இஸ்லாத்தின் எதிரிகளால் சுமத்தப்பட்ட அவதூறுகளை களைந்த பின் இஸ்லாம் - முஸ்லிம் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று என் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க, இஸ்லாத்தின் வரலாறு என்ற பெயரில் மாற்றாரின் 'உளறல்களை' அடையாளம் காட்டுவோம்.
இஸ்லாத்தின் பர்தா - வரலாறும் நிகழ்வுகளும் என்ற தலைப்பில் வழக்கம் போல் இஸ்லாத்தின் வரலாற்றைத் திரித்து எழுதியிருக்கிறார். முஹம்மது நபி(ஸல்)அவர்களை மீண்டும் இங்கே காமுராக சித்தரிக்க முயன்று. இந்த முயற்சியின் வெளிப்பாடே அல்குர்அன் அந் நூர், அல் அஹ்ஜாப் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஒரே வரலாறாகக் குழப்பி உளறலின் உச்சக்கட்டத்திற்கே சென்றிருக்கிறார்.
அந் நூர் அத்தியாத்தில் நான்கு முதல் பத்தாவது வசனம் வரை ஒரு நிகழ்ச்சியாகவும், பதினொன்று முதல் இருபதாம் வசனம் வரை வேறொரு நிகழ்ச்சியாகவும், அதைத் தொடர்ந்தே 21,22ம் வசனம் ஆயிஷா (ரலி) யின் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களைப் பற்றியும். இந்த சம்பவங்களுக்கு சம்பந்தமே இல்லாத மற்றொரு நிகழ்வாகத்தான் 30,31 ஆகிய வசனங்கள் அமைந்திருக்கின்றன. இங்கு எல்லா சம்பவங்களையும் ஒரே சமயத்தில் நடந்ததாகக் கூறி தானும் குழம்பி, முஸ்லிம்களையும் குழப்ப முயன்றிருக்கிறார். இது பற்றி விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.
முதலாவதாக 24ம் அத்தியாயம் 4லிருந்து 10வது வசனங்களைப் பார்ப்போம்.
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
24:5. எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி;
24:7. ஐந்தாவது முறை, ''(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்"" என்றும் (அவன் கூற வேண்டும்).
24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, ''நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி;
24:9. ஐந்தாவது முறை, ''அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
24:10.இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
மேற்காணும் இறைவசனங்களின் வரலாற்று பின்னணி.
ஹிலால் இப்னு உமய்யா(ரலி) (கர்ப்பவதியான) தம் மனைவியை 'ஷாரீக் இப்னு சஹ்மா' என்பவருடன் இணைத்து (இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்'' என்று கூறினார்கள். அதற்கு ஹிலால்(ரலி), 'தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். என்னுடைய முதுகைக் கசையடிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்'' என்று கூறினார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி(ஸல்) அவர்களுக்கு 'யார் தம் துணைவியர் மீது அவதூறு கூறி'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால்(ரலி) அவர்களின் மனைவிக்கு ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால்(ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகிறவர் யார்?' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால்(ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி 'இது (பொய்யான சத்தியமாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!)'' என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கிவிடுவார் என்றே எண்ணினோம். ஆனால், பிறகு அவர், 'காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை'' என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது 'ஷாரீக் இப்னு சஹ்மா'வுக்கே உரியதாகும்'' என்று கூறினார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள், 'இது பற்றிய இறைச்சட்டம் ('லிஆன்' விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்'' என்று கூறினார்கள். (புகாரி)
இரண்டாவதாக அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் எனும் நயவஞ்சகன் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சுமத்தினான் அவதூறை நம்பியவர்களில் ஹஸ்ஸான்(ரலி), மிஸ்தஹ் (ரலி) ஆகியவர்களும் அடங்குவர். அல்குர்ஆன் அந் நூர் அத்தியாயத்தில் 11வது வசனம் முதல் 20ம் வசனம் வரை உள்ள வசனங்களைப் பார்ப்போம்.
24:11.எவர்கள் பழி சமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
24:12. முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, ''இது பகிரங்கமான வீண் பழியேயாகும்"" என்று கூறியிருக்க வேண்டாமா?
24:13.அ(ப்பழி சமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
25:14.இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
25:15. இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.
24:16.இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, ''இதைப் பற்றி நாம் பேசவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்" என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?
24:17.நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
24:18.இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
24:19.எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
24:20.இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையயோனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன் 24:11-20 வரை உள்ள வசனங்களின் பின்னணி வரலாறு.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள்.
இவ்வாறே அவர்கள் தாம் மேற்கொண்ட (பனூ) முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். (இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். (அப்பயணத்தின்போது) நான் என்னுடைய ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன். அதில் நான் இருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கவும்படுவேன். நபி(ஸல்) அவர்கள் அநதப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.
அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன்.அப்போது (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) 'ழஃபாரி' நகர முத்து மாலையொன்று அறுந்து(விழுந்து)விட்டது. எனவே, நான் (திரும்பிச் சென்று) என்னுடைய மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக்கொண்டிருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.
எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டார்கள்.அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கு அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதையை) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். எனவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன்.
எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்தபடி) நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு (காணாமல் போன) என்னுடைய மாலை கிடைத்துவிட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை. நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் என்னுடைய இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மேலிட்டு விட நான் தூங்கிவிட்டேன்.
படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பவர் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார்.அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். எனவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்க முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். அவர் என்னை அறிந்துகொண்டு 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்' (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில்) விலகியிருந்த) என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டேன்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியேற்கவுமில்லை. பிறகு அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்கால்களை (தம் காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார்.இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு(ப் பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.
பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து ஒரு மாதகாலம் நான் நோயுற்று விட்டேன்.மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. நான் நோயுறும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகிற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்த போது) அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; ஸலாம் சொல்வார்கள்; பிறகு 'எப்படி இருக்கிறாய்' என்று கேட்பார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள். அவ்வளவுதான். இதுதான் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டு வந்த) அந்தத் தீய சொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்கு முன்) எனக்குத் தெரியாது.
நோயிலிருந்து குணமடைந்த பின் நானும் என்னுடன் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' (எனப்படும் புறநகர் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்று கொண்டிருந்தோம். கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களின் இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அப்போது நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம்.
நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூ ருஹ்கி இப்னு முத்தலிப்) பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். அபூ பக்ர்(ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ராயித்தா) பின்த் ஸகர் இப்னு ஆமிர்தான் உம்மு மிஸ்தஹின தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அப்பாத் இப்னு முத்தலிப்) ஆவார்.(இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக் கொண்டு என்னுடைய வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன்னுடைய ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப்போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?' என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர் என்ன கூறினார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என்று கேட்டார். 'என்ன கூறினார்?' என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என்னுடைய நோய் இன்னும் அதிகரித்து விட்டது. நான் என்னுடைய வீட்டுக்குத் திரும்பி வந்தபோது (என் கணவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, 'எப்படி இருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அப்போது நான் 'என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?' என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ள அப்போது விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்து(சேர்ந்)தேன்.
என் தாயாரிடம், 'அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொண்டடிகிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! உன் மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுப்படுத்திக் கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்'' என்று கூறினார்.உடனே நான், 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்.) இப்படியா மக்கள் பேசிவிட்டார்கள்!'' என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு காலை வரை நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன்.(இதற்கிடையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப் அவர்களையும், உஸாமா இப்னு ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வஹீ (இறைச்செய்தி) (தாற்காலிமாக) நின்று போயிருந்தது.
உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களோ நான் நிரபராதி என தாம் அறிந்துள்ளதையும் நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார் மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் துணைவியாரிடமும் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை'' என்று அப்போது உஸாமா கூறினார்கள்.
அலீ அவர்களோ (நபி(ஸல்) அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக) 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று கூறினார்கள்.
எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, 'பரீராவே! (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, 'தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார். (வீட்டிலுள்ள) ஆடுவந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விபரமும்) வயது(ம்) குறைந்த இளம்பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார்.
அன்றைய தினம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலுக்கு எதிராக உதவி கோரி எழுந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரை மேடையில் (மிம்பரில்) இருந்தவாறு 'முஸ்லிம் மக்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவிபுரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நல்லதையே அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பிய நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். நான் இருக்கும்போது தான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கிறார். (தனியாக வந்ததில்லை)'' என்று கூறினார்கள்.
உடனே (பனூ) அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த) ஸஅத் இப்னு முஅத் அல் அன்சாரி(ரலி) எழுந்து நின்று, 'இறைத்தூதர் அவர்களே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனுடைய கழுத்தைத் துண்டித்துவிடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம்'' என்று கூறினார்கள்.
உடனே ஸஅத் இப்னு உபாதா எழுந்தார். இவர் கஸ்ரஜ் குலத்தில் தலைவராவார். இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆயினும், குலமாச்சர்யம் அவரை உசுப்பிவிடவே, அவர் ஸஅத் இப்னு முஆத் அவர்களைப் பார்த்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்! அவனை நீர் கொல்லமாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியாது'' என்று கூறினார்.
உடனே உசைத் இப்னு ஹளைர்(ரலி) எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். அவர் ஸஅத் இப்னு உபாதா அவர்களிடம் 'நீர்தாம் தவறாகப் பேசினீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். எனவேதான் நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்!'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரை மேடைமீது நின்றுகொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகி விட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகிவிட்டார்கள்.
அன்றைய நாள் முழுவதும் நான் அப்படியே இருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தார்கள். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) தூக்கம் என்னைத் தழுவாமலும் கண்ணீர் ஓயாமலும் அழுதுவிட்டிருந்தேன். என் ஈரல் பிளந்து விடுமோ என்று என் பெற்றோர் எண்ணிக் கொண்டிருந்தனர்.நான் அழுது கொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்து கொண்டிருந்தபோது, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டாள். நான் அவர்களுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்துகொண்டாள்.
நாங்கள் இவ்வாறு இருக்கையில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு, அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும்) அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்து வந்தார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழி கூறி, இறைவனைப் புகழ்ந்துவிட்டு, 'ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்துவிடுவான். (ஒருக்கால்) நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு! ஏனெனில், அடியான் தன்னுடைய பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்'' என்று கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பேச்சை முடித்தபோது என்னுடைய கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை.அப்போது நான் என் தந்தையார் (அபூ பக்ர்(ரலி) இடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதற்கு பதில் கூறுங்கள்!'' என்று சொன்னேன். அதற்கு என் தந்தையார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு பதில் கூறுங்கள்!'' என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'நானோ வயது குறைந்த இளம் பெண் குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இச்செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்துபோய் அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக அறிவேன். எனவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் - அதை நீங்கள் நம்பப் போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால், நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் - நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப்(அலை) அவர்களின் தந்தை (நபி யாகூப் - அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோரவேண்டும் (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினேன். பிறகு (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும் மேலும், அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகிற வஹீயை (வேத அறிவிப்பை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகிற ஒன்றைச் சொல்கிற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது (குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே அவர்களுக்கு (வேத அறிவிப்பு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரமநிலை அவர்களைப் பற்றிக் கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து வேர்வைத் துளிகள் சிறு முத்துகளைப் போல் வழியத் தொடங்கிவிட்டன. அவர்களின் மீது அருளப்பட்ட இறைவசனத்தின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியுடன்) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை 'ஆயிஷா! மாண்பும் மகத்துவமுமிக்க அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்துவிட்டான்'' என்பதாகவே இருந்தது. உடனே என் தாயார் 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்!'' என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்லமாட்டேன். மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்வையே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்து)வேன்'' என்று சொன்னேன்.
(அப்போது) அல்லாஹ், 'அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர் சித்தீக்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்'' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக, அபூ பக்ர்(ரலி) செலவிட்டுவந்தார்கள். அப்போது அல்லாஹ் 'உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) இறைவசனத்தை அருளினான்.
அபூ பக்ர்(ரலி), 'ஆம்'' அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்'' என்றும் கூறினார்கள்.(குர்ஆனில் என்னுடைய கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷா குறித்து) என்ன 'அறிந்திருக்கிறாய்?' அல்லது 'பார்த்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்'' என்று கூறினார்கள்.
ஸைனப் அவர்கள் தாம் நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவரின் சகோதரி ஹம்னா (என்னுடன்) மோதிக் கொள்ளலானார். என் விஷயத்தில் அவதூறு பேசி அழிந்து போனவர்களுடன் அவரும் அழிந்து போனார். (புகாரி)
ஒரு பெண்ணின் மீது சுமத்தப்படும் அவதூறை - களங்கத்தை ஆர்வத்துடன் கேட்டு இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதை சிறிதும் சிந்திக்காமல், களங்கத்தைப் பற்றிய எந்த ஞானமும் இல்லாத நிலையிலும் கட்டி விடப்பட்ட கட்டுக் கதையை, சம்பவத்தை நேரில் பார்த்தது போல் மற்றவரிடம் அவசரமாக கிசுகிசுக்கும் ஆவல் உள்ளவர்களை இன்றைக்கும் பார்க்கத்தான் செய்கிறோம்.
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்பவன் கூடவே இருந்து குழி பறிக்கும் நயவஞ்சகனாக இருந்தான். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தமது கூட்டத்தை தவறவிட்ட பின் ஸஃப்வான் என்னும் நபித்தோழர் ஆயிஷா (ரலி) அவர்களை மீண்டும் அவரது கூட்டத்தோடு சேர்க்க உதவுகிறார். இந்த சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி அப்துல்லாஹ் இப்னு உபை என்ற நயவஞ்சகன் இருவரையும் இணைத்து அவதூறைப் பரப்பி ஊதிப் பெரிதாக்கினான். அவதூறில் அவனுக்கே அதிக பங்கிருந்தது என்பதையே அல்குர்ஆன் 24:11 வசனம் தெளிவு படுத்துகிறது.
''அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப்பெரும் வேதனையுண்டு'' எனும் (திருக்குர்ஆன் 24:11 வது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) 'அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்' என்பானைக் குறிக்கிறது. (புகாரி)
அவதூறை முஸ்லிம்களில் உள்ளவர்களில் சிலர் நம்பினார்கள், இந்த அவதூறையேக் காரணமாக வைத்து ஆயிஷா (ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடமிருந்து பிரித்து விடலாம் என சூழ்ச்சி செய்த ஸைனப்(ரலி) யின் சகோதரி ஹம்னா பற்றியும் மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவதூறை நம்பியவர்களையும் 'ஆய்ந்தறிய வேண்டாமா' எனக் கடிந்துரைக்கிறான் இறைவன்.
அவதூறு கூறிய கவிஞர் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மரண வேளையில் ஆயிஷா (ரலி) அவர்களை சந்திக்கிறார்.
ஆயிஷா(ரலி) (மரணப் படுக்கையில் இருந்தபோது) தம்மைச் சந்திக்க (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அனுமதி கோரியதாக (என்னிடம்) கூறினார்கள். அப்போது நான் '(அவதூறு பரப்புவதில் பங்கெடுத்துக் கொண்ட) இவருக்கா அனுமதி அளிக்கிறிர்கள்?' என்று கேட்டேன். ஆயிஷா(ரலி) 'அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டுவிட்டதல்லவா?' என்று கூறினார்கள். 'ஹஸ்ஸான்(ரலி) (கடைசி காலத்தில்) கண்பார்வை இழந்துவிட்டதையே ஆயிஷா(ரலி) குறிப்பிடுகிறார்கள்'' என சுஃப்யான்(ரஹ்) கூறினார்.''நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர். (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்'' என்று ஹஸ்ஸான்(ரலி) (ஆயிஷா(ரலி) அவர்களைக் குறித்து கவிதை பாடினார்கள். அதைக் கேட்ட ஆயிஷா(ரலி), 'ஆனால், நீங்கள் அத்தகையவரல்லர். அவதூறு பரப்பியவர்களுடன் சேர்ந்து கொண்டவர்தாம் நீங்கள்'' என்று கூறினார்கள். (புகாரி)
அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் மீது சுமத்தப்பட்ட களங்கமும், அது துடைக்கப்பட்ட உண்மை வரலாறும் இதுதான். இஸ்லாத்தின் எதிரிகள் இதை எப்படித் திரிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
பெண்ணின் மீதும் சுமத்தப்படும் களங்கம், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அனைவரையும் விட கணவரையே மிக அதிர்ச்சியடைய வைத்துவிடும் இது மனித இயல்பு. இந்த சூழ்நிலையைத்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திக்கிறார்கள். இது உண்மை என்று ஒத்துக் கொள்ளவும் முடியாமல், அவதூறு எனப் புறக்கணிக்கவும் முடியாமல் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் நிலையில், உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாக கருதப்பட்ட ஸைத்(ரலி)க்கும், நபி(ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய உம்முஐமன் என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்) நபி(ஸல்) அவர்களை நெருங்கி ஆறுதல் சொல்கிறார்.
நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகனும், நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவை மணந்தவருமான அலி இப்னு அபுதாலிப் (ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களை நெருங்கி ஆறுதல் சொல்கிறார்கள்.
இந்த இரண்டு சம்பங்களும் மேலே குறிப்பிட்டுள்ள புகாரியில் இடம் பெற்ற நீண்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலி(ரலி) அவர்கள் கூறியதை இஸ்லாத்தின் எதிரிகள் இப்படித் திரிக்கிறார்கள்.
//அவரது நன்பர்கள், அவரைத் தேற்றி, "ஆயிஷா இல்லாவிட்டால் என்ன, பெண்களுக்கா பஞ்சம்" என்று கூறினார்கள் என்றும்,//
இங்கும் நபி(ஸல்) அவர்களை பெண் பித்தராக சித்திரிக்க "ஆயிஷா இல்லாவிட்டால் என்ன, பெண்களுக்கா பஞ்சம்" என்று மாற்றார்கள் தமது கைச்சரக்கை சேர்த்து வரலாற்றைத் திரிக்க முயன்றிருக்கிறார்கள் இதுமட்டுமல்ல கீழ் காணும் திரிபும் அவர்களது கைவரிசையே.
//அப்போது பனி அல் முஸ்தாலிக் ஜாதியினருடன் சண்டையிட்டு, அவர்களது உடமைகளை கைப்பற்றி வெற்றிகொண்டபோது திடீரென மக்காநகர முஸ்லீம்களுக்கும் (முஹாஜிர்), மதீனா வாசிகளுக்கும் (அன்சாரிகள்) உரசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மதீனாவுக்கு திரும்பியவுடன் முஹாஜிர்கள் விரட்டப் படுவார்கள் என்று அன்சாரிகளுள் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதனை கேள்விப்பட்ட முகமது நபி அவர்கள், இந்தச் சூழலை தவிர்ப்பதற்காக இரவோடிரவாக மதீனாவுக்கு திரும்ப முடிவெடுத்தார்.//