Thursday 5 January 2012

இறந்தோருக்கான தொழுகை (ஜனாஸா தொழுகை).....

  ஜனாஸா தொழுகை(இறந்தோருக்கான தொழுகை)

1. இறந்துபோன ஒரு முஸ்லிமுக்காக இறைவனைத் தொழுவது முஸ்லிம்களுடைய கூட்டுக் கடமையாகும். இந்தத் தொழுகையை இறப்பின்போது குழுமியிருக்கும் முஸ்லிம்கள் நிறைவேற்றினால் போதுமானது. குழுமியிருப்பவர்களில் சிலர் இந்தத் தொழுகையை நிறைவேற்றினாலும் போதுமானது.

2. இறந்தவரின் உடலை சோப்பு அல்லது அழுக்கு நீக்கும் பொருள்களால் சில தடவைகள் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். உடலை முற்றிலும் சுத்தப்படுத்திய பிறகு வெண்மையான பருத்தி துணிகளால் மூட வேண்டும்.

3. பிறகு உடலை பள்ளிவாயில் அல்லது தொழுகைக்கான இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அவருடைய முகம் கஃபாவை நோக்கி இருக்குமாறு உடலை வைக்க வேண்டும்.

4. ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வோர் அனைவரும் ஒளுச் செய்ய வேண்டும். இமாம் மையித்தான உடலுக்கு பின் கிப்லாவை நோக்கி நின்று கொள்ள வேண்டும். தொழுபவர்கள் இமாமுக்குப் பின் வரிசையாக நிற்க வேண்டும்.

5. இமாம், மரணமுற்ற அந்த முஸ்லிமுக்காக இறைவனைத் தொழுவதாக நிய்யத் (எண்ணம்) செய்து கொள்வார். பின்னர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லி கைகளை செவி வரையில் உயர்த்த வேண்டும். பின் தொப்புழுக்குக் கீழே இடது கரத்தின் மேலே வலது கரத்தை வைத்துக் கட்டி நிறக வேண்டும்.இமாமைப் பின்பற்றித் தொழுபவர்கள் அவரைப் பின்பற்றி இவ்வாறே செய்திட வேண்டும்.

6. பிறகு இமாம் மெல்லிய குரலில் ‘தனா’ ஓத வேண்டும்.

7. இந்த நிலையில் கரங்களை உயர்த்தாமல் அல்லாஹு அக்பர் என்று சொல்லி தஷஹ்ஹுதின் இரண்டாவது பாகத்தை அதாவது, அல்லாஹும்ம அலா செய்யிதினா முஹம்மத் என்பதிலிருந்து கடைசி வரையில் ஓத வேண்டும்.
8. பிறகு, கைகளை உயர்த்தாமல் அல்லாஹு அக்பர் என்று மூன்றுமுறை (தக்பீர்) சொல்ல வேண்டும். பின்னர் துஆ (இறைஞ்சுதல்) ஓதிட வேண்டும். பின்வரும் துஆவை ஓதுதல் நலம்.
அல்லாஹும்ம இஹ்(F)பிர்லி ஹயாதினா வ மைய்யிதினா வ ஸாஹிதினா வ காயிபினா வ தக்கர்னா வ உன்ஸானா வ ஸகீரினா வ கபீரினா. அல்லாஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ப(F)ஹ்இஹி அலல் இஸ்லாம். வமன் தவ(F)ப்(F)பைதஹு மின்னா ப(F)தவப்(F)பா(F)ஹு அலல் இஸ்லாம். அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு, வலா தப்(F)தீனா பஹ்தஹு.

பொருள்: ‘இறைவனே! எங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், மரணம் அடைந்தவர்களுக்கும், இங்கு வந்திருப்பவர்களுக்கும், ஏனையவர்களுக்கும், இளையோருக்கும், முதியவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்பளிப்பாயாக!இறைவனே! நீ எங்களில் யாரை உயிர் வாழச் செய்கிறாயோ அவர்களுக்கு இஸ்லாமிய வழியில் வாழ உதவி புரிவாயாக! நீ யாரை இறக்கச் செய்கிறாயோ அவரை இறை நம்பிக்கையுடன் இறக்கச் செய்வாயாக!இறைவனே! அவர் இறந்ததை நாங்கள் பொறுமையோடு ஏற்றுக் கொண்டதற்குரிய பலனை இழக்கச் செய்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை சோதனையில் ஆக்கிவிடாதே!

9. பிறகு கைகளை உயர்த்தாமல் அல்லாஹு அக்பர் என்று சொல்லி நான்காவது தக்பீர் சொல்ல வேண்டும். பின்னர் மற்ற தொழுகையில் செய்வதுபோல வலது புறமும் இடது புறமும் ஸலாம் சொல்லி தொழுகையை முடிக்க வேண்டும்.

இமாமுக்குப் பின்னால் நின்று தொழுபவர்கள் இமாம் செய்வதைப்போல செய்ய வேண்டும். ஓதுவதை மெல்லிய குரலில் ஓத வேண்டும்.

10. தொழுகைக்குப்பின் முகம் கிப்லாவை நோக்கி இருக்குமாறு உடலை அடக்கம் செய்ய வேண்டும். உடலை அடக்கம் செய்ய குழியில் தாழ்த்தும்போது பின்வருமாறு ஓத வேண்டும்.

“பிஸ்மில்லாஹி வபில்லாஹி வ அலா மில்லதி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
பொருள்: இறைவனின் திருநாமத்தைக் கொண்டும், முஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறைகளைக் கொண்டும் (இந்த உடலை அடக்கம் செய்கின்றேன்)
இது தவிர வேறு தக்க துஆக்களை(பிரார்த்தனை)யும் செய்யலாம்.
இறந்தவர் பருவ வயது வராத குழந்தையாக இருந்தால் மூன்றாவது தக்பீர் வரை தொழுகை மேலே சொன்னவாறே நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் மூன்றவது தக்பீருக்குப் பிறகு பின்வரும் துஆவை ஓத வேண்டும்.
அல்லாஹும்ம இஜ்அல்ஹு லனா ஃபர்த்தன், வஜ்அல்ஹு லனா துக்ரன், வஜ்அல்ஹு லனா ஷாஃபி(F)அன் வ முஷ்ப(F)ஆ.
பொருள்: இறைவனே! இவரை எங்களுக்கு முந்தியவராகவும், வெகுமதியாகவும், பாதுகாப்புப் பொருளாகவும் ஆக்கி வைப்பாயாக! இன்னும் அவரை எங்களுக்காக மன்றாடுபவராகவும் ஆக்கி வைப்பாயாக! அவருடைய மன்றாட்டங்களை ஏற்றுக் கொள்வாயாக!
இறப்புத் தொழுகை முழுவதையும் நின்றே நிறைவேற்ற வேண்டும். இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும்போது இறந்தவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நின்றிட வேண்டும். எடுத்துச் செல்லப்படும் உடல் முஸ்லிமுடையதாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லிமல்லாதவருடைய உடலாக இருந்தாலும் சரியே எழுந்து நின்றிட வேண்டும்.
இறந்தவர் ஆணாக இருந்தால் அவர் உடலை ஆண்களே கழுவ வேண்டும். பெண்ணாக இருந்தால் பெண்களே கழுவ வேண்டும்.
ஆனால் தன்னுடைய கணவனின் உடலை மனைவி கழுவலாம். குழந்தைகளை ஆண், பெண் இரு பாலரும் கழுவலாம். கழுவும்போது கைகளை கையுறையினாலோ, துணியினாலோ மூடிக் கொள்ள வேண்டும். இறந்த உடலின் மறைவிடங்களை பார்க்காமல் அவற்றைக் கழுவ வேண்டும்.
அடக்குமிடம் (கப்ரு) எளிமையாக அமைக்கப்பட வேண்டும். இதனை அமைப்பதில் ஆடம்பரம் கூடாது. அதுபோலவே இறந்த உடலை மூடும் துணியிலும் ஆடம்பரம் தேவையில்லை. ஏனெனில் அது வீண் பெருமையான செயலாகவும், பணத்தை விரயம் செய்வதாகவும் இருக்கும். இவற்றிற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

No comments:

Post a Comment