Tuesday 10 January 2012

மூட நம்பிக்கை.....



அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

அல்லாஹ் கூறுகிறான்: -

“முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 4:135)

நமது சமுதாயத்தில் நடைபெறும் சடங்கு சம்பிரதாயங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவைகளாவன: -


  1. ஒவ்வொரு பகுதியிலும் அவர்களது கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு நடைபெறும் பழக்கவழக்கங்கள்.

  2. நம்பிக்கை அடிப்படையிலான மூடபழக்கவழக்கங்கள்.

இந்த இரண்டு வகை சடங்கு சம்பிரதாயங்களில் முதலாவதான ஒருவர் வசிக்கின்ற பகுதியில் உள்ள மக்களின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு நடைபெறும் பழக்கவழக்கங்கள், குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கு மாற்றமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அவைகளைப் பின்பற்றுவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அவைகள் குர்ஆன் மற்றும் நபிவழிக்கு மாற்றமானவைகளாக இருந்தால் அவைகளை முற்றிலும் புறக்கணித்தாக வேண்டும்.

நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த அந்த இரண்டாவது வகை மூடப்பழக்கவழக்கங்களை அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைக் கொண்ட ஒருவர் கண்டிப்பாக பின்பற்றக் கூடாது. மேலும் அவர், அந்த நிகழ்ச்சிகளில் தாம் பங்குபெறுவதை தவிர்ப்பதோடு அதை தடுத்து நிறுத்துவதற்கும் பெரு முயற்சி எடுக்கவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வகை மூடப்பழக்கவழக்கங்களுக்கு உதாரணமாக சிலவற்றைக் கூறலாம்.

திருமணத்தின் போது நடைபெறுகின்ற மூட பழக்கவழக்கங்கள்:-



  • பாக்கு, வெற்றிலை, தேங்காய், மஞ்சள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைக் கண்ணியப்படுத்தி ஒவ்வொரு திருமண சடங்குகளிலும் அவற்றை முன்னிலைப்படுத்துவது.


  • மாற்று மதத்தவர்களின் பழக்கமான ‘தாலி கட்டுதல்’. திருமணத்தின் போது இந்த தாலியை மணமகன் வீட்டிலிருந்து மணமகள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்ற போது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு மாற்றமான எண்ணிலடங்கா சகுனங்களை பார்ப்பது.


  • மணமகன் முதன் முறையாக மணப்பெண் வீட்டிற்கு செல்லும் போது நடைபெறுகின்ற அநாச்சாரங்கள். உதாரணங்கள் : ஆட்டுத்தலை, மஞ்சள் தண்ணீர், மிளகாய் போன்றவற்றை வைத்து ஆரத்தி எடுத்தல்.
  • ஒருவரின் மரணத்தின் போது நடைபெறுகின்ற மூடபழக்கவழக்கங்கள்: -

    • ஒருவர் சனிக்கிழமையன்று இறந்துவிட்டால் ‘சனி போனால் தனியாக போகாது’ என்று அந்த ஜனாஸாவுடன் கோழி போன்றவற்றை அனுப்புவது.

    • இறந்தவருக்கு நன்மை சேர்க்கிறோம் என்ற பெயரில் ஆடல், பாடலுடன் கூடிய ஹல்கா, ராத்தீபு போன்ற ஷிர்க் நிறைந்த செயல்களை செய்வது.
    • மாற்று மதத்தவர்கள் இறந்தவரின் 8, 16 ஆம் நாள் செய்கின்ற திவசங்களைப் போல் பித்அத்தான 3, 7, 40 ஆம் நாள் ஃபாத்திஹா ஓதுதல்

    புதிய வீடு கட்டும் போது அல்லது குடிபுகும் போது நடைபெறும் மூடப்பழக்கங்கள்: -


    • புது மனை முகூர்த்தம் என்ற பெயரில் மாற்றுமதத்தவர்களின் பூஜை புனஸ்காரங்களை தம் வீட்டு மனையில் செய்வது

    • புதிய வீடு கட்டி முடித்தவுடன் வீட்டில் இருக்கும் துஷ்ட தேவைகளை, ஜின்களை விரட்டுவதற்காக அவற்றுக்கு ஆடு, மாடு அல்லது கோழி போன்றவற்றை காவு கொடுத்து அதன் இரத்தத்தை வீட்டில் தெளிப்பது.

    •  வீடு கட்டி குடியேறும் சிலர் அல்லது புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபுகும் சிலர் கடைபிடித்து வரும் சில சம்பிரதாயங்கள் குறித்து.
      .
          பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாலானவர்களால் மௌலீது ஓதப்படுகிறது. இது நபி (ஸல்) அவர்கள் நடை முறைப்படுத்தாத ஒரு செயலாகும்.
      ரஸுல் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து ஒரு பள்ளியையும், அத்துடன் ஒரு வீட்டையும் நிர்மாணித்தார்கள். அவ்வீட்டில் குடிபுக எந்த மௌலீதும் ஓதப்பட வில்லை.
          ஏனெனில் மௌலீது என்பதே ஏறத்தாழ 400 வருடங்களுக்கு முன் சில விஷமிகளால் உருவாக்கப்பட்டு இஸ்லாத்தில் புகுத்தப்பட்டது தான்.
          ரஸுல் (ஸல்) அவர்கள் செய்ததும், பிறர் செய்ததை அங்கீகரித்ததும், செய்யும்படி கட்டளை இட்டதும் மட்டுமே மார்க்கமாகும். இவற்றிற்கு மட்டுமே மறுமையில் கூலி உண்டு. இவையல்லாத மற்றவை மறுமையில் வெறும் பதர்களாக நிராகரிக்கப்பட்டு விடும். இது குறித்து நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை பின்வருமாறு:
          'நாம் சொல்லாத செய்யாத ஒன்றை எவர் செய்தாலும் அது நிராகரிக்கப்படும்' நபிமொழி.
          இந் நபிமொழியின் படி குடிபுகுமுன் ஓதப்படும் மௌலீது நிச்சயமாக மறுமையில் நிராகரிக்கப்படும். தவிர இதன் மூலம் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்.
          நமக்கு பயனளிக்காத, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நேரத்தையும் பொருளாதாரத்தையும் விரயம் செய்து, செய்து முடிக்க நாடுவது அறிவுடமையாகாது

    இது போன்ற இன்னும் ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் கூடிய சடங்கு சம்பிரதாயங்கள் அல்-குர்ஆன் மற்றும் ஆதாரமான ஹீஸ்களின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரான செயல்களாகையால் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு உண்மையான முஃமின் இவற்றிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். ஷிர்க் மற்றும் பித்அத் நிறைந்த இத்தகையை செயல்களைச் செய்யக் கூடியவர்கள் நமக்கு எத்தகைய நெருக்கமான உறவினர்களாக இருந்தாலும், ஏன் நமது பெற்றோர்கள், சகோதர சகோதரிகளாக இருந்தாலும் அதில் நாம் பங்குபெறுவது என்பது நாமும் அத்தகைய மாபாதக செயல்களைச் செய்வதற்கு உடந்தையாக இருந்தவர் போலாவோம். (அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்).

    அல்லாஹ் கூறுகிறான்: -

    “ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

    (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 9:23-24)

    எனவே நமக்கு இதுதான் சத்தியம் என்று தெரிந்த பிறகும் உறவினர்கள் நம்மைப் பற்றி தவறாக நினைத்துக் கொள்வார்களே என்று அவர்களுக்கு பயந்து நாம் அந்த மூடத்தனமான செயல்களில் கலந்துக் கொண்டால் இறைவனின் கட்டளைகளை விட மக்களின் கவுரவத்திற்கு முன்னுரிமை கொடுத்த குற்றம் சேரும். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்.

    இவ்வாறு ஈமானை பாழாக்குகின்ற மூட நம்பிக்கைகளுடன் கூடிய செயல்களைச் செய்பவர்களுடன் இருந்துக் கொண்டு நாம் ஒன்றுமே பேசாமல் வாய்மூடி மௌனமாக இருந்து அமைதி காத்து அவர்களின் அனைத்து மூடபழக்கவழக்கங்களிலும் கலந்துக் கொண்டு அவர்களுக்கு துணை போவதைவிட அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் என்ற உறுதியோடு அவனுக்கு யாதொரு இணை வைக்காமலும் அறிவீனர்களின் மூடப்பழக்கவழக்கங்களில் கலந்துக் கொள்ளாதது மட்டுமல்லாமல் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு பாடுபடும் முஸ்லிம்களோடு கைகோர்த்துக் கொண்டு அந்த அநாச்சாரங்களை ஒழிப்பதற்கு துணைபோது மேலானது அல்லவா?


    அல்லாஹ் கூறுகிறான்: -

    “(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது,

    ‘நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?’ என்று கேட்பார்கள்.

    (அதற்கவர்கள்) ‘நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்’ என்று கூறுவார்கள்.

    அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?’ என (மலக்குகள்) கேட்பார்கள்;

    எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர – ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்” (அல்-குர்ஆன் 4:97-98)

    அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment