Friday 13 July 2012

இந்திய மகாராஜகளும் அவர்களின் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும்-ஒரு சிறப்பு பார்வை...




ரோல்ஸ் ராய்ஸ் காரின் வரலாறுஅது இந்தியாவுக்குள் டயர் பதித்த கதைகளையும் அதனை நம் மகாராஜாக்கள் எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்ற விவரத்தை இங்க பாக்கலாம்.

ஹென்றி ராய்ஸ் (Frederick Henry Royce) என்ற பிரிடீஷ்காரர்,ஏழ்மையான குடும்பத்தில் ஐந்தாவது வாரிசாக பிறந்தார். அவருக்கு கணிதம்மெக்கானிகல் துறைகளில் நிறையவே ஆர்வம்ஆனால் குடும்ப சூழ்நிலையில் படிக்கவில்லை. பல்வேறு வேலைகள் பார்த்தார். எல்லாம் இயந்திரம் சம்பத்தப்பட்ட வேலை தான். தன் 21 வது வயதில் சொந்தமாக ஒரு சிறு நிறுவனத்தை தொடங்கினர். மோட்டார்வாகனத்துக்கான சிறு சிறு பாகங்களை தயாரித்து கொடுக்கும் நிறுவனம் அது. அவர் பிழைப்பு ஓடியது.

ராய்ஸ்க்கு 40 வயது ஆன போதுசொந்தமாக கார் ஒன்றை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அது Decauville என்ற பழைய கார். அதை ஓட்டி பார்த்த ராய்ஸ்க்கு கோபம் தான் வந்தது. அதிக சத்தம்மிக மெதுவான இயக்கம்ஸ்டார்ட் செய்வது ரொம்பவே கஷ்டப்படவேண்டும் என்று ஏகப்பட்ட குறைகள்.

தானே ஒரு காரை தயாரித்துப்பாக்கலாம் என்று முடிவு செய்த ராய்ஸ்,படபடவென களத்தில் குதித்தார். ஒரே வருடத்தில் ஒரு புதிய கார் தயாரானது. 1904 ஆம் வருடம் ஏப்ரல் அன்று அதை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தார். அது ஓட்டுவதுக்கு சத்தமின்றிசிரமமின்றி இருந்தது.

ராய்ஸ்ன்  புதிய வெற்றிகரமான கார் பற்றி சார்லஸ் ஸ்டீவர்ட் ரோல்ஸ்(Charles Stewart Rolls) என்பவர் அறிந்தார். ரோல்ஸ் நிறைய படித்தவர்,கார் வியாபாரிநல்ல வசதி படைத்தவர். ரோல்ஸ்ராய்ஸ் உடன் இணைந்து புதிய ரகக் கார்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்துக் கொண்டார்கள். அவர்கள் தயாரிக்கும் காருக்கு ரோல்ஸ் ராய்ஸ் (RR)என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள். வேலைகள் தொடங்கப்பட்டன.

1905 இல் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார்ஒரு பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடியது. பின்னர் படிப்படியாக இங்கிலாந்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பரவ ஆரம்பித்தது. விக்கப்பட்ட முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 395 பவுண்ட். கோஸ்ட்டான்பாண்டம் என்று பல்வேறு மாடல்களில் வந்து கலக்க ஆரம்பித்தன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இருந்த நாடுகளில் எல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் நுழைய ஆரம்பித்தன.

1908 ஆம் ஆண்டு பம்பாய்க்கும் கோலாபுருகும் இடைய ஒரு கார் பந்தயம் நடைபெற்றது. அந்த பந்தயத்தை காண குவாலியர் மகாராஜா இரண்டாம் மாதவ்ராவ் சிந்தியா வந்திருந்தார். அது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நடைபெற்ற பந்தயம். சாலைகள்சரியான பாதைகள் கூட இல்லாத இடங்களையும் சேர்த்து மொத்தம் 120மைல்களை கடக்கவேண்டும். அதில் ஆறு மலைகளை சுற்றி வர வேண்டும் என்பது அடக்கம். பந்தயத்தில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் சுலபமாக ஜெய்த்தது.

Pearl of India என்று பெயரிடப்பட்ட அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் அழகும் கம்பீரமும் வேகமும் சிந்தியாவை அசத்தியது. RR என்று சுருக்கமாகவும் கீழே Rolls Royce என்று முழுமையாகவும் பொறிக்கப்பட்ட முத்திரை. முகப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறகு விரித்துப் பறக்கும் தேவதை. பளபளவென்று க்ரீம் நிற உடல். உடனே பணம் கொடுத்து அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை தனதாக்கிக் கொண்டார் சிந்தியா. பெருமை பொங்க அதனை தன் சமஸ்தானமெங்கும் ஓட்டி பவுசு காட்டினார். பிற சமஸ்தான மகாராஜக்களுக்கும் இந்த செய்தி பரவியது.


