Friday 27 May 2022

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மதிப்பு இழந்து விட காரணங்கள் !!



தொழில் நுட்பமும், பொறியியலும் மிகவும் நவீனமாக வளர்ந்து விட்ட படியால் அதற்கேற்றபடி பாட திட்டங்களும் கற்பிக்கும் முறையும் மாறி விட்டன. ஆகவே படிப்பின் மதிப்பு கூடித் தான் இருக்கிறது. அதை படித்தவர்களின் மதிப்பு தான் கூட வில்லை, மாறாக குறைந்திருக்கிறது.

பொறியியல் படிப்பு மதிப்பு இழந்து விட காரணங்கள்:படிப்பிலும், செய்முறையிலும் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்தாமை
இணையதளங்களிலும் திறன் பேசிகளிலும் நேரத்தை செலவழித்தல்
குறிக்கோள் இல்லாத கல்லூரி வாழ்க்கை
சரியான உள்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளில் பயிலுதல்
தேர்ச்சி பெற்ற / அனுபவம் உள்ள விரியுரையாளர்கள் இல்லாமை
தேர்ச்சி பெற்ற / அனுபவம் உள்ள செய்முறை பயிற்சியாளர்கள் இல்லாமை
செய்முறை பயிற்சியில் மாணவர்களுக்கு அதிகம் ஆர்வம் இல்லாமை
வேண்டப்பட்ட மாணவ மாணவியருக்கு உள் மதிப்பீடு மதிப்பெண்களை வாரி வழங்குவது. மற்றவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது. அதனால் நன்றாய் படிக்கும் மாணவர்கள் சோர்வடைந்து போவது
கடைசி பருவ திட்ட வேலை (PROJECT WORK) சமர்ப்பித்தலுக்கு கணனி மையங்களை சார்ந்திருப்பது
  • மாணவ மாணவியர்கள் கடைசி வருஷத்திற்கு முந்தின வருஷத்திலிருந்தே பொறியியலுக்கு சம்பந்தமில்லாத TNPSC Gr4, SSC (+2 Level), வங்கி தேர்வு இன்னும் பல வித போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுவது.
  • முக்கியமான பொறியியல் பாடங்களை படித்த மாணவர்கள் அதற்கு சம்பத்தமில்லாத தகவல் தொழில் நுட்ப துறைக்கான வேலைக்கு தனியாக அர்ப்பணிப்போடு ஆயத்தப்படுவது
இதையெல்லாம் தாண்டி தங்களுடைய துறையில் அருமையான திறமையான பொறியியல் வல்லுநர்கள் ஆனவர்கள் நிறைய உண்டு.

பொறியியல் படிப்பு தரமானதாக இருக்கிறதா என்றால் 90% இல்லை. பாட ஆசிரியர்கள் பாடத்திட்டம் தாண்டி பாடம் எடுக்கின்றனரா என்றால் அதுவும் 90% இல்லை. சரி மாணவர்களாவது கற்ற விஷயங்களை இன்னும் மெருகூட்டும் வகையில் யோசிக்கிறார்களா என்றால் அதுவும் 75% இல்லை. தொழில்நுட்ப கல்வி என்ற பெயரில் சாதாரண ITI மாணவர்களுக்கு தெரிந்த அளவு கூட தங்கள் துறையின் அடிப்படை விஷயங்கள் தெரியுமா என்றால் அதுவும் இல்லை.

இப்படி பானை முழுவதும் ஓட்டை இருந்தால் எப்படி தண்ணீர் பிடிக்க முடியும்.

உண்மையில் 99% பொறியியல் வேலைகளுக்கும் படித்த பாடத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு பொறியியல் மாணவன் ஒரு வேலையில் சேர்ந்த பின்னர் தான் பொறியியலை கற்க ஆரம்பிக்கிறான்.

பொறியியல் படிப்பில் சில மாற்றங்கள் வேண்டும் என்று நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் அதில் ஒரே ஒரு பாயிண்ட் மட்டும் இங்கே::::

4 ஆண்டு பொறியியல் படிப்பில் நான்கு வருடங்களும் Even Semester (2,4,6,8) களில் துறைசார் நிறுவனங்களில் வேலை செய்து அந்த துறைசார் கேள்விகளுக்கு பதிலும், துறைசார் Project கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இன்னொன்று அடிப்படை அறிவு இல்லாமல் தான் பலர் பொறியியல் துறைக்கு வருகிறார்கள் அதனால் கண்டிப்பாக நுழைவுத்தேர்வு வைக்க வேண்டும் அதற்கு முதலில் பள்ளி பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்.

ஒரு துறையில் நிபுணத்துவம் பெறும் அளவுக்கு கற்றுக்கொண்டு அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் அளவுக்கு ஆங்கில மொழியறிவு இருந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல்  கான்.

Friday 13 May 2022

இன்றைய காலத்து பெண்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும் விதம்பற்றிய சிறப்பு பார்வை!!




சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும் விதம் பற்றிய பார்வை
• இன்றைய காலத்து பெண்கள் தொடர்ந்து காலை, மாலை என நேரம் காலம் அறியாமல் இரவில் தூக்கம் இன்றி இந்த சமூக வலைத்தளங்களுடன் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே இதற்காக நேரத்தை வீண் விரயம் செய்யாது இதற்கான நேர காலத்தை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் .


• தூங்கும் போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில் விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி விடாமல் 6 மணிநேரம் தூங்க வேண்டும். இது எதிர்காலம், நோய் எதிர்ப்பு சக்தி, மனோ நிலை, மூளை செயல்படும் வீதம் போன்ற பல விதமான செயல்பாடுகளுக்கு உதவும்.


• நிகழ்ச்சிகள், இறப்பு செய்திகள் வரும் பட்சத்தில் அதை உடனடியாக பகிராமல் அதேசமயம் அந்த செய்தியின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மைகளை அறிந்த பிறகே பகிர வேண்டும்.


• மனதை பாதிக்கின்ற தகவல்களை அல்லது மற்றவருடைய மனதை புண்படுத்துகின்ற தகவல்களை பகிர்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.


• குழந்தைகளிடம் ஸ்மார்ட் Phone-ஐ கொடுக்கின்ற பொழுது Flight Mode- இல் போடவும். இணைய இணைப்பு இல்லாமல் இருப்பது சிறந்தது, ஏனெனில் தேவையற்ற செய்திகளை காண நேரிடலாம்.


• நீங்கள் சமூகம் சார்ந்த அமைப்புகள் வைத்திருக்கலாம், அதற்காக ஒரு குழுவை உருவாக்கி சமூகத்திற்கு தேவையான பல நன்மையான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். அதேசமயம் எந்தவொரு குழுமமாக இருந்தாலும் அதற்கான ஒரு தேவை மற்றும் கொள்கை கட்டாயம் இருக்க வேண்டும்.


• தேவையில்லாத தகவல்களை தவிர்த்து உங்கள் குழுமம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது சார்ந்த சமூகத்திற்கு தேவையான தகவல்களை அறிந்து பகிர வேண்டும்.


• முதலில் தொழில்நுட்ப வசதிகளின் நன்மைகள், தீமைகள் குறித்து பிள்ளைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி இருக்கிறோமா என்பதைவிட, பெற்றோர்களுக்கு அது குறித்து போதிய அறிவு இருக்கின்றதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


• நேரமில்லை என்கிற காரணங்களை முன் வைத்து குழந்தைகளைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும், உதவவும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வே முதலில் அவசியமானதாக இருக்கிறது.


• பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பேஸ்புக் போன்ற தளங்களை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


• சமூக வலைதளங்கள் நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் உரையாடுவதற்கான ஒரு பாலம் தான் என்பதை முதலில் புரிய வைக்க வேண்டும்.


• இரவு நேரங்களில் சமூக வலைதளங்களில் இயங்குவதை குறைக்க வேண்டும்.


• பெற்றோர்களும் தமக்கான ஒரு வலைதளக் கணக்கை வைத்துக் கொள்வது நல்லது. இதில் பிள்ளைகளை இணைத்துக்கொண்டு அவர்களது நடவடிக்கைகளைப் பார்க்கலாம். உங்களை இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் அவர்கள் அழுத்தத்திற்கு ஆட்பட வாய்ப்புள்ளது என உணரத் தொடங்குங்கள்.


• தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்திலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கின்றன. அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.


• போலியான கணக்கு (Fake Account) மூலம் மற்றவர்களை ஏமாற்றுவதை தவிர்க்க வேண்டும்.



சமூக வலைத்தளங்களின் தாக்கம் !!

• பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டு அதை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று அக்கறை கொள்ளும் அளவுக்கு, அதில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து பெற்றோர்கள் விலகி நிற்கின்றனர். பெற்றோர்கள் இந்த பொறுப்பிலிருந்து விலகி நிற்பதும் இள வயதினரின் சமூகக் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன.


• செல்போன் மற்றும் அதன் பயன்பாடுகள் தரும் அழுத்தம் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும் மன அழுத்தம் குறித்து தொடர்ச்சியாக உலகம் சுட்டிக் காட்டி வருகிறது.


• தமது பேஸ்புக் பக்கத்தில் அறியாத நூற்றுக்கணக்கானவர்களை இணைத்துக் கொள்கிறார்கள். நண்பர்களின் எண்ணிக்கை பெருமை எனக் கருதுபவர்கள், அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளை உணர்வதில்லை. பெற்றோர்களும் அதனை கண்டுகொள்வதே இல்லை.


• தேவையில்லாமல் குடும்ப புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவது, அறிமுகம் இல்லாத நண்பர்களை இணைப்பது, அதிக லைக் வாங்க வேண்டும் என்பதற்காக அபாய செல்ஃபி எடுப்பது, தனிப்பட்ட முகவரி, செல்போன் எண் அளிப்பது போன்றவை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துக்கின்றது.


• பேஸ்புக் பயன்படுத்துவதால் தங்களுக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். மற்றவர்களை விட பேஸ்புக்கில் அதிக லைக் வாங்க வேண்டும், அதிக படங்கள் பகிர்ந்துகொள்வது பெருமை என்று நினைக்கிறார்கள். இது மனநலத்தை பாதிக்கும்.


• பெண்களின் படங்களை, குரூப்களில் லைக்ஸ்-காக பலர் பகிர்கின்றார்கள்.


• வேறு பெண்களின் படத்தைப் பயன்படுத்தி போலி கணக்குகள் ஆரம்பித்து, அதன் மூலம் வேறு ஆண்களுடன் தகாத முறையில் பழகுதலும் பெரும் விளைவை ஏற்படுத்தும்.



சமூக வலைத்தளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை!!

• இமெயில், பேஸ்புக், ட்விட்டர் என்று உங்கள் இணையதளத்தில் உள்ள கணக்குகளுக்கு வைக்கும் பாஸ்வேர்டை யாருக்கும் பகிராதீர்கள்.


• பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் (@) போன்றவற்றை சேர்ப்பது நலம். பாஸ்வேர்டுகள் திருடப்படாமல் பாதுகாக்க இது உதவும்.


• உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள். எளிதில் உங்களது பாஸ்வேர்டை எதிரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்.


• தாங்கள் செல்லும் இடங்களை உடனுக்குடன் பதிவிடுவதும் ஆபத்துதான். தனக்கும் தன் குடும்பத்தினர் மட்டும் அறியக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.


• இணையத்தில் உங்களது சொந்த தகவல்களை கேட்கும் தளங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.


• புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் போது கூடுதல் கவனம் தேவை. உங்கள் சமூக வலைத்தளங்களில் allow, ok போன்று பட்டன்களை கிளிக் செய்வதற்கு முன்னால் எதற்காக உங்களிடம் அனுமதி கோருகிறார்கள் என்பதை அறிந்த பிறகே கிளிக் செய்யுங்கள்.


• சொந்தக் கருத்துகளை பதிவிடும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வந்த தகவலையும் அப்படியே பகிராமல் அதன் உண்மைத் தன்மை உணர்ந்து ஆராய்ந்து பிறகு பகிருங்கள்.


• இரவு 9 மணிக்கு மேல் வீட்டில் வைஃப்பை பயன்படுத்துவதை பெரியோர்கள் தவிர்த்துவிட்டு குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பேசுவதை வழக்கமாக கொள்வது நல்லது.


• ஒருவர் தனது பதிவுகளுக்கு, படங்களுக்கு அதிகமாக தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் கொடுத்து வந்தால் எளிதாக அந்த நபருடன் பழக ஆரம்பிப்பது, அந்த நபரை யார், எவர் என அறியாமல் தனது நட்பு வட்டாரத்தில் சேர்த்து கொள்வது ஆபத்து ஆகும்.




வீட்டில் உள்ள பெண்களுக்கான விழிப்புணர்வு!!

• வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.


• வீட்டில் உள்ள பெண்கள் வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக 'லென்ஸ்' பொருத்தினால் நல்லது.


• மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.


• ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள்.


• வீட்டில் உள்ள பெண்கள் புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள்.


• தங்கள் வீட்டில் உள்ளவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் போன்ற விஷயங்களையும், வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக்கூடாது.


• வீட்டில் உள்ள பெண்கள் கொள்ளையர்களிடம் நகைகளை கொடுக்கமாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, புத்திசாலித்தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம் அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.


• அறிமுகம் இல்லாத நபர்களையோ அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பிவிடுங்கள்.


• வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை கண்டிப்பாக வங்கி லாக்கரில் வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.


• வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.


• அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.


• வீட்டில் உள்ள பெண்கள் பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின்மீது நம்பிக்கை இல்லாமல் கருதும் பட்சத்தில், அவர்களின் பெயர்கள், முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்துக் கொள்ளலாம். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே அவர்களை அனுப்பிவிடுவது சால சிறந்தது.


• ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது.


• அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.


• பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டு
ம்.

தொகுப்பு  : அ. தையுபா  அஜ்மல்.