Tuesday 6 May 2014

பட்டபடிப்பு துறையை தேர்தெடுக்கும் முன் எந்தெந்த பணிகளில் என்னென்ன ஆபத்துக்கள் உள்ளன ? ஒரு தவகல் !!


ஒருவர் செய்யும் பணி என்பது அவரின் வாழ்வுக்கான ஒரு முக்கிய ஆதாரம். ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் அனைத்தும் என்பதில் தொடங்கி, நம் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமாக நாம் செய்யும் பணி திகழ்கிறது.
நாம் மேற்கொள்ளும் பல பணிகள், நமது உடல் நலத்தை பாதிப்பதாக உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆரம்பத்தில், சிறிய உடல்நலப் பிரச்சினையாக தொடங்கி, பின்னர் அது பெரிதாக மாறும் வரை, நாம் அதை பொருட்படுத்துவதில்லை. 
முந்தைய நாட்களில், சுரங்கத்தில் வேலை பார்க்கும்போது, நுரையீரலை பெரியளவில் பாதிப்பதாக இருந்தது மற்றும் சத்தம் நிறைந்த தொழிற்சாலையில் வேலை பார்ப்பவரின் காதுகள் பாதிக்கப்பட்டன.
இன்றைய நாட்களில், பல நவீன முன்னேற்றங்கள் வந்துவிட்டன. பல்வேறான புதிய பணிகள் உருவாகியுள்ளன. அதில் பல ஆபத்துக்களும் முளைத்துள்ளன. முன்பைவிட, பணி சார்ந்து வரும் நோய்கள் பெரியளவில் அதிகரித்துள்ளன. உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது.
அந்த வகையில், உடலுக்கும், மனதுக்கும் தீங்கு ஏற்படுத்தும் சில முக்கிய பணிகளைப் பற்றி இங்கே விவாதிக்கலாம்.
Business Processing Outsourcing - BPO..
இந்த வகைப் பணியில், இரவுநேரப் பணி என்பதை தவிர்ப்பது மிகவும் கடினம். தொடர்ச்சியான இரவுநேரப் பணி என்பது, ஒருவரின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கக்கூடியது. அதேசமயம், நீங்கள் பகலில் தூங்கினாலும், பணிநேரத்தை பகலுக்கும், இரவுக்கு இடையில் மாறி மாறி அமைத்துக் கொண்டாலும் சரி, உடல் நிச்சயம் பாதிக்கப்பட்டே தீரும். அந்த பாதிப்பு நீண்டகால தன்மையதாய் இருக்கும்.
கட்டுமானப் பணிகள்..
கட்டுமான பணி என்பது, ஒவ்வொருவருக்குமே பணி செய்யும் இடத்தில் ஆபத்தை விளைவிப்பதாய் இருக்கிறது. அவர்கள் பணியாளர்களாக இருந்தாலும் சரி, டிசைனர்களாக இருந்தாலும் சரி, ஆபத்து இருக்கிறது.
தார், சில வகையான சிமெண்ட்டுகள் அல்லது பெயின்ட்டுகள் ஆகியவை, நுரையீரலை பாதிக்கின்றன. கட்டுமான பணிகளின்போது நிகழும் விபத்துக்கள், சாலைகளில் நடக்கும் விபத்துக்களைப் போன்று அடிக்கடி நடப்பவையாக இருக்கின்றன.
துப்புரவு தொழிலாளர்கள்...
பல வகையிலும் பாதிக்கப்படும் பணியாளர்களாக இவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில், பலரும் செய்ய முன்வராத தொழிலை செய்யும் இவர்கள் சந்திக்கும் சுகாதார பிரச்சினைகள் பல. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அள்ளுவதிலிருந்து, சாக்கடை சுத்தம் செய்வது உள்பட, உச்சகட்ட கொடுமைத் தொழிலான மனித மலம் அள்ளுவது வரை இவர்கள் மேற்கொள்கிறார்கள்.
இதன்மூலம் இவர்கள் சந்திக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகள் கணக்கிலடங்காதவை. கிளீனிங் ஏஜெண்ட்டுகள், ரசாயன பாதிப்பு அதிகம் கொண்ட அமிலங்களை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இதிலும் ஆபத்துக்கள் அதிகம்.
கார்பரேட்..
பொதுவாக, கார்பரேட் பணிகள் என்பவை, ஒருவர், ஒரு நாளில், அதிகநேரம் கணினி முன்பாக அமர்ந்து, கண்களுக்கு அதிகமான சுமையைக் கொடுத்து, முதுகு பகுதியை சிரமப்படுத்தி, கழுத்துப் பகுதியை கஷ்டப்படுத்தி வேலை செய்ய வேண்டியுள்ளது.
எனவே, இதுபோன்ற பணி சூழல்களில் இருப்பவர்கள், கண் பிரச்சினை, இதய நோய், முதுகு வலி, கழுத்து வலி, பக்கவாதம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இத்துறையில் ஈடுபடுபவர்களில், பல பேர், மன அழுத்தம் காரணமாக, தற்கொலைக்கு முயல்வதும் உண்டு.
தொழிற்சாலை..
அதிகமான இரைச்சல், ஆபத்தான இயந்திரங்கள், மின்சார ஆபத்துக்கள், மாசுபட்ட காற்று உள்ளிட்ட பல்வேறான சுகாதாரப் பிரச்சினைகளை, தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் சந்திக்க வேண்டியுள்ளது.
மேலாளர் முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை, காது சரியாக கேட்காத பிரச்சினை உள்ளிட்ட பல சுகாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சு மில் போன்றவற்றில் வேலை செய்வோர், நுரையீரல் பிரச்சினைகளால் அவதிப்படும் நிலை உருவாகிறது.
மேலும், ஆபத்தான இயந்திரங்களில் பணிபுரிவதால், அவற்றால் அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன. மேலும், நிரந்தரமாக உடல் உறுப்புகளை இழப்பதும் தொழிற்சாலைகளில் அடிக்கடி நேரும் ஒரு துரதிருஷ்ட சம்பவமாக உள்ளது.
Floral Designer..
இத்தொழில், கவர்ச்சிகரமானதாகவும், விரும்பத்தக்கதாகவும் இருந்தாலும், இதற்கென்று ஆபத்தான அம்சங்களும் உள்ளன. ஒரு தோட்டக்காரர், செடியை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அதே வேளையில், ஒரு செடி, தண்டிலிருந்து வெட்டப்பட்ட பின்பும், அதை பாதுகாக்கும் பணியில், floral designer ஈடுபடுகிறார்.
புளோரல் துண்டுகளை உருவாக்குவதில் பல ரசாயனங்களும், வேதிப் பொருட்களும் பயன்படுத்தப்படுவதால், நீண்ட நாட்கள் இத்தொழிலில் ஈடுபடுகையில், பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
சுரங்கம்..
சுரங்கப் பணி என்பது, நெடுங்காலமாகவே ஆபத்தான ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. என்னதான், பாதுகாப்பு உபகரணங்களை இன்றைய நிலையில் பயன்படுத்தினாலும், ஆபத்துக்கான வாய்ப்புகள் முழுமையாக நீங்கியபாடில்லை.
சுரங்கம் என்பது, அதன் உள்ளே இருப்பவருக்கு எப்போதும் பாதுகாப்பில்லாத ஒரு இடம்தான். சுரங்கத்திற்குள் ஒருவர் சுவாசிக்கும் காற்று ஆரோக்கியமற்றதாகும். எனவே, இப்பணியில் ஈடுபடுவோர், பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
ஆராய்ச்சி..
ஆராய்ச்சி என்பது, அறிந்திராத ஒன்றை வெளிப்படுத்துவதாகும். அதேசமயம், அறிந்திராத ஒரு பொருளில், அறியப்படாத ஆபத்துக்களும் இருக்கும் என்பதும் நிதர்சனம். எனவே, பல்துறை ஆராய்ச்சியாளர்கள், தங்களின் பணியின்போது, என்னவிதமான ஆபத்து நிகழும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
இல்லையெனில், உடல்நலத்தை கெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொரு பணியிலும், ஏதாவது ஒரு சிக்கல் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது. அது நாம் மிக மிக விரும்பும் பணியாக இருந்தாலும் சரி. எனவே, முன்னெச்சரிக்கையாக செயல்படுவதே புத்திசாலித்தனம்.
தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல் .
நன்றி :  கல்விமலர் 

No comments:

Post a Comment