Wednesday 12 October 2016

உங்களிடம் கொடுக்கப்பட்ட பணி ஒரு குரங்கு மூட்டை !!

Image result for குரங்கு மூட்டைகுரங்கு மூட்டைஒரு நாடு. அந்த நாட்டில் மந்திரி பதவி காலியாக இருந்தது. அதற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பலரை கழித்துக்கட்டிய பின் இறுதியாக மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவரை தேர்ந்தெடுப்பது கஷ்டமான பணியாக இருந்தது. முடிவெடுக்க முடியாமல் தவித்த அரசர், இறுதியில் சாதுவை அழைத்தார்.
‘சாதுவே! இந்த மூவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். மிகவும் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் தான் ஒருவரை மந்திரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்', என்றார் அரசர்.
‘சரி. இவர்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கு மந்திரி பதவி அளிக்கலாம்', என்றார் சாது.
ஒப்புக்கொண்டார் அரசர். அங்கிருந்தவர்களை அரண்மனை நந்தவனத்திற்கு அழைத்துச் சென்றார். போட்டியாளர்களிடம் சாது பேசினார்.
‘இந்த பூந்தோட்டத்தில் இருக்கும் பூக்களை பறிக்க வேண்டும் இதுதான் போட்டி. ஒரு மணி நேரத்தில் யார் அதிக பூக்களை பறிக்கிறர்களோ அவர்களுக்கே மந்திரி பதவி' என்றார் சாது.
அரசன் மட்டுமல்ல. அங்கு கூடியிருந்த அனைவரும் சிரித்தனர்.
‘மந்திரி வேலைக்கும் பூப்பறிப்பதற்கும் என்ன சம்பந்தம்', என்று கேட்டார் அரசர்.
‘அவசரம் வேண்டாம் அரசே. ஒரு நிபந்தனை இருக்கிறது. இந்த மூவருடனும் ஒரு குரங்கு அனுப்பி வைக்கப்படும். திரும்பி வரும் போது பூக்களோடு, குரங்கையும் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்', என்றார் சாது.
அரசர் ஏற்றுக்கொண்டார். மூவருடனும் ஒரு குரங்கு அனுப்பப்பட்டது. குரங்குடன் அவர்கள் நந்தவனத்திற்குள் நுழைந்தார்கள்.
நந்தவனத்தில் போட்டிக்கு சம்பந்தமில்லாத ஒருவன் ஏற்கனவே பூப்பறித்துக் கொண்டிருந்தான். அவனிடமும் ஒரு குரங்கு இருந்தது. அவன் தன்னுடைய வேட்டியால் குரங்கை தன் முதுகில் கட்டியிருந்தான்.
அரசர் கொடியசைக்க, போட்டி துவங்கியது.
ஒரு மணி நேரத்திற்குப் பின் போட்டி முடிந்தது. மூவரும் பூக்களையும், குரங்கையும் சாதுவிடம் ஒப்படைத்தார்கள். முதல் போட்டியாளர் கொண்டுவந்த பூக்களை எண்ணிப்பார்த்தார். நூறு பூக்கள் இருந்தது. இரண்டாம் போட்டியாளரின் பூக்களை எண்ணிப் பார்த்தார். நூற்றி பத்து பூக்கள் இருந்தது. மூன்றாம் போட்டியாளரின் பூக்களை எண்ணிப்பார்த்தார். இருநூறு பூக்கள் இருந்தது.
சாது பேசினார்.
‘அரசே, மூன்றாம் போட்டியாளர் தான் வெற்றி பெற்றார் அவரையே மந்திரியாக நியமிக்கலாம்', என்றார் சாது.
‘சாதுவே என்ன போட்டி இது? பூ பறித்தலுக்கும், மந்திரி பதவிக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே விளங்கவில்லையே', என்றார் அரசர்.
சாது விளக்கமளித்தார்.
‘அரசே! மூவரும் நந்தவனத்தில் நுழைந்தவுடன் அங்கிருந்தவனைப் பார்த்தனர். அதே போலவே முதலாமவன் வேட்டியால் குரங்கை தன் முதுகில் கட்டிக்கொண்டான். பிறகு பூப்பறித்தான். முதுகில் இருந்த குரங்கு நெளிந்து கொண்டே இருந்தது. நகத்தால் பிராண்டியது. அவன் கவனம் சிதறிப்போனது. அவனால் நூறு பூக்களை மட்டுமே பறிக்க முடிந்தது'.
‘அடுத்த போட்டியாளன் வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைத்தான். குரங்கை தன் வயிற்றில் கட்டிக்கொண்டான். அவனுக்கும் அதே கதிதான் ஏற்பட்டது. ஆனால் கொஞ்சம் பரவாயில்லை. அவனால் நூற்றி பத்து பூக்களை மட்டுமே பறிக்க முடிந்தது'.
‘மூன்றவது போட்டியாளன் சற்று வித்தியாசமாக சிந்தித்தான். தன்னுடைய வேட்டியால் குரங்கை மூட்டையாக கட்டினான். நந்தவனத்தில் ஒரு ஓரமாக வைத்தான். அங்கு பூப்பறித்துக்கொண்டிருந்தவனிடம் இந்த மூட்டையை கொஞ்ச நேரம் பார்த்துக்கொள் என்று கூறி விட்டு பூக்களை பறிக்கத் தொடங்கினான். அதனால் எந்த தொந்தரவில்லாமல் அவனால் இருநூறு பூக்களை பறிக்க முடிந்தது'.
‘அரசே! மூவருக்கும் கொடுக்கப்பட்ட பணி பூப்பறித்தல். குரங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட கூடுதல் பொறுப்பு. ஒரு நல்ல நிர்வாகி எல்லா வேலைகளையும் தானே செய்ய வேண்டும் என்று நினைக்கமாட்டான். பணியை பிறரிடம் பகிர்ந்து கொடுப்பான். இதனால் கவனம் முழுவதையும் அவனுடைய முதன்மை பணியில் செலுத்த முடிகிறது. அப்படி செய்யாவிட்டால் எல்லா பணிகளையும் சுமக்கும் அவன் எந்த பணியையும் சிறப்பாக செய்ய முடியாது. அதனால் என்னுடைய தேர்வு மூன்றாம் போட்டியாளன்', என்றார் சாது.
சாதுவின் முடிவு ஏற்கப்பட்டது.
அதிகாரத்தை தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் பகிரிந்து அளிப்பது (Delegation of Authority) ஒரு கலை. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் கீழே பணிபுரிபவர்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பொதுவான பதில் சொல்ல முடியாது. பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே பதில் தெரியும்.
உங்களிடம் பணி மட்டும் அளிக்கப்படுகிறதா அல்லது குரங்கும் சேர்த்து அளிக்கப்படுகிறதா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். பணி மட்டும் என்றால் பணியைச் செய்யுங்கள். குரங்கும் சேர்த்து கொடுக்கப்படுகிறது என்றால், கவலை வேண்டாம். ஒரு டஜன் வாழைப்பழங்களையும், கொஞ்சம் பொறி கடலையும் வாங்கிச் செல்லுங்கள். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் போது மறக்காமல் குரங்கை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வாருங்கள். குரங்கு மூட்டையை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்..

No comments:

Post a Comment