Wednesday, 18 January 2012

நபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்கப்ட்டது ஏன்?

முஹம்மத் (ஸல்) அவர்களை அக்கால மக்கள் செய்த விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களைப் பொய்யர் குறிகாரர், இட்டுக் கட்டிக் கூறுபவர் என்றெல்லாம் விமர்சிக்கத் துணிந்துள்ளது கிறித்தவக் கூட்டம். “இன்னும் அவர்கள் உங்களைப் பொய்ப்பிப் பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாகப் பொய்ப்பித்தனர்” (3:54) என்ற வசனத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டி பெரிய ஆராய்ச்சி செய்து வெளியிட்டதாகப் புளங்காகிதம் அடைந்தனர். தங்களுக்கு அனுப்பப்பட்ட எல்லாத் தூதர்களுமே சமகால மக்களால் பொய்ப்பிக்கப் பட்டனர் என்ற அடிப்படையை மறந்ததுடன் இதன் மூலம் இறைவனுக்கு மகனாக இவர்கள் நம்பியிருக்கும் இயேசுவைக் குறித்தும் இவ்வாறு கூற முடியும் (நாம் ஒருபோதும் அவ்வாறு கூறமாட்டோம்) என்பதையும் அறியாமல் தங்கள் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டியுள்ளார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களை அக்கால மக்கள் பொய்யர், பைத்தியக் காரர், குறிகாரர், சூனியக் காரர் என்றெல்லாம் அழைக்கக் காரணம் என்ன? உண்மையில் அம் மக்கள் கூறியது போன்ற தன்மை முஹம்மத் (ஸல்) அவர்களிடம் இருந்ததால் தான் மக்கள் அவ்வாறு அழைத்தார்களா? அவ்வாறெனில் என்னென்ன தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இவ்வாறு கூறினர்? அந்த தன்மைகளின் அடிப்படையில் அம்மக்களின் கூற்று சரியா? என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் நாற்பது வயது வரை உண்மையாளர் என்றும் நம்பிக்கையாளர் என்றும் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட நபராக இருந்தனர். நீண்ட இக்கால கட்டத்தில் ஒருவரும் அவர்களைக் குறித்து மேற்படி விமர்சனங்களை முன்வைக்கவில்லை. மாறாக நபிப் பட்டம் கிடைத்த பின்னர் மேற்படி விமர்சனங்கள் அவர்களைக் குறித்துக் கூறப்பட்டன.
உண்மையில் அவர்களுக்கு பைத்தியத்தினுடையவோ சூனியத்தினுடையவோ ஏதேனும் அம்சம் இருந்ததால் தான் அவர்கள் அவ்வாறு கூறினார்களா? இல்லை. மாறாக அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியதெல்லாம் குர்ஆனும் அது கூறும் கொள்கையும் தான். அவர்கள் இதுநாள் வரை கடைபிடித்து வந்த கொள்கைகள் தவறு என்று குர்ஆன் கூறியது. வல்லமை மிக்க அல்லாஹ்வின் உயர்ந்த பண்புகள், மரணத்துக்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப் படுதல், நரகம் குறித்த எச்சரிக்கை, சுவனம் குறித்த நன்மாராயம் இவை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வசனங்களாக இறங்கியது. அதனை மக்களிடம் ஓதிக் காட்டினார்கள். அது தான் பிரச்சினை. அவை தங்கள் பாரம்பரியக் கொள்கைக்கு எதிரானதாக அவர்கள் கருதினர். மக்களெல்லாம் குர்ஆனால் கவரப்பட்டு முஹம்மத் (ஸல்) அவர்களிடம் விரைந்தனர். இது மக்காவின் பிரமுகர்களை ஆத்திரமடையச் செய்தது. குறைஷிப் பிரமுகர்களில் ஒருவனான அபூஜஹல் நபி (ஸல்) அவர்களிடம் “முஹம்மதே! நாங்கள் உம்மைப் பொய்ப்பிக்கவில்லை நீ கொண்டு வந்த மார்க்கத்தைத் தான் பொய்ப்பிக்கின்றோம்” என்று கூறி வந்தான். (ஆதாரம் – திர்மிதீ) என்ற செய்தியும் “(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உம்மை பொய்யரென) கூறுவது உமக்கு கவலையளிக்கிறது என்பதை திட்டமாக நாம் அறிவோம். (ஆனால்) நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை. எனினும், அந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களைத் தான் மறுக்கின்றனர்” (6:33) என்ற வசனமும் இதைத்தான் உறுதிப் படுத்துகிறது.

முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறித்து மக்கா மக்களிடம் என்னதான் விமர்சனங்களை வைத்த பின்னரும் எடுபடவில்லை. மக்கள் அவர்களை நோக்கிச் செல்வதைத் தடுக்க இயலவில்லை. இந்நேரத்தில் ஹஜ்ஜுடைய காலகட்டம் வந்தது. வெளியூர் மக்கள் ஹஜ்ஜுக்கு வருவார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் அழைப்பினால் கவரப்பட்டு அம்மக்கள் கூட்டம் கூட்டமாக மாறிவிடக் கூடும் என்று காரணத்தால் அவர்களைக் குறித்து என்ன கூறுவது என்று குறைஷிப் பிரமுகர்கள் கூடி ஆலோசித்து முடிவு செய்த சம்பவமும் இயல்பாகவே அவர்கள் அத்தகைய குணம் உடையவராக இருக்கவில்லை, மாறாக அவர்களின் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக இட்டுக்கட்டிக் கூறப் பட்டது என்பதற்கான வலுவான சான்றாக உள்ளது. இது குறித்து ரஹீக் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு செய்தி.
பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர் முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன் ''இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள். இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை பொய்யராக்கிக் கொள்வீர்கள்'' என்று கூறினான். அம்மக்கள் ''நீயே ஓர் ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்'' என்றனர். அவன் ''இல்லை! நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்'' என்றான்.

குறைஷியர்கள்: அவரை (முஹம்மதை) ஜோசியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: ''இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோதிடர் அல்லர். ஏனெனில் நாம் ஜோதிடர் பலரைக் கண்டிருக்கிறோம். ஆனால் இவரது பேச்சு ஜோதிடனின் உளறல்களாகவோ பேச்சுகளாகவோ இல்லை.''

குறைஷியர்கள்: அவரைப் பைத்தியக்காரர் என்று கூறலாமா?


வலீத்: அவர் பைத்தியக்காரர் அல்லர். ஏனெனில், பைத்தியக்காரன் எப்படியிருப்பான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரிடம் பைத்தியத்தின் எந்த அடையாளமும் இல்லை.

குறைஷியர்கள்: அவரைக் கவிஞர் எனக் கூறலாமா?

வலீத்: அவர் கவிஞரல்ல. ஏனெனில், நமக்கு கவியின் அனைத்து வகைகளும் தெரியும். ஆனால் அவரது பேச்சு கவியாக இல்லை.

குறைஷியர்கள்: அவரை சூனியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: நாம் சூனியக்காரர்களையும் அவர்களது சூனியத்தையும் நன்கறிந்திருக்கிறோம். ஆனால் அவரது பேச்சு சூனியக்காரர்களின் ஊதுதலாகவோ முடிச்சுகளாகவோ நமக்குத் தோன்றவில்லை.

குறைஷியர்கள்: பின்னர் நாம் எதைத்தான் கூறுவது?

வலீத்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரது பேச்சில் ஒரு தனித்துவமான இனிமையும் மிகுந்த கவர்ச்சியும் இருக்கிறது. அதன் தொடக்கம் பழக்குலையாகவும் அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது. நீங்கள் முன்பு கூறியதில் எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு வந்து அதன்மூலம் தந்தை-மகன், கணவன்-மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறார் என்றே கூறுங்கள் என்று வலீத் கூறினான். அதை ஏற்று மக்கள் திருப்தியுடன் கலைந்தனர். (இப்னு ஹிஷாம்)

குறைஷியர்கள் வலீதிடம் பிரச்சனையற்ற ஒரு நல்ல ஆலோசனையைத் தங்களுக்கு கூறும்படி கேட்க அதற்கு வலீத் ''அது குறித்து சிந்திக்க எனக்கு அவகாசமளியுங்கள்'' என்று கூறி மிக நீண்ட நேரம் யோசித்தபின் மேற்கண்ட தனது கருத்தைக் கூறினான் என சில அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலீதின் இச்செயல் குறித்து அல்முத்தஸ்ஸிர் என்ற அத்தியாயத்தில் 11 முதல் 26 வரையிலான 16 வசனங்களை அல்லாஹ் இறக்கி வைத்து அவ்வசனங்களுக்கிடையில் அவன் யோசித்த விதங்களைப் பற்றி அல்லாஹ் மிக அழகாகக் குறிப்பிடுகிறான்.

நிச்சயமாக அவன் (இந்தக் குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான். அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! பின்னும் அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! (ஒன்றுமில்லை.) பின்னும் (அதனைப் பற்றிக்) கவனித்தான். பின்னர் (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான். பின்னர் புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான். ஆகவே ''இது மயக்கக்கூடிய சூனியமேயன்றி வேறில்லை'' என்றும், ''இது மனிதர்களுடைய சொல்லேயன்றி வேறில்லை'' என்றும் கூறினான். (அல்குர்ஆன் 74:18-25)

இந்த முடிவுக்கு சபையினர் உடன்பட்டதும் அதை நிறைவேற்றத் தயாரானார்கள். மக்கள் ஹஜ்ஜுக்கு வரும் வழிகளில் அமர்ந்து கொண்டு தங்களைக் கடந்து செல்பவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி எச்சரித்து தாங்கள் முடிவு செய்திருந்ததைக் கூறினார்கள்.

ஆனால், அதை இலட்சியம் செய்யாத நபி (ஸல்) ஹாஜிகளின் தங்குமிடங்களிலும் பிரபலமான உக்காள், மஜன்னா, துல்மஜாஸ் ஆகிய சந்தைகளிலும் மக்களைத் தேடிச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அபூலஹப் நின்றுகொண்டு ''இவர் சொல்வதை ஏற்காதீர்கள். நிச்சயமாக இவர் மதம் மாறியவர்; பொய்யர்'' என்று கூறினான்.

இவர்களின் இவ்வாறான செயல்கள் அரபியர்களிடம் மென்மேலும் இஸ்லாம் பரவக் காரணமாக அமைந்தன. ஹஜ்ஜை முடித்துச் சென்ற அரபியர்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் எடுத்துரைத்த இஸ்லாமையும் தங்களது நாடுகளில் எடுத்துரைத்தார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் பிரச்சாரத்தால் இஸ்லாம் வளாந்து வருவதைத் தடுக்க குறைஷிகள் இட்டுக் கட்டுக் கூறியதே அவர்களைக் குறித்த மேற்படி விமர்சனங்கள் என்பது வலீத் பின் முகீராவுக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கும் நடந்த இந்த உரையாடலின் மூலம் என்ன தெரிய வருகிறதல்லவா? இது போன்ற ஏராளம் செய்திகள் இது குறித்து உள்ளன. வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் அதனைக் குறிப்பிடுவோம்.

நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் களங்கம் கற்பிக்க முயன்ற கிறித்தவர்களுக்கு ஆதாரம் என்று கிடைத்த செய்திகள் அவர்களின் வாதத்துக்கே எதிராக உள்ளது.

Source url : http://www.islamkalvi.com/portal/?p=1085

No comments:

Post a Comment