Sunday 14 October 2012

பெக்ரைன்-சவூதி அரேபியா இடைப்பட்ட கடல் வழிச் சாலை--ஒரு சிறப்பு பார்வை ......

நான் சவூதி அரேபியாவில் பார்த்த இடங்களில் என்னை பிரமிக்க வைத்த இடங்களில் ஒன்று கிங்க் பகாத் கேஸ்வே(KING FAHAD CAUSEWAY) என்று அழைக்கப்படும் மிகப் பெரிய கடல் வழி மேம்பாலச் சாலை. இது சவூதி அரேபியா நாட்டையும் பெக்ரைன் நாட்டையும் இணைக்க கூடிய பெரிய கடல் வழி மேம்பாலம் ஆகும்.




மிக அழகாக, நேர்த்தியாக பிரமிக்கதக்கதாய் கட்டப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து சவூதி அரேபியா வருபவர்கள் பெக்ரைன் விமானத்தளத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து வழியாக பயணம் செய்ய நேர்ந்தால் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும்.




இந்த சாலையானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. ஒரு பகுதி சவூதி அரேபிய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மற்றும் ஒரு பகுதி பெக்ரைன் அரசால் பாதுகாக்கப்படுகிறது. இந்த இரண்டு எல்லைப் பகுதியும் இணையும் கடலின் மேல் பகுதியில் தனித் தனியே இரு குட்டி நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதில் இரண்டு மிக பிரமாண்ட கோபுரங்களையும் அமைத்துள்ளார்கள்.



இந்த சாலையானது அமைக்க 1965-ஆம் ஆண்டு இரு நாட்டு மன்னர்களால் முடிவுச் செய்யப்பட்டது. இரண்டு நாட்டு குழுக்கள் இணைந்து திட்டம் வகுத்தன. பின்பு 1968-ஆம் ஆண்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் இறுதிகட்ட வேலைகள் முடிக்கப்பட்டு 1986-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சவூதி மன்னர் கிங்க் பகாத் பின் அப்துல் அஸிஸ்(King Fahd bin Abdul Aziz) மற்றும் பெக்ரைன் மன்னர் ஹெச் ஹெச் சாகிப் இசா பின் சல்மான்(HH Shaikh Isa bin Salman) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்பு நாளைடைவில் இது கிங்க் பாகத் கேஸ்வே(KING FAHAD CAUSEWAY) என்று அழைக்கப்பட்டது.


இந்த பாலமானது வாகனங்கள் வருவதற்க்கும் போவதற்க்கும் தனித்தனியாக சாலைகள் அமைக்கப்பட்டு தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சாலையின் அகலம் 11.6 மீட்டர். ஒவ்வொரு சாலையும் இரண்டு லேன்(Lanes) களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. ஆங்கங்கே வண்டிகளை நிறுத்துவதற்கு அவசர வண்டி நிறுத்துமிடங்களையும்(Emergency Vehicle Parking) அமைத்துள்ளனர். இந்த சாலையானது ஐந்து பாலங்களையும்(Bridges), ஏழு செயற்கை மிதவைத் தளத்தையும்(Embankments) கொண்டு அமைக்கப் ப்ட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 28 கிலோ மீட்டர். இது 536 சிமென்ட் தூண்களால்(Concrete Columns) கடல் உள் இருந்து தாங்கப்படுகிறது.



இந்த சாலையனாது நான்கு ஒப்பந்தங்களாக(Contract) போடப்பட்டு கட்டி முடிக்கப் பட்டது. இந்த சாலை கட்ட அமைக்கப் பட்ட குழுவின் பரமரிப்புக்கும், நிர்வகிப்பவர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் ஆன செலவு மட்டும் 86 மில்லியன் சவூதி ரியால். முழுவதும் கட்டி முடிக்க செலவு ஆன தொகை 3,036 மில்லியன் சவூதி ரியால்(1SR=12.32 RS)


இவர்கள் சதாரணமாக 140 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள். இந்த கடல் வழி சாலையைக் கடப்பதற்கு 15 முதல் 20 நிமிடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் பயணம் செய்யும் போது இரண்டு பக்கங்களில் உள்ள இயற்கை அழகு நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.


சவூதி அரேபியாவில் மேம்பாலங்கள் கட்டுவது சதாரணமாக செய்து விடுகிறார்கள். ஏதோ சிகரெட் அட்டையில் சிறுவர்கள் வீடுகள் கட்டுவதைப் போல் சிமென்ட் பாளங்களை(CONCRETE BLOCK) கொண்டு அடுக்கி விடுகிறார்கள்.



கிங் பகாத் கேஸ்வே க்கு(KING FAHAD CAUSEWAY) நான் சென்று வந்த அனுவத்தை அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்..
இந்த சாலையை வெறும் வாணிபத்திற்க்கும், போக்குவரத்திற்கு மட்டும் பயன் படுத்தாமல் சுற்றுலாதலமாகவும் இதை வடிவமைத்திருப்பது இதன் மற்றும் ஒரு சிறப்பம்சம். நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன் இதன் மொத்த நீளம் 28 கிலோ மீட்டர் என்று. நாங்கள் நான்கு நண்பர்கள் சேர்ந்து இந்த பாலத்தை சுற்றி வர காரில் அந்த சாலையில் பயணித்தோம். கார் பயணத்தில் இரண்டு பக்கங்களிலும் கடலின் அழகை காரில் இருத்தவாறு ரசிக்க முடிந்தது. சிறிது நேரத்தில் பயணம் முடிவுக்கு வந்தது கார் ஒரு நகரத்திற்குள் புகுந்தது. கடலும் கண்ணை விட்டு மறைந்தது. இரண்டு பக்கமும் மரங்களும், கட்டிடங்களும் என் கண்களுக்கு தென்பட்டன. ஒரு பூங்கா போல் தோன்றியது. காரை டிரைவர் காலியாக இருந்த இடத்தில் நிறுத்தினான். வண்டியின் முன்னால் இருந்த நண்பர் தான் எங்களை அழைத்து வந்தார். அவர் காரை விட்டு இறங்கவே நாங்களும் காரை விட்டு இறங்கினோம். எங்களுடன் வந்த நண்பரில் ஒருவர் அழைத்து வந்தவரிடம் " கடலில் உள்ள பாலத்தை சுற்றி கட்டுகிறேன் என்று கூறி விட்டு ஏதோ பூங்காவிற்கு அழைத்து வந்துருக்கிறீர் " என்று கேட்டார். நானும் அதை வழிமொழியலாம் என்று அழைத்து வந்தவரின் முகத்தை பார்த்தேன். அவர் கண்ணில் தெரிந்த ஏளன பார்வை என் வாயை மூடியது. அழைத்து வந்த நண்பர் சிரித்துக்கொண்டே " அதற்கு மேல் தான் நாம் நிற்கிறோம் " என்றார். அனைவரும் ஆச்சரியத்துடன் சுற்றும், முற்றும் பார்த்தோம்.



உண்மை தான் நாங்கள் நிற்பது கடலின் மேல் தான் என்பது அவர் சுட்டிக் காட்டிய அந்த வானுயர்ந்த கோபுரத்தை பார்த்த போது எங்களுக்கு புலப்பட்டது. ஏனென்றால் இங்கு வருவதற்கு முன் அவர் தனது மொபைலில் ஏற்கனவே அவர் வந்த போது எடுத்த போட்டோவை காட்டியிருந்தார். நாங்கள் நிற்க்கும் இடத்தை சுற்றிலும் மரங்கள் அழகாக வளர்க்கப் பட்டு இருந்தது. வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களும், கட்டிடங்களும் இருந்தன. சிறிது நடந்து சென்றோம் அங்கு கடல் கண்ணுக்கு புலப் பட்டது. அழகாக வேலி அமைக்கப் பட்டு இருந்தது. ஆங்காங்கே மண் மேடைகள் காணப்பட்டன. அதில் இருந்த வாறு சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். ஆம் தூண்டில் போட்டு கடலில் மீன் பிடிப்பது இவர்களின் பொழுதுப்போக்கு. அதில் நாமும் கலந்து கொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த மண்மேடையில் புற்கள் வளர்க்கப்பட்டு அழகாக இருந்தன. அதில் இருந்தவாறு கடலின் அழகையும், அதன் மேல் உள்ள இந்த சாலையின் ஒரு பகுதியையும் ரசிக்க முடியும்.




