Tuesday 5 February 2013

வீடு, நிலம் நம்பி வாங்குங்கள் லாபம்தான்!!


மற்ற முதலீடுகளையும் விட நிலம், கட்டிடம் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடு சிறந்த பலனைத் தரும். அதிலும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடு, நிலம் வாங்கினால் நிச்சயமாக லாபம் கொடுக்கும். தேவை அதிகமாக இருக்கும் நிலையில் இருப்பு குறைவாக இருந்தால் அதற்கு எப்போதுமே கிராக்கி இருக்கத்தானே செய்யும். அதேபோலத்தான் முக்கிய நகரங்களில் சொத்துக்கள் சிறந்த முதலீடாகவே திகழும்.


கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மற்றவற்றைக் காட்டிலும் அதிக பலன் தரக்கூடியதாக உள்ளது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் கடந்த 2011ம் ஆண்டு பங்குச் சந்தைகளுக்கு மோசமான ஆண்டாக இருந்தது. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 25 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. ஆனால் இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களில் சொத்துகளின் மதிப்பு குறையாமல் ஸ்திரமாக இருந்தது. உலகமெங்கும் பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டு தடுமாறிய நிலையிலும் இங்கு சொத்துக்களின் மதிப்பு குறையவில்லை.

அந்த ஆண்டில் தேசிய வீட்டு வசதி வங்கி வெளியிட்ட குறியீட்டின்படி இந்தியாவில் உள்ள முக்கியமான 15 நகரங்களில் 9 நகரங்களில் சொத்தின் மதிப்பு உயர்ந்தே காணப்பட்டது. 2008,2012 இடைப்பட்ட காலத்தில் சர்வதேச பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது பல நாடுகளில் பங்குகளும், சொத்து மதிப்புகளும் வீழ்ச்சி அடைந்தன. ஆனால், இந்தியாவில் பல பகுதிகளில் சொத்து மதிப்பு வீழ்ச்சி அடையாமல் முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைத்தது. 11 நகரங்களில் சொத்து மதிப்பு வீழ்ச்சியை சந்திக்கவில்லை. ஐதராபாத், ஜெய்ப்பூர், கொச்சி, பெங்களூர் ஆகிய நகரங்களில் விலை சற்றே குறைந்தது.

பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்ததாகவே ரியல் எஸ்டேட் துறை உள்ளது. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறை சற்றே சரிவை சந்தித்ததால் அங்கு சொத்துக்களின் மதிப்பு குறைந்தது. 2010க்குப் பிறகு நிலைமை சீரடைந்தது. கொச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சார்ந்ததாக ரியல் எஸ்டேட் துறை இருந்தது. அதனால் அங்கும் சொத்துக்களின் மதிப்பு வீழ்ச்சியடைந்தன. ஐதராபாத்தில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவியதால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு சொத்து மதிப்பு சரிந்தது.

பொதுவாகவே இந்தியாவில் குடியிருப்புகளின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால், குறைவான அளவிலேயே குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. தேசிய வீட்டுவசதி வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 2 கோடி வீடுகள் பற்றாக்குறையாக உள்ளன. குறிப்பாக முக்கிய நகரங்களில் வீடுகளின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. 

ஏராளமான மக்கள் நகரங்களுக்கு வந்து குடியேற விரும்புவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளின் விலை தொடர்ந்து அதிகரிப்பதில் ஆச்சரியமில்லை.

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து வருவதாலும் சொத்துக்களை வாங்கிப் போட்டால் அவை நம்மை லாபமடையவே செய்யும்.

லிவிங் ரூம் எப்படி இருக்கணும் தெரியுமா?

எவ்வளவு தான் வீடு பெரியதாக இருந்தாலும், அனைவரும் பெரிதும் நேரம் செலவிடும் இடம் என்றால், அது லிவிங் ரூம் எனப்படும் ஹால் தான். மற்ற ரூம்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு சில நேரங்களில் மட்டும்தான் பயன்படுத்துவோம். ஆனால் ஹாலில்தான் பெரும்பாலான நேரத்தில் உட்கார்ந்து கொண்டிருப்போம். ஏனெனில் ஹாலில் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும். 

சொல்லப்போனால், ஒரு நல்ல அழகான ரூம் என்பது, பார்க்க அழகாக கண்களுக்கு குளிர்ச்சியை தரும் வகையிலான பெயின்ட்டை அடித்து, மாலை மற்றும் இரவு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் நன்கு வெளிச்சத்தோடு, காணப்பட வேண்டும். இத்தகைய அனைத்தும் ஹாலில் மட்டும் தான் கிடைக்கும். இப்போது அந்த ஹால் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இன்டீரியர் டெக்கரேட்டர் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்வோம்...

* லிவிங் ரூம் சுவர்களுக்கு, அழுக்கு தெரியகூடாது என்பதற்காக டார்க் கலர் பெயின்ட் அடிப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக மனதிற்கு ரிலாக்ஸ் தருகின்ற லைட் கலர் பெயின்ட் அடிக்க வேண்டும். இதனால் மனம் மிகவும் அமைதியாகவும், குளிர்ச்சியுடனும் இருக்கும்.

* ஹாலில் அதிகமாக ஃபர்னிச்சர்களைப் போட்டு இடத்தை அடைக்காமல் இருக்க வேண்டும். இதனால் குழந்தைகள் நன்கு ஓடியாடி வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே விளையாடுவதோடு, வீடும் பார்க்க கண்களுக்கு அழகாக தோன்றும்.

* முக்கியமாக ஹாலில் பூஜை அறை வைப்பதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் டைனிங் டேபிள் போடலாம். அதுவும் டைனிங் டேபிள் வைத்தால், அதற்கு தனியாக ஒரு ஸ்கிரீனை போட்டு விட்டால், அது ஹாலுக்கு கூடுதல் அழகைத் தரும்.

* வீட்டில் தரைகளுக்குப் பயன்படுத்தும் டோர்மேட் மற்றும் ஜன்னல்களுக்கு போடும் ஸ்கிரீனை அடிக்கடி துவைத்து வந்தால், எப்போதுமே வீடு அழகாக சுத்தமாக இருப்பதுபோல் காட்சியளிக்கும்.

* வீட்டுச் சுவர்களில் எலக்ட்ரிக்கல் வயரிங் வயர்கள் அதிகமாக இருக்கும். ஆகவே அதற்கு சரியான அழகாக இருக்கும் கவரைப் போட்டு கவர் செய்து விட்டால், மிகவும் அழகாக இருக்கும்.
மேற்கூறிய ஈஸியான வழிகளைப் பின்பற்றினால், வீடு அழகாகக் காணப்படுவதோடு, வீட்டை சுத்தம் செய்யவும் ஈஸியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment