Tuesday, 23 April 2024

காரைக்குடி,கோட்டையூரின் புத்தக பொக்கிஷ மனிதர் ரோஜா முத்தையா செட்டியார்!!

இன்று புத்தக தினத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மூலம் ஒரு லட்சம் புத்தகங்களை , பொக்கிஷம் போல போற்றிப் பாதுகாத்து வந்த ஒரு தனி மனிதரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


அந்த அபூர்வ மனிதரின் பெயர் ரோஜா முத்தையா செட்டியார். அவர் சிவகங்கை மாவட்டம் , நான் பிறந்த என் ஊர் காரைக்குடி கோட்டையூரில் பிறந்து [ 1926-1992 ]வாழ்ந்தவர்.தன்னுடைய நடுத்தர வயதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்களை சேர்த்து விட்டாராம் செட்டியார்..!

தனி ஒரு மனிதனாக , எப்படி இவற்றையெல்லாம் பாதுகாப்பது ...?


இந்த புத்தகங்கள் அனைத்தையும் தஞ்சை பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விடலாம்...அல்லது தமிழக அரசிடம் கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டார் செட்டியார்,அதற்கான முயற்சிகளை முழு மூச்சுடன் எடுத்தார்..!அடுத்த சில நாட்களில் , அதிகாரிகள் சிலர் வீடு தேடி வர, செட்டியாருக்கு அளவில்லா சந்தோஷம்.அப்பாடா என்று அரசு அதிகாரிகள் வந்து விட்டார்களே என ஆவலோடு வரவேற்றார், ஆனால் வந்தவர்கள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்கள்.

செட்டியார் பற்றி கேள்விப்பட்டு , தானாகவே முன் வந்த சிகாகோ பல்கலைகழகத்தினர் ,கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து செட்டியாரிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் அவர்களே எடுத்துக் கொள்ள தயாராக இருந்தார்கள்.

என் பொக்கிஷங்கள் இந்த தமிழ் நாட்டிற்கு மட்டுமே சொந்தம். ” என்று சொல்லி விட்டார்.என்றாவது ஒரு நாள் , தன் புத்தக பொக்கிஷங்களை தமிழக அரசு எடுத்துக் கொள்ளும் என்று தளராத நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருந்தாராம் முத்தையா செட்டியார் .

செட்டியார் , ஒரு புத்தகத்தை கையில் எடுக்கும்போது , அப்போதுதான் பிறந்த குழந்தையை எடுப்பதை விட , மென்மையாக எடுப்பாராம்... எந்த புத்தகத்தை யார் அவரிடம் கொடுத்தாலும் கோடி ரூபாய் பணத்தை கையில் வாங்குவது போல மகிழ்வோடு வாங்குவாராம்.

எல்லோரும் தாங்கள் உடுத்தியுள்ள வேட்டி அழுக்காகாமல்தான் பார்த்துக் கொள்வார்கள். ஆனால்....செட்டியார் தன் புத்தகத்தில் அழுக்கு இருந்தால்,

தான் உடுத்தியிருக்கும் பட்டு வேட்டியால் , புத்தகத்தில் இருக்கும் அழுக்கை மென்மையாகத் துடைப்பாராம்.

தான் வாழும் காலத்திலேயே , எல்லா புத்தகங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்து விட ஆசைப்பட்ட முத்தையா செட்டியார் எதிர்பாராமல் 4.6.1992 அன்று இறந்து போனார்.

அதன்பின் சிக்காகோ பல்கலைக்கழகம் மீண்டும் செட்டியாரின் குடும்பத்தை தொடர்பு கொண்டது...செட்டியாருடைய சேகரிப்புக்கள் அனைத்தையும் , நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டது...

அந்த நூல்கள் அனைத்தையும் அமெரிக்கா கொண்டு செல்லாமல் , செட்டியார் ஆசைப்பட்டபடியே , சென்னையிலேயே ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ என்ற பெயரில் 1994-ம் ஆண்டு தொடங்கி , இப்போதும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது சென்னை தரமணியில் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புத்தகம் வாசிப்பது சுகானுபவம். அதை அனுபவித்தவர்கள், ஒரு போதும் மாற மாட்டார்கள். மனதுக்கும் மிக நெருக்கமாக உள்ள புத்தகங்களை வாசிக்கும் போது தான் சிந்தனை பிறக்கிறது. அது செயலாக மாறுகிறது. புத்தக வாசிப்பை வளப்படுத்துங்கள்புத்தகங்கள் வாசிப்பது ஒரு அருமையான பழக்கம். அது நம் அறிவை மேன்படுத்த உதவும். மேன்படுத்துவது மட்டும் இல்லாமல், ஒருவரை பல கோணங்களில் புத்தக வாசிப்பு சிந்திக்க வைக்கும். பல நேரங்களின் உங்களுக்கு புத்தக வாசிப்பு கைகொடுக்கும். 

எனக்கு அவ்வாறு தான் என் முதல் நேர்முகத்தேர்வுக்கு கைகொடுத்தது.
எல்லா கேள்விகளும் கேட்டு முடித்த பிறகு, நேர்முக தேர்வாளர் நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகத்தின் பெயரை கூறுங்கள் என்றார். நான் அப்போது படித்த புத்தகத்தின் பெயரை கூறினேன்
(The Bad Beginning  - A Series of Unfortunate Events, #1 by Lemony Snicket) அதில் வரும் மூன்று தவறுகள் என்ன. அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டார்.

மூன்று தவறுகளைக் கூறி அதில் இருந்து கற்றுக்கொண்டதை கூறினேன். நேர்முக தேர்வாளரும் அந்த புத்தகத்தை படித்து இருப்பர் போல.அவருக்கு நான் கூறிய பதில் பிடித்து இருந்தது. ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்தி மறைமுகமா நீங்கள் Selected என்று வார்த்தைகள் இல்லாமல் கூறினார். புத்தகம் படிப்பது எவ்வளவு நல்லது என்று நான் உணர்ந்த தருணம் அது.


ஒரு வேலை நான் புத்தகம் படிக்காதவனாக இருந்து இருந்தால் நேர்முக தேர்வாளருக்கும் எனக்குமான தொடர்பு அன்றே முடிந்து இருக்கும். இருவரும் புத்தக வாசிப்பாளர்கள் என்பதினால் நாங்கள் இன்று வரை தொடர்பில் உள்ளோம். நான் அலுவகத்திற்கு சேர்ந்த பிறகு அவரை தேடி கண்டுபிடித்து இன்றளவும் தொடர்பில் உள்ளேன். உண்மையில் சொல்லப்போனால் காதலர்கள் இடையே இருக்கும் உறவை விட அற்புதமான உறவு இரண்டு புத்தகம் வசிப்பவர்கள் இடையே இருக்கும்.

புத்தகம் வாசியுங்கள். புத்தகம் வசிக்கும் நபர்களிடம் பேசுங்கள். அது ஒரு தனி உணர்வு. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உறவாக இருக்கும்.


இந்த புத்தக தினத்தில் புத்தகங்களை வாசிப்போம் என உறுதி எடுத்துக்கொண்டுஇன்றே தொடங்குங்கள்.

என்றும் என் வாழ்த்துக்களுடன்...

உங்கள் மு. அஜ்மல் கான்.