Sunday 8 January 2012

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!...

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இஸ்லாத்துக்கும், இந்து மதத்துக்கும் உள்ள வேற்றுமைகள் நமக்கு முன்பே தெரியும். இரணடு மார்க்கத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன என்பதை சில ஆதாரங்களோடு பார்ப்போம். இஸ்லாமியனான உனக்கு இந்து மத ஆராய்ச்சி ஏன்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நான் பிறந்த மண்ணில் தோன்றிய மதம். நான்கைந்து தலைமுறைக்கு முன்பு என் மூதாதையர் பின் பற்றிய மதம். இதைப் பற்றி நான் ஆராயாமல் வேறு யார்தான் ஆராய முடியும்?

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14 :4

'இது முந்தய வேதங்களிலும் இப்றாகிம் மூஸாவுக்கு அருளிய வேதங்களிலும் உள்ளது.'-குர்ஆன் 87 : 18,19

மேற் கண்ட வசனங்களின் மூலம் உலகம் முழுவதற்கும் கொடுக்கப் பட்ட வேதங்களின் உரிமையாளன் ஒருவனே என்பது விளங்குகிறது. அந்த உரிமையாளனை இறைவன், கடவுள்,அல்லாஹ், கர்த்தர் என்று பல்வேறு பெயர்களில் அழைத்து வருகிறோம்.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.'-குர்ஆன் 2 :75

'யூதர்களில் சிலர் வேதங்களின் வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர்'-குர்ஆன் 4 : 46

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களை மாற்றி விட்டனர் என்று சொல்லும் குர்ஆன் மாற்றப் பட்ட அந்த வேதங்களை பின் பற்றக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறது.நம் நாட்டில் இருக்கும் பிராமணர்களும் இஸ்ரவேல் சமூகத்திலிருந்து தோன்றிய ஒரு பிரிவினர்கள் தான். எகிப்து,ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாட்டு பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள், தோற்றம் போன்றவை நம் நாட்டு பிராமணர்களை ஒத்திருப்பதன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே தான் பிராமணர்களுக்கு எப்போதுமே யூதர்களின் மீது ஒரு பிரியம் இருக்கும். திரு டோண்டு அவர்களின் பதிவுகளிலிருந்தும் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஹிந்து மதம் என்ற பெயர் எப்படி வந்தது?
சிந்து நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் பின் பற்றிய மதம் ஆகையால் சிந்துக்கள் என்றாகி நாளடைவில் மறுவி இந்துக்கள் என்றாகி விட்டது. இதைத்தான் மொகலாயர்களின் குறிப்புகளிலிருந்தும், நேருவின் குறிப்பிலிருந்தும், மற்ற ஆதாரங்களின் மூலமும் அறிகிறோம். ஹிந்து என்ற பெயர் தாங்கிய இந்த மதம் ஆரம்ப காலங்களில் ஒரு இறைவனைத் தான் வழிபடச் சொல்கிறது. நாளடைவில் ஊர் பெரியவர்கள்,மகான்கள்,அரசர்கள் அனைவரையும் கடவுளின் அவதாரமாக்கி, இன்று நாம் பார்க்கும் பல ஆயிரம் தெய்வங்களை உருவாக்கி விட்டார்கள். இதற்கு ஒரு சில ஆதாரங்களை இந்து மத கிரந்தங்களிலிருந்தே எடுத்தாய்வோம்.
உபனிஷத் இந்து மதத்தின் முக்கிய வேத நூல்
'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

மேலே எடுத்துக் காட்டிய இந்து மத வேதங்களின் வசனங்கள் இறை வேதமாகிய குர்ஆனோடு எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

குர்ஆனின் சிறிய அத்தியாயமாகிய 'குல ஹீ அல்லாஹீ அகத்' என்று வரும் வசனங்களை மனனம் செய்யாத முஸ்லிம்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபல்யமான ஓரிறைக் கொள்கையையும் உளத் தூய்மையையும் பேசும் இந்த அத்தியாயத்தின் மொழி பெயர்ப்பைப் பாருங்கள்:

'இறைவன் ஒருவன் என்று முகம்மதே கூறுவீராக!'
'இறைவன் தேவையற்றவன்'
'யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் பிறக்கவுமில்லை'
'அவனுக்கு நிகராக யாருமில்லை'குர்ஆன் - 112 :1,2,3,4

'இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனையோ சந்திரனையோ வணங்காதீர்கள். வணங்குவதாக இருந்தால் அவற்றைப் படைத்த இறைவனையே வணங்குங்கள்'
-குர்ஆன் 41 ;37

'குறிப்பிட்டுச் சொல்லப் படும் ஒரு பொருளாகக் கூட இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.'-குர்ஆன் 76 : 1,2

'அவனைக் கண்கள் பார்க்காது.அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்: நன்கறிந்தவன்.'-குர்ஆன் 6 : 103

மேற் கூறிய வசனங்கள் எந்த அளவு முந்தய வசனங்களோடு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். அனைத்தையும் சொன்னது ஒரே இறைவன் தான் என்பது நமக்கு விளங்குகிறது. ஒரே ஒரு வித்தியாசம் மற்ற வேதங்களில் மனிதக் கருத்துகளும் இடைச் செருகலாக சேர்க்கப் பட்டு விட்டன. குர்ஆன் அத்தகைய இடைச் செருகல் இல்லாமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.
இது போல் இரண்டு வேதங்களிலும் வரக் கூடிய வேறு சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்.
இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :

'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'

-ரிக் வேதம் 1:164:46

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'

உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.

இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'
குர்ஆன் 17 :110

இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :

ரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)

- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் செல்கிறான்.

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'
குர்ஆன் 7 : 180

இறைவனுக்கு அழகான பெயர்கள் உண்டு என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் மேற் கண்ட வசனம் கூறுகிறது. இறைவனின் பெயரை திரித்துக் கூறுவதும் சிதைப்பதும் கடும் குற்றம் எனவும் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் எனவும் இவ் வசனம் கடுமையாக எச்சரிக்கிறது.

இன்று முஸ்லிம்களிடம் கூட சிலர் அறியாமையினால் தியானம் என்ற பெயரில் வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு நேரங்களில் அமர்ந்து கோரஸாக ஓதி வருவதை பார்க்கிறோம்.அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று 'ஹீ,ஹீ' என்பது. ஹீ என்றால் அரபியில் 'அவன்' என்று அர்த்தம். சாத்தானைக் கூட 'ஹீ' என்று கூறலாம்.

அடுத்து ஒன்று 'ஹக் தூ ஹக்' என்று அரபியும் உருதும் கலந்து புது வார்த்தையை கண்டு பிடித்து திக்ரு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.

இன்னொன்று 'அல்லாஹ்' என்ற பெயரில் முதல் எழத்து அ வையும் கடைசி எழுத்து ஹ் ஹையும் இணைத்து 'அஹ்' என்ற புது பெயரை கண்டு பிடித்துள்ளார்கள்.

அடுத்து 'இல்லல்லாஹ்' என்றும் ஓதுகிறார்கள். இதற்கு பொருள் 'அல்லாஹ்வைத் தவிர'. இதற்கும் எந்த பொருளும் இல்லை.

எனவே இறைவனோ, முகமது நபியோ காட்டித் தராத இது போன்ற நவீன வணக்கங்களை செய்வோரைப் பார்த்துதான் மேற் கண்ட வசனத்தில் எச்சரிக்கப் படுகிறது.

ரஜ்னீஷைப் பற்றி நாமெல்லாம் அறிவோம். அமெரிக்காவில் 'ரஜ்னீஷ்புரம்' என்று அமைத்து அமெரிக்க அரசாங்கத்தாலேயே ஒரு கணம் திரும்பிப் பார்க்கப் பட்டவர்.இந்தியாவிலும் புனேயில் உள்ள அவரின் ஆஸ்ரமத்தில் ஓர் வாசகம் எழுதப் பட்டிருக்கும்.

“Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990”

மனிதர்களால் எழுதப் பட்ட தன்னிலை விளக்கங்கள் எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதற்கு மேலே உள்ள வாக்கியங்களை படித்தாலே நமக்கு நன்கு விளங்கும். நம்மைப் போன்ற ஒரு மனிதர். நோய்களுக்கு ஆட்பட்டார்.நம்மைப் போலவே மரணத்தையும் சுவைத்தார்.இருந்தாலும் மனித மனம் அவரை கடவுளாக்க முயற்ச்சிக்கிறது.

எனவே எந்த சமூகத்தவரும் இறைவன் அவர்களுக்கு கொடுத்த வேதத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால ஈருலகிலும் வெற்றியடையலாம். எங்கெல்லாம் மனிதர்கள் தாமாக வழிமுறைகளை அமைத்துக் கொண்டு 'இறைவனை நாங்களும் அடைகிறோம' என்று புதிது புதிதாக மார்க்கங்களை உண்டு பண்ணுகிறார்களோ அவர்கள்ஈருலகிலும் நஷ்டவாளிகளாக ஆகிறார்கள். இறைவன் மிக அறிந்தவன்.


ஒரே இறைவனை வணங்கச் சொல்லும் வேறு சில வசனங்களையும் இந்து மத வேதங்களிலிருந்து பார்ப்போம்.

ரிக் வேதம்
'மா சிதான்யாத்வி சன்ஷதா'

'பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது'

ரிக் வேதம் 8 : 1: 1

'யா எகா இத்தாமுஸ்துதி'

'தனித்தவனும் ஈடு இணையற்றவனுமான அவன் புகழப் பட்டவன்'

ரிக் வேதம் 6 : 45 : 16

'உங்கள் இறைவன் ஒரே இறைவனே!' என்பதே எனக்கு அறிவிக்கப் படுகிறது. நீங்கள் இதை ஏற்கிறீர்களா?' என்று முகம்மதே கேட்பீராக'

குர்ஆன் 21 : 108

மேற் கண்ட இரண்டு வசனங்களையும் சொன்னது ஒருவன்தான் என்று மேலும் உறுதியாகிறது.இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் ஒரு இறைவன் தான் என்று இந்து மத வேதங்கள் சொல்லியிருக்க இத்தனை தெய்வங்களை எப்படி உண்டாக்கினர்? இதை மதக் குருக்களும் எப்படி அனுமதித்தனர் என்று நாம் வியந்து போகிறோம்.

ஒருவன் முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் ஒரு கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அது என்ன? 'லா இலாஹா இல்லல்வாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' அதாவது 'இறைவன் இல்லை அல்லாஹ்வைத் தவிர முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்ற இந்த கொள்கையில் உறுதியாக இருப்பது அவசியம். இதில் முதல் கொள்கையான இறைவன் ஒருவனே என்பதை ஹிந்து மத வேதங்களிலிருந்தே முந்தய பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன. அடுத்த கொள்கை முகமது நபியை நம்ப வேண்டும். இவரைப் பற்றி ஹிந்து மத வேதங்கள் என்ன சொல்கிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இந்து மதக் கோட்பாடுகளின் படி இறைவன் பல அவதாரங்களை எடுத்து இந்த பூமிக்கு வருவதாக சொல்லப் படுகிறது. எப்பொழுதெல்லாம் பூமியில் குழப்பங்கள் ஏற்படுகிறதோ அந்த நாட்களில் இறைவன் மனித ரூபத்தில் அவதாரம் எடுத்து பூமிக்கு வருவான் என்று போதிக்கப் படுகிறது.

'மனித ரூபத்தில் வருவது இறைவனுக்கு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இது நடக்கக் கூடியதே' என்று பலரும் வாதிடுகின்றனர். முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள் வேண்டும்: மனிதனுக்கு உள்ள தன்மைகள் வேறு. நம்மைப் படைத்த இறைவனுக்குள்ள தன்மைகள் வேறு.

'அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன் அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது' - குர்ஆன் 2 :255

'உனது இறைவன் மறதி உடையவனாக இல்லை' - குர்ஆன் 19 :64

'அவனே உணவளிக்கிறான். அவனுக்கு உணவளிக்கப் படுவதில்லை' -குர்ஆன் 6 :14

'நான் மனிதர்களிடத்தில் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை.அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன். உறுதியானவன். ஆற்றல் உடையவன். -குர்அன் 51 : 57,58

'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.ஆட்சியில் அவனுக்கு பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று முகம்மதே கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப் படுத்துவீராக' - குர்ஆன் 17 :111

மேற்கண்ட குர்ஆனின் வசனங்களின் மூலம் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள பல தன்மைகள் மாறுபடுகிறது. தூக்கம்,மறதி,அசதி,துன்பம்,பிறப்பு,இறப்பு போன்ற பலகினங்களுக்கெல்லாம் அப்பாற்ப் பட்டவனே இறைவன். இதைத்தான் அனைத்து மத வேதங்களும் சொல்கிறது. இத்தனை தன்மைகள் மாறி இருக்க இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்தால் அது இறை சக்திக்கு இழுக்கல்லவா?

எனவே இறைவன் அவ்வப்போது அனுப்பிய இறைத் தூதர்களையே கடவுளின் அவதாரம் என்று மக்கள் விளங்கிக் கொண்டார்கள் என்பது தான் சரியான வாதமாக படுகிறது. இதைத்தான் பல ஹிந்து வேதங்களும் உறுதிப் படுத்துகின்றன. யுக முடிவு நாள் சமீபத்தில் ஒரு தூதர் வருவார் அவர் அரபு நாட்டில் தோன்றுவார். அவர் பெயர் அகமது அல்லது முகமது என்பதாகும் என்றெல்லாம் பல வேதங்களில் சொல்லப் பட்டுள்ளன.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4

இந்த வசனத்தின் மூலம் உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரும் வேதமும் வந்திருக்கிறது என்பதை அறியலாம். தமிழ் மொழியிலும் வேதமும் தூதரும் வந்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றிய தெளிவான சான்றுகள் நம்மிடம் இல்லை.

'அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் இப்றாகீம் இஸ்மாயில இஸ்ஹாக் யஃகூப் மற்றும் அவர்களின் சந்ததிகளுக்கு அருளப் பட்டதையும் மூஸா ஈஸா(ஏசு) மற்றும் நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம் நாங்கள் அவனுக்கே கட்டுப் பட்டவர்கள்' என்று கூறுவீராக! - குர்ஆன் 3 : 84

மேற்கண்ட வசனத்தின் மூலம் இறைத் தூதர்களுக்கிடையில் 'அவர் உயர்ந்தவர்' 'இவர் தாழ்ந்தவர்' என்ற பாரபட்சம் காட்டக் கூடாது என்று விளங்குகிறது. இனி இந்து மதத்தில் முகமது நபியைப் பற்றி முன்னறிவிப்பு சொல்லப் பட்டிருப்பதை வரிசையாக காண்போம்.

பவிஷ்ய புராணா

வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.

- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.

மிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.

'உங்களுக்கு முகமது நபியிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.' - குர்ஆன் 33 :21

இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.

முகமது நபியின் வருகையை இதற்கு முன் உள்ள வேதங்களிலும் சொல்லியிருக்கிறேன் என்று இறைவன் குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.

'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல்இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - குர்ஆன் 2 :146

முகமது நபி மக்காவிலிருந்து விரட்டப் பட்டு மதீனா வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிபது பாலஸ்தீன் பகுதியிலிருந்து மதீனா வந்தனர்.முகமது நபி வரும் போதுஅவர்களை முதலில் ஏற்பவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இங்கே வந்து குடியேறினர். ஆனால் அவர்களின் வாரிசுகளோ முகமது நபி வந்த போது அவர்களை இறைத் தூதர்என்று அறிந்து கொண்டே மறுத்தனர். தமது பதவி செல்வாக்கு போய்விடும் என்று அஞ்சினர். அது தான் இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது.


பவிஸ்ய புராணம்

'இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.

பவிஸ்ய புராணா - பிரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.

அது எப்படி இவ்வளவு துல்லியமாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்ல முடியும் என்ற கேள்வி நமக்கெல்லாம் வரும். அதற்கு இறைவன் குர்ஆனிலேயே பதிலும் அளிக்கிறான்.

'பூமியிலும் வானத்திலும் அணு அளவோ அதை விடச் சிறியதோ அதை விடப் பெரியதோ உனது இறைவனை விட்டும் மறையாது. அவை தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டிருக்கிறது. - குர்ஆன் 10 :61

இந்த வசனத்தின் மூலம் எத்தனை நபி வருவார். எங்கெங்கெல்லாம் வருவார் அவர்களின் சட்டங்கள் என்பன போன்ற விபரங்களை ஏற்கெனவே எழுதி வைக்கப் பட்டுள்ள பதிவேட்டிலிருந்து எடுத்து இறைவன் கொடுத்திருக்கிறான் என்று விளங்க முடிகிறது.


முகமது நபியைப் பற்றிய முன்னறிவிப்புகள் பலவற்றை இந்து மத வேதங்களில் இருந்து போன பதிவுகளில் கண்டோம். வேறு சில தகவல்களையும் இந்து மத வேதங்களில் இருந்து பார்ப்போமா!

அதர்வண வேதம் :அதர்வண வேதம் 20 ஆவது புத்தகத்தில் குன்துப் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் உண்டு. 'குன்துப்' என்பதன் பொருள் 'அமைதியையும் பாதுகாப்பையும் தரக் கூடிய வழிகள்' என்ற பொருள் தரும். இதையேதான் நாம் அரபியில் இஸ்லாம் என்கிறோம். இந்த குன்துப் அத்தியாயத்தை புளூம் ஃபீல்ட், புரபஸர் ரால்ப் க்ரிபித்,பண்டிட் ராஜாராம் போன்றோர் மொழி பெயர்த்துள்ளனர். இந்த அதர்வண வேதத்தில் குன்துப் அத்தியாயத்தில் சுலோகங்கள் ஒன்றிலிருந்து பதின்மூன்று வரை வரக் கூடியவை.

மந்த்ரா ஒன்று
'அவர்தான் நரசன்ஸா அல்லது புகழப் பட்டவர்'

'அவர்தான் கருமா. அமைதியை விரும்பும் அவர் தன் நாட்டவர்களால் துரத்தப் படுவார் 60090 எதிரிகளிடமிருந்து காப்பாற்றப் படுவார்'

சமஸ்கிருத மொழியில் 'கருமா' என்பதற்கு 'அமைதியை பரப்பக் கூடியவர்' என்ற அர்த்தம் வரும். 'நாடு துறப்பவர்' என்ற பொருளிலும் வரும். இந்த இரண்டு செயல்களும் முகமது நபியின் வாழ்க்கையில் நடைபெற்றவை.

'நரசன்ஸா' என்பதற்கு புகழப் பட்டவர் என்று அர்த்தம் வரும். அரபியில் புகழப் பட்டவர் என்ற பதத்தில் வரும் பெயர் முகம்மது. மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இல்லை என்று பிரச்சாரம் செய்த அவர் மக்காவிலிருந்து மதினாவுக்கு அவரின் உறவினர்களாலும் எதிரிகளாலும் விரட்டப் பட்டார். அப்போது இருந்த மக்காவின் மக்கள் தொகை ஏறக்குறைய இதே எண்ணிக்கையில் இருந்தது.

மந்த்ரா இரண்டு
'அவர் ஒட்டகத்தில் சவாரி செய்வார். அவருடைய வாகனம் சொர்க்கத்தையும் தொட்டுவிடக் கூடியது'

ஒட்டகத்தில் பிரயாணம் செய்வது பிராமணர்களுக்கு தடுக்கப் பட்டுள்ளது. எனவே இதுவும் முகமது நபியைக் குறிப்பதாக உள்ளது.
முகமது நபி 'மிஃராஜ்' என்ற விண்வெளிப் பயணம் செய்து இறைவனோடு பேசியதையும், சொர்க்கம் நரகத்தை பார்வையிட்டதையும் பற்றி நமக்கு ஹதீதுகளில் காணக் கிடைக்கின்றது.

மந்த்ரா மூன்று :
'அவர் பெயர்தான் மாமாஹ் ரிஷி'

இந்த மந்த்ராவில் வரும் பெயர் மாமாஹ் ரிஷி. எந்த ஒரு இறைத் தூதரும் இந்த பெயரில் இந்தியாவில் அவதரித்ததாக வரலாறுகளில் காணப் படவில்லை. மாமாஹ் என்பதும் முஹம்மது என்பதும் ஒன்று தான் என்று இதன் மூலம் விளங்க முடிகிறது. இதற்கு முன்பே கூட இந்து வேதங்களில் முஹம்மது என்ற முழுப் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது.

மந்த்ரா பதினான்கு :
அந்த தலைவரை நாம் வாழ்த்தி வரவேற்போம். அவரை ஏற்றுக் கொண்டால் தவறுகளில் வீழ்ந்து விடாமல் பாதுகாக்கப் படுவோம்.

அதர்வண வேதம் :

'உண்மையான அந்த இறைவன் புகழப் பட்டவன். போர்க் களத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்கள் ஆச்சரியப் படத்தக்க வகையில் பத்தாயிரம் பேரை வெற்றிக் கொள்வர். இது இறைவன் கிருபையால் நடக்கும்.'

அதர்வண வேதம் - அத்தியாயம் 21 - சுலோகம் 9

முகமது நபி சந்தித்த பத்ர் போரில் முஸ்லிம்களின் தரப்பில் இருந்தது வெறும் 3000 பேரே. ஆனால் எதிரிகள் தரப்பில் இருந்தது 10000 க்கும் அதிகமானோர். ஆச்சரியப் படும் வகையில் முஸ்லிம்கள் வெற்றியடைந்தனர். இந்த சுலோகத்தில் வரும் கடைசி வார்த்தையான 'அப்ரதி நி பசாயா' என்ற சொல் 'இறைவனால் ஆச்சரியப் படத்தக்க வகையில் இறை மறுப்பாளர்களுக்கு கொடுக்கப் பட்ட தோல்வி' என்ற பொருளில் வரும்.

அதர்வண வேதம் :'20 அரசர்களும் 60000 எதிரிகளும் சேர்ந்து அந்த புகழப் பட்டவரை எதிர்ப்பர்'

அதர்வண வேதம் - புத்தகம் 20 - அத்தியாயம் 21 - சுலோகம் 9

முகமது நபி பிரசாரம் பண்ணிய காலத்தில் மக்காவின் மக்கள் தொகை ஏறக்குறைய 60000. மக்காவிற்குள்ளேயே ஒவ்வொரு குலத்துக்கும் கோத்திரத்திற்கும் சாதி வாரியாக கிட்டத்தட்ட இருபது தலைவர்கள் இருந்தனர்.இவர்கள் கையில் தான் அன்றைய மக்காவின் ஆட்சி இருந்தது. இவர்கள் தான் முகமது நபியை கடுமையாக எதிர்த்தனர். புகழப் பட்டவர் என்ற பதத்துக்கு அரபியில் முகம்மது பொருள் என்று வரும். 'அபந்து' என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'உதவி செய்யப் படாதவர்' என்று வரும். மக்காவாசிகளால் ஆரம்பத்தில் நிர்க்கதியாக முஹம்மது நபி விடப் பட்டதைத்தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

சாம வேதம் :
'இந்தக் குழந்தையின் பழக்கம் வித்தியாசமாக இருக்கும். இந்தக் குழந்தை தன் தாயிடமிருந்து பால் அருந்தாது. அத்தகைய சூழ்நிலை அங்கு உருவாகாது.'

சாம வேதம் - அக்னி - மந்த்ரா 64
சாம வேதம் - புத்தகம் 1 - பிரிவு 2 - அத்தியாயம் 2 - சுலோகம் 2

முகமது நபி சிறு வயதில் தாய்ப் பால் அருந்த ஹலீமா என்ற பெண்ணிடம் அனுப்பப் பட்டு அங்கு தான் தனது சிறு வயதை கழித்தார்.அவரை பெற்றது ஆமினாவாகும். போதிய தாய்ப் பால் சுரக்காததால் அன்றைய வழக்கப்படி வாடகைக்கு பெண்களை நியமித்தனர்.

முகமது நபிக்கு அஹமது என்ற பெயரும் உண்டு

'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்ட இறைவனின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன் எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்.' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!

குர்ஆன் - 61 : 6

மேற் கண்ட குர்ஆன் வசனத்தில் ஏசு தன் மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் போது அஹமத் என்ற ஒரு தூதர் எனக்கு பின்னால் வரப் போகிறார் என்று கோடிட்டுக் காட்டுகிறார். இதைத் தான் இங்கு இறைவன் குறிப்பிடுகிறான். முகமது நபிக்கு அஹமது என்ற மற்றொரு பெயரும் உள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது.

முகமது அகமது என்ற இரண்டு பெயர்களில் இந்து மத வேதங்களில் வரக் கூடிய பல முன்னறிவிப்புகளை இனி வரிசையாகக் காண்போம்.

அ) சாமவேதம் - உத்தரசிகா - மந்த்ரா 1500
(சாம வேதம் இரண்டாவது பிரிவு - புத்தகம் 7 - அத்தியாயம் 5 - செய்யுள் 1

ஆ)சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152
(சாம வேதம் புத்தகம் 2 - அதிகாரம் 2 - சுலோகம் 8)

இ) யஜூர் வேதா - அதிகாரம் 31 - செய்யுள் 18

ஈ) ரிக் வேதம் புத்தகம் 8 - துதிப் பாட்டு 6 - செய்யுள் 10

உ) அதர்வண வேதம் - புத்தகம் 8 - அதிகாரம் 5 - செய்யுள் 16

ஊ) அதர்வண வேதம் புத்தகம் 20 - அதிகாரம் 126 - செய்யுள் 14

எ) சாம வேதம் - உத்தர்சிக் - மந்த்ரா 1500 - பிரிவு 2

ஏ) சாம வேதம் - புத்தகம் 7 - அதிகாரம் 1 - பகுதி 5 - செய்யுள் 1

'அஹமத் இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.'

- சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 - புத்தகம் 2 - செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை

மேலே உள்ள அத்தியாயங்களில் அதிக இடங்களில் அஹமத் என்று வருகிறது. முகம்மதும் அகமதும் இவ்விரண்டும் முகமது நபியின் பெயர்களே! முகமது நபி இறைவனிடமிருந்து குர்ஆன் மூலம் மக்களுக்கு சட்டங்களை வழங்கினார். இதைத் தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

'முஹம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'

'நரசங்சா'நரசங்சா என்ற பெயர் இந்து மத வேதங்களில் பல இடங்களில் வரும். இதை முறையே பிரித்தோமானால் 'நர' - 'அசஙசா' என்று வரும். நர என்றால் மனிதன் அசங்சா என்றால் புகழப்பட்டவர். ஆக நரசங்சா என்பதன் பொருள் புகழப்பட்டவர். புகழப்பட்டவர் என்ற பதத்தைத்தான் நாம் அரபியில் முஹம்மது என்கிறோம். இனி நரசங்சா என்று இந்து மத வேதங்களில் வரக் கூடிய இடங்களைப் பார்ப்போம்.

1) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 13 - செய்யுள் 3

2) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 18 - செய்யுள் 9

3) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 106 - செய்யுள் 4

4) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 142 - செய்யுள் 3

5) ரிக் வேதம் - புத்தகம் 2 - பாட்டு 3 - செய்யுள் 2

6) ரிக் வேதம் - புத்தகம் 3 - பாட்டு 29 - செய்யுள் 11

7) ரிக் வேதம் - புத்தகம் 5 - பாட்டு 5 - செய்யுள் 2

8) ரிக் வேதம் - புத்தகம் 7 - பாட்டு 2 - செய்யுள் 2

9) ரிக் வேதம் - புத்தகம் 10 - பாட்டு 64 - செய்யுள் 3

10) ரிக் வேதம் - புத்தகம் 10 - பாட்டு 182 - செய்யுள் 2

11) சாம வேதம் - உத்தராசிக் - மந்த்ரா 1349

12) யஜீர் வேதம் - அதிகாரம் 29 - செய்யுள் 27

13) யஜீர் வேதம் - புத்தகம் 1 - அதிகாரட் 6 - செய்யுள் 4

14) யஜீர் வேதம் - புத்தகம் 1 - அதிகாரம் 7 - செய்யுள் 4

15) யஜீர் வேதம் - அதிகாரம் 20 - செய்யுள் 37

16) யஜீர் வேதம் - அதிகாரம் 20 - செய்யுள் 57

17) யஜீர் வேதம் - அதிகாரம் 21 - செய்யுள் 31

18) யஜீர் வேதம் - அதிகாரம் 21 - செய்யுள் 55

19) யஜீர் வேதம் - அதிகாரம் 28 - செய்யுள் 2

20) யஜீர் வேதம் - அதிகாரம் 28 - செய்யுள் 19

21) யஜீர் வேதம் - அதிகாரம் 26 - செய்யுள் 42

ராமாயணமும் மகாபாரதமும் நம் அனைவருக்கும் மிகவும் பiரிச்சயமானது. இதன் கதாபாத்திரங்கள் இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு அத்துப்படி. ஆனால் இந்த இரண்டு காவியங்களும் பிரபல்யமானதுபோல் இந்து மதத்தின் வேதங்களான ரிக் யஜீர் சாம அதர்வண வேதங்கள் மக்களிடையே கொண்டு செல்லப் படவில்லை. மக்களிடையே கொண்டு சென்றால் பல உண்மைகள் மக்களிடம் விளக்க வேண்டுமே என்ற தயக்கத்தின் காரணமாகத்தான் இந்து மத அறிஞர்கள் மறைத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ல்கி அவதாரம்!
கலகி என்ற இவரைப் பற்றி பல வதந்திகள் நம் நாட்டில் உலா வருகின்றன. ஆந்திராவில் விஜயகுமார் என்ற பட்டதாரி தன்னை கல்கி அவதாரம் என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டத்தையும் சேர்த்து விட்டார். இதை படித்தவர் முதல் பாமரர் வரை நம்பிக் கொண்டிருப்பதுதான் விஷேஷம். இது போன்ற போலிகள் அவ்வப்போது தலை எடுப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் மதத்தைப் பற்றிய உண்மையான புரிதல் இல்லாமையே! இந்து மதத்தை சேர்ந்தவர்களிலேயே அவர்களின் மதத்தின் வேதங்களைப் படித்தவர்கள் எத்தனை பேர் என்று கேளுங்கள். மிகக் குறைவாகவே பதில் வரும். அந்த வேதத்தின் மூல மொழியான சமஸ்கிரத பாஷையை கற்றவர்கள் எத்தனை பேர? ராஜ கோபாலச்சாரியார், சோ ராமசாமி,சங்கராச்சாரியார் போன்ற ஒரு சில பேரைத்தான் காண முடியும். தெரிந்த இந்த ஒரு சிலரும் வேதங்களை மக்களிடம் கொண்டு செல்ல முயற்ச்சிக்கவும் இல்லை.

இனி இந்த வேதங்களில் கல்கி என்ற அவதாரத்தைப் பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று சிறிது ஆராய்வோம்.

"சிலை வணக்கம் புரியப்படும் தலைவரின் குடும்பத்தில் அவர்களின் நகரான சம்பாலாவில் விஷ்ணுயாஸூடைய வீட்டில் கல்கி தோன்றுவார்"
"உலகத்தின் ரட்ஷகன் அவருக்கு எட்டு போற்றுதற்குரிய தகுதிகளைக் கொடுத்து அபரிமிதமான வெற்றியையும் மகிமையையும் பிரகாசத்தையும் கொடுத்து கெளரவிப்பார். குதிரை வாகனம் அவருக்கு தேவர்களால் கொடுக்கப் படும். அவருடைய கையில் வாள் இருக்கும். இரட்ஷகனின் துணை கொண்டு அனைத்து தீய காரியங்களையும் துரோகிகளையும் வென்றெடுப்பார்.மலையின் குகையில் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுவார். பிறகு வடக்கு நோக்கி சென்று திரும்பவும் தான் பிறந்த இடத்திற்கு திரும்புவார்."

பாகவதா புராணம் -காண்டம் 12 - அத்தியாயம் 2 - சுலோகம் 18 லிருந்து 20 வரை

"அறியாமைக் காலமான அந்த நாளில் கல்கி அவதரிப்பார்.அந்நாளில் அரசர்கள் மிகப் பெரிய கொள்ளயைர்களாக இருப்பர். உலகத்தை நேர்வழிப் படுத்த வந்த அவரின் தந்தை விஷ்ணுயாத் ஆவார். கல்கி என்ற பெயரிலும் அறியப் படுவார்."

பாகவத புராணம் - காண்டம் 1 - அத்தியாயம் 3 - சுலோகம் 25

விளக்கங்கள் :
1) கல்கியின் தந்தை பெயர் விஷ்ணுயாத் என்று சொல்லப் படுகிறது. இதைத் தமிழ்ப் படுத்தினால் விஷ்ணுவின் அடிமை என்று வரும். அதாவது இறைவனின் அடிமை. இதே வார்த்தையை நாம் அரபியில் சொன்னால் அப்து+அல்லா இறைவனின் அடிமை அப்துல்லா என்று வரும். ஆக விஷணுயாத் அப்துல்லா இறைவனின் அடிமை ஆகிய இம்மூன்றும் ஒன்றே. முகமது நபியின் தந்தை பெயர் அப்துல்லா. எனவே விஷ்ணுயாத் என்பது அப்துல்லா என்று விளங்குகிறது.

2) சம்பாலா என்ற நகரத்தில் பிறப்பார்
சம்பாலா என்ற பதத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தால் "அமைதியும் பாதுகாப்பும் கொண்ட இடம்" என்ற பொருள் வரும்.

"அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடும் இடமாகவும் பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக" -குர்ஆன் 2 :125

கஅபா அமைந்திருக்கும் மக்கா நகர் அபய பூமி என்று அறிவிக்கப் பட்டு பதினான்கு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த பின்பும் அது இன்றளவும்; எந்த படையெடுப்புக்கும் ஆளாகாமல் அபய பூமியாகவும் பாதுகாப்பு கொண்ட ஊராகவும் அமைந்துள்ளது. மேலே உள்ள சம்பாலா என்ற ஊர் மக்காவையே குறிக்கும் . முகமது நபியும் மக்காவில் தான் பிறக்கிறார்.

4) கல்கி கடைசி அவதாரம்

வேதங்களில் கல்கி அவதாரம் தான் கடைசி அவதாரம் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதையேதான் குர்ஆனும் உறுதி செய்கிறது.

"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்." - குர்ஆன் - 5 :3

"முகமது இறைவனின் தூதராகவும் நபி மார்களில் முத்திரையாகவும் இருக்கிறார்." - குர்ஆன் 33 :40

முகமது நபிக்கு பிறகு இனி வேதங்களும் வரப் போவதில்லை. இறைத் தூதர்களும் வரப் போவதில்லை.தூதுத்துவத்திற்கு சீல் வைத்தாகி விட்டது. இனி நபி வரப் போவதில்லை என இதன் மூலம் விளங்குகிறது. இந்து மத வேதங்களும் இதைத்தான் சொல்கின்றன.

5) "மலையின் குகையில் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுவார். பிறகு வடக்கு நோக்கி சென்று திரும்பவும் தான் பிறந்த இடத்திற்கு திரும்புவார்"

முகமது நபி மலைகளுக்கு நடுவே உள்ள ஹீரா குகையில் தங்கி தியானத்தில் ஈடுபட்டிருந்த போது வானவர் கேப்ரியேல் வந்து குர்ஆனின் முதல் வசனத்தை ஓதச் சொல்கிறார். அன்றிலிருந்து தான் சிறுக சிறுக குர்ஆன் இறங்க ஆரம்பிக்கிறது.
மக்காவாசிகளால் துரத்தப்படும் முகமது நபி வடக்கில் இருக்கும் மதீனா நகருக்கு தன் தோழருடன் பயணமாகிறார். மதினாவில் இவருக்கு ஆதரவு கிடைக்கிறது. சில காலத்துக்குப் பிறகு தான் பிறந்த மக்காவுக்கே திரும்பவும் வருகிறார்.

6) நன் நடத்தையில் மிகவும் போற்றுதலுக்குரியவராக இருப்பார்.

"முகம்மதே! நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்." -குர்ஆன் 68 :4

7) எட்டு போற்றத்தக்க தகுதிகள் கொடுக்கப் படுவார்.அந்த எட்டு தகுதிகள் : 1) wisdom - அறிவுடைமை 2)Respectable lineage - மரியாதைக்குரிய பரம்பரை 3) Self control - தன்னடக்கம் 5) Revealed knowledge - அறிவை வெளிப்படுத்தும் திறமை 5)Valour - வீரம் தைரியம் 6)Measured speech - அளவான பேச்சு 7) Utmost charity - மிக உயர்ந்த ஈகை குணம் 8) Gratefulness - நனறி மறக்காத தன்மை.1) அறிவுடைமை :
மிகச் சிறந்த அறிவு முகமது நபிக்கு கொடுக்கப் பட்டிருந்தது. நபியாக ஆவதற்கு முன்பே இவருக்கு இருக்கும் ஞானத்தைப் பற்றி அம் மக்கள் அறிந்திருந்தனர்.

2) மரியாதைக்குரிய பரம்பரை :
அந்த காலத்தில் மிகவும் உயர்ந்த குலமாக கருதப்பட்ட குறைஷி குலத்தில் முகமது நபி பிறக்கிறார்.

3) தன்னடக்கம் :
தன்னடக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக முகமது நபி திகழ்ந்தார். அவரை எதிரிகள் பல தடவை கோபப்படுத்தும் போதெல்லாம் அமைதியும் பொறுமையும் காத்து வந்ததை அவரின் வாழ்க்கையில் பல தடவை நாம் பார்க்க முடிகிறது.

4) அறிவை வெளிப் படுத்தும் :
படித்தவரும் பாமரரும் விளங்கிக் கொள்ளும் விதமாக அவர் மனிதர்களுக்கு அளித்த போதனைகள் படித்தவர்களையே வியப்பில் ஆழ்த்தியது.

5) வீரம் தைரியம் :
மிகச் சிறந்த உடல் வலிமையை முகமது நபி பெற்றிருந்தார். பல போர்களில் இவரே தலைமையேற்று சென்று வெற்றியும் பெற்று வந்திருக்கிறார். மற்ற நாட்டு தலைவர்களைப் போல் அரண்மனையில் அமர்ந்து உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கவில்லை.

6) அளவான பேச்சு :
தேவைக்கு அதிகமான பேச்சு இவரிடம் இருக்காது. கேள்வி கேட்பவருக்கு அதற்குரிய பதில் மட்டுமே வரும். பதில்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்ததால் அவரின் தொழர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.

7) ஈகை குணம் :
தேவை என்று வந்தவர்க்கு இல்லை என்று எந்த நேரத்திலும் எவரையும் திருப்பி அனுப்பியதில்லை. இவர் பொருளாதாரத்தில் சிரமப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட பல வறிய குடும்பங்களை தன்னுடைய பொறுப்பில் பராமரித்து வந்தார்.

8) மதினாவில் அன்சாரிகள் இவருக்கும் இவரது தோழர்களுக்கும் சிரமமான நேரத்தில் செய்த உதவிகளை கடைசி காலம் வரை மறக்காமல் ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தார்.

8) கல்கி உலகை நேர்வழிப் படுத்த வந்த ஆசான் :

கல்கியானவர் உலக மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்.உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்.
இதையேதான் குர்ஆனும் முகமது நபி அரபு மக்களுக்கு மட்டும் வழி காட்டியல்ல.உலக மக்கள் அனைவருக்கும் வழி காட்டியாக அனுப்பப் பட்டவர் என்று கூறுகிறது.

"முகம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்." - குர்ஆன் 34 : 28

9)குதிரை வாகனம் அவருக்கு கொடுக்கப் படும். கையில் வாள் வைத்திருப்பார்.

முகமது நபியின் வாகனம் அதிகமாக குதிரையாகவே இருந்தது. அவர் தன்னிடம் எப்போதும் பாதுகாப்புக்காக வாள் ஒன்றையும் வைத்திருந்தார்.

10) கல்கி தீய காரியங்களை வென்றெடுப்பார்.
முகமது நபி அவதரித்த அந்த காலம் "அய்யாமுல் ஜாஹிலிய்யா" அதாவது "அறியாமைக் காலம்" என்று வரலாறுகளில் சொல்லப் படுகிறது. குடி கொள்ளை ஓயாத போர் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல் - பெண் குழந்தை பிறந்தால் சமூகத்தில் முகம் காட்ட கூச்சப் பட்டுக் கொண்டுபல நாட்கள் வீட்டை விட்டே வெளியேறி விடுதல் போன்ற பல அரக்க குணங்கள் நிறைந்த அந்த அரபுகள் மத்தியில் முகமது நபி தோன்றுகிறார். நபியானதற்கு பிறகு சில வருடங்களிலேயே அதிசயத் தக்க மாற்றங்களை அரபுக்கள் மத்தியில் உண்டாக்குகிறார். அனைத்து தீய பழக்கங்களும் அவர்களிடமிருந்து நீங்குகிறது.

11) கல்கி நான்கு தோழர்களின் துணை கொண்டு தீமைகளை வென்றெடுப்பார்.

முகமது நபிக்கு ஆரம்ப காலம் முதல் இறப்பு வரை தீமைகளை எதிர்த்து போரிடுவதில் நான்கு பேர் முன்னிலையில் இருந்தனர். அவர்கள் முறையே அபுபக்கர்- உமர் - அலி- உஸ்மான் ஆவர். இவர்கள் முகமது நபியின் மறைவுக்குப் பிறகுஇஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு ஜனாதிபதியாக இருந்து திறம்பட நிர்வாகம் செய்து வந்தனர். இந்த நால்வரையே மேலே சுட்டிக் காட்டப் படுகிறது.

12) கல்கி தேவர்களால் உதவி செய்யப்படுவார்

முகமது நபி பத்ர் என்ற போர்க் களத்தில் போரிடும் போதுசிரமமான நேரத்தில் வானவர்களை இறைவன் துணைக்கு அனுப்பினான். இதை குர்ஆனில் பின் வருமாறு கூறப்படுகிறது.

"நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது உங்களுக்கு பின்னால் அணி வகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதபுபவன்" என்று உங்களுக்குப் பதிலளித்தான்." - குர்ஆன் 8 : 9

"நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ர் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இறைவனை அஞ்சுங்கள்." - குர்ஆன் 3 : 123

கல்கி என்று சொல்லப் பட்டது முகமது நபிதான் என்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளேன். கல்கி என்பவர் முகமது நபி அல்ல என்று வாதிடுபவர்கள் அதற்கான விளக்கத்தைத் தர கடமைப் பட்டுள்ளார்கள். என் கருத்தில் தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்


இஸ்லாத்தின் அய்ந்து முக்கிய கடமைகளில் ஒன்று தொழுகை. இதைப் பற்றி குர்ஆன் பின் வருமாறு கூறுகிறது :


'முகம்மதே! வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக!தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். இறைவனை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை இறைவன் அறிவான்.' - குர.ஆன் 29 : 45


தொழுகை மனிதர்களை தவறான வழியிலிருந்து மீட்கும் என்று இறைவன் கூறுகிறான். மனிதனை படைத்ததன் நோக்கமே இறைவனை வணங்குவதற்காக என்று வேறொரு இடத்தில் இறைவன் கூறுகிறான். இந்த தொழுகை விஷயத்தில் இஸ்லாம்,இந்து என்ற இந்த இரண்டு மதங்களுக்கிடையேயான ஒற்றுமைகளைப் பார்ப்போம்.


முஸ்லிம்களின் தொழுகையில் 'ஸூஜூது' என்ற நிலை உள்ளது. அதாவது மண்டியிட்டுதலையை பூமியில் வைக்கும் நிலை தொழுகையில் உண்டு. இந்த நிலையில் தன்னையே மனிதன் இறைவனிடம் அர்ப்பணிப்பதால் அந்த நேரத்தில் கேட்கப் படும் பிரார்த்தனைகளை இறைவன் உடன் அங்கீகரிக்கிறான் என்று முகமது நபியின் போதனை நமக்கு விளக்குகிறது. இந்த நிலையில்தான் பணக்காரனின் தலை ஏழையின் கால்களில் உரசும். இஸ்லாத்துக்கு வந்த ஒரு பிராமணின் தலை அவருக்கு முன் நிற்கும் இஸ்லாமான தலித்தின் கால்களில் உரசும். அதேபோல் வெள்ளையனின் தலையும் ஆப்ரிக்காவிலிருந்து வந்த கருப்பரின் கால்களில் உரசும். ஹஜ்ஜூக்கு வரும் ஒவ்வொரு நபரும் இதை கண் கூடாக பார்க்கலாம். சவூதி தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு நாளும் ஒளி பரப்புவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல வாழ்நாள் முழுவதும் இந்த பயிற்ச்சியை ஒவ்வொரு நாளும் அய்ந்து வேளை முஸ்லிம்கள் எடுக்கின்றனர். எனவே தான் முஸ்லிம்களிடத்தில் தீண்டாமை அறவே ஒழிக்கப் பட்டிருக்கிறது.


இதே நிலை இந்து மதத்திலும் உண்டு. இறைவனுக்கு செய்யப்படும் வணக்கம் இந்து மதத்தில் பல நிலைகளில் அனுஷ்டிக்கப் படுகிறது. அதில் ஒன்று 'சாஷ்டாங்கம்'. இந்த வார்த்தையை பிரித்து பொருள் பார்ப்போம். சாஸ்த் - அங்க் என்று பிரித்துபொருள் பார்த்தால் சாஸ்த் - எட்டு அங்க் - உடல் என்ற பொருளில் வரும். அதாவது உடலில் உள்ள நெற்றி, மூக்கு, இரண்டு கைகள், இரண்டு முழங்கால்,இரண்டு பாதம் ஆகிய எட்டு அவயங்களை பூமியில் படுமாறு இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்குவதால் இதை சாஷடாங்கம் என்று கூறுகிறோம்.


இதே நிலையைத்தான் சற்று மாறுதலாக முஸ்லிம்கள் செய்யும் போதும் உடலின் எட்டு பாகங்கள் பூமியில் படும். வித்தியாசம் என்ன என்றால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை வணங்குகிறார்கள். இந்துக்கள் பல தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆனால் இந்து மதத்தில் பல தெய்வ வணக்கத்திற்கு உள்ள தடைகளையும் ஒன்றிரண்டைப் பார்ப்போம்.


'எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்.'


- பகவத் கீதை - அதிதியாயம் 7 - வசனம் 20


'நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது'


-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 - 19
-யஜூர் வேதம் 32 - 3


'இயற்கையை வணங்குபவர் இருளில் நுழைந்து விட்டனர்'


-யஜீர் வேதம் 40 : 9


மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.


ஜகாத் (ஏழை வரி)


இஸ்லாத்தின் மற்றொரு முக்கிய கடமைகளில் ஒன்று ஜகாத் என்பது. 'ஜகாத்' என்ற அரபிச் சொல்லுக்கு தூய்மைப் படுத்துதல், வளருதல் என்ற பொருள் வரும். மனிதன் தான் சம்பாதித்த பொருள்களை இறைவன் சொன்னான் என்பதற்காக குறிப்பிட்ட சதவீதத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பது ஜகாத் எனப்படும்.இப்படி செல்வந்தன் கொடுப்பதால் அவனின் செல்வம் தூய்மையடைகிறது. இறைவன் அருளால் மேலும் மேலும் பெருகுகிறது. இந்த முறை மட்டும் இஸ்லாமியரிடத்தில் சரி வர செயல் பட்டால் ஏழைகளையே இல்லாத சமுதாயமாக முஸ்லிம் சமூகம் மாறி விடும். நானும் தர்மம் செய்கிறேன் பேர்வழி என்று 50 பைசா, ஒரு ரூபாய் சில்லரைகளை மாற்றி வைத்துக் கொண்டு தினமும் வீட்டுக்கு வரும் பிச்சைக் காரர்களுக்கு போடுவதல்ல இறைவன் சொல்லும் தர்மம்.இது பிச்சைக் காரர்களை மேலும் ஊக்கப் படுத்தும். சோம்பேறிகளை அதிகம் உருவாக்கும்.


ஊர் நாட்டாண்மை, அல்லது நேர்மையான ஊர் பெரியவர் ஒவ்வொரு செல்வந்தனிடமும் வருமானத்தைக் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும். பிறகு அவை குர்ஆனில் இறைவன் கூறும் எட்டு நபர்களுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும். தையல் மிஷின், கறவைமாடு, போன்றவை இலவசமாக வாங்கிக் கொடுத்தால் அடுத்த வருடம் அவன் தர்மம் கொடுக்க தயாராகி விடுவான். இது போன்ற அமைப்பு தமிழகத்தில் தற்போதுதான் தொடங்கப் பட்டிருக்கிறது. இது தொடர வேண்டும். இப்படி ஒரு அமைப்பு எதற்காக என்ற காரணத்தையும் குர்ஆன் சொல்கிறது.


'உங்களில் செல்வந்தர்களிடையே செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக இறைவன் இவ்வாறு பங்கிடுகிறான்.'


-குர்ஆன் 59 : 7


அனைவருக்கும் பொருளாதாரம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இறைவன் இத்தகைய ஏற்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறான்.


இதே கருத்தில் இந்து மத வேதங்களில் வரும் ஒரு சில வசனங்களைப் பார்ப்போம்.


'வறியவனைப் பார்த்து செல்வம் உள்ளவன் நிம்மதி அடைகிறான். இன்று பணம் உள்ளவன் நாளை ஏழையாகிறான். ஒரு வண்டியின் சக்கரம் சுழல்வது போல் இவர்களின் வாழ்க்கை சுழல்கிறது.'


-ரிக் வேதம் புத்தகம் 10 - துதிப் பாட்டு 117 - வசனம் 5


குர்ஆனின் கருத்தும் ரிக் வேதத்தின் கருத்தும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.


பகவத் கீதையிலும் பல இடங்களில் தர்மத்தைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. அவை


-பகவத் கீதை - அதிகாரம் 17 - வசனம் 20


-பகவத் கீதை - அதிகாரம் 16 - வசனம் 3


நோன்பு


இஸ்லாத்தின் அய்ந்து கடமைகளில் ஒன்றாக நோன்பும் வருகிறது. இதைப் பற்றி குர்ஆன் சொல்வதாவது :


'இந்த குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப் பட்டது. அது மனிதர்களுக்கு நேர் வழியைக் காட்டும். நேர் வழியைத் தெளிவாக கூறும்.பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்.உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இறைவன் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான்.' -குர்ஆன் 2 : 185


ஒரு மனிதன் தனது நாவின் ருசியை கட்டுப் படுத்த பழகிக் கொண்டால் மற்ற பல இச்சைகளை தனது கட்டுப் பாட்டில் கொண்டு வருவது மிக எளிதானது. எனவே தான் மனிதர்களுக்கு ஒரு ஆன்மீகப் பயிற்சியாகவும், ஏழைகளின் பசியை உணர்த்துவதற்காகவும் இறைவன் நோன்பை கடமையாக்கினான். சிகரெட், மது போன்ற பழக்கத்திற்கு அடிமையான ஒரு சில முஸ்லிம்கள் கூட இந்த மாதத்தில் அந்த தீய பழக்கங்களை விட்டு விடுவதை நாம் பார்க்கிறோம்.


இந்த நோன்பைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்து மத்தில் பல வழிகளில் விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது.


-மனு ஸ்ருமிதி - அத்தியாயம் 6 - வசனம் 24


-மனு ஸ்ருமிதி - அத்தியாயம் 11 - வசனம் 204


ஹஜ்


இஸ்லாத்தில் அய்ந்தாவது கட்டாய கடமைகளில் ஒன்று ஹஜ். வசதி உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஹஜ் புனிதப் பயணம் செய்ய வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. வருடா வருடம் அமெரிக்கா,பிரிட்டன்,சைனா,அய்ரோப்பா,மலேசியா,இந்தியா,ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து 2;5 மில்லியன் மக்கள் ஒரே இடத்தில் குழுமுகின்றனர். உடம்பின் மேலே ஒன்றும் கீழே ஒன்றும் இரண்டு துண்டுகள் மட்டுமே அதுவும் தைக்கப் படாததை உடுத்திக் கொள்ள வேண்டும். அது வெள்ளை நிறமாகவும் இருக்க வேண்டும். ஏழை, பணக்காரன்,வெள்ளையன்,கறுப்பன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் 'இறைவா! உன்னையே அடி பணிந்தோம்' என்று ஒரு மித்த குரலில் சொல்வது காண கண் கொள்ளாக் காட்சியாகும்.


இந்து மத்திலும் புண்ணியத் தலங்கள் என்று பலவும் சொல்லப் பட்டுள்ளன. அவற்றில் 'லாஸ்பாட்' என்று சொல்லப் படும் ஒரு புண்ணியத் தலத்தைப் பற்றி சிறிது பார்ப்போம்.


'லாஸ்பாட்' இந்த புண்ணிய தலம் நபா பிரிதிவியில் அமைந்திருக்கும்'


-ரிக் வேதம் -புத்தகம் 3 - துதிப்பாட்டு 29 - வசனம் 4


லாஸ்பாட் என்ற சமஸ்கிரத வார்த்தையை தமிழ்ப் படுத்தினால் இறைவனின் இடம் அல்லது இறைவனின் இல்லம் என்ற பொருள் வரும். பிரதிவி என்பதன் பொருள் பூமி. நபா என்பதன் பொருள் நடு மையம். இவை அனைத்தையும் ஒன்று சேருங்கள். 'பூமியின் மையத்தில் அமைந்த இறைவனின் இடம்' என்ற பொருள் வரும். பூமியின் மையத்தில் அமைந்துள்ளது கஅபா என்பது நமக்கு முன்பே தெரியும். எனவே மேலே உள்ள வரிகள் மக்காவில் உள்ள கஅபாவையே குறிக்கிறது.


'அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும் பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்கு அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா எனும் மக்காவில் உள்ளதாகும்.' - குர்ஆன் 3 : 96


'லாஸ்பாட்' என்ற வார்த்தை ரிக் வேதத்தில் மற்றோர் இடத்திலும் வருகிறது.


-ரிக் வேதம் - புத்தகம் 1 - துதிப்பாட்டு 128 - வசனம் 1


அடுத்து ரிக் வேதம் புத்தகம் 3 - துதிப்பாட்டு 29 - வசனம் 11 ல் நரசன்ஸா என்ற நபரைப் பற்றி சொல்லப்படுகிறது. நரசன்ஸா என்பது முகமது நபி என்று முன்பே பார்த்தோம்.இதற்கு முன்னால் அதே ரிக் வேதத்தில் லாஸ்பாட்டைப் பற்றியும் குறிப்பிடப் படுகிறது. எனவே லாஸ்பாட் என்பது மக்காவில் உள்ள கஅபா என்பது மேலும் உறுதியாகிறது.

கல்கி என்று சொல்லப் பட்டது முகமது நபிதான் என்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளேன். கல்கி என்பவர் முகமது நபி அல்ல என்று வாதிடுபவர்கள் அதற்கான விளக்கத்தைத் தர கடமைப் பட்டுள்ளார்கள்.

என் கருத்தில் தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

2 comments:

  1. sir ,
    first u realize y u r family become Muslims . then u got correct idea . in india how muslims r comes , Christians r comes u just realize ,

    1.all muslims r converted by muslim kings

    2.all christians converted by other country funding churches

    ReplyDelete
  2. Kalki enbadhu maha vishnuvin 10 avadhaarangalil onru endru hindhu madham koorugiradgu

    Kalki avadharathai oppu kollum neengal vishnuvaiyum oppuk kolgireergala

    ReplyDelete