Tuesday 2 September 2014

நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உதயம்!!

இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த  பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
பிகார் மாநிலத்தில் உள்ள ராஜகிருஹம் பகுதியில் இயங்கி வந்த இந்தியாவின் புராதன நாளந்தா பல்கலைக்கழகம், 800 ஆண்டுகளுக்கு முன்னர், அன்னிய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் அமைக்கப்பட்ட  நாளந்தா பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை வகுப்புகள் தொடங்கின.
தற்போது இங்கு 15 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் மட்டும் தொடக்க நாளில் வகுப்புக்கு வந்திருந்தனர். முதல் நாளில் சுற்றுச்சூழல், வரலாறு ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டன.  இங்கு தற்போது பணியாற்றும் மொத்தமுள்ள 6 பேராசிரியர்களில் 2 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.        
இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோபா சபர்வால் கூறியதாவது: நாளந்தா பல்கலைக்கழகத் திறப்புக்கு சிறப்பு விழா எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இம்மாதம் 14ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாளந்தா பல்கலைக்கழகத்தைப் பார்வையிடவுள்ளார். பல்கலைக்கழக புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
35 நாடுகளைச் சேர்ந்த 1,400 மாணவர்கள் இங்கு பயில விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் கட்டமாக அவர்களில் 15 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கு படிப்படியாக பல்வேறு பாடங்கள் சேர்க்கப்படும். மேலும் இப்பல்கலைக்கழகம் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்போது ஏராளமான மாணவர்கள் இங்கு படிக்க முன்வருவார்கள்.
இந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாக்குவதற்கு அரும்பாடுபட்ட பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
பண்டைய காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது. இங்கு ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் பயின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment