Sunday, October 5, 2014

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பின்லாந்து கல்வி முறை !!

பின்லாந்து பள்ளி வகுப்பறைகளின் மாதிரி. (கோப்புப்படம்)சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பின்லாந்து நாட்டில் பின்பற்றி வரும் தரமான கல்வி முறையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பயிற்சிக்கு கடந்த மாதம் பின்லாந்து சென்ற 6 தலைமையாசிரியர்கள் மற்றும் ஒரு உயர் அதிகாரி, அங்குள்ள கல்விமுறையின் சிறந்த விஷயங்களை கற்று வந்துள்ளனர். அதனை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.


அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்?பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை.

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்.
இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று
ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக்கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம்,விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64) க்கும் முக்கியத்துவம் உண்டு.


தனித்தனி மேசை
உலக அளவில் நடத்தப்படும் கல்வி ஆய்வான “பிசா”வில் (PISA) பின்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 6 பேர் கொண்ட ஆசிரியர் குழுவினர் பின்லாந்துக்கு சென்னை மாநகராட்சியால் அனுப்பப்பட்டனர்.

நாடெங்கும் ஒரே பாடத்திட்ட முறை பின்பற்றப்பட்டு வரும் பின்லாந்தில் வகுப்பறைகள் கற்றலை எளிதாக்கும் வகையில் உள்ளன. அதுபோன்ற சூழலை இங்கு உருவாக்க பல்வேறு மாற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி மேஜைகள் தரப்படும். அவரவருக்கான உயரத்துக்கு ஏற்ப மேஜையின் உயரத்தை மாற்றிக்கொள்ளும் வசதி அதில் இருக்கும். அதோடு மாணவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் குழுவாக அமர்ந்து இயங்கவும் தனித்தனி மேஜைகள் பயன்படும் என்று பின்லாந்து சென்று வந்த உதவிக் கல்வி அலுவலர் இ.கோவிந்தசாமி கூறினார்.

ஓய்வு அறை
குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் அவர்கள் ஓய்வு எடுக்க வசதியாக ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன. மாணவர்கள் எந்த வகுப்பை கவனிக்க முடியுமோ அதில் மட்டும் பங்கேற்று மற்ற நேரங்களில் ஓய்வறையில் இருக்கலாம்.முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. 

௧. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை.
௨. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.

௩. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை.


௪. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்.


௫. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.


௬. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது.


௭. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். ‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.


௮. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ‘டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை.


௯. தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்வி முறையில்பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். 


தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

இது எப்படிஎன்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.
உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.
இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எசு.,ஐ.பி.எசு போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம்…

வழிகாட்டியாக மாணவர்
மாணவர்கள் அவர்களின் வேகத்துக்கு ஏற்ப கற்றுக் கொள்ளும் முறை பின்லாந்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேகமாக கற்றுக் கொள்ளும் மாணவர்கள் பிறருக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். அனைவரும் ஒரு பாடத்தை கற்றுக் கொண்ட பின்னரே அடுத்த பாடத்தை கற்றுக் கொள்ள தொடங்குகின்றனர். இந்த 'குழு கற்றல்’ முறையையும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனுபவப் பகிர்வு
இது தவிர காட்சிப் பலகைகள், செய்முறை தாள்கள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் போன்ற பல புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த அனுபவங்களை சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுடனும் அடுத்த வாரத்தில் பகிர்ந்துகொள்ள இருப்பதாக கல்வி இணை ஆணையர் டி.என்.வெங்கடேஷ் கூறினார்.

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment