Wednesday 11 January 2012

பிச்சை எடுத்து சாப்பிடலாமா? ஓர்அலசல்.

இன்று உலகில் வயிறு வளர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. சிலர் உடல் உழைப்பில் சம்பாத்தியத்தை தேடுவார்கள். ஒரு சிலர் வட்டி பணத்தின் மூலம் ஏழைகளை சுரண்டி வயிறு வளர்ப்பார்கள். அரசாங்க உத்தியோகம், டேபிள் சேர் வேலை என்று அதிகம் பேர் இன்றைய காலகட்டத்தில் பணம் பண்ணுகிறோம். இவற்றை எல்லாம் தாண்டி பிச்சை எடுத்தே வாழ்வை ஓட்டுபவர்களை உலகெங்கும் பரவலாக பார்க்கிறோம். இப்படி பிச்சை எடுத்து தங்கள் வாழ்வை ஓட்டலாமா என்பதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிறிது அலசுவோம்.

முகமது நபி கூற நான் கேட்டேன்...
'உங்களில் யார் மக்களிடம் யாசகம் கேட்டு தன் வாழ்நாளை ஓட்டுகிறாரோ அவர் மறுமை நாளில் முகத்தில் சதையின்றி எழுப்பப்படுவார்.'
அறிவிப்பவர் : அபுஹீரைரா நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ
'யார் யாசிப்பதில்லையோ அவருக்கு சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'
அறிவிப்பவர்: அபுஹீரைரா நூல்: அபுதாவுத், நஸயீ

'யாரிடமும் யாசகம் கேட்க வேண்டாம். உன் குதிரையின் சாட்டை கீழே விழுந்தாலும் அதை நீயே எடுப்பாயாக! அதை எடுப்பதற்காக மற்றவரை ஏவாதே' என்றார்கள். அதன்படியே என் வாழ்நாளை அமைத்துக் கொண்டேன்.'
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் அவ்ப் நூல்கள் : புகாரி, முஸ்லிம்

ஹக்கீம் இப்னு ஹிஸாம் என்ற நபித் தோழர் சில தேவைகள் பொருட்டு யாசிப்பதற்காக முகமது நபியிடம் சென்றார். ஒரு முறை இருமுறை அல்ல. மூன்று முறை சென்றார். நான்காவது முறையும் யாசிப்பதற்காக முகமது நபியிடம் சென்றார். அப்போது முகமது நபி ஹக்கீமைப் பார்த்து
'ஹக்கீமே! செல்வம் பசுமையும் இனிமையும் நிறைந்தது. யார் அதை நிறைந்த மனத்தோடு பெறுகிறாரோ அவருக்கு அதிலே அபிவிருத்தி செய்யப்படும். எவர் பொருளை யாசகமாகப் பெற்று ஊதாரித்தனமாக செலவழிக்கிறாரோ அவருக்கு அப்பொருளால் அபிவிருத்தி செய்யப்பட மாட்டாது. யாசிக்கும் கரத்தை விட யாசகம் கொடுக்கும் கரமே சிறந்தது. எனவே யாசிப்பதை விட்டுவிடுவீராக' என்று அறிவுரை பகர்ந்தனர்.

ஹக்கீம் இப்னு ஹிஸாம் கூறுகிறார் 'இறைவன் மீது ஆணையாக! உலகை விட்டு பிரியும் வரை இனி நான் யாரிடமும் யாசகம் கேட்க மாட்டேன் என்று அன்று உறுதி எடுத்துக் கொண்டேன்'

முகமது நபிக் காலத்துக்குப் பிறகு மேற்கண்ட நபர் மிகவும் வறுமையில் இருப்பதைக் கேள்விப்பட்ட கலீபாக்கள் அபுபக்கரும் உமரும் அவருக்காக பொருளுதவி செய்ய முன் வருகிறார்கள். 'முகமது நபிக்கு முன்னால் நான் வாக்கு கொடுத்துள்ளேன். எனவே நான் யாரிடமும் எதையும் யாசகமாகப் பெறமாட்டேன்' என்று கடைசி வரை யாரிடமும் கை நீட்டாமலேயே வாழ்ந்து சென்றதைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம்.

இதன்மூலம் யாசகத்தையே தொழிலாக வைப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது. இன்று கை கால்கள் நல்ல நிலையில் உள்ள எத்தனையோ இனைஞர்கள் கூச்சமின்றி யாசகம் கேட்பதைப் பார்க்கிறோம்.

ஒரு வருடம் முன்பு நான் அலுவலகத்தில் பணியில் இருந்தேன். ஒரு பாகிஸ்தானியர் நாற்பது வயது மதிக்கத் தக்கவர் வயிற்றைச் சுற்றி துணியால் கட்டிக் கொண்டு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் ஆபரேஷன் செய்ய பணம் இல்லை என்றும் பணம் தந்துவவுமாறும் கேட்டுக் கொண்டார். என்னோடு வேலை செய்து வரும் எகிப்தியர் அவருக்கு 20 ரியால் கொடுத்தார். எனக்கு அந்த பாகிஸ்தானி மேல் நம்பிக்கை வரவில்லை. நான் எதுவும் தரவில்லை. அதே பாகிஸ்தானியை இரண்டு நாள் கழித்து கடைத்தெருவில் சந்தித்தேன். அங்கு சிலரிடம் 'என் அரபி முதலாளி மோசம் செய்து என்னை எமாற்றி விட்டார். நான் பாகிஸ்தான் செல்ல உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி ரியாலை திரட்டிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் 'ஆபரேஷன் முடிந்து விட்டதா?' என்று கேட்டேன். என்னை அடையானம் கண்டு கொண்ட அந்த நபர் எனக்கு பதில் தராமல் அந்த இடத்தை விட்டு உடன் நகர்ந்து விட்டார். இது போல் அன்றாடம் பல மோசடிப் பேர்வழிகளை நாம் வாழ்நானில் சந்தித்து வருகிறோம். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களையும் சந்தேகத்தோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறோம்.
இதேபோல் பள்ளிவாசல்களிலும், கோயில்களிலும், சர்ச்களிலும் பிச்சை எடுப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். இவர்களில் சிலர் பரம்பரையாக பிச்சை எடுக்கும் தொழிலைச் செய்பவர்கள். பிரார்த்தனையை முடித்து விட்டு வரும் பக்தர்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று சில்லரையாக போட்டு வருவதையும் நாம் பார்க்கிறோம். இது போன்ற பழக்கத்தினால் பிச்சைக்காரர்களை நாமே ஊக்கப்படுத்துகிறோம். இப்படி சில்லரையாகப் போடுவதைவிட வாழ்நானில் நம் வசதிக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவனுக்கு தையல் இயந்திரம், சிறிய தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதற்கான மூலதனம் போன்றவற்றைக் கொடுத்து உதவலாம். 'இனி நீ பிச்சை எடுத்தால் நான் கொடுத்த பணத்தை திருப்பித் தந்து விட வேண்டும்' என்ற உத்தரவாதத்தையும் உதவி பெறுபவரிடம் நாம் பெற வேண்டும். இது போன்ற செயல்கள் பிச்சை எடுப்பவர்களை ஓரளவு மட்டுப்படுத்தும்.

இது போன்ற நேரங்களில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுவதை இனிப் பார்ப்போம்.

'தொழுகையை நிலை நாட்டுங்கள். ஏழை வரியைக் கொடுங்கள்' - குர்ஆன் 2 :110

தொழுது கொள்ள எங்கெல்லாம் இறைவன் கட்டளை இடுகிறானோ அதற்க்கடுத்து ஏழைகளுக்கு உதவவும் வேண்டும் என்று கட்டளை இடுவதன் மூலம் இந்த ஏழை வரியின் முக்கியத்துவம் விளக்கப் படுகிறது.

'இறைவன் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நள்றி கெட்ட எந்த பாவியையும் இறைவன் விரும்ப மாட்டான்.' -குர்ஆன் 2 : 276
இதன் மூலம் தர்மம் செய்வது செல்வத்தை பெருகச் செய்யும் என்று இறைவன் வாக்களிக்கிறான்.
'உங்களின் விளை நிலங்கள் பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள். அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய கடமையை (ஏழை வரியை) வழங்கி விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.' -குர்ஆன் 6 : 141
இதன் மூலம் விளை நிலங்களுக்கும் கணக்கிட்டு ஏழை வரியைச் செலுத்த வேண்டும் என்று விளங்குகிறோம்.

'நம்பிக்கைக் கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். இறைவனின் வழியை விட்டும் மக்களைத் தடுக்கின்றனர். 'இறைவனின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு' என்று எச்சரிப்பீராக' -குர்ஆன் 9 : 34
நம்மில் பலர் இத்தகைய உதவிகளை மத குருமார்களுக்கு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அத்தகைய உதவிகள் ஏழைகளைச் சென்றடைய வேண்டியது என்று இறைவன் அறிவுறுத்துகிறான்.

'யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை சேகரிப்பவர்களுக்கும், இஸ்லாத்தின்பால் உள்ளம் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன்பட்டோருக்கும், இறைவனின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது இறைவனின் கடமை. இறைவன் அறிந்தவன். ஞானமிக்கவன்.'-குர்ஆன் 9 ; 60
மேற்சொன்ன வகையில் அடங்குபவர்களே தர்மத்தின் செல்வத்தினை அனுபவிக்கத் தகுதியானவர்கள். யாசிப்போர்,ஏழைகள், நாடோடிகள் போன்றோர் யார் என்பதற்கும் விரிவான விளக்கங்கள் இருக்கிறது.

'தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். 'நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காவும், உறவினர்க்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் செலவிட வேண்டும்.' நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் இறைவன் அதை அறிந்தவன்' எனக் கூறுவீராக.
-குர்ஆன் 2 : 215

இந்த வசனத்தின் மூலம் உறவினர்களையும் கவனிக்கச் சொல்லி இறைவன் கட்டளை இடுகிறான். தன் சித்தப்பனும், உடன்பிறந்தவர்களும் வயதான காலத்தில் ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடிக் கொண்டிருக்க 'கொடை வள்ளல்' என்று பெயரெடுப்பதற்காக ஊருக்கும்,பள்ளிவாசல்களுக்கும், கோவில்களுக்கும் பிறர் மெச்ச வேண்டி செலவிடுபவர்களையே நாம் அதிகம் பார்க்கிறோம்.

'யார் கஞ்சத்தனம் செய்து தேவையற்றவராகத் தன்னைக் கருதி நல்லதை நம்ப மறுக்கிறாரோ சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்ப்படுத்துவோம்.' -குர்ஆன் 92 : 8,9,10

கஞ்சத்தனம் செய்வோரையும் இவ்வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான்.

'தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே!
அதைப்பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச்சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.' - குர்ஆன் 2 : 271

நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு பாவங்களெல்லாம் தர்மத்தின் மூலம் அழிக்கப்படுகிறது என்று குர்ஆன் நமக்கு விளக்குகிறது.
'தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.' -குர்ஆன் 2 : 188

லஞ்சம் வாங்குபவர்களை இந்த வசனம் கடுமையாக சாடுகிறது.
இந்த சட்டங்களையும் இது போன்ற மேலும் பல சட்டங்களையும் படிக்கும் போது இவையனைத்தும் ஏறத்தாழ கம்யுளிஸத்தை ஒத்து வருவதைப் பார்க்கிறோம். கம்யுளிஸ்டுகள் இறைவனை மறுத்து முதலானித்துவத்தை ஒழித்து சமதர்ம சமுதாயம் மலர வேண்டும் என்று கூறுவார்கள். இஸ்லாமோ இறைவனின் நம்பிக்கையை ஊட்டி ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் உலக நடைமுறைக்கு உகந்ததே என்று கூறி அந்த வித்தியாசத்திலும் சம தர்ம சமுதாயத்தை உருவாக்க முயல்கிறது. உலகம் முழுவதும் அதில் வெற்றியும் கண்டுள்ளது.

இன்று அரபு நாடுகளை எடுத்துக் கொண்டால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம். அதே நேரம் சீனா கம்யுளிஸத்தை விடுத்து இன்று பொருளாதாரத்தில் மேன்மையுறுவதையும் காண்கிறோம்.

 முதலாளித்துவத்தையும், கம்யுனிஷத்தையும் பின்பற்றக் கூடிய பல நாடுகள் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததாக நாம் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவின் வளர்ச்சியை ஒரு பேட்டை ரவுடியின் வளர்ச்சியாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்துடையவர்கள் தங்கள் கருத்தைப் பதிப்பார்களாக!

No comments:

Post a Comment