இன்று நம் நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் டெங்கு நோயின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கின்றது. இதை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து எங்களால் உணரமுடிகின்றது.
டெங்கு காய்ச்சலானது வைரசினால் ஏற்படும் நுளம்பினால் பரப்பப்படும் நோயாகும். இது சிலவேளைகளில் உயிராபத்தையும் ஏற்படுத்தலாம். டெங்கு நோயின் தாக்கத்தின் அளவு குறையும் பொழுது எமக்கு இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வும் குறைவடைகின்றது. இச்சந்தர்ப்பத்திலேயே அதிகளவான டெங்கு நுளம்புகள் பரவி கூடுதலானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
டெங்கு நுளம்பு பரவாமல் தடுக்கும் முறைகள்.
டெங்கு வைரஸுக்கான தடுப்புமருந்து இன்னும் பாவனைக்கு வராததால் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதே இப்போது எமக்கு உள்ள ஒரே வழி. சாதாரணமாக எமது வீட்டிலும் விட்டுச் சூழலிலும் காணப்படும் நீர் தேங்கும் இடங்களிலேயே டெங்கு நுளம்பு பெருகுகின்றது.
எனவே நாம் செய்யக் கூடிய தடுப்பு முறைகளாவன.
1. வீட்டின் உள்ளே காணப்படும் நீர் சேர்த்து வைக்கக் கூடிய பாத்திரங்களை கவனமாக வைத்து பராமரித்தல் அல்லது நீரினை அடிக்கடி மாற்றி விடுதல். உதாரணமாக வீட்டினுள்ளே பூக்களை அழகுக்காக காட்சிப்படுத்தும் பாத்திரம்.
2. கூரையில் நீர் வழிந்தோட வைத்திருக்கும் பீலிகளில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுதல்.
3. வீட்டுச் சூழலில் நீர் தேங்கக்கூடிய இடங்களை மண்ணினால் நிரப்பி விடுதல்.
4. வீதியில் நீர் தேங்கும் இடங்களை சுத்தம் செய்தல்.
5. குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் நீர் வழிந்தோட இருக்கும் பாத்திரத்தில் அடிக்கடி நீரை மாற்றுதல்.
6. வெற்று காணிகளில் நீர் தேங்காதவாறு பராமரித்தல் அல்லது உரிமையாளருக்கு உடனடியாக தெரியப்படுத்துதல்.
7. கிணறுகளை நன்றாக நுளம்புகள் செல்லாதவாறு வலையினால் மூடி விடுதல்.
8. கிணற்றினுள் மீன்களை வளர்ப்பதன் மூலம் அவை நுளம்பின் குடம்பிகளை உட்கொள்ளும்.
9. உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரைகளுக்கு செவிமடுத்தல்.
இவ்வாறான சிறு மாற்றங்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யுமிடத்தில் எனது சூழலில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு நோய் தாக்கத்திலிருந்து எங்களையும் எங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கலாம்.
இவ்வாறான அறிவுரைகள் எமக்கு காலங்காலமாக கொடுக்கப்பட்டாலும் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்
• கடுமையான காய்ச்சல்
• தலைவலி
• வாந்தி
• வயிற்று வலி
• கைகால் உழைவு
• மூட்டு வலி
• கண்ணுக்கு பின்னால் ஏற்படும் வலி
காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகள் ஏற்படுமிடத்து உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்
• காய்ச்சல் முற்றாக விட்ட பின் உடல்நிலை மோசமடைந்தது காணப்படுதல்.
• நீராகாரத்தை அருந்த முடியாதவிடத்து.
• மிக அதிகமாக தாகம் ஏற்படும் பொழுது.
• மிக அதிகமாக வயிற்று வலி உள்ள போழுது.
• கைகால்கள் குளிர்வடையும் போழுது.
• உடம்பிலிருந்து குருதிப்போக்கு ஏற்படும் பொழுது.
• ஆறு மணித்தியாலத்திற்கு மேல் சிறுநீர் போகாத போழுது.
ஒருவருக்கு காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்படும் பொழுது செய்ய வேண்டியவை
• இயலுமான வரை ஓய்வெடுக்க வேண்டும்.
• காய்ச்சலுக்கு பனடோல் மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக NSAIDs (அஸ்பிரின், Brufen) எனப்படும் மருந்து வகைகளை பயன்படுத்தக்கூடாது. சிலவேளைகளில் வைத்தியர்களால் இந்த வகையான மருந்துகள் வழங்கப்பட்டால் அதை சற்று விளக்கமாக கேட்டறிந்து தவிர்த்து கொள்ளவும்.
• தேவையான அளவு நீராகாரத்தை குடித்தல் வேண்டும்.
• போதுமான அளவு சிறுநீர் போவதை உறுதி செய்ய வேண்டும்.
• கண்டிப்பாக காய்ச்சல் ஏற்பட்டு மூன்றாம் நாளில் வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்ப இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
எனவே இந்த ஆட்கொல்லி நோயிலிருந்து எம்மையும் எமது உறவுகளையும் பாதுகாப்போமாக!!!