அங்கிருந்து அப்படியே நகர்ந்து அந்த கோபுரம் இருந்த திசையை நோக்கி நடந்தோம். கோபுரதிற்கு உள்ளே செல்ல அனுமதி சீட்டு வாங்க வேண்டும். இந்த கோபுரம் மிக வித்தியாகமாக கட்டப்பட்டு இருந்தது. மேலே செல்வதற்கு லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது நமது பெரியோர் வாக்கு. அது இவர்கள் விசயத்தில் நூறு சதவீதம் உண்மை. இங்கு இரண்டு மசூதி(Mosque) இருக்கின்றது. மேலும் இந்த கோபுரத்தில் ஒரு உணவகமும் உள்ளது. குழந்தைகள் விளையாட விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய ஒரு அறையும் உள்ளது. மேல் தளத்தில் நின்று இந்த கடல் நகரின் அழகை சுற்றி பார்க்க கண்ணாடி சுவர் அமைக்கப்ப்ட்டுள்ளது.



இதன் மேல் நின்று பார்க்கும் போது கடல் மேல் அமைந்துள்ள இந்த அழகிய சாலையும் அதில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும் மற்றும் சாலையில் அணிவகுத்து செல்லும் வாகனங்களின் அழகும் அருமை. இரவு நேரமாக இருந்தால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த சாலையின் அழகு இருமடங்காக ஜொலிக்கிறது. லிப்டில் மேலிருந்து கீழாக வரும் போதும்
அதில் உள்ள கண்ணாடி வழியாக வெளி காட்சியை பார்க்க முடிகிறது.



நான் மேலே விவரித்து இருப்பது சவூதி அரேபிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை மட்டும் தான். இதை அடுத்து பெக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் மேலே உள்ளது போல் ஒரு குட்டி நகரம் உள்ளது. கடலின் மேல் அமைக்கப் பட்ட இந்த இரு இடங்களின் பரப்பளவு 660,000 சதுர அடி. அந்த இரண்டு கோபுரங்களின் உயரம் 65 மீட்டர்.



புதன் மற்றும் வியாழக் கிழமைகாளில் இந்த சாலை மிக கூட்டமாக இருக்கும். அந்த நாட்களில் இந்த சாலையில் உள்ள வாகன நெரிசல் நமது ஊரில் உள்ள மவுண்ட் ரோடு நெரிசலை தாண்டி விடும். காரணம் நமது ஊரில் வாரத்தின் கடைசி நாட்காளாகிய சனி மற்றும் ஞாயிறு போல் இங்கு வியாழன் மற்றும் வெள்ளி. சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை போதை,.....மற்றும் எல்லா விசயங்களுக்கும் தடா என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் பெக்ரைனை பொறுத்தவரை இதற்கு நேர் எதிர்மறை. மதுவில் இருந்து மா....வரை அனைத்தும் சுலபமாக கிடைக்கும். எனவே குடிமக்கள் அதிகம் வார இறுதி நாட்களில் இந்த சாலையை பயன்படுத்துவதால் மிக நெரிசலாக இருக்கும். குடிமக்கள் என்று நான் கூறியது பயணிகளை பற்றி தான் நீங்கள் தப்பாக புரிந்தால் கம்பெனி பொறுப்பல்ல. 2008 ஆம் ஆண்டின் காணக்கெடுப்பின் படி சாரசரியாக ஒரு நாள் இந்த சாலையை உபயோகப்படுத்தியவர்களின் எண்ணிக்கை 48,612. வாகனங்களின் எண்ணிக்கை 23,690.




எலே மக்க இதை படிச்சிட்டு சவூதி போயிட்டு நாக்கில் எச்சில் உறினால் நாமளும் அப்படியே பெக்ரைன் போலானு நினைக்சுட்டு வந்திடாதுங்க. அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஓய்..என்னன விசா(Visa) அடிக்கும் போதே அதில் மல்டிபிள் எண்டிரி(Multiple Entry Visa) என்று அடிக்க வேண்டும். இல்லாமல் சிங்கிள் எண்டிரி(Single Entry Visa) என்று சவூதி வந்துட்டு பெக்ரைன் போனால் திரும்ப சவூதி வரமுடியாது .நல்ல கப்சாவும் குப்பூசும் ஜெயில்ல கிடைக்கும் ஓய்..

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment