Saturday 21 January 2012

வெற்றி அடைவது எப்படி -- சில புருடாக்களும், நிஜங்களும்....

வெற்றியாளர்களை நமக்கு உள்ளூரப் பிடிக்காது. இதன் காரணம் ஒருவர் தொடர்ந்து வெற்றி பெறுவதில் ஒரு அதர்க்கம் உள்ளது. இந்த அதர்க்கம் வெற்றியாளன் மீது கோபமாக மாறுகிறது. வெற்றியின் காரணங்களாக ஒரு பட்டியல் தரப்படுகிறது. அடிப்படையான உழைப்பு, மனவலிமை, ஒழுக்கம் ... என்று போக இந்த சூத்திரத்தில் நமக்கு அகப்படாத ஒரு கூட்டல் / பெருக்கல் குறி மறைந்துள்ளது. அது என்ன? சரியான சந்தர்பத்தில் சரியான நபர் வலது காலை வைப்பதா?

சந்தர்ப்பவாத வெற்றிக்கு ஏகப்பட்ட உதாரண கதைகள். தற்போது வெளியான Luck by Chance இந்திப் படத்தின் கரு இதுதான். ஆனால், அங்கேயும் ஒரு ஓட்டை உள்ளது. சந்தர்ப்பம் (ஒழுக்கமான, கடுமையாய் உழைக்கும், மனவலிமை மிக்க ... ) வெற்றியாளனை ஒரு சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்வதில்லை. நம் மத்தியில் சந்தர்பங்கள் ஒத்துழைக்காத, சோம்பல் கொண்ட, உள்நடுக்கம் மறைக்கும் பல குழப்பமான வெற்றியாளர்கள் வேறு. மேலும் குழப்பம். வெற்றி எனும் இந்த புதிர் பற்றி எத்தனையோ சுயமுன்னேற்ற புத்தகங்கள். இவை வெற்றியை ஒரு பழக்கம் என்பவை. ஒரே மாதத்தில் வெற்றியாளனாவது எப்படி, வெற்றியாளனுக்கான ஏழு பழக்கங்கள், உங்களுக்குள் இருக்கும் ராட்சதனை உசுப்பி விடுங்கள் ... இப்படி. இவை மனவியல், நரம்பியல் என்று அலசி ஒரு வெற்றியாளனுக்கான மனநிலையை பயிற்சி மூலம் உருவாக்கினால் நீங்களும் வெற்றியாளன் என்கிறது. இவற்றைப் படித்த கோடிகள் வெற்றியாளர்கள் ஆகவில்லை. புதிர் தொடர்கிறது. அதனால் மேலும் பலர் கோடிக்கணக்கில் வாங்கிப் படிக்கின்றனர்!

விடாமல் நட்சத்திரங்கள் சொல்லும் வெற்றி ரகசியங்களை ஞாயிறு மலர்களில், டி.வி பேட்டிகளில் காப்பி டம்ளர் வாயருகே வைத்து படிக்கிறோம், கேட்கிறோம்: "நள்ளிரவு பன்னிரெண்டுக்கு தூங்கினால் பத்து நிமிடத்தில் எழுந்து அம்மா தரும் ஹார்லிக்ஸ் குடித்து, மறக்காமல் கக்கூஸ் போய் விட்டு, மறுபடி கடுமையான உழைப்பை தொடர்வேன்". என்ன மனிதர்கள்! மனுஷ்யபுத்திரன் பற்றி ஜெயமோகன் என்னிடம் சொன்னார்: "தொடர்ச்சியாய் ஒரு நாளில் 22 மணிநேரம் உழைக்கக் கூடியவர். தீபாவளி, பொங்கல், கலவரம் என்றால் ஊடகங்களில் தேடி வந்து மைக் நீட்டும் இடத்தை இப்போது அடைந்து விட்டார் பாருங்கள்!" ஆனால் ஒரு கலைஞன் அலாரம் கிளாக் உழைப்பாளியாக இருக்க முடியாது. பிற்பாடு என் ஊகம் சரி என்று உணர்ந்தேன். ம.பு.விடமும் நிறைய சோம்பல் உண்டு.

வெற்றியாளனிடம் ஒரு மிகையான தன்னம்பிக்கை, அதன் விளைவான மூர்க்கம், கடிவாள மனக்குவிப்பு தனியாகத் தெரியும். உங்கள் நெரிசலான, ஓட்டை மின்விசிறி சடசடக்கும், புத்தகங்கள் சிதறிய அறைக்குள் ஒரு நிர்வாண அழகி நுழைகிறாள் என்று கொள்ளுங்கள். உங்கள் உடலுள் ஜிவ்வென்று சூடு கிளம்ப அவளை அடையப் போகிறேன் என்று நொடியில் நம்பிக்கை கொள்கிறீர்கள். ஐயம் சிறு பிசிறு அளவும் இல்லாமல். ஒரு வெற்றியாளனுக்கு இதுபோல் பரிசு கையருகிலேயே உள்ளது என்ற பிரமை உள்ளது. எண்ணமல்ல, உணர்வு. வெற்றியை அறியாதவனுக்கு அது பார்வைப் புலம் தாண்டி வெகுதொலையில் எங்கோ...

கிரிக்கெட்டில் தொடர் வெற்றிகள் குவிக்கும் அணிகள் படிப்படியாக அவ்விடத்துக்கு வருவதை கவனிக்க வேண்டும். அப்புறம் அந்த இடத்திலிருந்து ஒருசேர தள்ளினாலும் புட்டம் உயர்த்த மாட்டார்கள். ஒரு குழுவின் வெற்றியின் வரலாறு தான் தொடர்ந்து வெற்றியை தக்க வைக்க பயன்படுகிறது. வெற்றி வரலாற்றை சுமப்பவர்கள் வெற்றிக்காக குனிந்து தத்தம் பெருவிரல் நக்கவும் தயங்க மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் அணி போன முறை ஆஸ்திரேலியா பயணித்தபோது ஆஸி அணியினர் பல பொய் பாசாங்குகள் மூலம் டெஸ்டு தொடரை தாங்கள் வெல்வதை உறுதி செய்தது. "ஒரு அணி மற்றும் தான் நேர்மையாக ஆடியது" என்று கும்பிளே ஊடகங்களிடம் பஞ்சியதும் உலகமே ஆஸி மூர்க்கத்தை வெறுத்தது. பின்னர் இந்தியா வந்து மீண்டும் தொடர் ஆடி தோற்ற பின்பும் ஆஸி தலைவர் ரிக்கி பாண்டிங் தோல்வியை முழுக்க ஒப்புக் கொள்ள மறுத்தார். "தொடரில் பெரும்பாலும் நாங்கள் தான் முன்னிலையில் இருந்தோம்" என்றார். இது திமிர் அல்ல. வெற்றியின் நீண்ட பாரம்பரியத்தின் எல்லையில் கூட ஒருவனுக்கு இருக்கும் 'வெற்றி இதோ அடுத்து வரப் போகிறது' என்ற அபரித நம்பிக்கை. இந்த முறை பிடி நழுவு விட்டது, அடுத்த முறை அகப்படும் என்ற உறுதிப்பாடு. தோல்வி அடைந்து வருகிறோம் என்று நம்ப ஆஸி அணிக்கு வெகுகாலம் பிடிக்கும். இதுவரை எந்த ஒரு குறிப்பிடும்படியான தொடர் வெற்றிகளையும் அறிந்திராத நியூசிலாந்தின் அணித் தலைவர் விட்டோரி தற்போதைய இந்திய தொடரின் ஒரு நாள் ஆட்டம் ஒன்றின் போது சேவாக் ஒரு போட்டியில் விளாசிட உடனே இப்படி சொல்கிறார்: "எங்கள் அணி வீரர்களுக்கு சேவாக்கின் மீது உள்ளூர நடுக்கம்". அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா அதிரடியாய் ஓட்டங்கள் குவித்து தொடரை வெல்ல தொடர்ந்து தண்டனிடுகிறார்: "இந்தியாவைத் தோற்கடிக்க நாங்கள் 500 ஓட்டங்கள் எடுக்க வேண்டும்". ரிக்கியின் சவடால்களோடு இந்த பணிவை ஒப்பிடுங்கள். வெற்றியாளனுக்கு இரண்டாவது கன்னம் காட்டத் தெரியாது.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கவாஸ்கர் சொன்னார்: "எங்கள் காலத்தில் இவ்வளவு சுதந்திரமாக, ஆக்ரோசமாக ஆட முடியவில்லை.". காரணம் அப்படி ஆடும் முன்னோடிகள் அவருக்கு இல்லை. பிறகு வந்த சச்சினுக்கு கவாஸ்கரும், விவியன் ரிச்சர்ட்ஸும் முன்னோடிகள். அவரது ஆட்டம் இவ்விருவரின் கலவை. சேப்பாக்கில் வார்னேயை மட்டு மரியாதை இன்றி சச்சின் விளாசிய சிக்சரின் ரீப்ளேதான் யுவ்ராஜின் சமீபத்திய 6 சிக்சர்கள். இப்போதைய ரைனா, உத்தப்பா, ரோஹித் வகையினரின் தன்னம்பிக்கை சேவாகின் ஆட்டத்தை தொடர்ந்து வருவது.

இப்படி முதல் வெற்றிக்குப் பின் இரண்டாவது எளிதாகி விடுகிறது. அது எப்படி என்பது ஒரு சிக்கலான கேள்வி.

சமீபத்தில் ரோயல் சொசைட்டி இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை படித்தேன் (rspb.royalsocietypublishing.org/content/early/2009/03/06/rspb.2009.0132.abstract ). இனப்பெருக்க காலத்தில் சிக்ளிட் மீன்கள் துணைக்காக மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் மீனுக்கு அதிகமாய் ஆண்டுரோஜென் ஹார்மோன் சுரக்கிறது. இந்த சுரப்பு காரணமாய் அடுத்த போட்டியில் இதே மீன் படு மூர்க்கமாய் மோதுகிறது. முன்னர் தோற்ற மீன் இப்போது எளிதாய் தோற்று சடுதியில் ஓடி விடுகிறது. சரி, ஆண்டுரோஜன் தானே வெற்றியை தீர்மானிக்கிறது என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் தோற்ற மீனுக்கு வெற்றியாளனது அளவில் ஆண்டுரோஜென் ஏற்றி மீண்டும் மோத விட்டார்கள். யார் ஜெயித்திருப்பார்கள்? முதல் சுற்றில் வென்ற மீன்தான்.

என்னதான் ஹார்லிக்ஸ், மெமரி பிளஸ், ஏஸி, டியூசன் என்று அமைத்துக் கொடுத்தாலும் பையன் படிக்க மாடேன் என்கிறானே சார் என்று விசனிக்கும் பெற்றோர் பொறுமை காக்க வேண்டும். வெற்றி மிதிவண்டி பழகுவது போல. பழகினால் மறக்க சிரமம். மேற்சொன்ன ஆராய்ச்சியாளர்களின் முடிவும் இதுவே. தோல்வி அனுபவம் மேலும் தோல்விக்கு தள்ளி விடுகிறது. மற்றபடி 'தோல்வி வெற்றிக்கு முதற் படி' என்பது எல்லாம் புருடா.

தற்போது நடக்கும் India-Australia தொடரில் India  தோற்றதற்கு ஒரு காரணம் அவர்களின் தோல்வி ஞாபங்களே.

சரி, இந்த முதல் வெற்றி எப்படி கிடைக்கிறது? தெரிந்தால் சொல்லுங்கள்!

No comments:

Post a Comment