Sunday 8 January 2012

மாமன்னர் ஔரங்கசீபின் ஜிஸ்யா வரியும், இந்துக்க ளிடம் கட்டிய அன்பு மற்றும் அவரின் உயில்!! ஒரு சமூக பார்வை..



நம்முடைய வரலாற்றுப் பாட நூல்களில் எத்தனையோ பொய்களை அரங்கேற்றி இன்று வரை மாணவர்களுக்கு போதித்து வருகிறார்கள். இயற்கையாகவே ஒரு சில இந்துக்கள் எந்த காரணமும் இன்றி முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உமிழ காரணம் இளம் வயதில் படித்த இத்தகைய வரலாற்று பாட நூல்களே! அவற்றுள் ஒரு பொய் ஒளரங்கஜேப் முஸ்லிம அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியைப் புகுத்தி கொடுமை படுத்தினார் என்பது. இதை நாமும் நம்பி விடுகிறோம்.

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும் பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாக ஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான் ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.

அடுத்து ஒளரங்கஜேப் மத வெறி உடையவரஇந்துக்களை கொடுமைப் படுத்தினார் என்ற கருத்தும் வரலாறுகளில் காணப்படும். ஒளரங்கஜேப் எப்படிப் பட்டவர் என்று தெரிந்து கொண்டால் இதற்கும் விடை கிடைக்கும்.

இந்துக்கள் மீது சுமத்தப் பட்டிருந்த பல வரிகளை ரத்து செய்தார் !!

உண்மையில் ஒளரங்கசீப் அவர்கள் ஏற்கனவே இந்துக்கள் மீது சுமத்தப் பட்டிருந்த பல வரிகளை ரத்து செய்தார் என்பதே உண்மை. இதை வரலாறு மறைத்து வைத்து இருக்கிறது. இதோ அந்தப் பட்டியல் :-

இந்துக்கள் தங்களின் வாழ்வில் ஒருமுறையாவது காசி சென்று அங்கு ஓடிக் கொண்டிருக்கும் கங்கை நதியில் நீராடிவந்தால் பாவங்கள் நீங்கி விடுமென்பது அவர்களின் நம்பிக்கை. ஒளரங்கசீப்புக்கு முந்திய மொகலாயர்களின் ஆட்சியில் இவ்விதம் காசி செல்வதற்கும் கங்கையில் குளிப்பதற்கும் வரி செலுத்த வேண்டியது இருந்தது. இந்த வரியை நீக்கியவர் ஒளரங்கசீப் ஆவார்.

அதே கங்கையில் இறந்தவர்களின் அஸ்தி என்கிற சாம்பலைக் கரைப்பது என்பதும் அதற்கான கங்கைக்கரையில் சடங்குகள் செய்வதும் இந்துக்களின் பழக்கம். இதற்கும் வரி இருந்தது, இந்த வரியையும் நீக்கியவர் சாட்சாத் ஒளரங்கசீப்பே.

புனித நதிகளில் மீன் பிடிப்பதற்கும், பசு மாடுகளில் பால் கறந்து விற்பதற்கும், பெரும்பான்மை இந்துக்கள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் விற்பதற்கும், சிலவகைப் பாத்திரங்கள் செய்து விற்பதற்கும் வரிகள் இருந்தன. அந்த வரிகள் அனைத்தும் ஒளரங்க சீப் உடைய ஆட்சியில்தான் ரத்து செய்யப் பட்டன.

மாட்டின் சாணத்தைத் தட்டி சுவர்களில் ஒட்டிக் காய வைத்து அதை எரிபொருளாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. இந்த எரிபொருள் சமைப்பதற்கும் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கும் பயன்பட்டன. இதற்கு ஏற்கனவே வரி இருந்தது. இந்த வரட்டி வரியை விரட்டி அடித்தவர் ஒளரங்கசீப் ஆவார். இதனால் பல கோடி இந்துக்கள் பயன் பெற்றனர். 

உண்மையை சொல்லப்போனால் இந்துக்களுக்கு ஔரங்கசீப் போன்ற மன்னர்களின் காலம்தான் பொற்காலமாக இருந்து இருக்கின்றது என்பது தெளிவாகிறது. 

மாமன்னர் ஔரங்கசீபின் உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள்..

ஒளரங்கஜேப்பின் உயில் மௌலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி ஒளரங்கஜேப்பின் வாழ்க்கை பற்றிய நூலின் 8வது அத்தியாயத்தில் அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து:

1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை. என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்யவேண்டும் என்பது என் விருப்பம். வேறுயாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

2. என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது. அதில் கவனமாகச் சேமித்து வைத்த 04 ரூபாயும் 02 அனாக்களும் இருக்கின்றன. எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர்ஆன் பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன், தொப்பிகள் தைத்தேன். அந்த தொப்பிகளை விற்றுத்தான் நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது. அந்த பணத்தில்தான் (என் உடல்மூடும்) க·பன் துணி வாங்கப்பட வேண்டும். இந்த பாவியின் உடலை மூட வேறு எந்தப் பணமும் செலவிடப்படக் கூடாது. இது எனது இறுதி விருப்பம்.
(என் கையால் எழுதப்பட்ட) குர்ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ருபாய்கள் பெற்றேன். அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது. இந்த பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

3. என்னுடைய சாமான்கள் அனைத்தும் -- துணிமணிகள், மைக்கூடுகள், எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸமிடம் கொடுத்துவிட வேண்டும். என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

4. ஒரு அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்பட வேண்டும். என்னைப் புதைத்த பிறகு, என்னுடைய முகத்தைத் திறந்து வைக்க வேண்டும். என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம். திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன். அவனுடைய உச்ச நீதிமன்றத்துக்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

5. எனது க·பன் துணி தடித்த கதர்த்துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலின் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம். எனது சவஊர்வலம் செல்லும் வழியில் மலர்களைத் தூவவேண்டாம். என் உடல்மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது.

6. எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது. வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக்கொள்ளலாம்.

7. பல மாதங்களுக்கு என்னால் என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. நான் இறந்தபிறகு, என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளங்களும் கொடுக்கப்பட வேண்டும், ஏனெனில் கஜானா காலியாக இருக்கிறது. நிஅமத் அலீ எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன். என் உடலை அவன்தான் சுத்தப்படுத்துவான். என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயிலை.

8. என் நினைவாக எந்த கட்டிடமும் எழுப்பக் கூடாது. எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்தக் கல்லும் வைக்கக் கூடாது. கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது. என்னைப் போன்ற ஒரு பாவிக்கு நிழல் தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியில்லை.

9. எனது மகன் ஆஸம் டெல்லியிலிருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான். பிஜாபூர், கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பக்ஷிடம் விடப்பட வேண்டும்.

10. அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன்தான் இந்த உலகிலேயே துரதிருஷ்டம் மிக்கவன். எந்த சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது. எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக் கூடாது.

கி.பி. 1658-லிருந்து 1707-வரை இந்தியாவை ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆண்ட ஆறாவது முகலாய மகா சக்கரவர்த்தியின் மரண விருப்பங்கள் இவை! அவருடைய விருப்பப்படியே சாதாரண செங்கற்களால் கட்டப்பட்ட அவரது கல்லறையை இன்றும் ஔரங்காபாத்-தில் காணலாம்.
மேற்கண்ட உயிலின் வாசகங்கள், நவம்பர் மாதம் 7-ம் தேதி, 1976-ம் ஆண்டு தேதியிடப்பட்ட '·பதஹ்' என்ற வார இதழில், எஸ். அஜ்மீர் சிங் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்த்துப் போடப்பட்டது.

தன் முகத்தை மண்ணுக்குள் புதைக்க வேண்டாம் என்றும் திறந்த முகத்தோடு இறைவனை சந்திப்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப் படுவதாகவும் ஒளரங்கஜேப் கூறியிருப்பது அவருடைய சொந்தக் கருத்தே! மனிதர்களை புதைக்கும் போது உடல் முழுவதும மண்ணுக்குள் சென்று விட வேண்டும் என்று தான் முகமது நபியின் வாக்கு உள்ளது. ஒளரங்கஜேப்புக்கு தவறான தகவலை இது விஷயத்தில் யாரும் தந்திருக்கலாம். இறைவனே மிக அறிந்தவன்.

தமிழகம் வரை தமது ஆட்சியை ஒளரங்கஜேப் விரிவு படுத்தியிருந்தார். இவ்வளவு எளிமையாகவும் குர்ஆனின் போதனைப் படியும் தன் வாழ்க்கையை அமைத்துக் ் கொண்டவர் இந்து மக்களை கொடுமைப் படுத்தியிருப்பாரா? அப்படியே கொடுமை படுத்தியிருந்தாலும் அவை வரலாறுகளில் பதியப் பட்டிருக்குமே! மேலோட்டமாக சொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே! மேலும் மொகலாயர்களின் ஆட்சிக்கு முன் இந்தியாவை ஆண்டவர்களின் ஆட்சியை விட முஸ்லிம்களின் ஆட்சி நிம்மதியாக இருந்ததால்தான் 800 வருடம் இந்தியாவை அவர்களால்ஆள முடிந்தது.

ஒளரங்கஜேப் ஒரு விளக்கம்!

ஒளரங்க என்ற சொல்லிற்கு 'அரசு சிம்மாசனம்' என்று பொருள் வரும். 'ஜேப்' என்ற சொல்லுக்கு அழகு என்றும் பொருள். இவ்விரு பார்சிய சொல்லுக்கும் 'அழகிய அரசு சிம்மாசனம்' எனறு பொருள் வரும். ஆனால் 'ஒளரங்கஜேப்' என்று அழைப்பதற்கு பதிலாக 'ஒளரங்கசீப்' என்றே பலரும் கூறி வருகின்றனர் நமது நாட்டு பாடநூல்களிலும் ஒளரங்கசீப் என்றே இவர் பெயரை குறிப்பிடுகிறார்கள். ஒளரங்கஜேப்பின் பெயரையே மாற்றி அமைத்தவர்கள் அவரது வரலாற்றில் எந்த அளவு பொய்களை கலந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு திரு செ. திவான் எழுதிய Aurangazeb In The Light Of History எனும் நூலை பார்வையிடலாம்.

-தந்தையை சிறையில் தள்ளியவர்
-சகோதரர்களை கொன்று விட்டு சக்ரவர்த்தியானவர்
-இந்துக்களை வேலை நீக்கம் செய்தவர்
-சிவாஜியை அழிக்க முயன்றவர்
-இராஜபுத்திரர்களின் விரோதி
-சீக்கியர்களின் விரோதி
-மத வெறியர்

போன்ற பல குற்றச்சாட்டுகளும் கடைந்தெடுத்த பொய் என்பதை வரலாற்று நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டள்ளது.


என்னுரை :

இஸ்லாத்திற்கு எதிராக செயல் பட்ட மொகலாய மன்னர்களையெல்லாம், தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய இவர்கள் உணமையாக மக்களின் பிரச்சினையில் கவனம் செலுத்தி நல்லாட்சி கண்ட மொகலாய மன்னர்கள் அனைவரும் இந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு வில்லனாகவே தெரிந்தார்கள்.

ஜிஷியா வரி என்றால் என்ன என்று கேள்வி கேட்டு நம்மை எல்லாம் ஓளரங்கசீப்பை திட்டி எழுத வைத்து மார்க் தந்த பாடத்திட்டங்கள், அந்த பாடங்களை எழுதியவர்கள் எல்லாம் எப்படி வருடக்கணக்கில் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். 

அவரது உயில்  குறிப்பிடப்படவேண்டிய அம்சங்களாகும்
பொன் போன்ற எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய இந்த உயில். இதனை தெரிந்துமா இவர்கள் இம்மன்னரை தூஷிக்கின்றனர்? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே வரலாற்று ஆசிரியர்கள் நடிக்கின்றனரா??உண்மையை மறைத்து வரலாற்றை எழுதி வருகின்றனரா ?

அதனால்தான் பள்ளியில் படிக்கும் காலங்களில் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாதர்வர்களாகவே நாம் காலங்களை கழித்திருக்கின்றோம்.சில கயவர்கள் உண்மையை மறைத்து போலியான வரலாற்றை நம்மை படிக்க செய்து, தங்களின் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்கு நம் கல்விகாலங்களை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். 

இதற்க்கு வரலாற்றை திருத்தி எழுதி உண்மையை மறைத்த வரலாற்று காழ்ப்புணர்ச்சி ஆசிரியர்களே பொறுப்பு. இவர்களை வரும்காலம் மன்னிக்காது.இந்த ஆக்கத்தை மட்டும் சென்னைப்பல்கலைக்கழகம் [ வரலாற்றுப்பிரிவு ] , தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம், ஆர்கியாலஜி டிப்பார்ட்மென்ட் [ உடைக்கப்பட்ட பள்ளிவாசல் / கோயில் எல்லாம் இவர்களின் அதிகாரத்தில் இப்போது வரும் என்பதால் ] இந்தியாவில் இருக்கும் ஹிஸ்டரி சொசைட்டி ஆஃப் இந்தியா, மற்றும் இந்த துறை சார்ந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பாடப் புத்தகங்களில் வரலாறுகளை எழுதும் வரலாற்றாசிரியர்கள் இனி மேலாவது வரலாறுகளில் உண்மையை எழுதட்டும். 

உலகிற்கு நல்லது செய்த மாமன்னர்  ஓளரங்கசீப்பை இப்படி கேவலப்படுத்தி எழுதியதற்கு காரணமே அவர் ஒரு முஸ்லீம் அரசர் என்பதுதான். எது எப்படியோ ஔரங்கசீப்ஒரு தூய அப்பழுக்கற்ற அனைவராலும் போற்றப்படவேண்டிய ஒரு மாமன்னர் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment