Thursday 2 August 2012

முத்துப்பேட்டை லகூன் இயற்கையின் ஓர் அதிசயம்: Muthupettai Lagoon


இந்தப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் எனக்கு அலையாத்தி (லகூன்) எந்தப் பக்கம் இருக்கிறது என்றே தெரிந்திருக்கவில்லை. ஏதேச்சையாக எனது நண்பன்  மூலமாக அறிய நேர்ந்த ஓர் அற்புத இடம். எனது நண்பன்  வசிக்கும் கரம்பக்குடியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அமைந்திருந்தாலும், அது வரையிலும் கேள்விப்படாமலும் அங்கு சென்று வராமலிருந்ததை இப்பொழுது நினைக்கும் பொழுது ஆச்சர்யமாகவும் இருக்கிறது.


அது ஒரு ஆச்சர்யக் காடு என்றால் மிகையில்லை. எனக்கென்னவோ, நாமெல்லாம் படங்களில் பார்த்து அசந்த அந்த அமேசான் காடுகளில் இரு மருங்கும் அடர்ந்த வனப் பிரதேசத்தின் ஊடாக ஓடும் நீண்ட ஆற்றினூடாக ஒரு பயணத்தை கொண்டதாக நினைக்கச் செய்தது; இந்த முத்துப்பேட்டை லகூனில் பயணித்ததின் மூலம், அப்படியானதொரு அழகு!

அந்த சதுப்பு நிலக் காட்டினை (Mangrove Forest) சென்றடைய இரண்டே மணி நேர பயண ஏற்பாட்டின் பேரில் இரண்டே பேருந்துகள்தான் எனக்கு எடுத்தது. அந்தப் பயணத்திற்கு முன்னதாக நண்பன் ஆர்வத்தின் பேரில் இணையத்தில் தேடி இரண்டு வலைப்பதிவுகளின் மூலமாக கிடைத்த கட்டுரைகளை படிப்பதற்கென அச்சுப் பிரதி வீட்டிற்கு எடுத்து வந்திருந்தார்.

எங்களது திட்டம் அவரது வீட்டிற்கு முன்னிரவே வந்துவிடுவது எனவும், இரவு தங்கலின் பொருட்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வசதியாக இருக்கும் எனவும் திட்டமிட்டோம்.

காலை உணவை வீட்டில் வைத்துக் கொள்ள அவகாசமின்றி கிடைத்த ஆறு மணி பேருந்தை பிடித்தோம். பட்டுக்கோட்டையில் இறங்கிய நேரம் காலை சிற்றுண்டி முடிக்கத் தகுந்த நேரமாகிப் போனதால், ஹோட்டல் லக்சுமி நாராயணனில் இனிமேல் காலை உணவே சாப்பிடப் போவதில்லை என்ற அளவிற்கு ஒரு கட்டு கட்டி வயிற்றை நிறைத்துக் கொண்டோம்.

பேருந்துப் பயணம் நான் இழந்திருந்ததாக நினைத்திருந்த நான்கு வருடத்திய ஜன்னலோர இருக்கையும், நல்ல நண்பருனூடான சம்பாஷணைகளையும் ஒருமித்து அந்த ஒரு மணி நேர பேருந்து பயணம் நிறைவுற்றதாக அமைத்து தந்தது. அப்படியானதொரு பயணமாக கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை பயணமும் அமைந்தது. இரண்டு பேருந்துகளுமே (கரம்பக்குடியிலிருந்து பத்து கிலோமீட்டர்கள் தாண்டி) காவேரிப் பாசனத்தை நம்பியதொரு ஊர்களின் வழியாக பயணித்ததால், பசுமைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது; சம்பா சாகுபடி நடந்து கொண்டிருந்தது.

எங்களின் பேச்சு அதிகமாக புத்தகங்களைப் பற்றியும் அதனை எழுதிய சமகால மனிதர்களின் நிஜ வாழ்க்கையின் பயணிப்பு பற்றியும், எப்படியுமாக சந்தர்ப்ப வாதம் மனிதர்களின் வாழ்வியல் கோட்பாடுகளையே புரட்டிப் போட்டு விடுகிறது எனவும், அதனையும் மிஞ்சிய சில 'பிழைக்கத் தெரியாத' படைப்பாளிகளைப் பற்றியுமாக சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் இரண்டு மணி நேரப் பயணம் அரைமணி நேரமாக பயணித்தது. அவர் என்னைக் காட்டிலும் தமிழில் அதிகமாக வாசித்திருந்ததாக தெரிந்து கொண்டேன்.


முத்துப்போட்டையில் இறங்கி கண்ணில் தென்பட்ட ஒரு பெட்டிக் கடையில் அலையாத்திக்கு பொடிநடையாக நடந்தே சென்று விடலாமா என்று வினவினோம். பெட்டிக் கடைக்காரர் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, சார் அந்த இடத்திற்கு போகாமலேயே நிறைய பேர் நிறைய கதையைச் சொல்வார்கள் அதிலொன்று இது! நீங்கள் பேசாமல் ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டு செல்வது எதற்கும் நல்லது என்று ஆட்டோ ஒன்றையும் அமர்த்திக் கொடுத்தார்.

அந்தப் பெட்டிக் கடையிலேயே கொஞ்சம் கொறிப்பதற்கென பண்டங்களும், தண்ணீர் பாட்டில்களும் வாங்கிக் கொண்டு ஆட்டோவிற்கு 30 ரூபாய் கொடுத்து லகூனை(அப்படித்தான் அந்த ஊரை குறிப்பிடுகிறார்கள்) சென்றடைந்தோம். வரும் வழியில் சில ஆயுதமேந்திய காவல்துறை அலுவலர்களைக் காண முடிந்தது. ஓட்டுனரிடம் என்ன விசயம் என்று விசாரிக்கும் பொழுது ஒரே வார்த்தையில் கூறி விட்டார் “நல்லா இருந்த ஊரைக் கெடுத்துப்புட்டாங்க சார், 'இன்னொரு காஷ்மீர் ரேஞ்சிற்கு” இருக்கு என்றார். போய்ச் சேரும் வரையிலும் யோசித்துக் கொண்டே போகும்படி ஆகிவிட்டது.

வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு இறக்கி விடும் பொழுது மணி சரியாக காலை 9.30யை தொட்டிருந்தது. அந்த ஊர் எனது பதினைந்து வருடத்திற்கு முன்னதான என் சொந்த ஊரை ஞாபமூட்டியது. வனத்துறை அலுவலகத்திற்கு முன்பாக இறங்கிய சமயத்தில் யாரும் தென்படவில்லை ஆதலால், கிடைத்த இருக்கையில் அமர்ந்து அப்படியே புழுக்கத்தின் அடர்விற்கிடையே வழிய எத்தனிக்கும் வியர்வையை வழித்துதெறிந்து கொண்டே சுற்றிலும் பார்வையை ஓட்டும் பொழுது, எதிரில் ஒரு குளம் கிடந்தது. அங்கு பெண்களும் ஆண்களுமாக தனித்தனியான படித்துறைகளில் அமர்ந்து இதனைத் தாண்டிய ஒரு உலகம் இருப்பதற்கான எந்த ஒரு பிரக்ஞனையும் காட்டாமல் மகிழ்ச்சி வெள்ளத்தில் முங்கி, துவைத்து, பல் துலக்கி, கால் அலம்பி, சோப்பு போட்டு அதிலேயே மீண்டும் மீண்டும் குளித்து என்று இருப்பதனைக் காணும் பொழுது, என்னாலும் அப்படியானதொரு ஒரு வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுத்து விட முடியுமா என்ற ஒரு பேராசையை மனதினுள் எழுப்பியது.

என்னுடைய வாழ்க்கை பயணிப்பு, மிக நீண்ட தொலைவுகளை கொண்டது. சில விசயங்களிலிருந்து துண்டித்துக் கொண்டு செல்லுமளவிற்கும், பல விசயங்களை மேலும் நெருக்கமாக்கிக் கொள்வதற்குமான ஒரு தோணியாகிப் போனது. அதிலொன்றுதான் இந்த குளம், குட்டைகளில் குளிப்பதனை நிறுத்திக் கொண்ட துண்டிப்பும் கூட.

அப்படியாக அமர்ந்திருக்கும் பொழுது பக்கத்தில் இருந்த ஒரு பார்க் எங்களை ஈர்த்தது. அங்கு அந்த ஊரே ஓய்வாக இருந்ததாக பட்டது. இப்படி ஒரு அழகான ஆட்டுக் குட்டியும், எதனை நோக்கியோ அமர்ந்திருக்கும் ஒரு பெரியவரையும் கிளிக்க வேண்டுமென கை பரபரத்தது அது உங்களின் பார்வைக்கும், இங்கே.






நாங்கள் வனத்துறை சரக அலுவலகத்தை அடைந்த நேரம் மிக சீக்கிரம் என்பதால் சற்று நேரம் அமர்ந்து அலுவலர்களின் வருகைக்காக காத்திருக்கும் படியாக அமைந்து போனது. பின்பு ஒரு வனத்துறை பாதுகாவலர் ஒருவர் வந்தார், எங்களிடம் வந்ததிற்கான காரணத்தை அறிந்து கொண்டு வனச்சரகரை அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை பேச வைத்தார். நானும் அறிமுகப் படுத்திக் கொண்டு அவரிடமிருந்து அலையாத்தி தொடர்பான பொதுச் செய்திகளையும், அலையாத்திக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளையும் கேட்டு தெரிந்து கொண்டு, அவர் ஏற்பாடு செய்து கொடுத்த ‘வாட்சர்’ ஒருவருடன் ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டு ஏறி அமரும் பொழுது சரியாக சூரியனும் எங்கள் மண்டைக்கும் நேர் மேலாக தன்னை அமர்த்திக் கொண்டான்.


அதுவே எனது முதல் கழிமுகத்துவார நீர் நிலை மற்றும் தாவர வகைகளுக்கூடான படகுப் பயணம். இருப்பினும் என்னுடைய முந்தைய வாசிப்புகளும், சதுப்பு நிலக் காடுகளைப் பற்றியான பொது அறிவும் ஏற்கெனவே அந்த இடங்களுக்குள் பிரயாணித்ததனைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் இயற்கை வனங்களுக்குள் பிரவேசிக்கும் பொழுதும் ஆச்சர்யங்களுக்கு அளவில்லை என்பதனால், மனம் எதனை நாம் இந்தப் பயணத்தின் மூலம் இன்று சந்திக்கவிருக்கிறோமோ என்ற எதிர்பார்ப்பை தூவாமல் இல்லை.


எதிர்பார்த்த படியே ஒரு நரியுடனான வீர தீர செயல்களையும், இன்னும் அதிகப் படியான படங்களுடனும் சதுப்பு நிலக் காடுகளின் மேலதிக விபரங்களுடனும், முத்துப்பேட்டை லகூன், அழிவிற்கென முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் காரணங்களைப் பற்றியும் தொடர்கிறேன்..

இந்த சதுப்பு நிலக் காட்டில் காணப்படும் மர வகைகள் தில்லை (Exoecaria agallocha) நரிக்கந்தல் (Aegicerous corniculatum, நீர்முள்ளி, அலையாத்தி (Avicennia marina) மற்றும் தண்டல். இவைகளில் அலையாத்தி மற்றும் தில்லை மர வகைகளே மிகவும் அதிகமாக காண முடிந்தது. இருப்பினும் இந்தக் காட்டிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் சேர்த்து 61 வகையான தாவர வகைகள் அறியப்பட்டுள்ளதாம். .. 


இருப்பினும் பிச்சாவரத்தில் அதிக அளவில் காணக்கிடைக்கும் ரைசோஃபோரா இன வகை சதுப்பு நிலத் தாவரம் இங்கே அறிமுகப் படுத்தப் பட்ட நிலையிலேயே குறைந்த எண்ணிக்கையில் ஒரு சில இடங்களிலேயே காணக்கிடைக்கிறது.


அங்கு வாழும் தாவரங்களின் வேர் அமைப்பு, நாம் சாதாரணமான நிலப் பரப்பில்
காணும் தாவரங்களின் வேர் அமைப்பைக் காட்டிலும் முற்றிலுமாக வேறுபட்ட முறையில் அமைந்திருப்பதனைக் காணலாம். நீரும், சேறுமாக எப்பொழுதும் வேர்ப் பகுதி மூழ்கிய நிலையில் இருப்பதால் உபரியாக அந்த தாவரங்கள் வேர்களை வெளிச் செலுத்தி (stilt roots) சுவாசிப்பதற்கெனவும், தேவையான போஷாக்குகளை பெறுவதற்கெனவும் அமைத்துக் கொள்கிறது. இது போன்ற வேர்கள் அந்த வனங்களின் தரைப் பரப்பு முழுவதிலும் வெளிக் கிளம்பி இருப்பதே கண்ணுக்கு விருந்தாகவும், மனதிற்கு எல்லையற்ற ஆச்சர்யத்தை
வழங்குவதாகவும் அமையக் கூடும்.



ரைசோஃபோரா வகைத் தாவரத்தின் வேர்கள் ஒரு படி மேலே போய் ஒரு மீட்டருக்கும் நீளமாக வேர்களை அதன் முதன்மைத் தண்டிலிருந்து கிளப்பி தரைகளில் வேரூன்றி இருப்பதனைப் போல அமைத்துக் கொள்கிறது. அதனைக் காணும் பொழுது ஏதோ நாமே அந்த மரத்தைச் சுற்றி ரொம்பவும் கவனமாக செதுக்கப்பட்ட மரங்களை எடுத்துச் சென்று அடுக்கி வைத்தனைப் போன்றதொரு பிரமிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனக்கு என்னவோ ரைசோஃபோரா மரங்கள் புகைப்படத்திற்கெனவே அமைந்து போனதினைப் போன்ற பிரமையை தோற்றுவித்ததாலும், லகூனில் மிகவும் அரிதாகவே அவைகள் காணக்கிடைத்ததாலும், கிடைத்த மரங்களை நிறைய புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொண்டேன்.
இங்கு 73 வகையான மீன் வகைகளும், பல வகை நண்டினங்கள், மெல்லூடலிகள் மேலும் இங்கயே தங்கி வாழும் மற்றும் வலசையாக வந்து போகும் 160 இனப் பறவைகளுமென முத்துப் பேட்டை சதுப்பு நிலக் காடு வண்ண மய மூட்டுகிறதாம்.

அவைகள் மட்டுமின்றி (13 வகையான) பாலூட்டி இன விலங்குகளில் ஜக்கால் (நரி), காட்டு முயல், கீரிப் பிள்ளை இங்கு அடிக்கடி காணப் படும் விலங்குகள்.

'தலைமை முனை' என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த ஓய்வு மேடைக்குப்
பக்கத்தில் ஒரு திறந்த வெளி இருப்பதனைக் கண்டு, சற்று நேரம் அதனைப் பார்த்தவாறு அமர்ந்து விட்டுச் செல்வோம் என்று கூறி அமைத்திருந்த பெஞ்சில் நான் கட்டையை சாய்த்து விட்டேன். எனக்குள்ளர ஒரு சின்ன ஆசை; அதிர்ஷடமிருந்து ஏதாவது நரி வெளியே வந்தா இந்த திறந்த வெளியில வைச்சுப் பார்க்கலாமேன்னு.

அப்படி இப்படின்னு படகு ஓட்டின மீனவர் மற்றும் வாட்சர் ரெண்டு பேரும் நாங்க உட்கார்ந்திருக்கிற இடத்தில இருந்து ஈழ பூமி எத்தனை தூரம் என்ற வாக்கில் எங்களிடம் பேசப் போக அது எங்கங்கோ நகர்ந்து அப்படியே எப்படி சாமான்ய மக்கள் இந்த ஈழம் சார்ந்த நம் துரோகங்களை அவதானித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கிணங்க 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு' உதாரணமாக பேசியவற்றை கேட்ட படியே சற்று இளைப்பாறினோம்.


திடீரென்று வாட்சர், "சார் நரி... சார் நரி" வந்து
எட்டிப் பார்த்துச்சு அங்கே... அங்கேன்னு ஹஸ் பண்ணினார். வாரிச் சுருட்டி கேமராவை ட்ரைபாட்டில் பொருத்தி விட்டு, எல்லார் வாயய்க்கும் என் வாயாலேயே ஒரு அமைதி பிளாஸ்திரி ஒன்னு போட்டுட்டு அந்தத் திசையை நோக்கி ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருந்தோம். நரித் தலைவரு, மெதுவா பொறுமையா இருந்து, இருந்து பார்த்திட்டு இவிங்க இப்போதைக்கு தொலைய மாட்டாய்ங்கப்பான்னுட்டு மெதுவா எட்டிப் பார்த்துச்சு. பிறகென்ன, கேமராக் கண்களைக் கொண்டு பொடெர், பொடெர்னு அவரோட ஒவ்வொரு இயக்கத்தையும் சுட்டு எடுத்துட்டேன்ல.

தலைவரு, நண்டை ஓடி ஓடித் தேடினார். அங்குமிங்குமா,எனக்கு மட்டும் அப்பப்போ நிமிர்ந்து போஸ் கொடுத்துட்டே. எல்லார் முகத்திலும் ஒரே சந்தோஷம்!

"சார், எத்தனையோ முறை வந்திருக்கோம், ஆனா, இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சதில்ல உங்களுக்கு செம லக் சார்" அப்படின்னு வேறச் செல்லி உசுப்பு ஏத்தினாங்க இரண்டு பேருமா சேர்ந்து. இருந்தாலும், கேமராவிற்குள் எனக்கு செம வசுல். மற்றதை புகைப்படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

பதிவை முடிக்கிறதுக்கு முன்னாடி சில ஃபாக்ட்ஸ். இந்த சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் அமைப்பில (eco system) ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் வாழ்விடமும் அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்குமென பல வகையில் உபயோகமாக இருக்கிறது. அண்மையில் நடந்தேறிய சுனாமியின் பாதிப்பு கூட எங்கெல்லாம் இந்தக் காடுகளின் அடர்த்தி அதிகமாக இருக்கிறதோ அங்கே சற்றே சுனாமி அலைகளின் தாக்கம் குறைவாகவே இருந்திருப்பதாக அறியப்படுகிறது.

இந்த நிலையில், முத்துப்பேட்டை சதுப்பு நிலக் காடுகளுக்கு உள்ள முக்கியமான உடனடி பாதிப்பு கட்டற்ற முறையில் அவிழ்த்து விடப் படும் கால்நடைகள் இளம் செடிகளின் குருத்தை அடியிலேயே மேய்ந்து நாசம் செய்து விடுவதால் இந்த மரங்களின் இனப் பரவல் தடுக்கப் படுகிறது என்று ஒரு புறம் இருந்தால், மற்றொரு புறம் சாராயம் காய்ச்சும் கூட்டம் மரங்களையே வெட்டி விறகுக்கென பயன்படுத்துவதும், லோகல் மக்களும் பொறுப்பற்று சில நேரங்களில் அதே வேலையில் ஈடுபடுவதும் இந்தக் காடுகள் சந்தித்து வரும் தலையாய அபாயங்களாக அந்தக் காட்டின் வனச் சரகர் கூறி வருத்தப் பட்டார்.



கண்டிப்பாக மக்களாகவே இந்த வனங்களின் முக்கியத்துவம் அறிந்து, அவைகளைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.

நான் லகூனில் மிதக்கச் சென்ற நாளன்று என் கண்ணில் சிக்கிய பறவைகளின் பட்டியல்:

1. Common Hoopoe (Upupa epops)

2. Koel (Eudynamys scolopacea)

3. Indian Roller (Coracias benghalensis)

4. Small Blue Kingfisher (Alcedo atthis)

5. White-breasted Kingfisher (Halcyon smyrnensis)

6. Small Bee-eater (Merops orientalis)

7. Rose-ringed Parakeet (Psittacula krameri)

8. Asian Palm Swift (Cypsiurus balasiensis)

9. Spotted Dove (Streptopelia chinensis)

10. Red-wattled Lapwing (Vanellus indicus)

11. Brahminy Kite (Haliastur indus)

12. Large Egret (Casmerodius albus

13. Cattle Egret (Bubulcus ibis)

14. Indian Pond Heron (Ardeola grayii)

15. House Crow (Corvus splendens)

16. Black Drongo (Dicrurus macrocercus)

17. Common Myna (Acridotheres tristis)

18. Red-vented Bulbul (Pycnonotus cafer)

19. White-headed Babbler (Turdoides affinis)

20. House Sparrow (Passer domesticus)

21. Large Pied Wagtail (Motacilla maderaspatensis)

22. Indian Cormorant (Phalacrocorax fuscicollis)

23. Little Cormorant (Phalacrocorax niger)


P.S: Further reading:




தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment