Sunday 8 January 2012

பிர்அவுன்-எகிப்தில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வரும் உடல்....

எகிப்தில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வரும் உடல்'உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்' என்று கூறினோம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.

குர்ஆன் 10 : 92

எகிப்து நாட்டில் பிர்அவுன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.தனது தேசத்தின் சிறுபான்மையினமான யாகூப் நபியின் வழித் தோன்றல்களான இஸ்ரவேலர்களை கொத்தடிமைகளை விடக் கேவலமாக நடத்தி வந்தான். அவர்களுக்குப் பிறக்கும் ஆண் வாரிசுகளையெல்லாம் தயவு தாட்சண்யம் இன்றி இனப் படுகொலை செய்து கொண்டிருந்த காலக் கட்டம் அது.

அந்தக் காலகட்டத்தில்தான் மோஸே(மூசா) பிறக்கிறார். இறைவனின் உத்தரவுப்படி பாதுகாப்பான ஒரு பெட்டியில் வைத்து நைல் நதியில் விடப் பட்ட அந்தக் குழந்தையை பிர்அவுனின் குடும்ப த்தைச் சேர்ந்த ஒருவர் கண்டெடுத்து நேராக பிர்அவுனிடம் கொண்டு செல்லவும் உடனடியாக அந்தக் குழந்தையைக் கொன்று போடுமாறு கர்ஜித்தான் பிர்அவுன்.

ஆனால் பிர்அவுனின் மனைவி ஆசியா அந்தக் குழந்தையின் மீது மிகவும் பரிவு காட்டினார். தன் கணவனிடம் 'என் கண்களுக்கும் உங்கள் கண்களுக்கும் குளிர்சிசியாக இருக்கக் கூடிய இக் குழந்தையைக் கொன்றுவிடாதீர்கள்.இதை நம்முடைய குழந்தையாகவே நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம், அல்லது ஏதாவது ஒரு வகையில் வருங்காலத்தில் இக் குழந்தை நமக்குப் பயன் படலாம்.' என்ற கோரிக்கையை வைத்தார்.

மனைவியின் ஆசையைத் தட்டிக் கழிக்க முடியாத பிர்அவுன் ஆசியாவைப் பார்த்து இப்படிக் கூறினான்.'இந்தக் குழந்தை உன் கண்ணுக்கு மட்டுமே குளிர்ச்சியாக இருக்கட்டும்.இந்தக் குழந்தையின் மூலம் கண்குளிர்ச்சி கிடைத்திடும் என்றால் அது எனக்கு வேண்டவே வேண்டாம்.'

இவ்வாறு ஆசியா அவர்கள் தன் சொந்த மகனைப் போல் மூசாவை வளர்க்க ஆரம்பித்தார்கள்.வருடங்கள் விரைந்து உருண்டோடின. காலத்தின் கோலங்களும் வேகமாக உருமாறிக் கொணடிருந்தன.இறைவன் மூசாவை தன்னுடைய தூதராக தெரிவு செய்து கொண்டான். மேலும் மூசாவின் வேண்டுகோளுக்கினங்க அவரின் அண்ணன் ஹாரூனையும் இறைவன் தூதராக்கினான்.

அண்ணனும் தம்பியுமான இவ்விரண்டு இறைத்தூதர்களும் பிர்அவுனிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர். ஒரே இறைவனை வணங்குமாறும் போதித்தனர். அதற்கு பிர்அவுன் 'நான்தான் எகிப்து வாழ் மக்களின் ரட்சகன்.நைல் நதி கூட என் கட்டளைப் படிதான் ஓடுகிறது. விரும்பினால் தண்ணீரை திறந்து விடுவேன். விரும்பாவிட்டால் தண்ணீரை மூடி விடுவேன்.அப்படியானால் நான்தானே இறைவன்' என்று உளறினான்.

அடுத்து சூன்யக்காரர்களோடு மூசாவை போட்டியிட சொன்னான். அந்த போட்டியில் மூசாவே வெற்றி பெறுகிறார். இவரிடம் உண்மை இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட சூன்யக் காரர்கள் மூசாவின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிறார்கள். 'என் அனுமதி இன்றி மூசாவின் மார்க்கத்தை நீங்கள் எப்படி ஏற்கலாம்?' என்ற பிர்அவுன் அவர்களை கழுவிலேற்றியும் மாறு கால் மாறு கை வாங்கியும் அந்த சூன்யக் காரர்களை இறை நேசர்களாக்கினான்.

இந்த சூன்யக் காரர்களின் நெஞ்சுறுதியை கண்டு வியந்து போன பிர்அவுனின் மனைவி ஆசியாவும் இஸ்லாத்தை ஏற்கிறார். 'உண்மை மூசாவிடம் இருக்கிறது. நீ சொல்வது அனைத்தும் பொய்' என்று பிர்அவுனிடமே ஆசியா அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்.தன் மனைவியே தனக்கு எதிரானதைக் கண்டு மிகவும் கோபமுற்ற பிர்அவுன் ஆசியாவை மிகவும் துன்பப் படுத்துகிறான்.'இறைவா! இந்த அக்கிரமக்கார பிர்அவுனிடமிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தார். அவர் செய்த பிரார்த்தனையை இறைவன் குர்ஆனிலேயே சொல்லிக் காட்டுகிறான்.

'என் இறைவா! எனக்கொரு வீட்டை சொர்க்கத்தில் எழுப்புவாயாக!பிர்அவுனிடமிருந்தும் அவனது சித்ரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக!அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக' என்று பிர்அவுனின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

குர்ஆன் 66 : 11

மன்னரின் மனைவி என்ற அந்தஸ்து போகிறது. போவதுமில்லாமல் கொடுமை வேறு நடக்கிறது. சிறு குழந்தைகளையே கொன்றொழித்தவன் தன் மனைவியை எந்த அளவு கொடுமை படுத்தியிருப்பான் என்று விவரிக்கத் தேவையில்லை. அத்தனையும் இழந்து 'என் இறைவனே போதுமானவன்' என்று உறுதியுடன் இருக்கிறார். இந்த உறுதியை பார்த்த இறைவன் முஸ்லிம்களுக்கு உதாரணமாக அந்த பெண்மணியை தேர்வு செய்கிறான்.

அதோடு மூசா நபிக்கும் மிகவும் தொல்லைக் கொடுக்கிறான். இந்த கொடுமைகளைக் கண்டு பொறுக்காத மூசாவும் ஹாரூனும் 'பிர்அவுனின் கொடுமைகளுக்குத் தக்க தண்டனை கொடுப்பாயாக' என்று இறைவனிடம் பிரார்த்தித்தனர்.

'ஃபிர்அவுன் தங்களைத் துன்புறுத்துவான் என அவனுக்கும் அவனது சபையோருக்கும் பயந்ததால் அவரது சமுதாயத்தில் சிறு பகுதியினரைத் தவிர மற்றவர்கள் மூஸாவை நம்பவில்லை. ஏனெனில் ஃபிர்அவுன் அப்பூமியில் வலிமையுள்ளவன். வரம்பு மீறுபவன்.' - குர்ஆன் 10 :83

மேற்கண்ட வசனத்தின் மூலம் மோசே (மூஸா) யைப் பின்பற்றியவர்கள் சொற்பமானவர்கள் என்று அறிய முடிகிறது.

'எங்கள் இறைவா! ஃபிர்அவுனுக்கும் அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் அளித்திருக்கிறாய்.எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே இது பயன் படுகிறது. அவர்களின் செல்வங்களை அழித்து அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கைக் கொள்ள மாட்டார்கள்.' என்று மூஸா கூறினார். - குர்ஆன் 10 :88

இந்த இருவரின் பிரார்த்தனையையும் ஏற்றுக் கொண்ட இறைவன் மூஸாவையும் அவரை பின் பற்றியவர்களையும் கடலை நோக்கி செல்லுமாறு கட்டளை இடுகிறான். இறைவனின் சக்தியால் கடல் பிளக்கப் பட்டு வழி உண்டாகிறது. இதைத்தான் 'டென் கம்மேண்ட்ஸ்' என்ற ஆங்கில திரைப் படத்தில் பார்த்தோம்.கடலில் தென்பட்ட வழியில் மூஸாவும் அவரைப் பின் பற்றியவர்களும் தப்புகிறார்கள். முஸ்லிம்களைக் கொல்வதற்காக ஃபிர்அவுனும் அவனது பட்டாளமும் கடலில் தென் பட்ட வழியில் நுழைகிறார்கள்.

'இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம்.ஃபிர்அவுனும் அவனது படையினரும் அக்கிரமமாகவும் அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது 'இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாரும் இல்லை என நம்புகிறேன்: நான் முஸ்லிம்' என்று கூறினான்.' -குர்ஆன் 10 :91

மூஸாவைப் பின் தொடர்ந்த ஃபிர்அவுன் கடலில் மூழ்கடிக்கப் படுகிறான்.கடலில் மூழ்கும் நிலையில் 'நான் முஸ்லிமாகிறேன்' என்று ஓலமிட்டான். இறக்கும் தருவாயில் நம்பிக்கைக் கொண்டால் அதை இறைவன் ஏற்க மாட்டான் என்று பின் வரும் வசனம் விளக்குகிறது.

'இப்போது தானா நம்புவாய்? குழப்பம் செய்பவனாக இருந்தாய் : இதற்கு முன் பாவம் செய்தாய்:

-குர்ஆன் 10 :92

'உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் என்று கூறினோம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.' -குர்ஆன் 10 :92

அநியாயக்காரர்களின் முடிவு இவ்வாறுதான் இருக்கும் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காக ஃபிர்அவுனின் உடலை பாதுகாப்பேன் என்று இறைவன் கூறுகிறான். அப்படியானால் அந்த உடல் எங்கே?

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நைல் ஆற்றங்கரையின் ஓரத்தில் லுக்ஸார் என்ற அழகிய சிற்றூர். இந்த லுக்ஸாரில் 'அரசர்களின் ஓடை' என்ற பெயரில் ஒரு பள்ளத் தாக்கு இருக்கிறது. அங்குள்ள தீபிஸ் என்ற பகுதியில் 1898 ஆம் ஆண்டு மம்மீஸ் (சடலங்கள்) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த லோனேட் என்ற ஓர் அறிவியல் ஆய்வாளர் அங்கிருந்து ஒரு சடலத்தை கண்டெடுத்தார்.அது உடனடியாக கெய்ரோவிலுள்ள ராயல் மியூஸியத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப் பட்டது.

அந்த சடலம் கண்டெடுக்கப் பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. இப்போது அந்த சடலம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் எகிப்திய அரசப் பரம்பரையில் வந்த யாரோ ஒரு பாரோ மன்னனின் சடலம்தான் அது எனவும் இன்றைய அராய்ச்சியாளர்கள் அனைவருமே பெரும்பாலும் ஒத்துக் கொண்டு விட்டனர்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள உலகப் புகழ் பெற்ற ராயல் மியூஸியத்தில் பார்வையாளர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த பழம் பெரும் சடலம் குர்ஆன் கூறும் ஃபிர்அவுனின் உடலே! முகமது நபியின் காலத்திலேயே இந்த உடல் வெளிப் பட்டிருக்குமானால் யுக முடிவு நாள் வரை அந்த உடலை பாதுகாக்கும் வசதி அந்த மக்களிடத்தில் இல்லை, உடலும் அழுகிப் போய் விடும். எனவே தான் விஞ்ஞானம் வளர்ந்த இந்நாளில் இறைவன் அந்த உடலை வெளிப்படுத்துகிறான். எகிப்து சென்றவர்கள் அந்த உடலை நேரிலேயே பார்க்கலாம். 'குர்ஆன் கூறும் அத்தாட்சிகள்' என்ற சிடி யிலும் நாம் பார்த்திருக்கலாம்.

குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

No comments:

Post a Comment