Wednesday 15 February 2012

டான்செட் நுழைவுத் தேர்வுவிஷ்வபாரதி

தமிழகக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர டான்செட் தேர்வு எழுத வேண்டும். இந்த முதுநிலைப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் முதுநிலைப் படிப்புகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளிலும் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதன் அடிப்படையில்தான் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும்.

எம்.பி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இளநிலைப் பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். அரசின் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, அதைத் தொடர்ந்து இளநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு படித்ததும் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து அதற்குப் பிறகு லேட்டரல் என்ட்ரி மூலம் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பார்ம்., படிப்புகளில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

அசோசியேட் மெம்பர் ஆஃப் தி  இன்ஸ்டிடியூஷன் ஆஃப் என்ஜினீயர்ஸ் சான்றிதழ் பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அந்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் ஆசிரியராகவோ அல்லது நிறுவனங்களில் பணிபுரிந்தோ இருக்க வேண்டும்.

எம்.சி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்,  ஏற்கெனவே சொல்லியபடி ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ படித்து விட்டு கணிதப்பாடத்துடன் இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் இடம் பெறும் மாணவர்கள், 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

எம்.இ.,எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான்., போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., அல்லது பி.பார்ம், பி.எஸ்சி (வேளாண்மை, வனம், தோட்டக்கலை, மீன்வளம்) படிப்புகள் அல்லது அறிவியல் படிப்புகளில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. மூன்று ஆண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு மற்றும் இரண்டு ஆண்டு எம்.எஸ்சி. இன்பர்மேஷன் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளை படித்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதனுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தொழில்முறை அமைப்புகள் அல்லது சங்கங்களிடம் இருந்து ஏ மற்றும் பி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். அந்தச் சான்றிதழுடன் இரண்டு ஆண்டுகள் துறை சார்ந்த முன் அனுபவ சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

பி.இ., பி.டெக். படிப்புகள் தவிர்த்து லேட்டரல் என்ட்ரி மூலம் வேறு ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., படிப்புகளில் வார  இறுதியில் நடைபெறும் வகுப்புகளில் படித்தவர்களும், பி.இ., பி.டெக். படிப்புகளில் தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்களுக்கும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாது. இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

டான்செட் நுழைவுத் தேர்வு மொத்தம் இரண்டு மணி நேரம். நுழைவுத் தேர்வில் எம்.பி.ஏ. கேள்வித்தாளில் பிசினஸ் டிசைன், கணிதம், ஆங்கிலம், காம்ப்ரிஹென்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். இந்தக் கேள்வித்தாளுக்கான மொத்த மதிப்பெண்கள் 100. மொத்தக் கேள்விகள் 100. குவாண்டிடேட்டிவ் அபிலிட்டி, அனாலிட்டிக்கல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், கம்ப்யூட்டர் அவர்னஸ் போன்ற கேள்விகளும் அடிப்படை அறிவியல் குறித்து சில கேள்விகளும் உள்பட மொத்தம் 100 கேள்விகள் எம்.சி.ஏ. நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் இடம்பெறும். அப்ஜெக்ட்டிவ் முறையில் உள்ள இந்தக் கேள்விகளுக்கான தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வில் கேள்வித்தாள் மூன்று பகுதிகளைக் கொண்டது. இதில் முதல் இரண்டு பகுதிகளும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானது. முதல் பகுதியில் 30 கேள்விகளுக்கும், இரண்டாம் பகுதியில் மொத்தம் 45 கேள்விகளுக்கும் மாணவர்கள் விடையளிக்க வேண்டியதிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா ஒரு மதிப்பெண். அனைத்துக் கேள்விகளும் அப்ஜக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். இரண்டாம் பகுதியில் உள்ள 45 கேள்விகளில் 30 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளித்தால் போதும். பகுதி மூன்று மட்டும் மாணவர்கள் எடுத்துக்கொண்டசிறப்புத் துறைகளின் அடிப்படையில் கேள்விகள் அமைந்திருக்கும். இதில் மொத்தம் 40 கேள்விகள் இடம்பெறும். அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டியதிருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

எம்.பி.ஏ. படிப்பில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 31ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை நடைபெறும். எம்.சி.ஏ. படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 31ஆம் தேதி பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் முதல் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.
சென்னை, கோயமுத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் போன்ற 15 ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் எஸ்.சி. அருந்ததியர் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., போன்ற அனைத்துத் தேர்வுகளுக்கும் ஒரே விண்ணப்பம்தான். எனவே, மாணவர்கள் ஒரே விண்ணப்பத்தை மட்டும் பயன்படுத்தி இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்பட்சத்தில் தேர்வுக் கட்டணம் கூடுதலாக ரூ. 500 செலுத்த வேண்டியதிருக்கும். அதுபோன்ற நிலையில் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி அருந்ததியர் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. விண்ணப்பங்களை நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி உண்டு.
விண்ணப்பங்களை மற்ற மையங்களில் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யவேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 23.

விண்ணப்பங்கள் சென்னையில் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டிய கடைசிதேதி: பிப்ரவரி 25.
விவரங்களுக்கு : http://www.annauniv.edu/tancet2012

No comments:

Post a Comment