Sunday 8 January 2012

இந்து மதத்துக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர் யார்?

இந்து மதத்துக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர் யார்?
ஒரே இறைவனையும் அவனால் அனுப்பப் பட்ட முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாமிலிருந்து கடைசி தூதரான முகமது நபி வரையுள்ள அனைத்து தூதர்களையும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்துக்கள் எந்த இறை தூதர்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இறைத் தூதர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களை வைத்திருக்கின்றார்கள். மனிதர்களைப் பிரிக்கும் சாதி அமைப்புகளை உண்டாக்கும் வர்ணாசிரமத் தத்துவம் பிற்பாடு மனிதக் கரங்களால் ஏற்றப் பட்டிருக்க வேண்டும். வர்ணாசிரமக் கருத்துக்களை நீக்கி விட்டுப் பார்த்தால் குர.ஆன், பைபிள், தோரா, ரிக், யஜீர்,அதர்வண வேதங்கள் அனைத்தின் கருத்துக்களும் பெரும்பாலும் ஒத்துப் போவதைப் பார்க்கிறோம்.

யூத வேதமான தோரா அல்லது பென்ட்டாஸ் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு யூதரிடம் கேட்டால் அவர் மோஸஸ் மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார்.

கிறித்தவ வேதமான சுவிஷேஷம் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு கிறித்தவரைக் கேட்டால் இயேசு கிறிஸ்து மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார்.

இஸ்லாமிய வேதமான திருக் குர்ஆன் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு முஸ்லிமைக் கேட்டால் முகமது நபி என்று உடன் கூறி விடுவார்.

இதே கேள்வியை பழம் பெரும் வேதங்களுக்குச் சொந்தக் காரர்களான இந்துக்களிடம் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்கள் யார் மூலமாக அருளப் பட்டது என்று கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடியாது.

இந்து வேதங்களை பகுத்து தொகுத்தவர் வியாசர் என்று சிலர் சொல்வர். வியாசர் எனும் சமஸ்கிரத சொல்லின் பொருளே தொகுப்பாளர் என்பதாகும். ஆனால் இங்கு தொகுப்பாளரைக் கேட்கவில்லை. வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்பதுதான் கேள்வி. இதே போல் தான் இஸ்லாமியரின் வேத நூலான குர்ஆனை முகமது நபிக்கு பிறகு புத்தக வடிவில் தொகுத்தவர் உஸ்மான் என்று வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறிகிறோம்.

வேதம் என்றால் அது கடவுளின் வார்த்தையாக இருக்க வேண்டும். எனவேதான் அதற்கு நாம் உயர்ந்த மதிப்பைக் கொடுக்கிறோம். மதம் என்று ஒன்று இருந்தால் அதற்கு வேதம் என்று ஒன்று இருக்க வேண்டும். அந்த வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்ற தெளிவு இருந்தாக வேண்டும். சாதாரணமாக அனுப்புனரோ பெறுநரோ இல்லாத ஒரு கடிதம் எவ்வளவு தான் உயர்ந்த நடையில் இருந்தாலும் மக்களிடம் எடுபடுவதில்லை. பழம் பெருமை வாய்ந்த இந்து சமுதாயம் நேர் வழிக் காட்ட வந்த வேதம் யாரால் அருளப் பட்டது என்ற தகவலை தொலைத்து விட்டு நிற்கிறது.

'ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு நேர் வழி காட்டியுண்டு' -(13 : 7) என்று குர்ஆன் கூறுகிறது.

அப்படியானால் இந்து சமுதாயத்திற்கு வந்த இறைத் தூதர் யாராக இருக்க முடியும்?

'ஏ அக்னீ !நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.'

1 : 13,14 - ரிக் வேதம்

நோவாவுடைய பெயர் ரிக் வேதத்தில் 51 இடங்களிலும், யஜீர் வேதத்தில் இரண்டு இடங்களிலும், சாம வேதத்தில் எட்டு இடங்களிலும், அதர்வண வேதத்தில் பதினான்கு இடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது

ஆதாரம் வேத ஆராய்ச்சி தொகுப்பான”NOW OR NEVER” – written by Shames Navad

இதிலிருந்து இந்து சமூகத்துக்கு என்று வந்த தூதர்களில் வேதம் கொடுக்கப் பட்ட தூதர் நோவா என்று அறிய முடிகிறது.

இந்து வேதங்களில் எழுபத்தைந்து இடங்களில் தூதர் நோவாவுடைய குறிப்பு காணப்படுகிறது. இஸ்லாமியரின் வேதமான குர்ஆனில் முகமது நபியின் பெயர் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே குறிப்பிடப் படுகிறது. ஆனால் முஸ்லிம்கள் முகமது நபியை இறைத் தூதர் என்று நம்புகிறார்கள். எழுபத்தைந்து இடங்களில் நோவாவின் குறிப்பை தங்கள் வேதங்களில் வைத்திருக்கும் இந்துக்களோ நோவாவை ஏற்க மறுக்கிறார்கள்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் குறிப்பிட்ட பிரதேசத்திற்கும் - குறிப்பிட்ட இனத்தினருக்கும் மட்டுமே உரியவர்கள் ஆவார்கள். ஆப்ரஹாம், இஸ்மாயீல் போன்றோர்கள் அரபு இனத்தவருக்காகவும், மோஸஸ், தாவூது, ஏசு போன்றோர் இஸ்ரவேல் இனத்தவருக்காகவும் நோவா அவர்கள் ஜலப் பிரளயத்திற்கு முன்பும், ஜலப் பிரளயத்திற்கு பின்பு சில காலமும் அன்றைய ஆதிக்கத்தின் சந்ததிகள் அனைவருக்கும் பொதுவான தூதராக இருந்தார். பிற் காலத்தில் அவர்கள் குமாரர்கள் மூலமாக சந்ததி பிரிந்த போது ஆரிய சமுதாயத்தினருக்கு மட்டுமான தூதராக நோவா இருந்திருக்கிறார்.

'நோவாவுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.'

4 : 163 - குர்ஆன்

இதன் மூலம் நோவாவுக்கு அருளப் பட்ட வேதத்தைப் போலவே அதற்கு பின் வந்த தூதர்களுக்கும் வேதம் அருளப்பட்டதாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதத்திற்கும் முகமது நபிக்கு கொடுக்கப் பட்ட வேதத்துக்கும் பல ஒற்றுமைகள் இருக்க வேண்டும் என்று தெளிவாகிறது. இந்த ஒற்றுமையைப் பற்றி 'இந்து மதம்போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்' என்ற தலைப்பில் முன்பே எழுதியிருக்கிறேன். அது அல்லாமல் மேலும் சில ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்

2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்

அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
3 : 34 : 1 - ரிக் வேதம்

3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5

எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.

4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்

பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்

5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
2 : 115 - குர்ஆன்

அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
10 :12 :14 - ரிக் வேதம்

கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
10 : 36 : 14 - ரிக் வேதம்

இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
10 : 81 : 3 - ரிக் வேதம்

6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்

பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்

7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
25 : 62 - குர்ஆன்

இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
10 : 190 : 2 - ரிக் வேதம்

8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
6 : 96 - குர்ஆன்

அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
10 : 190 : 3 - ரிக் வேதம்

9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
57 : 3 - குர்ஆன்

ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
1 : 31 : 2 - ரிக் வேதம்.

10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
48 : 23 - குர்ஆன்

அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
18 : 15 - அதர்வண வேதம்

11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்

இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்

12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
13 : 9 - குர்ஆன்

இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
20 : 58 : 3 - அதர்வண வேதம்

மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்னளை தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.

ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக ஒரே சொற்றொடரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது இலக்கியத்தில் ஒரு மரபாகவே கடைபிடிக்கப் படுகிறது. இதே போன்ற சொற்றொடர்கள் குர்ஆனிலும், இந்து மத வேதங்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்பதை இனி பார்ப்போம்.


இறைவனே மிக அறிந்தவன்.

தகவல் உதவிக்கு நன்றி -ஜாகிர் நாயக், அபூ ஆசியா,

No comments:

Post a Comment