Friday 2 November 2018

அறிவியலைப் படிப்பிக்க ஏற்ற மொழி தமிழ் !!

Image may contain: 1 person"தமிழ் அறிவியல் படிப்புகளுக்கு உகந்த மொழி என்பது அவரவர் கற்பனை; உகந்ததாக வேண்டும் என்பது நமது விருப்பு; ஆனால் தற்போது உகந்ததாக இல்லை என்பதே உண்மை. இப்போதுள்ள அறிவியல் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களை வடிவமைத்து முடிக்கும்போது அறிவியல் பல்லாயிரம் தொலைவு சென்றிருக்கும். அறிவியலின் ஆழம் தெரியாதவர்களே தமிழ் அறிவியலைப் படிப்பிக்க ஏற்ற மொழி என்று கூறுகின்றனர்." என்கிறார் ஒரு மருத்துவத்துறைப் பேராசிரியர்.
அறிவியலின் ஆழம் தெரியாமல் சொல்லவில்லை நாங்கள். அறிவியலின் ஆழத்தைத் தெரிந்துதான் சொல்லுகிறோம்.
அறிவியலைத் தமிழில் கற்பிக்கும்போது ஆங்கிலத்தில் உள்ள எல்லாக் கலைச்சொற்களையும் தமிழில் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தமிழில் அறிவியல் நூல்களை உருவாக்கும்போது அவசியமான இடங்களில் ஆங்கிலக் கலைச் சொற்களை அப்படியே கையாளலாம் என்பதுதான் எங்கள் முடிவு. தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெரும்பாலான கல்லூரிகளில் தமிழ்வழிப் பாடநூல்கள் புழக்கத்தில் உள்ளன என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.
ஆங்கில மொழியில் உள்ள அறிவியலானது ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் போன்ற பல மொழி கலைச்சொற்களையும் அது உள்வாங்கி இருக்கிறது என்பதைத்தான் நாம் அறிகிறோம்.

ஆங்கிலவழிக் கல்வியால் பாடப் பொருளை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள முடிவதில்லை. படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்களையும் விஞ்ஞானிகளையும் ஆங்கில வழிக் கல்வியால் உருவாக்க முடிவதில்லை. ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்கள் ஆங்கிலவழிக் கல்வியால் துறைசார் அறிவை ஆழமாகப் பெற முடிவதில்லை. புரிந்துகொள்ள முடிவதில்லை. பல மாணவர்களை விசாரித்த பொழுது இந்த உண்மை வெளிப்பட்டது.
தாய்மொழி வழிக் கல்வியின் மூலமே பாடப் பொருளை நன்கு விளங்கி உள்வாங்கிக்கொள்ள முடியும். படைப்பாற்றல் மிக்க விஞ்ஞானிகளையும் ஆய்வாளர்களையும் உருவாக்க முடியும்.
தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் ஆங்கில வழியில் கற்பிக்கிறார்கள் என்பது பெயரளவுக்குத்தான். எல்லா பேராசிரியர்களும் வகுப்புகளில் பாடம் எடுக்கிற பொழுது தமிழில்தான் விளக்கி சொல்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அவர்கள் பயன்படுத்தும் கலைச்சொற்கள் மட்டுமே ஆங்கிலக் கலைச்சொற்கள். விளக்கங்களை தமிழில்தான் கொடுக்கிறார்கள்.
தமிழில் பாடநூல்கள் இல்லை என்பது மட்டுமே ஒரு குறை.

No comments:

Post a Comment