Wednesday 14 November 2012

தேயிலை வரலாறு! ஒரு சிறப்பு பார்வை..


தேயிலை (Tea, Camellia sinensis) ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும்கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர்தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலைத்திணை தொடக்கத்தில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில்காணப்பட்டது. வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வெவ்வேறு வகையான தேயிலைகள் இவ்வின நிலைத்திணையிலிருந்து பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் வேறுபடுகின்றன. குக்கிச்சாவில் இவ்வின நிலைத்திணையின் இலைகளுக்குப் பதிலாக கொப்பு, தண்டு என்பவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்படுகிறது.

இந்நிலைத்திணையின் இருசொற்பெயர் Camellia sinensis என்பதாகும், இங்கு sinensis என்பது இலத்தீன் மொழியில்சீனாவைச் சேர்ந்த என்ற பொருள்படும். Camellia என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற இயேசு சபை பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுப்பிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கியகரோலஸ் லின்னேயஸ் அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.

சீனச் சக்கரவர்த்தி ஷென் நுங் பருகுவதற்காக வைக்கப்பட்ட சுடுநீரில் தேயிலைச் செடியின் இலைகள் பறந்து வந்து விழவும் அந்த நீரைப் பருகிய சக்கரவர்த்தி ஒரு வித உற்சாகமான சுகானுபவம் கிடைப்பதை உணர்ந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து 'கமெலியா சினென்சிஸ்" உலகிற்கு அறிமுகமானாள் என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

சுமார் 150 வருடங்களுக்கு முன் இலங்கையில் தேயிலையைப் பயிரிட்டபோது உலகம் முழுவதிலும் இந்தக் குட்டித்தீவின் புகழ் பரவுவதற்கு 'கமெலியா சினென்சிஸ்" வழிகோலுவாள் என்று ஆங்கிலேயக் கோமகன், ஜேம்ஸ் டெய்லர் எதிர்பார்த்திருக்க மாட்டார். இலங்கைத் தேயிலையின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பெருந்தோட்ட முதல்வராக விளங்கிய ஜேம்ஸ் டெய்லர், 1867ஆம் ஆண்டில் மத்திய மலைநாட்டின் கண்டி மாவட்டத்தில் ஹேவாஹெட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள லூலிகொந்தரா தோட்டத்தில் முதன் முதலில் வர்த்தக நோக்கில் தேயிலையைப் பயிரிட்டார்.
இன்று நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்யும் தேயிலை, வர்த்தக ரீதியில் பயிரிடப்பட்டு 145 வருடங்கள் நிறைவடைவதைப் பெருமையுடன் நாம் கொண்டாடும் வேளையில் சர்வதேச மட்டத்தில் முதல்தர தேயிலை உற்பத்தி நாடு என்ற அந்தஸ்தை அடைவதில் எமது மக்களின் கடின உழைப்பும் பிரயத்தனங்களும் கண்டிப்பாக நினைவு கூறத்தக்கவை.

தேயிலைச் செடி சிறப்பாக வளர்வதற்கேற்ற மலைப் பிரதேசம், சுவாத்தியமான காலநிலை ஆகியன நம் நாட்டிற்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள். அதற்கு மேலாக எம்நாட்டின் கடின உழைப்பாளிகள், துறைசார் நிபுணர்கள் ஆகியோரின் கூட்டுழைப்பில் தரம் வாய்ந்த பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலையை எம்மால் உற்பத்தி செய்து உலகின் பெருமளவான நாடுகளில் சந்தைப்படுத்த முடிகின்றது. இன்று கிட்டத்தட்ட வருடம் ஒன்றுக்கு 300 மில்லியன் கிலோ தேயிலை இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதுடன் இத்தொழிற்துறையில் இலங்கை  நாட்டின் சனத்தொகையில் 10 வீதமானோர் ஈடுபடுகின்றனர்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை சுமார் 33 வகையானவை எனத் தரப்படுத்தப்பட்டுள்ளது. தேயிலையின் வகையும் தரமும் வேறுபடுவதற்குப் பங்களிப்புச் செய்யும் பல காரணிகளில் முதன்மையானது தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள பிரதேசத்தின் உயரம். கடல் மட்டத்திலிருந்து தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள உயரத்தைப் பொறுத்து உயர் நிலத் தேயிலை, நடுத்தரத் தேயிலை, தாழ் நிலத் தேயிலை என்று மூன்று முக்கிய வகைகளாக இலங்கைத் தேயிலையைத் தரப்படுத்தலாம்.
உயர் நிலத் தேயிலை 6,000 அடிக்கு மேற்பட்ட நுவரெலியா, மற்றும் 4,000 அடி உயரத்துக்கு மேற்பட்ட உடப்புசல்லாவை, திம்புல, ஊவா போன்ற பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவை சுத்தமான தூய நீரில் தயாரிக்கப்படும்பொழுது அற்புதமான சுவை கொண்ட தேநீரை வழங்குகின்றன. உள்நாட்டவர்கள் முதல் வெளிநாட்டவர் வரை அனைவர் மத்தியிலும் இத்தேநீர் பிரபல்யமாயிருப்பது விசேட அம்சம். நடுத்தரத் தேயிலை 2,000 அடிக்கு மேற்பட்ட உயரம் கொண்ட கண்டியைச் சூழவுள்ள பிரதேசங்களில் விளைகின்றது.

நம் நாட்டு மக்கள் பெரும்பாலும் உயர் நில மற்றும் நடுத்தரத் தேயிலையிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரை பால், சீனி கலந்து அருந்துவதை விரும்புகின்றனர். தாழ்நிலப் பகுதிகளான சப்ரகமுவ மற்றும் றுகுணு பிரதேசங்களில் விளையும் தேயிலையைக் கொண்டு எவ்வகையான நீரிலும் தேநீர் தயாரிக்கலாம்.
தேயிலை உற்பத்தியில் பின்பற்றப்படும் பிரத்தியேகமான நுட்பங்களும் முறைகளும் இலங்கைத் தேயிலையின் தனித்துவத்திற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. இந்த வகையில் 'ஆர்தடொக்ஸ்" எனப்படும் பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தேயிலை அதிகளவில் பெரிய தேயிலைத் துகள்களைக் கொண்டவையாக இருக்கும். இலங்கையில் 95 வீதமான தேயிலை இவ்வுற்பத்திச் செயன்முறையைப் பின்பற்றியே தயாரிக்கப்படுகின்றது. பெரும்பாலான தேயிலை இறக்குமதி நாடுகள் நம்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இந்த விசேட தேயிலை வகைக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

இன்னொரு முறையான 'சிரிசி" (வெட்டுதல், கிழித்தல், சுருளச் செய்தல் ஆகியவற்றின் ஆங்கிலப் பதங்கள்) என்று ஆங்கிலத்தில் சுருக்கக் குறியீடுகளால் விளிக்கப்படும் முற்றிலும் இயந்திரங்களின் மூலமும் தேயிலை தயாரிக்கப்படுகின்றது. சிறிய துகள்களைக் கொண்ட இத்தேயிலை ரகமானது ஏற்றுமதிச் சந்தைக்குப் பொருத்தமான 'தேயிலைப் பைகள்" தயாரிப்பதற்குப் பொருத்தமானது. அதிக சாயமுள்ள தேநீரை அருந்தும் பழக்கம் உடையவர்கள் இந்த ரகத்தை தெரிவு செய்கின்றனர். இதைவிட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் தேநீர் பிரியர்களுக்காக சீனத் தயாரிப்பு முறை அல்லது யப்பானியத் தயாரிப்பு முறை மூலம் உற்பத்தி செய்யப்படும் பச்சைத் தேயிலையையும் ('கிறீன் டீ") இலங்கையில் பெற முடியும்.

தேயிலைக் கொழுந்தின் தன்மையிலும் தேயிலையின் தரங்கள் வேறுபடும். புதிதாகத் துளிர் விட்ட வெளிர் பச்சை நிறத்தைக் கொண்ட தேயிலை மொட்டுகளை வெயிலில் மட்டும் காயவைத்துப் பெறப்படும் தேயிலையை 'சில்வர் டிப்" அல்லது வெண் தேயிலை என்று அழைக்கின்றார்கள். மிதமான சுடுநீரில் தயாரிக்கப்படும் இத்தேநீர் தனித்துவமான சுவை கொண்டது. மேலைத்தேயவர்களின் விருப்பத் தெரிவான இத்தேயிலைக்கு ஏற்றுமதிச் சந்தையில் கூடிய பணப்பெறுமதி வழங்கப்படுகின்றது.

தேயிலை ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய நாடாக விளங்கும் இலங்கையின் முக்கிய சந்தைகளாக மத்திய கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகளும் தனி ஒரு நாடான ரஷ்யாவும் உள்ளன. இவை தவிர ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், கனடா, செக் குடியரசு, இத்தாலி முதலியவை உள்ளிட்ட 
பல நாடுகள் நம்நாட்டுத் தேயிலையை விரும்பி இறக்குமதி செய்கின்றன.
மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிக சாயம், பால், சீனி கலந்த தேநீரை அருந்தும் பழக்கம் கொண்டவர்கள். மேலைத்தேயத்தவர்கள் தேநீரில் வேறு பொருட்கள் சேர்ப்பதைத் தவிர்க்கின்றனர். ஆசிய நாட்டவர்கள் சுவையூட்டப்பட்ட தேநீரை ரசிக்கின்றனர். இவ்வாறான நுணுக்கமான விடயங்களைக் கருத்தில் கொண்டு எமது உற்பத்தியாளர்கள் பல்வேறு பெறுமதி சேர்ப்புக்களையும் எம்மவர்கள் தேயிலை உற்பத்தியில் உள்ளடக்கத் தவறுவதில்லை.

ஆரம்பத்தில் மருத்துவ தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட தேநீர் தற்காலத்தில் குடிநீருக்கு அடுத்தபடியாக உலகளாவிய ரீதியில் அதிகளவில் அருந்தப்படும் குடிபானம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அறுசுவை உணவு படைத்து விருந்தினர்களை உபசரிப்பது தற்காலத்தில் அருகி வந்தாலும் சுடச்சுட ஒரு கோப்பை தேநீர் பரிமாறுவது நம்நாட்டின் விருந்தோம்பல் பாரம்பரியமாகத் தொன்று தொட்டு நீடித்து வருகின்றது.
'அன்டி ஆக்ஸிடன்ட்" எனும் ஒட்சியேற்ற எதிர்பொருள் தேநீரில் அதிகமுள்ளதால் ரத்தத்திலிருந்து நச்சுப் பொருட்கள் அகற்றப்பட்டு புற்றுநோய் கலங்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமன்றி தேநீர் பருகுவது உடலுக்கு சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தருவதுடன் இந்த ஆக்கத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்களை இலங்கையின் முன்னணி தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான 'ம்லெஸ்னா சிலோன்" நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.அன்ஸ்லெம் பெரேரா அவர்கள் தந்துதவியிருந்தார்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment