Thursday, October 1, 2015

ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மதுரை மக்கள் கருத்து !! ஒரு சமூக பார்வை..

ஸ்மார்ட் சிட்டி திட்டம் சவால் நிறைந்த திட்டமாகும். இந்தியாவின் நகர்புற குடிமக்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிக்க இந்த திட்டத்தை பங்குதாரர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். 

ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நடந்த முதல் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் அடிப்படையில் 7 திட்டங்கள் வெளியிடப்பட்டது. நேற்று நடந்த வாக்கெடுப்பில் கூடுதலாக மாநகராட்சி ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த 9 திட்டங்கள் சேர்க்கப்பட்டிருந்தது. மதுரை விரிவாக்கத்தில் அமியுச்மென்ட் பார்க்,மெட்ரோ ரயில்,பாதாள சாக்கடை : திருமதி தையுபா அஜ்மல் , சமூக ஆர்வலர்  (அல்அமீன் நகர்)
  • மாநகராட்சி சார்பில் அமியுச்மென்ட் பார்க் (அதிசியம்  போல் ) கொடிக்குளம் கண்மாய் பகுதிகளில் அமைக்கலாம்.                                      
  •   மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த கொடிக்குளம்பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை வசதிகள் இல்லை. எஸ்.கொடிக்குளம் கண்மாய் 93 ஏக்கரில் உள்ளது. இதில் கருவேல மரங்களை அகற்றி கண்மாயை துார்வாரினால் கற்பகநகர், சர்வேயர்காலனி, ஆனந்தராஜ்நகர், டி.எம்.நகர், கொடிக்குளம், அல்அமீன் நகர், சூர்யாநகர், பாரத் நகர் என அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை நீங்கும்.                                                  
  • போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் போன்ற பொது போக்குவரத்திற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். 
    மெட்ரோ ரயில் திருமங்கலம்
     முதல் அழகர்கோவில் . (வழி  : ஏர்போர்ட் ,பெரியார்,தெப்பகுளம் ,மாட்டுத்தாவனி , கோ. புதூர் , கடசனேந்தல் ) 
  • தமிழக அரசு சார்பில் சுற்றுலா பகுதிகளில் ஈகோ பார்க் போன்ற பூங்காக்களை மதுரையில் அதிகளவில் அமைக்க வேண்டும். நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க வேண்டும். எந்த திட்டங்கள் நிறைவேற்றினாலும், மதுரையின் தொன்மையும், வரலாறும் புதைந்து போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • தமிழக அரசு சார்பில் சுற்றுலா பகுதிகலுக்கு  முழு  நேர பேருந்து வேண்டும்.

கண்மாய் துார்வாரப்படுமா:கருப்பையா, வண்டியூர் நடையாளர் கழக துணைத் தலைவர்

 மதுரையில் 611 ஏக்கர் பரப்பு கொண்ட வண்டியூர் கண்மாய் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் வறண்டு கிடக்கிறது. இதனால் கே.கே.நகர், மானகிரி, அண்ணாநகர், மேலமடை, தாசில்தார்நகர், கோமதிபுரம், வண்டியூர் பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தால் தடுமாறுகின்றன. வண்டியூர் கண்மாயை மதுரையின் குடிநீர் ஆதாரமாக கருதி, ஆழப்படுத்தி சுற்றுப்புறத்தில் வாழும் 3 லட்சம் மக்கள் குடிப்பதற்கும் பிறபயன்பாட்டிற்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

பறக்கும் மேம்பாலங்கள் : தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றினை சீரமைக்க வேண்டும். அதில் கழிவு நீர் கலக்க கூடாது. மேலும் வைகை கரைகளில் தடுப்பு சுவர்களை எழுப்பி அந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும். வைகை கரை சாலையில் வாகன போக்குவரத்து இருந்தால் நகரில் நெரிசல் குறையும். ஏற்கனவே அறிவித்தப்படி கோரிப்பாளையம், காளவாசல், புனித மரியன்னை பள்ளி ஆகிய இடங்களில் பறக்கும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். 3-வது வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும். 

நகர் முழுவதும் தரமான சாலைகளை அமைக்க வேண்டும். அண்ணா சிலை முதல் பெரியார் பஸ் நிலையம் வரை உயர்மட்ட பறக்கும் மேம்பாலம் கட்ட வேண்டும். சமயநல்லூர் முதல் உத்தங்குடி வரை ரிங்ரோடு அமைக்க வேண்டும். அதே போல் சிலைமான், மேலக்கோட்டை, கொடிக்குளம் வழியாக 2-ம் கட்ட ரிங்ரோடு போட வேண்டும். இது போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு முழு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டாலும், மாநகராட்சி பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
 மாசுபடாத நீர்நிலைகள்:முத்துமாரி, ஐ.டி., நிறுவன இயக்குனர், அண்ணாநகர்

புராண காலத்தில் மதுரையில் வைகை, கிருதுமால் நதிகள் ஓடின. ஆனால் கிருதுமால் நதி சாக்கடை கால்வாயாக மாறி விட்டது. வைகையும் கால்வாயாக மாறி விடுமோ என்ற அச்சம் உள்ளது. அந்தளவுக்கு நகரின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் வைகையை சுத்தப்படுத்தி, இரு கரைகளிலும் ரோடுகள் அமைத்து, பூங்காக்களை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் வைகையை காப்பாற்றுவதுடன், நகருக்குள் போக்குவரத்து நெரிசலும் குறையும். நகரை சுற்றியுள்ள கண்மாய்களை துார் வார வேண்டும். குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். நகரின் முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சுத்தமான நீர்நிலைகள்:ரங்கராஜ், ஹார்விபட்டி குடியிருப்போர் நலச்சங்க தலைவர்
ஹார்விபட்டி அருகே பானாங்குளம் கண்மாய், சேமிட்டான் குளம் கண்மாய், தென்கால் கண்மாய் மற்றும் திருப்பரங் குன்றம் பகுதியை சுற்றியுள்ள கண்மாய்களில் மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகள், சாக்கடை நீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டும். ஹார்விபட்டி பூங்காவை மாநகராட்சி 'எக்கோ பார்க்' போல அழகுபடுத்த வேண்டும்.

தேவை மேம்பாலங்கள்:ஜெயராமன், ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் தலைவர்.
மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரிப் பாளையத்தில் மேம்பாலம், கீழ்பாலம் அமைக்க வேண்டும். வண்டியூர் பூங்காவின் வடபுறம் சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு எதிரே ஒரு ரோடு அமைத்து, அதை பாண்டிகோயில் அருகே இணைத்தால், மாட்டுத்தாவணிக்கு வாகனங்கள் எளிதாக செல்லலாம். போக்குவரத்து நெரிசல் குறையும்.

நெரிசலற்றரோடுகள்:கான்சா, சிங்கராயர் காலனி குடியிருப்போர் நலச் சங்க செயலாளர்.
மதுரை நகரில் இன்று வாகனங்கள் எளிதாக கடக்கும் அளவிற்கு தரமான, நெரிசலற்ற ரோடுகள் இல்லை. அகலமான ரோடுகளை அமைக்க வேண்டும். நெரிசல் மிகுந்த இடங்களில் பறக்கும் பாலங்கள் கட்ட வேண்டும். குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளை அனைத்து இடங்களிலும் செய்து கொடுக்க வேண்டும்.

நகரமைப்புத்துறை செயல்படுமா : ஞானசம்பந்தன், தலைவர், மதுரை மடீட்சியா குழுமத்தொழில் கூட்டமைப்பு 
மதுரையில் 30 ஆண்டு களாக விரிவாக்கத்திற்கான எந்த பணிகளும் நடக்க வில்லை. நகரமைப்பு துறையும் எந்த இடத்தையும் அடையாளம் காணவில்லை. எங்கு பார்த்தாலும் அங்கீகாரம் இல்லாத வீடுகள் 13 அடி, 15 அடி அகல ரோடுகளில் உள்ளன. எந்த பகுதியில் விரிவுபடுத்த வேண்டும், அங்கு ஷாப்பிங், குடியிருப்பு, தொழில்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும் என்பதை திட்டமிட வேண்டும்.

சென்னையில் அண்ணாநகர், மதுரையில் கே.கே.நகர் ஆகியவை திட்டமிடப்பட்டு அகலமான ரோடுகளாக அமைக்கப்பட்ட குடியிருப்புகள். குடிசைகள் இல்லாத மதுரையாக மாறவேண்டும். தொழில்துறை வளர்ச்சி பெற பழைய தொழில்களை விரிவுபடுத்த வேண்டும்; புதிய தொழில்களை உருவாக்க வேண்டும். திருப்பரங்குன்றம், கூடல்நகரில் ரயில்கள் நின்றால் நகரில் நெரிசல் குறையும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இடத்தை இப்போதே அடையாள காண வேண்டும்.


குடியிருப்புகளுக்கு முக்கியத்துவம் : அம்மையப்பன், பார்க் டவுன் 
குடியிருப்போர் நலச் சங்க துணை செயலாளர்தபால்தந்திநகர் பார்க் டவுன் குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், தார் ரோடு போன்ற வசதிகள் இல்லை. பல ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் குடியிருப்புகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment