துருக்கி நாட்டில் எங்கே சென்றாலும் அங்குள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் சொல்லப்படக் கூடிய பாங்கின் இனிமையான ஓசை நிச்சயம் செவிக்கு விருந்தளிக்கும்.இது சாதாரண விஷயம் என்று எண்ணி விடக் கூடாது.இவ்வளவு இனிமையாக துருக்கி மக்கள் பாங்கு சொல்வதற்கு 500 வருட கால பாரம்பரியம் உள்ளது.இதற்கென்றே தனி மத்ரஸாக்கள் உள்ளது .தனி ஆசிரியர்கள் உள்ளார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு அல்ஜசீரா செய்தி நிறுவனம்."அல் அதான் (பாங்கு )- மக்களை சத்தியத்தை நோக்கி அழைக்கும் அழகிய குரல்கள் " என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.அந்த நிகழ்ச்சியில் துருக்கியிர்கள் பாங்கு சொல்வதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.அதெற்கென்றே பிரத்யேக இராகத்தை உருவாக்கியுள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் அல் உஸ்தாத் முஹம்மத் ஹாதி தவ்ரான் இஸ்தான்புலில் உள்ள "அஸ்ஸுல்தான் அஹ்மத்" என்ற மிகப்பெரிய மஸ்ஜிதின் முஅத்தின் (மோதினார்) கூறுகிறார்: உஸ்மானிய்யா பேரரசின் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் ஐந்து முஅத்தின்கள் நியமிக்கப்படுவார்கள்.இவ்வாறான முஅத்தின்கள் தங்களது குரல் வளத்திற்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள்.ஏன்?
சராசரியாக ஒரு மனிதன் தனது வாழ்வில் ஐந்து வகையான படித்தரங்களை கடக்கிறான்.அதேபோல ஒரு நாளில் ஐந்து வகையான பொழுதுகளை அவன் கடக்கிறான்.மனிதன் தினசரி கடக்கும் இந்த ஐந்து பொழுதுகளை நம் முன்னோர்கள் நன்கு புரிந்து வைத்தார்கள்.ஐந்து நேரங்களில் மனிதனது உணர்வுகள் ஒவ்வொரு நேரங்களிலும் மாறுபடும்.
காலை ஃபஜ்ரு நேரத்தில் இருக்கிற உணர்வு லுஹர் நேரத்தில் வேறு மாதிரி இருக்கும்.அதேபோல அஸர் , மஃரிப், இஷா ஆகிய ஒவ்வொரு நேரத்திலும் மனித உணர்வுகள் வேறுபட்டு கொண்டே இருக்கும்.இசைக்கும் மனித உணர்வுகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புள்ளது. கருவிகள் மூலம் இசைக்கப்பட கூடிய இசையை விட மனிதனின் தொண்டையிலிருந்து வெளிபடும் ஓசை மிகவும் நுட்பமானது.
இதனால் நம் முன்னோர்கள் ஐந்து நேரங்களில் பாங்கு கூறுவதற்கு
ஐந்து வகையான இராகங்களை உருவாக்கினர்.இதற்கு ஸபா, அஷாக், ரஸ்த், ஸீகா, ஹிஜாஸ் என்று பெயரிட்டனர்.ஐந்து வகை பாங்கின் இராகத்திற்கு ஏற்ப குரல் வளம் கொண்டவர்களை மட்டுமே அந்த அந்த நேரத்திற்கான தனித்தனி முஅத்தின்களாக நியமித்தனர்.
1) ஸபா : ஃபஜ்ரில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஸபா.அதிகாலை பொழுதில் உள்ளம் இன்னும் சிறிது நேரம் உறங்கலாம் என்று கூறும் தருணத்தில் சொல்லப்படும் பாங்கு அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக அப்படியே செவிகளுக்கு இதமாக மிருதுவான இராகத்தோடு சொல்லப்படும்.
2) அஷாக்: லுஹர் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் அஷாக். உச்சி பகல் நேரத்தில் மனிதன் தனது பணியில் தீவிரமாக ஈடுபடும் நேரம். இந்த நேரத்தில் அவனை பள்ளிக்கு வரவழைக்க சொல்லப்படும் பாங்கு உத்வேகம் கலந்த இராகத்தோடு சொல்லப்படும் .
3) ரஸ்த்: அஸர் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர்.ரஸ்த். பரபரப்பான பகல் பொழுது புறப்பட ஆயத்தமாகும் போது சிறிய ஓய்வு மனிதனை வருடும்.இந்த பாங்கோசை அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக சிறிய பரபரப்போடும் அதேநேரத்தில் சிறிது ஏக்கமும் கலந்த இராகத்தோடு சொல்லப்படும்.
4) ஸீகா: மஃரிப் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஸீகா. இது பகல் பொழுது விடைபெற்று இரவு மெல்ல படரத் துவங்கும் நேரம். சோர்வும் உடல் முழுக்க படரத் துவங்கும் நேரமும் இதுவே . இதனால் இந்த நேரத்தில் சொல்லப்படக் கூடிய இராகம் மனதினுள் ஊடுருவி சோர்வை மெதுவாக கலைத்து அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக இந்த இராகம் அமைந்திருக்கும்.
5) ஹிஜாஸ்: இஷா நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஹிஜாஸ்.ஒரு நாளுடைய முடிவு அடுத்த நாளுடைய உழைப்பிற்காக நீண்ட ஓய்வுக்கு தயாராகும் தருணம்.இந்த நேரம் என்பது அமைதியில் ஆழ்ந்து ஒரு மோன நிலைக்கு உள்ளம் செல்லும் நேரம்.எனவே
மயிலிறகை உடலில் மெல்ல வருடுவது போல உள்ளத்தை மெல்லிசையால் வருடி அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதத்தில் இந்த இராகம் அமைந்திருக்கும்.
இது புத்தகங்களின் பதிவு செய்யப்பட்ட கலையோ கல்வியோ அல்ல. செவி வழியாக தலைமுறை தலைமுறையாக பயணிக்கும் கல்வி.இந்த பாரம்பரியத்தை பாதுகாக்க துருக்கி அரசே இதனை எடுத்து நடத்தி வருகிறது.
நன்றி : மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment