகத்தான உண்மை வள்ளல் ஆவார்கள்! தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!


காலங்கள் மாறினாலும், திரைப்படத் துறையில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், வாழ்விலும் தொழிலிலும் இவர் ஓர் உன்னதமான மனிதனாக வாழ்ந்ததினால் என்றும் இவர் புகழுடம்பு பெற்று வாழ்ந்து வருகிறார். வாழ்க கலைவாணர் என்.எஸ்.கே. புகழ்!

ஆக்கம் மற்றும் தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment