Wednesday 11 January 2012

வடிவியல் கணித மேதை..

மேற்கத்திய உலகில் தெபித் (Thebit ) என்றழைக்கப்டும் தாபித் இப்னு குர்ரா இயக்கவியல், வானவியல், இயற்கணிதம் மற்றும் வடிவியல் ஆகியவற்றில் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார்.
தாபித் இப்னு குர்ரா இப்னு மர்வான் அல்- ஹர்ரானி என்பதுதான் இவரது முழுப்பெயராகும். இவர் கி.பி. 836-ல் ஹர்ரான் (தற்போதய துருக்கி) பிரதேசத்தில் பிறந்தார்.
பக்தாதில் புகழ் பெற்று விளங்கிய மாபெரும் முஸ்லிம் கணித வல்லுனர் முஹம்மது இப்னு மூஸா இப்னு ஸாகிர் உடைய விஞ்ஞான குழுவில் சேர்ந்தார். இந்த விஞ்ஞான குழுவானது அப்பாஸியக் கலீபாக்களால் நிறுவப்பட்டது.
பாரம்பர வடிவியலை ( Traditional Geometry) வடிவியல் சார்ந்த இயற்கணிதத்துக்கு (Geometrical Algebra ) விரிவுபடுத்தியதில் முன்னோடியானவர் தாபித்.
வடிவியலின் தந்தையாக யுக்ளிட் போற்றப்படுகிறார். தாபித் இப்னு குர்ராவின் சிறப்பம்சம் என்னவெனில் யுக்ளிட் கூறாத வடிவியல் தத்துவங்களின் வளர்ச்சிக்கு இவர் முதன்மை பங்கு வகித்தார். கோள நிலை திரிகோண கணிதம் (Spherical Trigonometry ) முழுமைக் கணிப்பெண் ( Integral Calculas ) ஆகிய கணிதத் துறைகளின் வளர்ச்சியில் இவரது பங்கு கணிசமானது.
திண்மத்தினுடைய மேற்பரப்பு மற்றும் கனஅளவு ஆகியவற்றை கணிப்பதற்கு அவர் பயன்படுத்திய முறைதான் பின்னாளில் முழுமைக் கணிப் பெண் என அறியப்படுகின்றது.
குழுமம், உத்தரம், நெம்புகோல் ஆகியவற்றின் நடுநிலை அமைதி (Equilibrium of Bodies Scams and Levers ) பற்றிய நிலைகளை ஆய்வு செய்தது இயக்கவியல் மற்றும் இயற்பியலில் தாபித் உடைய மூலக் கண்டுபிடிப்பாகத் திகழ்கின்றது.
நிலையமைவியலின் (Statics) தோற்றுவிப்பாளராக சில வரலாற்றாசிரியர்கள் இவரை அங்கீகரித்துள்ளனர்.
வானவியலின் தந்தையாகப் போற்றப்படுபவர் தாலமி. வானவியல் பற்றிய இவரது கருத்துக்களை பலர் விமர்சித்து உள்ளனர். ஆனால் தாலமியின் வானியல் கருத்துக்களை விமர்சித்த ஆரம்ப கால அறிஞர்களில் ஒருவராக தாபித் திகழ்கிறார்.
இதே போன்று யுக்ளிட் உடைய பல கோட்பாடுகளில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டிய இவர் அதில் பல முக்கியமான திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளார்.
தாலமியின் வானவியலில் ஒன்பதாவது கோளத்தையும் சேர்த்தவர் தாபித்.
சுரியன் மற்றும் சந்திரனின் இயக்கங்களில் உள்ள பல பிரச்சனைகளை ஆய்வு செய்த தாபித் கதிர் மணிப்பொறி (Sindial ) பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பீர் மற்றும் மெட்லர் ஆகியோர் தங்கள் புகழ் பெற்ற பணியான டெர்மாண்ட் என்பதில் சந்திரனின் ஒரு பகுதிக்கு தாபித் உடைய பெயரை வைத்துள்ளனர்.
கணிதம்,வானவியல், மற்றும் மருத்துவம் பற்றிய தாபித் உடைய நூல்கள் காலத்தை விஞ்சி இன்றும் நிற்கின்றன.
கலீபா அல் முஃததித் ஆட்சியின் கீழ் இவர் பணியாற்றியபோது அறிவியல் பற்றி கிரேக்க மற்றும் சிரிய மொழிகளில் இருந்த நூல்களை அரபிக்கு மொழி பெயர்த்தார்.
அரபிக்கு மொழி பெயர்க்கப்பட்ட இவற்றில் தாலமியின் அல்மாஜஸ்ட், யுக்ளிட் உடைய வடிவியல் பற்றிய மூல தத்துவம் மற்றும் இன்னொரு கிரேக்க அறிஞர் ஆர்கிமிடிஸின் நூல்கள் ஆகியவை அடங்கும்.
மத்திய காலத்தில் ஜெரால்ட் தாபித்துடைய சில நூல்களை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்.
தனது பாரம்பரிய அறிவை தனது மகன்களான இப்றாகீம் மற்றும் சினான், பேரக்குழந்தைகளான தாபித் மற்றும் இப்றாகீம், கொள்ளுப் பேரன்களான அபு அல்பரஜ் அகியோரிடம் தாபித் விட்டுச் சென்றார். இவர்கள் எல்லோருமே வடிவியல் வானவியல் மற்றும் மருத்துவத்திற்கு கணிசமான பங்களிப்பை ஆற்றினார்கள்.
அவரது மகன் சினான் கி.பி 931-முதல் மருத்துவர்களுக்கான சான்றிதழ் பரீட்சைகளைத் துவக்கினார். மேலும் மருத்துவர்களுக்கு 800 சான்றிதழ்களை வழங்கினார்.
நடமாடும் மருத்துவமனைகளை அன்றே ஏற்படுத்திய சினான் போதிய சுகாதார முறைகளைக் கண்டறிவதற்க்காக அடிக்கடி சிறைகளிலும் சொதனை நடத்தியவர்.
தாபித் இப்னு குர்ரா கி.பி.901-ல் பக்தாதில் மரணித்தார்.
-நன்றி : ஹஸன்.

No comments:

Post a Comment