இது சும்மா ஒரு முன்னுரை தான். இதுக்கு அப்புறம் தான் இருக்குது ரோல்ஸ் ராய்ஸ் கார் நம்ப மகாராஜாக்கள் கிட்ட சிக்கிட்டு அது பட்ட பாடு. அதுக்கு நம்ப மாதிரி உயிர் இருந்துச்சுனா எல்லா காரும் தூக்கு போட்டு தொங்கிருகும்.
அது என்ன கார், எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். "அதென்ன அவரால மட்டும் தான் வாங்க முடியுமா என்ன? நாங்களும் வாங்குவோம்ல" என்று தேடித் தேடி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் சமஸ்தானத்தின் மகாராஜாவாகப்பட்டவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர, பணக்கரார்களும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

அதனால் மகாராஜாக்களைத் தவிரவும் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. என்ன செய்யலாம் என்று யோசித்த மகாராஜாக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை, தங்கள் விருப்பப்படி வடிவமைக்கச் சொல்லி ஆடர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

விருப்பபடி என்றால்? பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டன. அலுமினியமா சேச்சே, எனக்கு வெள்ளியால் செஞ்ச கார் வேணும். அந்த மகாராஜா வெள்ளிக்கார் வச்சுருகனா, அப்படினா எனக்கு தங்க முலாம் பூசிய கார் வேணும். இப்படி டிசைன் டிசைனாக யோசித்து படு ஆடம்பரமாக, கம்பீரமாக, தங்கள் விருப்பப்படி, வசதிப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து, பிலிம் காட்டினார்கள்.

ஒருமுறை லண்டனில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்து பார்த்த ஊழியருக்கு கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலது கால் செருப்பு. கூடவே ஒரு கடிதம்.

" இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்? "  - அனுப்பியிருந்தவர் ஜாம் நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

பரோடா சமஸ்தானத்தின் மகாராணி சிம்னா பாயின் விருப்பம் வேறு மாதிரியானது. "காரில் நான் வசதியாக உட்காரவோ, படுக்கவோ ஒரு கேபின் வேண்டும். குஷன் எல்லாம் மொத் மொத்தென்று இருக்க வேண்டும். ஓட்டுனர் இருக்கையும் அந்த கேபினும் கண்ணாடியால் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்".

அல்வார் சமஸ்தானத்தின் மகாராஜா ஜெய்சிங் ஒருமுறை லண்டனில் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்கு சென்றார். புதிதாக கார் வாங்குவதுதான் அவரது எண்ணம். ஆனால் அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி அவரை சரியாக கவனிக்கவில்லை. அவர் மகாராஜா என்று விற்பனைப் பிரதிநிதிக்கு தெரியாது. "இந்த ஆளெல்லாம் எங்க கார் வாங்கப் போறான்" என்ற எண்ணம். ஜெய் சிங் கின் கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் சொன்னான்.

ஜெய்சிங் கடும் கோபக்காரர், விற்பனைப் பிரதிநிதி கூனிக் குறுகி மரியாதை கொடுக்கும்படியாக அந்த இடத்தில் ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு ஆடர் கொடுத்தார். அவரது சமஸ்தானத்துக்கு ஆறு கார்களும் அனுப்பப்பட்டன. அவற்றை உபயோகப்படுத்த ஜெய்சிங்கின் ஈகோ ஒப்புக் கொள்ளவில்லை. விலை உயர்ந்த அந்த ஆறு கார்களும் சமஸ்தானத்தில் குப்பை அள்ளும் வண்டிகளாக பயன்படுத்த சொல்லி கட்டளையிட்டார். அவை நாறின.

நந்தகான் சமஸ்தான மகாராஜா சர்வேஸ்வர தாஸ் புலி வேட்டைப் பிரியர். அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அடர்ந்த காடுக்குள் பதுங்கி இருக்கும் புலிகளை தேடுவதுக்கு ஏற்ற சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காரின் வெளியே பாதுகாவலர்கள் தொற்றிக் கொண்டு செல்வதுக்கென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இன்னொரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் மேல் கூரை வைக்கோலால் வேயப்பட்டிருந்தது.

பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், அதி ஆடம்பரமானவை. தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு காருக்கும்மென்றே தனித்தனியாக ஏராளமான நகைகள் இருந்தன. அந்தக் கார்கள் சர்வீஸ்க்கு விடும் போது, அதை சுற்றி ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள். அவரது ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் நம்பர் 0 (பூஜ்யம்).

விஸியநகரம் (Vizianagaram) என்ற சிறிய சமஸ்தானத்தின் மகாராஜா, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மத்தியில் பிரம்மாண்டமான ஊர்வலம் வருவார். நூறு கார்கள் அதில் கலந்து கொள்ளும். ஆனால் அவர் தான் காதல் வாகனமான, முற்றிலும் வெள்ளி முலாம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் கம்பீரமான பவனி வருவார். அப்போது நூற்றுக்கணக்கான யானைகள் மலர் தூவி வரவேற்கும்.
 

பஹவல்பூர்  சமஸ்தான நவாபுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் "நவாப் வருகிறார்" என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையில் இருக்கும் மக்கள் எல்லோரும் முதுகை காட்டியப்படி திரும்பி விடுவார்கள். நவாப் கடந்து சென்ற பிறகு தங்கள் வேலைகளை தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

 சைக்கிளின் கேரியரில் பிராய்லர் கோழிகளை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு செல்வர்களே, அது போல தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் கோழி, ஆடு, மான்களைஎல்லாம் இறைச்சிக்காக கொண்டு செல்லும் பழக்கம் பம்பாயை சேர்ந்த அப்துல் அலி என்ற பெரும் பணக்காரருக்கு இருந்தது.

இப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் கௌரவத்தின் சின்னமாக கருதப்பட்டாலும் அதனை வைத்துக் கொண்டு நம் மகாராஜாக்கள் செய்த அட்டுலுலியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. 1907 ஆம் ஆண்டிலிருந்து 1947 ஆம் ஆண்டுவரை பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை சுமார் 40,000. அதில் இந்தியாவில் விற்கப்பட்டவை சுமார் 1,000 கார்கள்.
 

மைசூர் மகாராஜா வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை 35. பாட்டியாலா மகாராஜாவிடம் இருந்த கார்களின் எண்ணிக்கை 38. அப்போது முதலிடம் நமது ஹைதராபாத் நிஜாம் ஓஸ்மான் அலிகான் தான். அவரிடம் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50. ஹைதராபாத்துக்குள் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் வாசம் வீசியது 1912 ஆம் ஆண்டு. ஒஸ்மானின் தந்தை நிஜாம் மெஹபூர் அலிகான் 1911 ஆம் ஆண்டு ஒரு கார் ஆடர் செய்தார்.

"மஞ்சள் நிறத்தில் காரின் உடல் இருக்கட்டும். உள்ளே நான் உட்காருவதுக்கு இருக்கை சிம்மாசனம் போல அமைக்கப்பட்டிருக்க வேண்டும். காரின் முன் புறம் சமஸ்தானத்தின் சின்னம் இருக்கவேண்டும்." மெஹபூவின் விருப்பபடி கார் பயணத்திற்கு தயாராகி வந்தது. ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கைப் பயணம் முடிந்திருந்தது. அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் ஒஸ்மானிடம் வந்து சேர்ந்தது.

கௌரவமாக அதனை வைத்துக்கொண்டார் ஒஸ்மான். எந்த விதக் கஷ்டமும் அதற்கு கொடுக்கவில்லை. அது பாட்டுக்கு அரண்மனையில் கார் ஷெட்டில் சிலை போல் நின்றது. எடுத்து ஓட்டினால் டயர் தேய்ந்து விடுமே. 1912 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஸ்பீடோமீட்டர் காட்டிய மைல்கள் வெறும் 347 தான்.

அதற்குப் பின்பும் ஒஸ்மான் ஒரு சில ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கினர். ஆனால் உபயோகிக்கவில்லை. பிற வகை கார்களையும் பல்வேறு மாடல்களில் நூற்றுக்கணக்கில் சேர்த்து வைத்திருந்தார். ஆனால் அவர் தான் பயணங்களுக்கு உபயோகித்து ஒரு பாடாவதி போர்டு கார் தான்.
(நன்றி : திரு. முகில் - அகம், புறம், அந்தப்புரம்)

இப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் டயரை இந்தியாவில் பதித்த வரலாறு இது. 1907 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை அதன் மொத்த தயாரிப்பில் 25% இந்தியாவில் விற்பனை ஆனது. இப்போது ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இந்தியாவில்,
Rolls-Royce Ghost 6.5 Petrol MT – Rs. 2,50,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom EWB 6.8 Petrol – Rs. 3,50,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom Sedan 6.8 Petrol AT – Rs. 3,50,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom Coupe 6.8 L Petrol AT – Rs. 4,00,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom Drophead  Convertible Coupe 6.8 L Petrol AT – Rs. 4,20,00,000 (Ex -Showroom Price)
(ref. http://www.xprice.in/rolls-royce-cars-price-features-specifications-1617)

சரி சரி...... டென்ஷன் ஆகாதிங்க.....
நம்ப மகாராஜாக்கள் மக்கள் கட்டுற வரி பணத்துல தான் இந்த ஆட்டம். இதே அவங்க உழைத்து சம்பாரிச்சு அவங்க காசுல வாங்கிருந்த இந்த ஆட்டம் காணாம போயிருக்கும். என்ன பண்ணுறது தலை எப்படி இருக்குமோ வால் அப்படி தான் இருக்கும். என்னங்க புரியலையா அந்த காலத்துல மகாராஜாக்கள் ஆடுன ஆட்டம் இப்போ நம்ப அரசியல்வாதிகள் அப்படியே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாம கடைபுடுச்சுட்டு இருகாங்க. 

No comments:

Post a Comment