Friday, 13 January 2012

நுரையீரலை பாதுகாப்பது அவசியம்...

 

நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது.
காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.
நம் சுவாசத்தை சீராக வைத்திருக்கும் நுரையீரலில், நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் ஏற்படுகிறது. இத்துடன் பஞ்சு, குவாரி, சிமென்ட் உள்ளிட்ட தொழிலில் பணிபுரிவோருக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தாக்குகின்றன.
நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.
நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்
இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.
இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில், மருத்துவரை அணுகி சளி மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; எவ்வித நோய் தாக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடரவேண்டும்.
பனிக்காலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, குவாரி, சிமென்ட் உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது, முகத்துக்கு, “மாஸ்க்’ அணிந்து கொள்ள வேண்டும்.
சிகிச்சை முறைகள்
நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், ரிலீவர் மருந்தும், பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால், “கன்ட்ரோலர்’ மருந்தும் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும்; பரிசோதிக்கும் மருத்துவருக்குத்தான் நோயின் தன்மை மற்றும் அதன் தாக்கத்தின் அளவு தெரியும்.
குளிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில், 50 சதவீதம் பேர், சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளவே வருகின்றனர். சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் முக்கியமாக குளிர் மற்றும் பனி காலங்களில், சாதாரண அலர்ஜியான, சளி முதல் நிமோனியா காய்ச்சல் வரை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே நுரையீரல் பாதிப்புள்ளவர்களுக்கு, இக்காலங்களில் அந்நோயின் தன்மை தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.
அலர்ஜி என்பது ஒவ்வாமையாகும். இது ஒருவருக்கு பலவிதமாக வெளிப்படுகிறது. முக்கியமாக, இந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சுவாச குழாய் சம்பந்தமான பிரச்னை அதிகம் காணப்படுகிறது. குளிர்ந்த காற்று, தூசு ஆகியவற்றை சுவாசிக்கும்போது அவர்களுக்கு தும்மல், மூக்கில் நீர் வழிதல், கண்களில் அரிப்பு, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இது “அலர்ஜிக் ரைனைட்டிஸ்’ என்றழைக்கப்படுகிறது. இந்த பிரச்னைகளுக்கு, ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை தற்காலிகமாகவோ அல்லது நோயின் தன்மைக்கேற்ப தொடர்ச்சியாகவோ கொடுத்து, கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை மாத்திரைகள் மூலமோ அல்லது,”ஸ்பிரே’ மருந்து வகையிலோ மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பிரச்னை வரும்முன் காக்கும் வகையில், ஒவ்வொருவரும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள், “ஹெல்மெட்’ அணிந்து செல்வதன் மூலம், இந்நோயின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.
ஒவ்வாமையின் மற்றொரு வெளிப்பாடு காசநோய் மற்றும் ஆஸ்துமா. காசநோய் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் நோயின் தாக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது. இவர்களுக்கு, வறட்டு இருமல் (குறிப்பாக இரவில்), மூச்சிரைப்பு, நெஞ்சில் பாரம் போன்ற தொந்தரவுகள் அதிகம் காணப்படும்; குளிர்காலத்தில் காற்றில் நிலவும் வறண்ட ஈரப்பதம், வைரஸ் இன்பெக்ஷன்(புளூ காய்ச்சல்)போன்றவையே இதற்கு முக்கிய காரணம்.
ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குளிர்காலத்தில் நோயின் தன்மை தீவிரமாகும் முன்பே, மருத்துவரை அணுகி நோய் வராமல் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து, “இன்ஹேலர்’ பயன்படுத்த வேண்டும்.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்படி மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். காசநோய் தொற்றுநோய் என்பதால் இந்நோய் பாதிப்புக்குள்ளானோர் இருமல், தும்மல் வரும்போது துணியால் வாய் மற்றும் மூக்கு பகுதியை மறைத்துக் கொண்டால், அருகில் இருப்பவருக்கு பரவாமல் தடுக்கலாம்.
“இன்ஹேலர்’ எடுத்துக் கொள்வதில், மக்களிடையே தயக்கமும், சந்தேகமும் உள்ளது. முக்கியமாக, இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படுமோ அல்லது இந்த மருந்துக்கு அடிமையாகி விடுவோமோ என்ற அச்சமும் தயக்கமும் உள்ளது. “இன்ஹேலரால்’ எவ்வித பக்கவிளைவும் வராது.
நுரையீரல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் முதல் அனைத்து வயதுடையவர்களும் சர்க்கரை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குளிர்காலம் துவங்கும்முன்பே புளூ தடுப்பூசி எடுத்துக் கொண்டால், நிமோனியா என்ற நுரையீரல் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

- டாக்டர். எஸ்.கீர்த்திவாசன்,
நுரையீரல் சிகிச்சைத் துறைத் தலைவர்(பொறுப்பு),
கோவை அரசு மருத்துவமனை
.

No comments:

Post a Comment