Saturday, August 2, 2014

நரிக்குறவர்கள் பற்றிய சிறப்பு பார்வை..

நரிக்குறவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். நரிக்குறவர்களின் சமுக அமைப்பும், சமூகக் கட்டுபாடும் மற்றச் சமூகங்களில் இருந்து அவர்களைத் தனியாகப் பிரித்து வைத்து இருக்கின்றன. அவ்வளவுதான். அவர்களும் தனித்துப் போய்விட்டனர். மற்ற சமூகங்களுடன் அவர்கள் இணைவது இல்லை. ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும்.

தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமூகத்தினர் பல ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக நாடோடிகளைப்போல் அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பர். இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி, போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள். நாடி பார்த்து நோய்க்குறி சொல்லுவார்கள். இன்றைய நவீன மருத்துவம் வந்ததும் இவர்களை ஏமாற்றுக்காரர்களாக சமூகம் சொல்லுகின்றது. குறத்தி குறி சோசியம் இலக்கிய காலத்திலிருந்து பெருமை வாய்ந்தது.

இலக்கியங்கள், கதைகள், பாடல்கள், சினிமாக்கள் என்று எல்லா வகையான ஊடகங்களிலும் நரிக்குறவர்களைப் பற்றித் தவறாகவே சொல்லி இருப்பார்கள். நரிக்குறவர்கள் என்னவோ வேற்று உலகத்தில் இருந்து வந்த மாதிரியும், அவர்கள் என்னவோ நம்ப வீட்டு ஐஸ்பெட்டியில் இருந்த அல்வாவைத் திருடித் தின்ற மாதிரியும் கதை கட்டி காவியம் பேசுவார்கள்.

அவர்களைத் திருடர்களாகவும், சபலபுத்தி உள்ளவர்களாகவும் சித்தரிப்பது மிகவும் தவறு. அவர்களும் நம்மைப் போல மனிதர்கள். அவர்களுக்கும் நம்மைப் போல ஆசாபாசங்கள் இருக்கும். அவர்களைப் பற்றிய சில நடைமுறை உண்மைகளைச் சொல்கிறேன்.

நரிக்குறவர்கள் யார்? 
நரிக்குறவர்களின் பூர்வீகம் வட இந்தியாவின் குஜாராத் மாநிலம். மராட்டிய மாவீரன் சிவாஜியின் படைப்பிரிவில் நரிக்குறவர்கள் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள். மொகலாயர்களின் படையெடுப்புகளினால் சிவாஜிக்குப் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. அதனால், சிவாஜியின் படையில் இருந்த அத்தனை வீரர்களும் மொகலாயர்களின் அடிமைகளாக்கப்பட்டனர். கடும் கொடுமைகள் தொடர்ந்தன. அதில் இருந்து தப்பிக்க நரிக்குறவர்கள் காடுகளில் தஞ்சம் அடைந்தனர். அதற்கு முன் அவர்கள் நரிக்குறவர்கள் அல்ல. நல்ல போர்வீரர்கள். வெளியே நடமாடும் போது, எப்போதும் அடிமைகளுக்கான உடைகளை அணிந்து இருக்க வேண்டும். ஆக, அவர்கள் அணிந்து இருந்த உடைகள் அவர்களை அடிமைகளாக அடையாளம் காட்டின.

அதனால், அந்த உடைகளை அணியாமல் இலைத் தழைகளை உடுத்திக் கொண்டனர். காடுகளிலேயே வாழ்ந்தனர். இதில் ஒரு வேதனையான விஷயம் என்ன தெரியுமா. மொகலாய சாம்ராஜ்யம் மறைந்து போனதுகூட தெரியாமல், அந்த இலைத்தழை அடிமைகள் காடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் தமிழ்நாட்டில் வந்து குடியேறினார்கள். இப்போது மராத்தி கலந்த தமிழ் மொழியில் பேசுகிறார்கள்.

நரிக்குறவர்கள் பெயர்க்காரணம்:  
நரிக்குறவர்கள் என்று சொன்னதும் அவர்கள் விற்கும் நரிக்கொம்பு ஞாபகத்திற்கு வருகிறது. நரிகளில் ராஜநரி என்று ஒரு வகை உண்டு. அவற்றுக்கு கொம்புகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், அவை உண்மையிலேயே கொம்புகள் இல்லை. தலையில் கொஞ்சமாகத் தசை வளர்ந்து இருக்கும். அதுதான் நரிக்கொம்பு. நடுநிசி அல்லது விடியல்காலையில் புடைத்துக் கொள்ளுமாம். காண்டாமிருகத்திற்கு கொம்பு இருப்பதைப் பார்த்து இருக்கலாம். உண்மையில் அது கொம்பு இல்லை. அது இறுகிப் போன தசை.தமிழகத்தில் வாழும் நரிக்குறவர்கள் நரியின் மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுவார்கள். அது அவர்களுக்குப் பிடித்தமான உணவு. நாட்டுக் கோழியைவிட நரி மாமிசம் எவ்வளவோ பரவாயில்லையாம். சண்டைக்கு வரவேண்டாம். நரிக்குறவர்கள் சொல்கிறார்கள். இரண்டுமே சுத்தமான அசைவங்கள். இதில் எது சுத்தமான அசைவம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.நரியின் இறைச்சியை அவர்கள் விரும்பியதாலும், நரிக்கொம்புகளை விற்று வந்ததாலும் அவர்களுக்கு நரிக்குறவர் எனும் பெயர் நன்றாகவே ஒட்டிக் கொண்டது.


வேட்டையாடுதல் :
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது, அவர்கள் காடுகளுக்கு வேட்டையாடச் செல்வது வழக்கம். அது அவர்களின் மேல்மட்ட பொழுதுபோக்கு. ஆங்கிலேயர்களுக்கு நரிக்குறவர்கள் உதவியாக இருந்து இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் நரிக்குறவர்களின் வேட்டையாடும் திறமையைப் பார்த்து, ஆங்கிலேயத் துரைமார்கள் வியந்து போனார்கள்.

அவர்களுக்குத் துப்பாக்கிகளைக் கொடுத்து வேட்டையாடிப் பிழைக்கும் வழிகளையும் சொல்லித் தந்தார்கள். அதனால்தான் இன்றுவரை நரிக்குறவர்கள் துப்பாக்கியும் கையுமாக அலைவதைப் பார்க்க முடிகிறது. ஒரு சின்னச் செருகல். அந்தத் துப்பாக்கிகளும் இப்போது அரிசி பருப்புக்கு அரசியல்வாதிகளிடம் அடைக்கலம் போய் விட்டன. அது மட்டும் இல்லை. துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதிலும் அரசாங்கம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது. இவ்வளவு காலமும் நரிகளை வேட்டையாடிப் பிழைத்து வந்த நரிக்குறவர்கள் இப்போது அரிசிக்கும் பருப்புக்கும் ஆலாய்ப் பறக்கின்றார்கள்.

கல்வி 
நரிக்குறவர் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவிப்பதைவிடவும் அவர்களது வாழ்முறை மற்றும் கலாச்சாரம் குறித்து அறியும் ஆவலே மேலோங்கியது. ஏனெனில் அதிகாரக் கறைபடிந்த நமது பாடத்திட்டங்கள் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்வைச் சூறையாடிவிடும் என்றே தோன்றியது. 

வாழ்க்கை முறை :
குறவர்களைப் பொருத்தவரை உபரி என்கிற ஒன்று பெரும்பாலும் கிடையாது. உழைப்பு, குடி, கொண்டாட்டம் இவைதான் வாழ்க்கை. உணவிற்கும் உறைவிடத்திற்குமான கவலைகள் கிடையாது. அவர்களுக்கான மாபெரும் கேளிக்கை தமிழ்ச்சினிமா. மூன்று காட்சிகளும் படம் பார்க்க அவர்கள் தயங்குவதில்லை. அதிலும் எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் கொள்ளைப்பிரியம். 
ஆண்கள் நரி, முயல் வேட்டையாடுவர். பறவைகளையும் வேட்டையாடி புசிப்பர்.ரவைத் துப்பாகியும், கவுட்டையில் கட்டப்பட்ட’ கேடாபெல்ட்’ , கைத்தடி ஆகியவை அவர்களுடைய ஆயுதம்.


பாட்டுப்பாடி பச்சை குத்துவதும் நரிகுறத்திகளின் தொழில்களில் ஒன்றாக இருக்கிறது.
நரிக்குறவர்கள் கூடாரங்களில் வசிப்பவர்கள் தற்போது அரசாங்கம் இலவச வீடு மற்றும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி வருகின்றது. இவர்கள் பிழைப்புக்காக ஊர் ஊராகச் சுற்றுவார்கள். எங்கு சென்றாலும் அவர்களது பொருள்களையும் எடுத்தே செல்வார்கள். பொழுது போக்குக்காக வானொலியைத் தோலில் கயிறு கட்டி வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்ட வண்ணம் இவர்கள் வேலையைப் பார்ப்பார்கள்.
இப்படி செல்லும் போது கைக்குழந்தையும் தன் தோலில் துணியை அடக்கமாக கட்டி அதன்மேல் குழந்தையை அமர்த்தி எடுத்துக் கொண்டு தன் வேலைகளில் ஈடுபடுவார்கள்.
நரிக்குறவர்கள் மணிக்கோர்க்கும் போது பாசிமணி ஊசி மற்றும் இதரப பொருள்களை இடுப்பில் (பெண்கள் கழுத்தில்) பை அல்லது டப்பா கட்டி வைத்துக் கொண்டு சுலபமாக வேலை செய்வார்கள்.
காடை கௌதாரி, குருவி வகைகள், மாந்தோப்புக் கிளி. இவறை உயிருடன் கண்ணி வைத்தும் வலையினாலும் பிடித்து உயிருடன் வளர்ப்போருக்கு விற்பனை செய்வார்கள். 
திருவிழாக் காலங்களில் கோயில் சப்பரத்தில் உற்சவர் எழுந்திருத்து ஆகி புறப்பாடு செய்கையில், பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் சுமந்து செல்ல இவர்கள் ஆணும் பெண்ணும் ஈடுபட்டுக் கூலி பெறுபவார்கள். 
திரையரங்குகளில் அமர்ந்துகொண்டே பாசிமணி பின்னிக்கொண்டிருப்பார்கள். நம்பியார் எம்ஜிஆரை அடித்துவிட்டாலோ பதட்டத்தில் பாசிமணி பின்னும் வேகம் அதிகரிக்கும்.அவர்களின் சமையலுக்கென்று ஒரு காட்டுருசி இருக்கும். அவர்கள் குழம்போ, ரசமோ வைப்பதில்லை. கறியைச் சமைத்து அப்படியே சோற்றில் பிசைந்து சாப்பிடுவார்கள். மாமிசமில்லாமல் அவர்களின் உணவு இல்லை. 

சாமி மூட்டை 
குறவர்களிடத்தில் சாதியில்லை. ஆனால் இரண்டுபிரிவுகள் இருக்கின்றன. ஆடு சாப்பிடுகிற பிரிவு, மாடுசாப்பிடுகிற பிரிவு. ஆடு சாப்பிடுகிற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு அதே பிரிவைச் சேர்ந்த இன்னொருவர் பங்காளி முறை வேண்டும். அதேபோல மாடுசாப்பிடுகிற பிரிவினருக்கும்.நறிக்குறவர்கள் அனைவரும் இந்துக்கள். சமய உணர்ச்சி மிக்கவர்களான இவர்கள், தங்கள் கடவுளளர்களைத் தங்கள் இருப்பிடங்களிலேயே வணங்குகின்றனர். அக்கடவுளின் உருவங்கள் ஒரு துணி மூட்டையில் வைக்கப்பட்டு, அந்தத் துணிமூட்டை சாமி மூட்டை என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சாமி மூட்டை உண்டு. குடும்பத் தலைவரால் மரியாதையாகவும், கவனமாகவும் அம்மூட்டை பாதுகாக்கப்படுகின்றது. சாமி மூட்டையில் உள்ள துணியில், பலி கொடுக்கப்பட்ட விலங்கின் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட துணியும் அடங்கியிருக்கும். இவற்றை அவர்கள் பரம்பரையாக உள்ளதாகக் கூறிக் கொள்வார்கள்.

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட பாவாடை ஒன்று ‘சாமி பாவாடை’ என்று பெயர் பெற்று அவர்களிடையே உள்ளது. நரிக்குறவப் பெண்கள் சாமி மூட்டையைத் தொடுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை; அத்துடன் ஒரு பிரிவைச் சார்ந்தவர்களின் சாமி மூட்டையை அடுத்த பிரிவைச் சார்ந்தவர்கள் தொடுவதில்லை. அடுத்தவர்களுக்குத் தங்கள் சாமி மூட்டையைப் பிரித்துக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தொட அனுமதியும் இல்லை. பிரித்துக் காட்டவும் விரும்புவதில்லை.

ஆண்களும் பெண்களைப் போன்று தலையில் சிகை வளர்த்துக் கொள்கின்றனர்.வழிபாடு செய்யும் பொழுது, தன் தலையை விரித்துப் போட்டுகொண்டு சாமி மூட்டையைத் திறப்பான் குடும்பத் தலைவன். பின்னர், இரத்தம் தோய்ந்த பாவடையை அணிந்து, வழிபாடு செய்வான்.


திருமணம் 
பெண் பார்க்கப் போகும் போது ’வெற்றிலைப் பாக்கு இருக்கா இல்லையா’ என்று கேட்க மாட்டார்கள். ’பிராந்தி இருக்கா’ என்றுதான் கேட்பார்கள். பிராந்தி அல்லது விஸ்கி கண்டிப்பாக இருக்க வேண்டும். பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன் எல்லாரும் நன்றாக சாப்பிட வேண்டும். அப்புறம்தான் கல்யாணப் பேச்சு.  மது அருந்துவதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை. அவர்களைப் பொருத்த வரையில் நல்ல ஒரு கலாசாரம். இந்த இடத்தில் சமத்துவம் சம்மட்டியால் அடித்து தத்துவம் பேசுகின்றது.

முன்பு எல்லாம் குழந்தைகள் பிறக்கும் போதே திருமணத்தை நிச்சயித்துவிடுவது வழக்கம். பெண்ணுக்கு மூன்று வயதானதும் திருமணத்தை முடித்து, அந்தப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக நடந்த அது போன்ற பால்யத் திருமணங்கள் இப்போது இல்லை. குறைந்து விட்டது.

பெண்ணுக்கு அழகு இருக்க வேண்டும். பாசிமணி கோர்க்கும் திறமை இருக்க வேண்டும். அதை விற்றுப் பணம் சேர்க்கும் அறிவும் இருக்க வேண்டும். அதேமாதிரி மாப்பிள்ளைக்கு வெள்ளி வெண்கலச் சாமான்கள் இருக்க வேண்டும். நன்றாக வேட்டையாடத் தெரிய வேண்டும். குறிப்பாக ஆண்கள் குடுமி வைத்து இருக்க வேண்டும். குடுமி இல்லாத ஆண்களுக்கு மவுசு இல்லை.

ஒரே பங்காளிப் பிரிவிற்குள் பெண் எடுக்க மாட்டார்கள். எதிரெதிர்ப் பிரிவுகளில்தான் மண உறவுமுறைகள். அதேபோல் திருமண உறவுகளைத் தாண்டிய சுதந்திரமான பாலுறவுகள் குறவர்சமூகங்களில் உண்டு என்றாலும், ஒரு ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஆண், இன்னொரு ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த பெண்னோடு பாலியல் உறவுவைத்துக்கொள்ளமாட்டான்.

குறவர் பெண்களுக்கு 13 அல்லது 14 வயதிலேயே திருமணம் ஆகிவிடுகிறது. ஆண்களுக்கு அதிகபட்ச வயது 16 அல்லது 18. பெரும்பாலும் பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்வதும் உண்டு. சரியான உறவுக்குள் காதலித்து இருந்தால் சமூகத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி ஒரே பிரிவுக்குள் திருமணம் செய்து கொண்டால் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.

பரிசப்பணம் 
கல்யாணத்துக்கு முதல் நாள் பரிசப்பணம் கொடுத்தாகணும். கல்யாணம் மாப்பிள்ளை வீட்டுலதான் நடக்கும். முன்னாடி 10 நாள், 15 நாள் நடக்கும். இப்போ 3 நாளா சுருங்கிருச்சு. பொண்ணு வீட்டுக்காரங்க உறவுமுறைகளோட மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருவாங்க. எல்லாருக்கும் பிராந்தி வாங்கிக் கொடுக்கணும். சின்னம், பெரிசுன்னு எல்லாம் குடிக்கும். முதல்நாள் ராத்திரி கையில காப்புக் கட்டுவாங்க. மாப்பிள்ளை, பொண்ணு கழுத்துல கருகமணி கட்டுவாரு. கறி, மீன், கோழி வாங்கி அன்னைக்கு எல்லாருக்கும் விருந்து வைக்கணும். சண்டை, சச்சரவுன்னு ஜாலியா பொழுது ஓடும். மறுநாள் மாப்பிள்ளையும் பொண்ணும் மூணுவேளை குளிப்பாங்க. அன்னைக்கும் விருந்து. மூணாம் நாளு பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஏகப்பட்ட விளையாட்டுகள் நடக்கும். ‘காந்தே சூடனு’ன்னு ஒரு விளையாட்டு. பொண்ணு கையில கட்டுன காப்பை மாப்பிள்ளையும், மாப்பிள்ளை கையில கட்டுன காப்பை பொண்ணும் அவுக்கணும். ஒருத்தருக்கொருத்தர் அவுக்க விடாம வம்பு பண்ணுவாங்க.

யாரு முதல்ல அவுக்குறாங்களோ அவங்க ஜெயிச்சதா அருத்தம். அடுத்து எல்லார்கிட்டயும், மோதிரம், காசுகளை வாங்கி சொம்புல போட்டு யாரு எவ்வளவு எடுக்கிறாங்கன்னு போட்டி. இதுக்கு ‘மீனு புடிக்கிறது’ன்னு பேரு. அடுத்து சாப்பாடு. மாப்பிள்ளை, பொண்ணுக்கு சாப்பாடு ஊட்டணும். பொண்ணு, மாப்பிள்ளைக்கு ஊட்டணும். ரெண்டு பேருமே வாயைத் திறக்க மாட்டாங்க. ஒருத்தருக்கொருத்தர் மூஞ்சியில அப்பிக்குவாங்க. மாப்பிள்ளைக்கு மாமியார் ஆரத்தி எடுக்கிறப்போ மாப்பிள்ளை மேல பிடிச்சுத் தள்ளிருவாங்க. ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கும். கல்யாணம் முடிஞ்சதும் மூணு நாளைக்கு மாப்பிள்ளையோட வேட்டியை பொண்ணு தலையில முக்காடா சுத்திக்கணும். அந்த நேரத்துல பேயி, பிசாசு, காத்துக் கருப்பெல்லாம் பொண்ணை அண்டும். அதைவிரட்டத்தான் இந்த ஏற்பாடு. திருமணத்துக்குப் பிறகு ஒருவருட காலத்துக்கு ஆண் வீட்டில் பாதிநாளும், பெண் வீட்டில் பாதி நாளும் மணமக்கள் இருக்கணும். அதன்பிறகு தனிக்குடித்தனம் போகலாம். அல்லது மாப்பிள்ளை வீட்டுலயே இருக்கலாம்’’ 
திருமணம் முடித்த பெண்கள் மெட்டியணியக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. பூ வைத்துக் கொள்ளக்கூடாது. திருமணத்துக்குப் பிறகு, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்துப்போகாத நிலையில் வெகு எளிதாக அதிலிருந்து வெளியே வரவும் வாய்ப்பிருக்கிறது. பஞ்சாயத்து கூடி இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒன்று சேர்க்க முயற்சிக்கும். முடியாத பட்சத்தில் எளிய தீர்வு. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்து ஆளுக்கொரு வைக்கோலை எடுத்து மூன்றாக முறித்து அந்த தண்ணீரில் போடவேண்டும். அப்போதும் மது விருந்து வைக்க வேண்டும். பிறகு இருவருமே புது வாழ்க்கையைத் தொடங்கலாம்! வெறும் காட்சிப்பொருளாகக் கடந்து செல்லும் நரிக்குறவர்களின் வாழ்க்கையில்  ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் மட்டுமல்ல,இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், நெறிகள்அவர்களின் வாழ்க்கையில் உள்ளது.

ஒழுக்கம் :
நரிக்குறவர் பெண்கள் அழகிகள். அவர்கள் மட்டும் குளித்து நாகரீக ஆடைகள் அணிந்தால் நமது பெண்கள் நிச்சயம் தோற்றுப்போவார்கள். ஆனால் எந்த ஒரு குறவர் பெண்னையும் நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிடமுடியாது, அதேபோல பெரும்பாலும் குறவர்பெண்கள் பாலியல்தொழிலிலும் ஈடுபடுவது கிடையாது. இதற்குக் காரணம் போதுமான பாலுறவு தங்கள் சமூகங்களுக்குள்ளேயே கிடைத்துவிடுவதால்தான் என்று கருதுகிறேன்.

