Monday 18 January 2010

நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..?

                                                             
தவ்ஹீது (ஏகத்துவம்)தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.

அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்  'அஹ்லுஸ் ஸூன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர்

இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!

இஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் ஒன்றை ஏவினால் அதை ஏற்று நடப்பதே ஒருவர் முஸ்லிம் என்பதற்கு சான்று. மாறாக அவற்றில் மாற்றம் கொள்வதற்கோ - திருத்தம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. இதை அல்லாஹ் தன் வான் மறையில்

 அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((33:36))

 திருக்குர்-ஆன் மிக தெளிவாக எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் விலக்குவதற்கும் அளவுக்கோலை ஏற்படுத்தி இருக்க எந்த ஒரு காரியமெனிலும் அது அல்லாஹ்வுடைய அங்கீகரிப்பும், அவனுடைய தூதரின் வழிக்காட்டுதலும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாய் மார்க்க விசயங்களில் இவை இன்னும் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.

இறைவனை மையப்படுத்தும் விசயங்களிலெல்லாம் இறை நேசர்களை  முன்னிலைப்படுத்தும் நபர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்றும் அவற்றை களைவதற்காக குழுமியிருக்கும் நபர்கள் தவ்ஹீதுவாதிகள் என்ற பெயரிலும் சமூக பார்வையில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

சுன்னத் ஜமாஅத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்வோர்களிடம் நாம் வினவினால் அவர்கள் கூறும் பதில் இது தான்
அல்லாஹ்விற்கு யாரையும் நாங்க இணைவைப்பதில்லை. மாறாக இறைவனிடத்தில் எங்களின் துஆ விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட இறை நேசர்களை முன்னிலைப்படுத்துகிறோம் என்பதே...

 கப்ரு ஜியாரத்திற்கு இது தாம் மையக்காரணமாக கொண்டால் இச்செய்கை அவர்களின் அறியாமையென்று தெளிவாய் நிரூபிக்கலாம்.
பிடரியின் நரம்பை விட அருகாமையில் இருப்பதாக சொல்லும் போது இறைவனிடம் நம் துஆக்களை சொல்ல இரண்டாம் நபரின் குறுக்கீடு அங்கு அவசியமானதன்று. அதுவும் எந்த ஒரு நபருக்கும் மற்றவரின் பரிந்துரையும் ஏற்க்கபட மாட்டாது என தெளிவாய் சொல்லப்பட்டிருக்கும் போது மேற்கண்ட காரணம் அறியாமையின் விளைவே!

அதுமட்டுமில்லாமல் இறை நேசர்களின் வருகையின் நோக்கம்
அல்லாஹ் மட்டுமே வணத்திற்குரியவனாக ஏற்க வேண்டும் -அவனுக்கு இணை துணை கற்பிக்க கூடாதென்றும்
நபிகள் (ஸல்) அவர்களின் போதனைப்படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். புதிதாய் மார்க்கத்தில் எதையும் ஏற்படுத்தக்கூடாது -என்பதை தெளிவாய் வலியுறுத்துவதற்கே என்பதாய் இருக்கும்.

மேற்கண்ட நோக்கத்திற்காக ஒருவரது வருகையும் வாழ்வும் இருப்பது உண்மையானால்
  • எந்த தேவைக்கும் என்னை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்றோ
  • எனது மரணத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை கப்ருரில் சந்தனம் பூசி கந்தூரி விழா நடத்துங்கள் என்றோ எப்படி சொல்வார்? 

    ஒருவரை நாம் மதிப்பது உண்மையென்றால் அவரது வழிமுறைகளை பேணுவது அவசியமான ஒன்று. இன்று இறை நேசர்களுக்கு கண்ணியம் செய்கிறோம் என்ற பெயரால் அவர்கள் மீதான புகழ்ப்பாக்களாக மௌலிதுகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

    அவர்களின் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் மீது மௌலிதுகளை ஓதியதாக எந்த வித ஆதாரப்பூர்வ வரலாற்று சான்றுகளும் இல்லை, ஏனெனில் மார்க்கம் அங்கீகரித்திராத செயல் என்பதை அவர்களே அறிந்திருந்தனர். ஆக அவர்களே செய்யாத, முன்மொழியாத ஒன்றை அவர்களின் பெயரில்
செய்வதற்கு மார்க்க ரீதியில் ஆதார தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்..?

இவைதான் 
இப்படித்தான்
தர்ஹா -கந்தூரி- தகடு தாயத்துக்களை ஆதாரிப்போர் மத்தியில் எழுப்ப வேண்டிய கேள்விகள்... 

ஆனால்,


" தர்காவுக்கு போறியா அப்ப நீ நரகத்திற்கு தான் போவே...! "

    ஏற்படும் தீமையின் விளைவை மென்மையின்றி எடுத்துரைப்பதால் அவர்களின் செவிப்பறையில் செருக்குடன் அமர்ந்திருக்கும் சைத்தான் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். ஏற்க மறுப்பதோடு எதிர் வினையும் ஆற்றுகிறான். செவி மூடும் சைத்தான் பிரச்சனைக்கான வழி திறக்கிறான்
அவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் ஒரு கட்டத்தில் இறை நேசர்களின் வாழ்வை விமர்சிக்கும் நிலைக்கு செல்கிறது.

ஒருவரை விமர்சிப்பதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் இருக்கவேண்டும்.


1. அவரது சொல், செயல் மற்றும் வாழ்வியல் கூறுகளை நாம் நேரடியாக அறிந்திருக்க வேண்டும். அதற்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்தால் மட்டுமே நமக்கு சாத்தியம்.


2. அவரது வாழ்வை விளக்கும் நம்பத்தகுந்த ஆவண சான்றுகளில் அவர் குறித்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

இன்று இறைநேசர்களின் வரலாறுகள் என்று நமக்கு கிடைக்கபெற்றிருப்பதெல்லாம் அவர்களின் மறைவுக்கு பின்னரே அதுவும் நம்பகதன்மை குறைபாடுடன் எழுதப்பட்ட வரலாறுகளே. அதிலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் ஏதுமின்றி கறாமத்துகள் எனும் பெயரில் அற்புதங்களாக அவர்களின் வாழ்வில் சில செயல்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

    நம்பக தன்மையில்  குறைப்பாடுடைய இத்தகைய வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருவரை உண்மையாக விமர்சிக்க முடியாது. ஆக அவர்களின் வாழ்வை குற்றப்படுத்தி விமர்சித்தல் என்பது பொருளற்றதாக தான் இருக்கும். ஒருவர் மரணித்தவுடன் அவரது செயல்களுக்கான பிரதிபலனை இறைவனிடத்தில் அடைந்துக்கொள்வார் எனும் போது அவர்களை விமர்சிப்பதும் தேவையில்லாத ஒன்றே!

    மேலும் அப்படி விமர்சிப்பதிலும் எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தான் மதிக்கும் / நம்பும் ஒன்றை விமர்சிக்கும் போது அதன் தாக்கம் கோபமாக மாறி சொல்வோர் மீது வெறுப்பாய் திரும்புகிறது. சொல்லுவது உண்மையாக இருப்பீன் கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பின் கூறும் இறைமறை வழி விளக்கமும், நபிமொழி போதனையும் பயனற்று தான் போய்க்கொண்டிருக்கின்றது.  இதன் விளைவாய் தனிமனித சாடல்களும் -இயக்க மோதல்களும் அரங்கேறுகின்றன.


மேலும் இயக்கம் சார்ந்து இஸ்லாமிய குறியீடுகள் முன்னிருத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா? 

     இவ்வுலகின் உயர்ந்த ஒற்றை சொல்லான தவ்ஹீது என்ற பதம் இயக்கரீதியில் முன்னிருத்தப்படுவதாக எண்ணி எத்தனையோ பேர் நான் தவ்ஹீதல்ல..! என்றும் தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின் ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத் காரனல்ல..! என்று பலர் இன்றும் சொல்ல காண்கிறோம்.

உங்களில் சில பேருக்குக்கூட இவ்வாக்கத்தின் தலைப்பு ஒருவித சலனங்களை மனதில் ஏற்படுத்தி இருக்கலாம்... சிந்திக்கவேண்டும் சகோ! இவ்விரு வார்த்தைகளின் செயல்முறை வடிவம் ஒருசேர நம்மிடையே அமையா விட்டால் நமக்கு பெயரே வேறு! 

  அறியாமை களையப்படவேண்டியது என்பது சந்தேகமில்லை ஆனால் அவற்றை விளக்கும் முறை அழகிய வழியில் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமென்பதை விட மார்க்க கடமையும் கூட!. மாறாக முன்முடிவுகள் -பிடிவாதத்தோடு செயல்படுவோரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்???

   நபி வழியில் தான் தமது வாழ்வை அமைத்துக்கொள்வதாக கூறுவோர் மேற்கண்ட நிலைகளை சற்று ஆராய வேண்டும். ஏனெனில் நமது வாழ்வியல் முறைக்கு அல்லாஹ்வின் தூதர் அனைத்திலும் முன்மாதிரியாய் செயல்பட்டிருக்க அடுத்தவர்களின் வழிக்காட்டுதல் அவசியமில்லாத ஒன்று.

இறைநேசர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால். அவர்கள் வணங்கப்படுபவர்களாக யாரும் பொருள் கொள்ள வழி செய்து விடாதீர்கள்!

நாம் மட்டுமல்ல நாளை அவர்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்!

No comments:

Post a Comment