Tuesday 15 July 2014

இராக்கிய நண்பர்களை அமெரிக்கா கைவிட்டது ஏன்? ஒரு சிறப்பு பார்வை..

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்ஸன் ஹென்றி ஏ. கிஸ்ஸிங்கரின் காதில் இப்படிக் கிசுகிசுத்தார்: “நாம் இதைப் பற்றியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.” என்ன செய்தாலும் தெற்கு வியட்நாம் தேறவே போவதில்லை என்பதே அவருடைய கிசுகிசுப்புக்குப் பொருள். அது 1972 ஆகஸ்ட் மாதம். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தெற்கு வியட்நாம் நொறுங்கிவிடும் என்பதே நிக்ஸனின் கவலை. “இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு இந்த நாடு எப்படியாவது தாக்குப்பிடிக்கும் வழியை நாம் கண்டாக வேண்டும்; வரும் அக்டோபருக்குள் நாம் அதைச் செய்துவிட்டால் 1974 ஜனவரிக்குப் பிறகு யாரும் இதை எதுவும் செய்துவிட முடியாது” என்று ஆமோதித்தார் கிஸ்ஸிங்கர்.

இந்த உத்தியைத்தான் ‘கௌரவமான இடைவேளை' என்று அழைத்தார்கள். ஒரு நாட்டில் நுழைந்து சண்டையிட்டு (பலமாக அடிவாங்கி) வெளியேறிய பிறகு, போரிட்ட களைப்பிலிருந்து, போரிட்ட சம்பவத்தையே மறந்துவிடும் வரையிலான காலத்துக்கு இடைப்பட்ட நாள்களே இந்தக் கௌரவமான இடைவேளையாகக் கருதப்படுகிறது. 32 மாதங்களுக்குப் பிறகு, தெற்கு வியட்நாமின் சைகோன் வீழ்ந்தபோது, மீண்டும் அமெரிக்க ராணுவம் அங்கே செல்ல வேண்டும் என்று நினைத்த அமெரிக்கர்கள் யாரும் இல்லை. மறுபடியும் நம்மை வியட்நாமில் இழுத்துவிடுவார்களோ என்று அஞ்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகரித்துவந்த வியட்நாமிய அகதிகள் பிரச்சினைகுறித்து வாய் திறக்கக்கூட அஞ்சினார்கள்.   

இராக் என்றாலே பாராமுகம்
கௌரவமான இடைவேளையின் நிழலிலிருந்து தப்புவதுகூட இந்நாளில் கடினமாகிவிட்டது. இராக்கில் அமெரிக்கா நுழைந்தபோது மொழிபெயர்ப்பாளர் களாகவும் ஓட்டுநர்களாகவும் வழிகாட்டிகளாகவும் ஆலோசகர்களாகவும் செயல்பட்ட இராக்கிய நண்பர் களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. கொலைவெறியோடு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளிடமிருந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இருக்கிறது. இதற்காக ‘லிஸ்ட் புராஜெக்ட்' என்ற அமைப்புக்கு நான் தலைவராக இருக்கிறேன். இவர்களுக்கெல்லாம் விசா வழங்கி அமெரிக்காவுக்கு வரவழைத்துப் பாதுகாப்பான புகலிடங்களைக் கொடுங்கள், அதற்கொரு திட்டம் தீட்டுங்கள் என்று ஒபாமா நிர்வாகத்திடம் தொடர்ந்து கெஞ்சிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், இந்த வெள்ளை மாளிகை நிர்வாகம், இராக் என்றாலே விட்டேற்றியாக ஒதுங்கி நிற்கிறது. 2008 தேர்தல் பிரச்சாரத்தின்போது இராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் விலக வேண்டும் என்று ஒபாமா பிரச்சாரம் செய்தார். 2012-ல் ஆட்சிக்கு வந்ததும் படைகளைத் திரும்பப் பெற்றார். முன்பைவிட இராக் இப்போது நன்றாக இருக்கிறது என்று இவர்கள் தாங்களாகவே நம்பிவிட்டனர். இராக்கில் இப்போது நிலைமை நன்றாக இல்லை என்றாலும்கூட அமெரிக்க மக்கள் இராக்குக்காகப் பரிந்துபேச மாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு இப்போது பாராமுகமாக இருக்கிறார்கள்.
அமெரிக்காவுக்கு உதவிய இராக்கியர்களை அமெரிக்காவுக்கு அழைத்துவந்து பாதுகாப்பாகத் தங்கவைக்க சிறப்புப் பிரிவில் விசா வழங்க, நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்து புதிய சட்டத்தையே இயற்றினார்கள். நாடாளுமன்றம் கொடுத்ததை அரசு நிர்வாகம் தடுத்துவிட்டது. அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து செயல்பட்ட ஆயிரக் கணக்கான இராக்கிய மக்கள், ராஜீயத் தூதர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் இப்போது நிர்க்கதியாக விடப்பட்டு விட்டனர். தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விசாவுக்காக அவர்கள் தவியாகத் தவிக்கிறார்கள். இதே கதைதான் இப்போது ஆப்கானிஸ்தானிலும்!

எதிர்பாராதது அல்ல
இந்தப் பிரச்சினை சற்றும் எதிர்பாராதது அல்ல; இராக்கில் போர் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னாலேயே, நெருக்கடி ஏற்பட்டால் நமக்கு உதவியவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவரவும் அமெரிக்காவில் தங்கவைக்கவும் திட்டமொன்றைத் தீட்டுமாறு அரசின் நிர்வாகப் பிரிவுக்கு நாடாளுமன்றம் கட்டளை பிறப்பித்தது. ஆனால், வெள்ளை மாளிகை அதை லட்சியமே செய்யவில்லை. 2011 டிசம்பரில் அமெரிக்கப் படையின் கடைசிப் பிரிவு துருப்புகள் இராக்கிலிருந்து புறப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் ஒருவர் ‘லிஸ்ட் புராஜெக்ட்' அமைப்பின் வழக்கறிஞர்களைப் பார்த்து, “உங்களைச் சார்ந்த இராக்கியர்கள் நமக்கு என்ன ஆகுமோ என்று உள்ளூர அஞ்சுகிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் அஞ்சுவதற்கு உண்மையான காரணம் ஏதுமில்லை” என்று கூறிவிட்டார்.
அமெரிக்கத் துருப்புகள் இராக்கைவிட்டு வெளியேறிய இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 15 லட்சம் இராக்கியர்கள் தங்களுடைய வீடுவாசலை இழந்து இப்போது வெளியேறியுள்ளனர்.
90 பேரில் மிஞ்சியவர் எத்தனை பேர்?
பாக்தாத், ஃபலூஜா ஆகிய நகரங்களில் நான் பணிபுரிந்தபோது என் கீழ் 90 இராக்கியர்கள் பணிபுரிந்தனர். அவர்களில் 85 பேரை இராக்கிலிருந்தே விரட்டிவிட்டனர். மூன்று பேரைப் படுகொலை செய்துவிட்டனர். மிஞ்சிய இரண்டு பேரில் ஒருவர், தன்னுடைய அடுக்ககத்தில் மனைவி, ஐந்து வயது மகள், கால்ட் ரகக் கைத்துப்பாக்கியோடு வீட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கிக்கிடக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ். கண்ணில் பட்டால், கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு அவரால் உயிர்தப்பிவிட முடியாது. ஜலால் என்பவர், மனைவியுடனும் தன்னுடைய மூன்று மகள்களுடன் துருக்கிக்குத் தப்பி ஓடிவிட்டார். ஒருவகையில் அவர் அதிர்ஷ்டக்காரர். ஏனென்றால், ஜூலை 15 வரை பாக்தாதிலிருந்து புறப்படும் எல்லா விமானங்களிலும் இருக்கைகள் முன்பதிவு முடிந்துவிட்டது. என்னுடன் தொலைபேசியில் பேசியபோதே அவருடைய குரல் உடைந்திருந்தது. “உங்களுடன் சேர்ந்ததால் என்னுடைய வாழ்க்கையே நாசமாகிவிட்டது” என்று மிகுந்த வேதனையோடு கூறினார் ஜலால்.


“எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டேன்; என்னுடைய வீடு, கார், சொத்துகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவந்துவிட்டேன். இனி, எத்தனை நாள்களுக்கு இப்படி ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் அல்லது காலம் முழுக்க? எனக்கு இப்போது 37 வயதாகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாடகத்தில் நான் சிக்கிக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றின் மீதும் வெறுப்பே ஏற்படுகிறது. என்னுடைய பெண்களை நான் படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய எதிர்காலத்தையாவது உறுதிசெய்ய வேண்டும். எல்லாப் பெண் குழந்தைகளும் பீதியில் உறைந்திருக்கிறார்கள். நடுக் குழந்தைக்கு எட்டு வயதாகிறது. அச்சம் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டேயிருக்கிறாள். சிறப்புக் குடியேற்ற விசா கோரி (அமெரிக்க) அரசுக்கு ஓராண்டுக்கு முன்னால் விண்ணப்பித்தேன். அதை நினைவூட்ட மின்னஞ்சல், மின்னஞ்சல், மின்னஞ்சல் என்று தொடர்ந்து அனுப்பிக்கொண்டேயிருக்கிறேன். கடைசியாக எனக்கு 2010-ல் நேர்காணல் நடத்தினார்கள். இப்போது 2014. நான்கு ஆண்டுகளாகவா உங்கள் நிர்வாகம் என்னுடைய மனுவைப் பரிசீலித்துக்கொண்டிருக்கிறது? உங்களுக்கு உதவிகள் செய்த எங்களைக் குடும்பத்துடன் கடத்துகிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள், கொடூரமாகக் கொலைசெய்கிறார்கள்” என்று கதறியழுகிறார் ஜலால்.
“எங்களிடம் எல்லா உதவிகளையும் வாங்கிக்கொண்டு, வேலை முடிந்ததும் இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்” என்று அமெரிக்க நிர்வாகத்தைச் சாடினார். வியட்நாமிலும் இதேதான் நடந்தது.

பரஸ்பரம் குற்றச்சாட்டு
அமெரிக்க அரசியல் அரங்கில் பரஸ்பரம் குற்றம்சாட்டுவது ஆரம்பித்துவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் யார் சொன்னது சரி, இராக் போரில் நாம் அடைந்தது வெற்றியா, தோல்வியா என்றெல்லாம் சூடாக விவாதம் நடக்கிறது. ஒரு காலத்தில் நமக்கு உதவியவர்களுக்கு இன்றைக்கு உதவி தேவைப்படுகிறது என்றபோது, அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். கௌரவமான இடைவேளை நேரமும் கடந்துவிட்டது. இராக் எக்கேடுகெட்டுப் போனால் நமக்கு என்ன என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள்.


நன்றி : தி நியூயார்க் டைம்ஸ்.

No comments:

Post a Comment