பலாத்காரம் அல்ல, சாதாரணமாக ஒரு குறவர் பெண்ணின் கையைக்கூட நீங்கள் பிடித்து இழுத்துவிட முடியாது.எதிர்த்து நிற்கும் உடலுறுதி ஒரு காரணமென்றால், இன்னொரு காரணம் அவர்களின் கூச்சலிலேயே ஊர்கூடிவிடும்.

குறவர் பெண்னைப் பிறசமூகத்தவர் திருமணம் செய்ய இயலுமாவென்று. அதிலொன்றும் தடையில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்னையும் மாப்பிள்ளையையும் தனது சமூகத்திற்குள் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். அதேபோல மாலை ஆறுமணிக்குமேல் வீடுதிரும்பும் பெண்ணையும் விலக்கம் செய்துவிடுவார்கள். எல்லாப் பழங்குடிச் சமூகங்களைப் போலவே இனத்தூய்மை பேணும் சமூகம்தான் குறவர்சமூகமும்.

நரிக்குறவர்கள்  திருவிழா:
செஞ்சியில் எருமை மாடுகளை வெட்டி நரிக்குறவர்கள் வழிபாடுஆடி மாதம் என்றாலே ஆங்காங்கே அம்மன் வீதி உலா, கஞ்சி ஊற்றுதல், திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் திருவிழாவில் வினோத திருவிழாவாக எருமை ரத்தம் குடித்து அதன் கறியைச் சாப்பிடும் 4 நாட்கள் திருவிழா நடத்தி வருகின்றனர். இவர்கள் கீற்று கொட்டகையில் வெள்ளி தகடுகளால் செய்யப்பட்ட காளி, மீனாட்சி, மாரி, கருப்பசாமி, பாண்டி போன்ற தெய்வங்களை வைத்து வணங்கி வருகின்றனர்.
முதல் நாள் ஆட்டு கிடா வெட்டி அம்மனுக்கு படையல் போட்டு விழா கொண்டாடினர். 2-வது  நாள் ரொட்டி சுட்டு அம்மனுக்கு படையல் போட்டு அன்னதானம் செய்தனர். 3-வது  நாள் இரண்டு எருமை மாடுகளின் நான்கு கால்களையும் கயிற்றால் கட்டி கீழே சாய்த்து கத்தியால் கழுத்தை அறுத்தனர்.  மாடுகளை வெட்டி அதன் ரத்தத்தை பாத்திரத்தில் பிடித்து அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.பின், இதிலிருந்து வெளியேறிய ரத்தத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடித்தனர். 4வது  நாள் 7 பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.நரிக்குறவர் இனக்குடும்பத்தினர் அனைவரும்  பங்கேற்பார்கள்.வெளியூர்களில் இருந்தும் உறவினர்களை வரவழைக்கபட்டு விருந்து அளிப்பார்கள்.  இந்த விழாவை, 300 ஆண்டுகளுக்கும் மேலாக, நடத்தி வருவதாக  கூறினார். மேலும் அவர்கள் இந்த வினோத நேர்த்திக்கடன் பற்றி  கூறுகையில், சுமார் 24தலைமுறையாக ஆண்டுதோறும் ஆடி மாதம் பூஜை செய்து வருவதாகவும், தங்களின்குடும்ப நன்மைக்காகவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும் எருமை மாடுகளை பலிகொடுத்து ரத்தத்தை குடிப்பதாகவும் தெரிவித்தார். எருமை மாட்டிறைச்சியை பத்திரகாளியம்மன் சாமி கும்பிடுபவர்கள் மட்டுமே சாப்பிடவேண்டும் என்றும், திருவிழாவின் மறுநாள் மது எடுப்பு நடக்கும். இதில் மாட்டின் தலை, கொம்பை ஊர்வலமாக எடுத்து சென்று ஒரு புதரில் வைத்து சாமி கும்பிட்டு திருவிழாவை நிறைவு செய்வோம் என்றும் கூறினார்.

பொருளாதார நிலை:
நரிக்குறவர்களின் முதன்மையான தொழிலாக 'பாசி மணி மாலைகள்' தயாரிப்பது மட்டுமே இப்போது இருக்கிறது. நரிக்குறவர்கள் தயாரிக்கும் மணிமாலைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். பூஜைக்குப் பயன்படும் மாலைகள், ஃபேன்ஸி மாலைகள், விலை உயர்ந்த கற்களால் ஆன மாலைகள், தரமான அலங்கார மாலைகள். விலை அதிகம் கொண்ட மாலைகளைத் தயாரிப்பதற்கான மணிகள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு காயலான் கடைகளில் கிடைத்ததுபோல இப்போது கிடைப்பதில்லை. அவற்றை வாங்குவதற்கு அவர்கள் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என நெடுந்தூரம் போக வேண்டியுள்ளது.

மணிமாலைகள் செய்யும் நரிக்குறவர்களின் திறமையையே மூலதனமாக்கி அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு வல்லுநர்களைக் கொண்டு சிறந்த டிசைன்களில் மாலைகள் செய்வதற்கு நரிக்குறவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் விலை உயர்ந்த மணிகளை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வாங்கிவந்து கடலூரில் 'ஸ்டாக்' செய்து அவர்களுக்குச் சுலபமாக சப்ளை செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நரிக்குறவர்களையே உறுப்பினர்களாகக் கொண்ட சுய உதவிக்குழுக்களை அமைத்து இப்படியான மணி மாலைகளைத் தயாரித்து அவற்றை 'மார்க்கெட்' செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரங்களை ஏற்படுத்தித்தர வங்கிகள் முன்வந்துள்ளன. இதில் சில தொண்டு நிறுவனங்களும் ஒத்துழைக்க ஆர்வம் காட்டியுள்ளன. நரிக்குறவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களால் தயாரிக்கப்படும் மணி மாலைகள் 'மார்க்கெட்' செய்யப்பட்டால் அவர்களின் பொருளாதார நிலை நிச்சயம் உயரும். நாடோடிகளாக அவர்கள் அலைந்து திரிவதும் முடிவுக்கு வந்துவிடும்.  

சாதிப்பிரிவு 
தமிழ்நாட்டில் மட்டுமின்றி நரிக்குறவர்கள் வெவ்வேறு பெயர்களில் ஆந்திரா, குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், கர்னாடகா முதலிய மாநிலங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் பழங்குடி இனத்தவராகவே கருதப்படுகிறார்கள். ஹரியானாவில் 'பவுரியா' என்றும் மத்தியப் பிரதேசத்தில் 'பார்தி' என்றும், குஜராத்தில் 'வாக்ரி' எனவும் கர்னாடகாவில் 'ஹக்கி பக்கி' எனவும் அழைக்கப்படும் நரிக்குறவர்கள் அந்த மாநிலங்களில் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அதற்கான சலுகைகளைப் பெற்று வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில்தான் அவர்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வைத்திருக்கிறோம்.

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை தமிழக அரசின் சார்பில் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. 1964ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு கொள்கையளவில் நரிக்குறவர்களைப் பழங்குடியினராக ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் அவர்களுக்குப் பழங்குடியினருக்கான சலுகைகள் 1974ஆம் ஆண்டுவரை அளிக்கப்பட்டன. ஆனால், அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து முறையாக அறிவிப்பு செய்வதற்கு முன்பு இப்படிச் சலுகைகளைத் தரக் கூடாது என மத்திய அரசு 1974ஆம் ஆண்டில் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிய காரணத்தால் அப்போதிருந்த அரசு அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தற்காலிகமாகச் சேர்த்து உத்தரவிட்டது. ஆனால், படிப்பு உதவித்தொகை, மனைப்பட்டா, அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பெறுகின்ற விஷயத்தில் அவர்கள் தொடர்ந்து பழங்குடியினருக்கான சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டது. இப்படி 1975ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் செய்யப்பட்ட அந்தத் 'தற்காலிக ஏற்பாடு'தான் கடந்த முப்பத்து இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் பலவிதங்களில் நரிக்குறவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு நரிக் குறவர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இதன் தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர், உறுப்பினர் செயலராகவும் இருப்பார்கள்.நமது அரசமைப்பின் முட்டாள்தனத்திற்கு ஒரு மகத்தான சான்று அரசின் சாதிப்பட்டியலில் குறவர்களுக்கான இடம். அரசின் வரைமுறைப்படி நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் வருவர். உண்மையில் அவர்கள் பழங்குடியினர் பட்டியலிலேயே வைக்கப்படவேண்டியவர்கள். 

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment