பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமையையும், அரசியல் சட்டத்தையும் ஒரு சேர அவமதிப்பதற்கு எதிராக தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் வரவேண்டிய கோபம், அந்த சட்ட மீறலுக்கு எதிராக போராடுகிற கம்யூனிஸ்டுகளின் மீது ஏன் வருகிறது?
இடதுசாரி தலைவர்களை கைது செய்துள்ள தமிழக காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விசுவாசத்தை வெல்லும் வலிமை உழைக்கும் மக்களிடம் என்றும் உண்டு.
தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் அது தொடங்கப்பட்ட எண்பது ஆண்டுகளாக No Union Policy என்பதைத் தனது கொள்கையாக வைத்திருந்த நிறுவனம். 2020 ல் தான் முதன் முதலாக சாம்சங் தொழிலாளர்கள் யூனியன் வைத்துக்கொள்ளும் உரிமையைத் தென்கொரியாவில் வென்றெடுக்கிறார்கள்.
நாட்டின் GDP யில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு வலுவான பொருளியல் அடித்தளத்தைக் கொண்ட நிறுவனம் சாம்சங். அதனால் தென்கொரிய அரசாங்கத்தில் அவர்களது ஆதிக்கம் அதிகம். சாம்சங் அதிபர் மீது வரி ஏய்ப்பு உள்ளிட்ட கடுமையான புகார்கள் உண்டு. அதற்காக தண்டிக்கப்பட்டு பிறகு அரசு ஆதரவுடன் அங்கு விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென்கொரியா ஒரு முதலாளித்துவ நாடு என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக சாம்சங் நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் உலக அளவில் பிரசித்தி பெற்றவர்கள். அது மட்டுமல்ல கட்டுமானத்துறையிலும் அவர்கள் வலுவானவர்கள். தென்கொரிய பொருளாதாரத்துக்கு அவர்கள் ஆதாரமானவர்கள். இந்தப் பின்னணியில்தான் யூனியனுக்கு எதிரான அவர்களது நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால் இன்றைய சூழலில் அவர்களது ஏகபோக சுரண்டலுக்கு உலக அளவில் தொழிலாளர்கள் கடிவாளமிடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு இருபத்தைந்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் சாம்சங். நிறைய கிளை நிறுவனங்கள். 4.5% ஊதிய உயர்வை, நீண்ட போராட்டத்துக்குப் பின் பெற்றிருக்கிறது ஒரு கிளை நிறுவனத்தின் தொழிற்சங்கம். அதையொட்டி மற்ற நிறுவங்களில் இருக்கும் தொழிற்சங்கங்களும் ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள் போன்றவற்றிற்காகப் போராடுகின்றன. தென் கொரியாவின் தொழிலாளர் சட்டங்கள் வலுவற்றவை. ஹுண்டாயை ஒட்டி தமிழத்தில் தொண்ணூறுகளில் நடந்த உரையாடல்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
நீங்கள் ஷிப்ட் முடிந்து செல்லும்போது, உங்களது பெயர் நோடீஸ் போர்டில் தென்பட்டால் நீங்கள் பணியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டீர்கள் என்று அர்த்தம். எதிர்த்து கேள்வி கேட்கமுடியாது. அதேதான் சாம்சங்கிலும். பணிப் பாதுகாப்பு என்றெல்லாம் ஒன்றும்கிடையாது.
யூனியனே இல்லாமல் ஒரு நிறுவனம் எண்பது ஆண்டுகளாக நடக்கிறது என்றால் அதன் அத்துமீறல்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டில் போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு தென் கொரிய சாம்சங் தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இங்கும் கூட நலச்சங்கம் போன்ற ஒரு பொம்மை சங்கத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர் சட்டங்களை வளைக்கலாம் என்று சாம்சங் நினைக்கிறது. அந்த வழிமுறை நம் நாட்டில் நம் மாநிலத்தில் பல நிறுவனங்களில் உள்ளதுதான். CITU தொழிற்சங்கம், தீவிரமான போராட்டங்களுக்கும் அதன் வலுவான பேரம் பேசும் ஆற்றலுக்கும் பெயர் போன தொழிற்சங்கம். கம்யூனிஸ பின்புலத்தில் அதன் உபவிளைவுகளும் உண்டு. ஆனால் சுரண்டலையே வியாபாரப் பின்புலமாகக் கொண்ட சாம்சங் நிறுவனம், நாங்கள் வேறு எந்த தொழிற்சங்கத்தை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் CITU வை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள். அதனால்தான் மந்திரிகளும் பங்கு பெற்ற ஆறுகட்ட பேச்சுவார்தைக்குப் பின்னாலும் கூட உடன்பாடு எட்டவில்லை.
திமுக ஒன்றும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் வெற்றி பெற பண உதவி செய்யும் முதலாளித்துவ கட்சி அது. இந்த பேரத்திலும் கூட அது தனது முதலாளித்துவ பண்பையே காண்பிக்கிறது. CITU தொழிற்சங்கத்தை விடுத்து வேறு ஒரு நலச்சங்கத்தின் பின்னால் தொழிலாளர்கள் திரண்டு, நிறுவனத்துடன் ஒருவித சமரசத்தைக் கையாள வேண்டும் என்றே அது விரும்புகிறது. தொழிலாளர்களின் பிடிவாதத்தால் அது சீண்டப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் காவலர்களை வைத்து தொழிற்சங்கத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்வது, அவர்கள் போராடும் இடத்தில் வேயப்பட்ட பந்தலைப் பிரித்து எறிவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறது.
ஒரு வெளிப்படையான முதலாளித்துவ அரசாக, முதலீட்டை ஈர்ப்பதை இலக்காக வைத்து செயல்படும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் தொழிலாளர் பக்கம் நின்றால் அது முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு தவறான சமிக்ஞயை அளித்துவிடும் என்று அஞ்சுகிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு வலுவான ஆதரவு சமிக்ஞயைத் இந்த அரசாங்கம் தர விரும்புகிறது. இந்த அரசு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற CITU தொழிற்சங்கத் தலைவரின் குற்றச்சாட்டில் உண்மையுண்டு. கட்சி ஆதரவு இணையப் பொறுக்கிகள் களத்துக்கு வந்து பத்தாவது மட்டுமே படித்தவர்கள் இத்தனை சம்பளம் வாங்குகிறார்கள் போன்ற விவாதங்களைக் கிளப்புவது அதனால்தான்.
கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிசங்கு நிலையில் இருக்கின்றன. அவை வெளிப்படையாக தங்களது நிலைப்பாட்டை அறிவித்து தொழிலாளர்களுடன் நின்றிருக்க வேண்டும். வாக்கைக் குறிவைத்து, இந்த அரசின் மீது விமர்சனம் வைக்கிற அதிமுக போன்ற கட்சிகள் இதை ஒரு வாய்ப்பாக எண்ணுகின்றன. இதே திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், ஸ்டாலின் இந்நேரம் சேகுவாராவாக மாறி பூந்தமல்லியை கியூபாவாக மாற்றியிருப்பார். எடப்பாடிக்கு அந்த அளவுக்கு கூறு போதாது.
ஒரு குழப்பத்தைத் தீர்க்க நிறுவனங்கள் பெரும்பாலும் கையாளும் உத்தி - பிரித்தாள்வது. அதற்காகக் கோடிக் கணக்கில் கூடச் செலவு செய்யத் தயங்கமாட்டார்கள். சங்கம் அமைப்பதை மட்டும் ஏற்கமுடியாது என்பது நிறுவனங்களின் முக்கியக் கொள்கை. இன்று போராட்டம் நடத்துபவர்கள் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று சொன்னால் கலைந்துவிடுவார்கள். அவை உண்மையில் கொடுக்கப்படுகின்றனவா, நாளையே வேறு தேவை என்றால் என்ன செய்வது என்பதெல்லாம் அவர்கட்குத் தேவையில்லை. அதுதான் நிறுவனங்களுக்குத் தேவை.
மென்பொருள் நிறுவன ஊழியர்கட்கென்று சங்கம் அமைப்பதே பெரும்பாடாகி, இன்றும் அப்படி ஒன்று இருப்பதே அறியாதவர்கள் தான் இங்கே மிகுதி. அந்தச் சங்கம் நீதிமன்றத்தில் போராடிப் பெற்றுத்தந்த நன்மைகள் வெளியே தெரிவதில்லை. தெரியாதவாறும் பார்த்துக்கொள்ளப் படுகிறது.
சங்கங்களினால் ஏற்படும் தீமைகளை மறுப்பதற்கில்லை. ப்ரிகால் நிறுவனத்தில் உறவினர் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சொற்களில் விளக்கமுடியாது. அதற்காகச் சங்கங்களையே தூக்கியெறி என்று சொல்வது, இடவொதுக்கீட்டைச் சிலர் கேடாகப் பயன்படுத்துகின்றனர் என்று அதையே தூக்கியெறிய நினைப்பது.நந்திகிராமில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்த நாள்வரை கம்யூனிஸ்ட் அரசு மறுபடி ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.
எவன பாத்தாலும் தொழிலாளி அத பண்ணனும் இத பண்ணனும்னே சொல்லிட்டு இருக்கீங்களே யாராவது ஒருத்தன் யாரவது ஒருத்தன் அந்த நிறுவனத்த பாத்து எந்நாட்டு தொழிலாளிகளோட அடிப்படை உரிமைகளை பறிக்காதேனு பேட்டி கொடுக்கீறீங்களாய்யா ? இலவசத்துக் ஆசை பட்டால் உயிருக்கு உடமைக்கு மதிப்புக்கும் மரியாதைக்கு வருங்கால சந்ததியினர் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை தமிழக மக்கள் நீங்கள் யோசிக்க வேண்டும்!!