சவூதி அரேபியாவில்உம்ரா(மக்கா) / ஜியாரத்(மதீனா) செல்பவர்களின் கவனத்திற்கு ஒறு தவகல்!!!
மக்காவின் கஅபா இல்லத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது, அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணை மற்றும் அருளினால் மட்டுமே அமையப்பெறுகின்ற கொடுப்பினை !!!
அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்பவர்கள், தங்கள் பயண ஏற்பாடுகளின் போதும், பயணத்தின் போதும் கவனம் செலுத்த தவறி விடுவதைப் பற்றிய பதிவுதான் இது.
உம்ரா என்றவுடன், நமக்கு உடனே நினைவுக்கு வருவது, நமது *சொந்தக் காரிலேயே பயணம் செய்யலாம்* என்பது தான். அடுத்து தான், பஸ்ஸில் மற்றும் விமானத்தில் போவதைப் பற்றி நினைப்போம். இதில், *தன் சொந்தக்காரில் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ பயணிப்பவர்களைப் பற்றியது தான் இந்தப் பதிவு..
சரி, எப்படி/எதில் பயணிப்பது என்பதை முடிவு செய்தவுடன் நாம் தடபுடலாக ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிப்போம். துணிமணிகள், உம்ரா துணி எடுத்து பைகளில் வைத்து தயாராகி விடுகிறோம். பொதுவாக, வார விடுமுறையில் தானே புறப்படுவோம். அப்பொழுது, புறப்படும் முந்தைய இரவில் தான் பேக்கிங் செய்வோம். அன்றைய இரவு தூங்க நேரமாகும். களைப்பில் தூங்கி எழுந்து, அலுவலகம் சென்று, வழக்கம் போல், மாலை வீடு திரும்ப நேரமாகும் அல்லது அவசரம் அவசரமாக வேலைகளை முடித்துக்கொண்டு, அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் முன்னதாகவே பெர்மிஷன் வாங்கி வீட்டிற்கு வந்து சேர்வோம்.
முந்தைய இரவு லேட்டாக தூங்கியது ஒரு புறம். குறைவான தூக்கம் மறுபுறம். பகலில் அதிகப்படியான அலுவலக வேலைப்பளு கூடவே இருக்கும். நோன்பு மாதம் வேறு. உடல் அசதி, நாள் முழுவதும் இருந்த பசி, தாகத்தின் தாக்கம், இஃப்தார் திறந்தவுடன் பயணம் அல்லது இரவு தராவீஹ் தொழுகை தொழுதவுடன் பயணம் அல்லது அதிகாலை ஃபஜ்ர் தொழுகை நேரத்தில் பயணப் புறப்பாடு.
இவைகளெல்லாம், எவ்வளவு திடகாத்திரமான ஆளாக இருந்தாலும், எவ்வளவு கார் ஒட்டும் அனுபவசாலியாக இருந்தாலும், நம்மை கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் விஷயங்கள்.
அதில், நம்மவர்களிடம் இல்லாத பழக்கம் என்னவென்றால், பின்னால் உட்காருபவர்கள் சீட் பெல்ட் அணிவதில்லை. காரில் ஏறி உட்கார்ந்தவுடன், வண்டி ஒட்டுபவர் தவிர பலரும் தூங்கி விடுகின்றனர். ஏதாவது பயானையோ அல்லது தேவைப்படுகின்ற ஒன்றைக் கேட்டுக்கொண்டோ பயணிக்கும், காரை ஒட்டிக்கொண்டிருப்பவருக்கு நேரம் ஆக, ஆக அவரைக்கேட்காமலேயே, அனிச்சை செயலாக, அசதியும், தூக்கமும் பற்றிக் கொள்ளும்.
இடை இடையே நிறுத்தி நிறுத்தி, டீ குடித்துக் கொண்டும், காலாற கொஞ்சம் நடந்து விட்டு கார் பயணத்தை தொடரும் புத்திசாலிகள் இருக்கத்தான் செய்தாலும், சராசரியாக, பெரும்பாலும் அனைவரும் அப்படி செய்வதில்லை.
அதிகாலை ஃபஜ்ருக்கு மக்காவிற்குள் சென்று ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டும் என்ற அவசரத்தில், வேக வேகமாக வேறு காரை ஒட்டிச் செல்வார்கள்.
பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், பெட்ரோல் பங்குகளில் (முன்னர் இருந்தது, தற்பொழுது தெரியவில்லை) 25 ரியால்கள் கொடுத்தால், ஒரு மணி நேரத்திற்கு வாடகைக்கு ரூம் கொடுப்பார்கள். ஒரு கட்டில்/பெட் இருக்கும். டாய்லெட் இருக்கும். கொஞ்சம் அவ்வளவு சுத்தமில்லாமல் இருந்தாலும், சூழ்நிலையைக் கருதி, நம் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லும் ஒரு படுக்கை விரிப்பை, அந்த கட்டில் பெட்டில் விரித்து, களைப்பு நீங்க, ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு, அசதி போனவுடன், பயணத்தை தொடர்ந்தால், இடையே தூக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த அபாயகரமான சில விநாடிகள் கண் அயர்வதற்கான வாய்ப்பும் இல்லை. ஒரு விநாடி கண் அயர்ந்தால் கூட, நாம் பயணிக்கும் கார் விபத்துக்குள்ளாகலாம், ஏன், உயிர் இழப்புகளைக் கூட சந்திக்க நேரிடும்.
வருடா வருடம், குறிப்பாக ரமளான் மாதத்தில், சில விபத்துகள், உயிர் இழப்புகள் பற்றிய செய்திகளையும் கேட்டுக் கொண்டுத் தான் இருக்கிறோம்.
ஆனால், இது குறித்து யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. இந்த சின்ன சின்ன விஷயங்கள் குறித்து கவனம் செலுத்துவதும் இல்லை.
சரி, ஒரு வழியாய், தாயிஃப் நகரில் இஹ்ராம் அணிந்து, பயணித்து புனித மக்கா மாநகரம் சென்றடைவோம். பயணக்களைப்போடு, உம்ராவையும் முடித்து விட்டு, முடியைக் களைந்து, ஏதோ ஒன்றை காலை உணவாக சாப்பிட்டு விட்டு, ஒரு குட்டித்தூக்கம் ஒன்றைப் போட்டு விட்டு, அலாரம் வைத்து எழுந்து, சின்ன காக்காய் குளியல் போட்டு விட்டு, அவசரம் அவசரமாய் கிளம்பி, ஜும் ஆ தொழுகைக்கு கிளம்பி விடுவோம்.
அடுத்து என்ன, ஜும் ஆ தொழுத உடன், கப்ஸா சிக்கன் அல்லது அல்பெய்க் சிக்கன் சாப்பிடுவோம். அடித்துப் போட்ட மாதிரி ஒரு தூக்கம் போடுவோம். அஸர் நேரம் வந்து விடும். காரை ஒட்டி வந்தவர் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவே முடியாத நிலையில், தட்டுத்தடுமாறி எழுந்து ஒளுச் செய்து விட்டு, தொங்கு தொங்கு என்று ஓட்டமும் நடையுமாய், கஅபாவுக்குச் சென்று அஸர் தொழுது விட்டு, களைப்போடு ஒரு நீண்ட நடையைப் போட்டு, ரூமிற்கு வருவார்.
மறுபடியும் ஒரு குட்டித்தூக்கம் அல்லது பேசிக்கொண்டு இருந்து விட்டு, டீ ஒன்றை குடித்து விட்டு, மீண்டும் க அபாவிற்கு நடந்தோ அல்லது ஹோட்டல் பஸ்ஸிலோ வருவோம்.
உடல் களைப்பு அதிகம் இருந்தால், ஹோட்டல் பக்கத்திலேயே இருக்கும் பள்ளிவாசலில் தொழுதுக் கொள்ளலாம்.
பயணாளிக்கு வழங்கப்பட்டிருக்கும் ஜம்/கஸ்ர் சலுகைகளை பயன்படுத்தலாம்அல்லது பள்ளிவாசலுக்கு தூரம் அதிகம் இருந்தால் ரூமிலேயே தொழுது கொள்ளலாம். ஆனால், அது போல, யாரும் செய்வதில்லை.
நமது நோக்கம் உம்ரா மட்டுமே!!. கார் ஓட்டுபவர்களுக்கு நிறைய ஓய்வு தேவை. ஏன் என்றால், அடுத்த நாள், உதாரணத்திற்கு ரியாத் நோக்கி பயணிக்க வேண்டுமென்றால், 859 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே! முடிந்த வரை, அலைச்சலைக் குறைத்துக் கொண்டு, ஓய்வு எடுக்க வேண்டும்.
இன்னும் சிலர் ஆர்வக்கோளாறில், காரை எடுத்துக் கொண்டு, ஜித்தா மாநகரை வலம் வர நினைத்து, மாலை புறப்பட்டு, ஜித்தாவை சுற்றிப் பார்த்து விட்டு, வரும் வழியில் அல்பெய்க் சாப்பிட்டு விட்டு, ரூமிற்கு வர இரவு தாமதமாகி விடும்.
மக்காவிலேயே தங்கி இருப்பவர்கள், இரவு சாப்பாடு முடித்து விட்டு, அதிக நேரம் இரவில் க அபா வளாகத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்து விட்டு, தமிழகத்தில் இருந்து உம்ரா வந்த உறவினர்களைத் தேடி பார்த்து பேசி விட்டு, இரவு 12:00 மணிக்கு ரூமிற்கு வருவார்கள்.
ஃபஜ்ருக்கும் தூங்கப்போகும் நேரத்திற்கும் இடையே சில மணி நேரங்கள் தான் இருக்கும். மீண்டும், அன்றைய இரவு குறைவான தூக்கமே!
ஃபஜ்ர் பாங்கு சொல்லும் முன், தஹஜ்ஜுத் தொழ வேண்டும் என்று ஃபஜ்ருக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி, கஅபாவிற்கு சென்று விடுவோம்.
கவனம் கொள்ளுங்கள். ஓய்வு என்பதே இல்லை, இது வரை.
மீண்டும் டீயைக் குடித்து விட்டு, குட்டித்தூக்கம் அல்லது சில மணி நேரங்கள் தூங்கி விட்டு, எழுந்து, குளித்து விட்டு, பேக்கிங் ஆரம்பிப்போம். துணி மணிகளை எடுத்து வைத்து, பேக்கிங் முடித்து விட்டு, காலை உணவு. பிறகு, உடனே ஷாப்பிங் முடித்து விட்டு, அவற்றை ரூமில் வைத்து விட்டுப் பார்த்தால், அப்பொழுது தான் பயணத்தவாப் ஞாபகத்திற்கு வரும். உடனே புறப்பட்டு பயணத்தவாபும், லுஹர் தொழுகையும் தொழுது விட்டு வரும் வழியில், கப்ஸா சாப்பிட ஹோட்டலுக்கு செல்வோம். பசி வயிற்றைப் பிடித்துக் கிள்ளும். ஏன் என்றால் நடந்த நடை அவ்வளவு தூரம். கிடைத்த சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து, மூக்க முட்ட சாப்பிட்டு முடித்து விட்டு, ரூமிற்கு வருவோம். உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்று சொல்லுவது போல, காரை ஓட்டிக்கொண்டு வந்த அந்தக் குடும்பத்தலைவருக்கு ஒரு தூக்கம் வருமே, அது அவரைக் கொண்டு போய் பெட்டின் பக்கம் தள்ளும். ஆனால், அதை சமாளித்து, வெளிக்காட்டிக் கொள்ளாமல், அடுத்த நாள் காலை வேலைப் பற்றி வரும் ஞாபகம் அல்லது கேள்வி கேட்டே துளைத்து எடுக்கும் மேலாளரின் முகம் சற்றே நினைவுக்கு வந்தவுடன், காரை எடுத்துக் கொண்டுக் கிளம்ப - குடும்பத்தை ஒரு விரட்டு விரட்டி, சத்தம் போட்டு, எல்லோரையும் கிளப்பிக் கொண்டு, ரூம் சாவியை ரிஷப்ஷனில் கொடுத்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்வோம். எல்லோரும் மறக்காமல் செய்வது, சாப்பிட்ட கப்ஸா மறக்காமல் கொடுக்கும் தூக்கத்தைக் கலைக்க, சுலைமானி டீ ஒன்றை கிளம்பும் வழியில் குடிப்பது தான்.
பேசிக்கொண்டே வரும் பயணத்தில், குடும்ப உறுப்பினர்களில் முதலில் தூங்குவது பிள்ளைகள் தான். அடுத்து மனைவியும் அசதியில் தூங்க ஆரம்பித்து விடுவார். பாவம், அந்தக் கணவர். கவனமாய் காரை ஒட்ட வேண்டுமே! ஏதாவது ஒன்றை கார் டேப்பில் கேட்டுக்கொண்டோ அல்லது மொபைலில் கேட்டுக்கொண்டோ தம் பயணத்தைத் தொடருவார்.
இடையே, எங்காவது அவர் ஒரு விநாடி கண் அசந்தால், அவ்வளவு தான். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். அப்படி நடக்கும் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். ' விதி ' மற்றும் ' மரணம் என்பதை எல்லோரும் சுவைத்தே தீர வேண்டும் என்பதிலும் அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தாம் நாம். இருந்தாலும், அல்லாஹ் தான் அறிவைக் கொடுத்து, சிந்திக்கச் சொல்லி, பயணத்திற்கு தேவையான ஒய்வையும் எடுக்கச் சொல்கிறான்.
உம்ரா பயணாளிகளுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகள்!!!
1. உம்ரா முடித்து விட்டால், தொழுகைகளை தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளிவாசல்களில் தொழுது கொள்ளலாம்.
2. பயண நேரத்தில் கொஞ்சம் குறைவாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.
3. பயணத்தில் இடை இடையே நிறுத்தி டீ குடித்து விட்டு, காலாற ஒரு நடை நடந்து விட்டு பயணத்தை தொடரலாம்.
4. தூக்கம் சற்றே எட்டிப்பார்க்கும் ஆரம்ப நேரத்தில், அருகில் வரும் பெட்ரோல் பங்க்கில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தூங்கி விட்டு பயணத்தைத்ப் தொடரலாம். இந்த அரை மணி நேர அல்லது ஒரு மணி நேர தூக்கத்தேவையை உதாசீனப்படுத்தினால், கப்ரில் மறுமை வரை நிரந்தரமாக தூங்க நேரிடும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. திரும்ப வரும் பயணத்தில் அவசரம் காட்டாமல், நிதானமாக காரை ஒட்டிக்கொண்டு வர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் லீவு எடுத்துக் கொண்டால், கொஞ்சம் நிதானமாக புறப்பட்டு, ரியாத் அல்லது தம்மாம் சென்றடையலாம்.
6. வரும் வழியில், இருக்கும் ஹோட்டல்களில் ஒரு மணி நேரத்திற்கு அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ரூமை வாடகைக்கு எடுத்து, தூங்கி விட்டு வரலாம்.
7. முன்னரே திட்டமிட்டு, எல்லாவற்றையும் ஒரு நாளைக்கு முன்னரே பேக்கிங் செய்து வைக்கலாம். பயணத்திற்கு முந்தைய நாள் இரவு, குறைந்தது 7 மணி நேரமாவது தூங்கி விட்டு, பயணத்தை தொடங்க வேண்டும்.
8. பயணத்தில் அவசியம் ஒரு 5 அல்லது 10 லிட்டர் கேனில் தண்ணீர் எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.
9. நீண்ட தூரப் பயணத்திற்கு காருக்குத் தேவையான சரிபார்த்தலை முன்கூட்டியே செய்து முடித்தல் வேண்டும்.
( ஃபில்டர், டயர் காற்று, ப்ரேக், டயர் கண்டிஷன், வைப்பர்கள்)
10. பயணத்தில் வரும் குடும்பத்தவர்களில் குறைந்த பட்சம் ஒருவராவது தூங்காமல், கார் ஒட்டுபவரிடம் பேசிக்கொண்டே வர வேண்டும்.
11. காரின் பின்னால் உட்கார்ந்து வருபவர்களும், அவசியம் மறக்காமல் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
12. அதிகாலையில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்த்தல் நலம். திருடனுக்கும் தூக்கம் வரும் என்று சொல்லப்படும் அதிகாலை 03:00 மணி முதல் 05:00 மணி வரை ஓய்வெடுத்தல் தான் பயனுள்ளதாக இருக்கும். அஸர் தொழுகை நேரத்தில், குறிப்பாய் சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் கழித்து, மாலை 04:00 மணிக்கு ஒரு அசத்து அசத்தும். அதற்கு முன்னதாக, ஒரு குட்டித்தூக்கம் தூங்கி விட்டு காரை ஓட்டுதல் நலம்.
13. நோன்பு வைத்துக் கொண்டு பயணிப்பதில் பல சிரமங்கள் உள்ளன. சீக்கிரம் களைப்பு வந்து விடும். குறிப்பாய், ஸஹர் செய்த உடனே சரியான தூக்கமும் இல்லாமல், காரை ஓட்டகூடாது. நிச்சயம் தூக்கம் வரும்.
14. புதிதாக கார் ஓட்டுபவர்கள், கூட அனுபவசாலி வந்தால், சிக்கலான இடங்களில் அவரை ஓட்டச்சொல்லலாம்.
15. வாய்ப்பிருந்தால், கார் ஓட்டுபவர் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு போகலாம். ஆளுக்கு பாதி தூரம் காரை ஓட்டினால், ஓட்டுபவருக்கு சுமை குறையும்.
16. இப்படியான நல்ல யோசனைகளை உம்ரா செல்பவர்கள் கவனத்தில் கொண்டால், விபத்துக்களையும், உயிர் பலிகளையும் தடுக்கலாம்.
அல்லா எல்லாம் அறிந்தவன்.
அவனே பாதுகாப்பு அளிப்பதில் சிறந்தவன்.
வல்ல அல்லாஹ், உம்ரா பயணம் செய்பவர்களின் பயணத்தை பாதுகாப்பானதாக ஆக்கி வைப்பானாக !!!
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு . அஜ்மல் கான்.