Wednesday, 30 November 2011

இந்தியர்களுக்கான 12 இலக்க அடையாளம்...! ஆதார் எண் பற்றிய ஒரு பார்வை!
இந்த கட்டுரை எழுதுவதற்கு காரணம் ஒரு நாள் முழுதும் நின்று ஆதார் அடையாள எண் அட்டையை 
பதிவு செய்தது உங்களுடன் பகிரிந்து கொள்ள ஆசைபடுகிறேன்...

ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண்.அது இந்திய அரசால் இந்தியர்களுக்கு வழங்கப்படும். 


இந்த எண் உங்களுடைய முகவரிக்கான அடையாளமாக இந்தியா முழுவதும் செல்லுபடியாகக்கூடியது.


ஆதாரின் வரலாறு :

     ஆதாரின் அடிப்படை கருத்து 2006 ல் உருவானது. “வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக” என்ற மேற்க்கோளுடன் மார்ச் 03, 2006 ல் இந்த திட்டம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அறிவிக்கபட்டது .

    இந்த திட்டம் தேசிய தகவல் கழகத்தால் ஓராண்டு பல்வேறு கட்ட பரிசீலனைக்கு உட்பட்டது. அதே நேரம் 2006 ஜூலை யில் ஆதாரை செம்மை படுத்துவதற்காக மேலும் ஒரு கமிட்டி நிர்ணயிக்கபட்டது.

   திட்டக்குழுவின் வழிநடத்துனர் டாக்டர்.அரவிந்த் விர்மானி என்பவரால் ஆதார் வழிநடத்தபட்டது. ஆதாரின் அடிப்படை கொள்கைகள் 2007ல் விப்ரோ நிறுவனத்தால் கமிட்டியிடம் சமர்பிக்கபட்டது.

    இந்த கமிட்டி கிட்டதட்ட 7 முறை கூடியது .அமைச்சர்கள் கொண்ட கமிட்டி 4 முறைக்கு மேல் கூடியது.

பிரதம மந்திரி குழு :

    ஜூலை 30 , 2009ல் பிரதம மந்திரி குழு அமைக்கபட்டது. இதன் தலைவராக நத்தன் நீலகேனி பதவியேற்றுக்கொண்டார்( இன்போஸிஸ் நிறுவனத்தை தோற்றுருவித்தவர்களில் ஒருவர் ).இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

    முதல் முறை 2009 ஆகஸ்ட் ல் கூடியது.அதன் பிறகு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும் இந்த குழு கூடி பேச்சுவார்த்தை நடத்தும்.

  கமிட்டி:

     UIDAI தலைமையகம் டெல்லியில் உள்ளது . இது 2009ல் ஆதாருக்காகவே உருவாக்கப்பட்டு திட்டக்குழுவுடன் இணைக்கப்பட்டது . தலைவராக நத்தன் நீலகேனி உள்ளார், இயக்குனராக ஆர்‌எஸ்.ஷர்மா உள்ளார். 

     மேலும் 21 துணை இயக்குனர்கள்,15 இணை இயக்குனர்கள்,15செக்சன் ஆபிசர்கள்,15 உதவியாளர்கள்,நிதி,தொழில்நுட்பம் என  ஒட்டுமொத்தமாக 146 பேர் உள்ளனர்.

ஆதார் சின்னம்


   ஆதார் சின்னம் உருவுவான விதம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

   ஆதார் பெயரும் சின்னமும் UIDAI ஆல் உருவாக்கபட்டது. ஆதாருக்காக உருவாக்கபட்ட சின்னமானது, சூரியன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலும் அதில் கைரேகை உள்ளவாரும் வடிவமைக்கபட்டுள்ளது.கிட்டதட்ட ஆதாரின் குறிக்கோள்களை வெளிப்படுத்துவாதல் ஏற்றுக்கொள்ளபட்டது.

 போட்டி:

    பிப் 2010-ல் ஆதார் சின்னதிற்கான இந்திய அளவிலான போட்டி பற்றிய அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான ஒரு சில வாரங்களில் 2000க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் இந்தியா முளுவதிலிருந்தும் வந்து குவிந்தன. 
             
   ஆதாரின் நோக்கங்களையும்,குறிக்கோள்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.
பெறப்பட்ட சின்னங்கள் விழிப்புணர்வு மற்றும் தகவல் குழுமத்தால் தேர்ந்தெடுக்கபட்டது. 

   மிகவும் கடுமையான மற்றும் பல பரிசீலனைக்கு பிறகு 5 பேர் இறுதி கட்ட பரிசீலனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மிச்செயல் ஃபோளி
சஃப்ரன் பிராண்ட் கண்சல்டண்ட்ஸ்
சுதிர் ஜான் ஹோரோ
ஜெயந்த் ஜெய்ன் அண்ட் மஹேந்திர குமார்
அடுள் s பாண்டே

   இறுதியில் புனேவைசேர்ந்த   அடுள் s பாண்டே என்பவர் வெற்றிப்பெற்றவராக அறிவிக்கபட்டார். வெற்றி பெற்றவருக்கு  ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கபட்டது. மீதமுள்ள 4 பேருக்கும் தலா பத்து ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.


   இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், ஆதாருக்கு பங்களித்கதில் நான் பெருமைப்படுகிறேன் என அடுள் s பாண்டே கூறினார் .   நன்றி http://uidai.gov.in/

ஆதார் பெயர்க்காரணம்: 


அது என்ன ஆதார் ? அதாவது இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்துடனும், உச்சரிக்கவும் எளியதாக உள்ளதால் 

உருவானதுதான் இந்த ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் என்று அர்த்தம்.   ஆதாரில் அடங்கியுள்ளவை:

இதில்  16kb மெமரி சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் உங்களது ரத்த வகை, விழி அமைப்பு, இடது கை மற்றும் வலது  கை விரல்களின் ரேகை,  போன்ற உங்களின் அனைத்து அடிப்படை தகவல்களும் சேமித்து
வைக்கப்படும்.தனித்துவம்:

இந்த 12 இலக்க எண் உங்களுக்கே உரித்தானது. ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது உங்களுடையதே வேறு எவருக்கும் இந்த எண் வழங்கபட மாட்டா.

இது ஒரு ரேண்டம் எண், இந்த எண் நீங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில்தரப்படும் .எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்:

இந்த ஆதாரை பயன்படுத்தி வங்கியில் கணக்கு துவங்கலாம்.புதிய தொலைப்பேசி இணைப்பு பெறலாம். அரசு மற்றும் அரசு சாரா அனைத்து சேவைகளைப் பெறுவதற்காகவும் இதை அடையாள சான்றாக பயன்படுத்தலாம். 


எப்படி வாங்குவது:

கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் முகாம் உள்ளது. எனவே தத்தம் மாவட்ட முகாம்களுக்கு ஆதார் அட்டை தேவைப்படுவோர் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1.புகைப்பட அடையாள சான்று ( பான் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)

2.முகவரிக்கான சான்று (மின்  கட்டண ரசீது ,தொலைபேசி ரசீது, குடும்ப
அட்டை,வீட்டு வரி ரசீது போன்றவை )
 

அங்கு சென்றவுடன் உங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பதியப்படும். பின்பு உங்களின் விழி அமைப்பு, கைரேகை,புகைப்படம் போன்றவை பதியப்படும் அவ்வளவுதான். உங்களுக்கான தற்காலிக எண் வழங்கப்படும் (ஒரு அத்தாட்சி சான்று).

நமது வங்கி கணக்கு தொடர்பான அடிப்படை விடயங்களும் தரவேண்டும் (அவரவர் விருப்பத்தை பொருத்து).தற்காலிக எண் :

அதாவது நீங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 60 -90 நாட்களுக்குள் ஆதார் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

இல்லையெனில் இந்த தற்காலிக எண்ணை வைத்து உங்களின் ஆதார் விவரங்களை நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த எண் 28 இலக்கங்களை கொண்டது . முதல் 14 இலக்கம் அத்தாட்சி எண் மீதமுள்ள 14 இலக்கம் நீங்கள் பதிந்த தேதி மற்றும் நேரத்தை குறிப்பதாகும்.      

வயது வரம்பு உண்டா:

இந்த திட்டதிற்கு வயது வரம்பே கிடயாது . பிறந்த குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பெறலாம் .

இன்னாப்பா காமெடி பண்ற ? பொறந்த குழந்தைக்கு எதுயா டிரைவிங் லைசென்ஸ் ?

பொறுங்கள்... குடும்பத்தில் ஒருவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தால் போதும். அனைவரும் அதை வைத்து பதியலாம். (கைரேகை,விழியமைப்பு,புகைப்படம் போன்றவை போலிகளை அண்டவிடாது என்பதால் தான் இந்த வசதி)

குழந்தைகளுக்கு கைரேகை வளர சில ஆண்டுகள் ஆகுமே? அதற்க்குதான் விழித்திரையும் பதியப்படுகிறது.செலவு :

இந்த திட்டதிற்கு முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே இது ஒரு இலவச திட்டம்.ஆதார் சந்தேகங்களுக்கு :

அழையுங்கள் =             1800-180-1947      
ஃபேக்ஸ் = 080-2353 1947
கடிதங்களுக்கு = தபால் பெட்டி எண் 1947, GPO பெங்களூர்-560001
மின்னஞ்சல் = help@uidai.gov.inநிறுவனங்கள்:

ஆதார் எண் வழங்கும் பணியில் இன்போஸிஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான நத்தன்நீலேகனி தலைமையில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா,பாங்க் ஆஃப் பரோடா,இந்தியன் பாங்க்,இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்,டீம் லைஃப் கேர் இண்டியா பிரைவேட் லிமிடட்,ஸ்ரீஷிகாஜ் போன்ற நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கார்வி என்ற நிறுவனம் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. நம்முடைய விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலதில் பெறப்படுகின்றன.ஆதார் பற்றிய பொதுவான சந்தேகங்களும் அதற்கான பதில்களும்:

*ஆதார் என்பது குடும்ப அட்டையை போல்,வாக்காளர் அடையாள அட்டையை போல் மற்றுமொரு அட்டையா? .

கிடையவே கிடையாது ஆதார் என்பது 12 இலக்க எண்.மற்றவற்றில் எளிதாக போலி என்று ஒன்று உருவாக்கலாம் இதில் முடியாது.

* குடும்பத்திற்கு ஒன்று இருந்தால் போதுமா? இது ஒவ்வொரு தனி     மனிதருக்கும் வாங்க வேண்டும்.

* இது இந்திய குடிமகன்/மகள் என்பதற்கா சான்றா? கிடையவே கிடையாது இது உங்களுக்கான அடையாளம். பிறநாட்டவரும் பெறலாம்(நிபந்தனைகளுக்கு உட்பட்டு )

* கண்டிப்பாக வாங்கவேண்டுமா?. இல்லை, விருப்பப்படுபவர்களுக்கு மட்டும்.

* ஒருவர் பல ஆதார் வாங்கலாமா? ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே .

* எனக்கு ஃபேன்சி நம்பர் வேணும். இது செல்போன் இணைப்பு எண் கிடயாது.

* பாஸ்போர்ட்,குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். அவற்றை வாங்க வேண்டுமானால் பயன்படுத்தலாம். மாற்றாக பயன்படுத்த இயலாது.
       
       
சர்ச்சைகள்:

1. இந்த திட்டதிற்கான செலவு 3ஆயிரம் கோடி என்றார்கள் ! ஆனால் உண்மை என்னவென்றால் இது வெறும் 10 கோடி பேருக்கு மட்டுமே!  இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த 15 ஆயிரம் கோடி தேவைப்படும் 2017-ல் தான் முடியும்( ஒரு வேல அடுத்த 2g யோ?)

2. நம்முடைய அனைத்து தகவல்களும் அரசாங்க டேட்டா பேஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நம்மை பாதுகாப்பு என்ற பேரில் கண்காணிக்க வாய்ப்பு உண்டு!

3. இந்த திட்டத்தின் மூலம் போலிகளை முழுமையாக ஒழிக்க முடியாது என மான்டெக் சிங் அலுவாலியா கருத்து தெரிவிதுள்ளாரே.

4. இதற்கான மென்பொருள் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும் நம்முடைய தகவல்களை அவர்கள் எளிதில் பயன்படுத்தலாம் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர். ஆதார் எப்படி பதிய்யபடுகிறது என்பதை புகைப்பட விளக்கங்களுடன் பார்ப்போம். 

1

2

ஆவணங்கள் பெறப்பட்டு சரிபார்க்கபடுகிறது .


3
ஆவணங்களில் உள்ள தகவல்கள் சேமிக்கபடுகிறது .

4
பதிவு செய்யப்பட்டுள்ளவைகள் சரியா என விண்ணப்பதாரர் சரி பார்க்கிறாரார்  

5


6

7

8

இறுதியில் அதிகாரி தனது கைரேகையை பதிவு செய்தவுடன் செயல்பாடு முடிகிறது .  நன்றி http://uidai.gov.in/ 

தொகுப்பு : மு.அஜ்மல்கான்.  

Tuesday, 29 November 2011

சிரிப்பு ஒரு மாமருந்து!....

சிரிப்பு ஒரு மாமருந்து

"சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுங்கள்....நீங்கள்ஒருவரே அழுதுக் கொண்டிருப்பீர்கள்"...ஸ்டீவன்சன்-

சிரிப்பு ஆக்கப் பூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியம் அடைகிறது. மனம் ஆரோக்கியம் அடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது. அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்து விடுகிறோம். அவ்வளவுதான்.

சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்.
[சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தால்.... மன்னிக்கவும்.]
சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும், நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர்.

நமது எண்ணங்களுக்கும் மன அலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ஆம் ஆண்டின் இவ் ஆராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது.

நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பயை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக உற்பத்தியாக உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
நாம் மனம் விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை. உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் மனவியல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார். நாம் சிரிக்கும் போது நம் மூக்கினுள் உள்ள சளியில் 'இம்யூனோகுளோபுலின் - ஏ ' [IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரித்து பாக்டீரியாக்கள், வைரஸ் புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதாம். இதனால் "மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் "என்கிறார் இந்தப் பேராசிரியர்.

மேலை நாடுகளில் டாக்டர்கள் நேயாளிகளுக்கு சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு பரிந்திரை செய்கிறார்கள். 'நோர்மன் கசின்ஸ்' என்னும் அமெரிக்க நாவலாசியரியர் 1983-ஆம் ஆண்டு தான் எப்படி " இதய நோயிலிருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார். நான் மாரடைப்பு வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்த்தேன்.எளிய உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன். விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன். அதற்காக நகைச்சுவைப் படங்கள் டி வி யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சரியம்? நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய் இருந்த இடம் சுவடே தெரியாமல் மறைந்து போனது "நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் இயல்பயைச் 'சிரிப்பு' முடுக்கி விடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.

சிரிப்பு பற்றி ஆராயும் மருத்துவ அறிஞர்களை 'GELOTO LOGIST என்கிறார்கள். இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் இவைகள். சிரிப்பு நம்முடைய தசைகளை வலுவாக்குகிறது; ' இரத்த அழுத்தம்' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகின்றன. 'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மன இறுக்கம் தளர்கிறது. சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின் வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது. சிரிப்பு- அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது. உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு நன்மைகள் என்று சிரித்து பாருங்கள். எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.

"சிரிக்க தெரிந்த சமுதாய விலங்கு மனிதன்" என நம்மை மற்ற இனங்களிலிருந்து வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு. சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு. மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனதெளிவு , மனமகிழ்ச்சி என பலவிதமாக பயன்பட்டு திகழ்கிறது இந்த சிரிப்பு. நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.

"பெர்னாட்" ஒரு சமயம் " உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு பின்னாலேயே செயல்படுகிறது " என்றார். நகைச்சுவையும், சிரிப்பும் அறிவை அளவிட்டு காட்டுவதாக பெரும்பாலும் அமைகிறது. நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு அக்பர், பீர்ப்பால் கதைகள், தென்னாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கிறது.

அமரர் 'கல்கியின் படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான். அதே போல் N.S. கிருஷ்ணன் ஒரு முறை வெளியூர் சென்ற சமயம் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. வேறு காருக்காக காத்திருந்த போது , அந்த வழியாக வந்த விவசாயிகள் கார் விபத்தைக் குறித்து கேட்டபொழுது, "காருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் காரை மரத்தில் சாத்தி வைச்சியிருக்கிறோம்..." என்றாராம். இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் வஞ்சகமில்லா நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ்நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் என்று கூறலாம்.

நம்மில் சிலர்- பெரிய பதவியிலுள்ளவர்கள் " சிரித்துப் பேசக் கூடாது " என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள். இந்தப் போக்கு மாறவேண்டும். நகைச்சுவை உணர்வால் மட்டுமே - பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில் தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த விதமான இடர்பாடுகளையும் எளிதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது.

சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும். மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான். சிரிப்பு ' கவர்ந்திழுக்கக் ' கூடியது முகம். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள். அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!! இளமையான புன்னகை எனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது. கண்ணுக்கு தெரி்யாமல் உள்ளுக்குள் ஒளிந்து இருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை. தத்துவ டாக்டர்கள், இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி என்கிறார்கள்

உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள், சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.? இன்றைய உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள். நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளைய தலை முறையினர் நட்பை இழக்கிறீர்கள். உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள். இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக அவசியமாகிறது. நல்ல நகைச் சுவைகளை நினைந்து நாம் தனியாக சிரித்தாலும் நம்மை பற்றி மற்றவர்கள் "ஆசாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு" என எண்ணக்கூடும். ஆகவே, அதனையும் கருத்தில் - கவனத்தில் கொண்டு சிரிக்கவும், மனம் விட்டு சிரிக்கவும். நலம் பயக்கும்.

"சிரித்து வாழ வேண்டும் - பிறர் சிரிக்க வாழ்திடாதே"

---- நன்றி சிங்கை கிருஷ்ணன் (இணைய இதழில் வாசித்தது)

என் சிபாரிசு: அப்படியானால் நடிகர் கவுண்டமணி மற்றும் வடிவேலுக்கு டாக்டர் பட்டம் தரலாம்.

Monday, 28 November 2011

உங்களுடைய பிறந்த நாளுக்கும் இனி கூகுள் லோகவை மாற்றும் Doodles..

உலகின் பிரபலமான நாட்களிலும், அறிஞர்களின் விசேஷ நாட்களிலும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து அவர்களுக்கு சமர்பிக்கும். இது Doodles என்று அழைக்கப்படுகிறது. இன்று கூட நீங்கள் கூகுளின் லோகோவை பார்த்தால்  மேரி கியூரியின் 144 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாற்றி அமைத்து உள்ளது. இந்த வரிசையில் தற்பொழுது இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து உங்களுக்கு வாழ்த்து சொல்லும்.
இனி உங்களின் பிறந்த நாளுக்கு கூகுளை ஓபன் செய்தால் கூகுளின் லோகோ மாறி இருக்கும் அதன் மீது உங்கள் கர்சரை நகர்த்தினால் Happy Birthday .... என்ற வாழ்த்தும் வரும். 


இது போன்ற லோகோ மாற்றத்திற்கு நீங்கள் இரு விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். 

1. உங்களின் கூகுள் புரொபைலில் பிறந்த நாள் விவரங்களை கொடுத்து இருக்கவேண்டும். கொடுக்காதவர்கள் இங்கு சென்று கொடுக்கவும். 

2. பிறந்த நாளின் போது நீங்கள் கூகுள் லோகோவை பார்க்கும் முன் கூகுள் அக்கௌண்டில் லாகின் ஆகி இருப்பது அவசியம். 

கூகுளின் இந்த அறிவிப்பை காண - googleblog

வாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் தருவதால் தான் கூகுள் எப்பொழுதும் நம்பர் 1 நிலையிலேயே உள்ளது. 

வாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அளிக்கும் கூகுளுக்கு எனது நன்றிகள்.

Saturday, 26 November 2011

புற்று நோயின் தாக்கம் மற்றும் ஆரம்ப அறிகுறிகள் பற்றிய மருத்துவ விழிப்புணர்வு பார்வை !இந்தியா முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில் 2012-ம் ஆண்டில் மட்டும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். 2008-2011 வரையில் திரட்டப்பட்ட தகவல்களின்படி இது தெரிய வந்துள்ளது.இந்த நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும், அறியாமையுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம். பொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர்பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. பெரும்பாலும் பரம்பரையாக வருகிற புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் புற்றுநோயில் இருந்து நம்மைக் காக்கும். 

"குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் இருந்தால் அடுத்து வரும் தலைமுறையில் புற்றுநோயின் தாக்கம் கட்டாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதேநேரம் புற்றுநோய் ஏற்பட மரபு மட்டுமே காரணம் இல்லை. சுற்றுச்சூழலின் பங்கு 60% இருக்கிறது" என்கிறார் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த வலி மற்றும் நோய் தணிப்பு ஆலோசகர் அசார் உசேன். புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.

வலுப்படுத்தும் உணவுகள்

சில உணவுப் பொருட்களுக்கு நோய்களை எதிர்க்கும் வல்லமை உண்டு. சில உணவு வகைகள் நோய்களின் பாதையில் கொண்டுபோய் நம்மை நிறுத்திவிடும். அதனால் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் குறித்த தெளிவு இருந்தால்தான், நோயற்ற வாழ்வு சாத்தியம். ரெட் மீட் எனப்படும் மட்டன், பீஃப் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் புற்றுநோயைத் தூண்டும் காரணிகள் அதிகம்.

மீன் உணவுகள் ஆபத்தில்லாதது, ஆரோக்கியம் தரும். தாவரங்களில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகளுக்கும், தானிய வகைகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும். ஆண்ட்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கண்ணைப் பறிக்கும் நிறங்களில் இருக்கும் பழங்களில் நோய் எதிர்ப்பு சக்திக் காரணிகள் அதிகம். அவை நல்ல தேர்வாக அமையும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வேண்டாமே மொறுமொறு

சிலர் எப்போதும் எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். இது நாக்குக்கு நல்லதாக இருந்தாலும், உடலுக்கு உகந்தது அல்ல. அதனால் எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயும், கொழுப்பும் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அளவுடன் சாப்பிட வேண்டும்.

அதிகமாக வேக வைக்கப்பட்ட உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பதும் தவறு. ஒருமுறை சமைத்த பொருளை மீண்டும் அடுப்பில் ஏற்றுவது, நோய்க்கு நாமே அழைப்பு விடுப்பதற்குச் சமம்" என்கிறார் அசார் உசேன்.

வழக்கமாக, நோயின் தாக்கம் தீவிரமடைந்த பிறகே பலர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டதுமே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிகிச்சையை எளிமையாக்கும், உடல்வலியையும் குறைக்கும்.

புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகள்!


1. உடலில் எந்த இடத்தில் கட்டி வந்தாலும் அவற்றை உடனே கவனித்துவிட வேண்டும். வலி இல்லை என்ற அலட்சியம் ஆபத்து. காரணம் புற்றுநோய்க் கட்டிகள் பெரும்பாலும் வலியில்லாத கட்டிகளாகவே இருக்கும்.
சில நாட்களில் குணமாகாத கட்டியோ, வீக்கமோ இருந்தால், மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும். பெண்களுக்கு மார்பகத்தில் வலியில்லாத அல்லது வலியுடன் கூடிய கட்டி தோன்றினால் உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும். காரணம் பெண்களை மார்பகப் புற்றுநோயும், கர்ப்பவாய் புற்றுநோயும்தான் அதிகளவில் தாக்குகின்றன.
2. திடீர் எடை குறைவும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும். சிலர் அதற்குத் தாங்களாகவே ஏதாவது காரணம் கற்பித்துக் கொள்வார்கள். இது தவறு. நன்றாகச் சாப்பிட்டும் உடல் எடை தொடர்ந்து குறைகிற மாதிரி இருந்தால், அதை மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெறவேண்டும்.


3. உடலின் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதலும் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று. வாய் அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு, மலம் கழிக்கும்போது ரத்தம் வடிவது ஆகியவையும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளே.


4. காலைக் கடனில் ஏற்படும் திடீர் மாற்றமும் கவனத்தில் கொள்ளவேண்டிய சிக்கல்தான். சிலருக்குத் திடீரென வயிற்றுப்போக்கோ, மலச்சிக்கலோ ஏற்படலாம். இது ஓரிரு நாட்களில் சரியாகாமல் தொடர்ந்தபடி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

புற்றுநோய் அதிகம் தாக்கும் உறுப்பு எது?

தேசியப் புற்றுநோய் பதிவு திட்ட (National Cancer Registry Programme – NCRP) அமைப்பு 2008 முதல் 2011 வரையிலான காலத்துக்குத் தயாரித்த அறிக்கை, இந்தியாவில் காணப்படும் புற்றுநோய் வகைகள் குறித்தும் அவை அதிகமாக உள்ள பகுதிகள் குறித்தும் சில முக்கியக் குறிப்புகளைத் தெரிவிக்கிறது. இந்தியாவில் 2012-ல் 6,82,830 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் 3,56,730,பெண்கள் 3,26,100. அதாவது வளர்ந்தவர்களில் ஒரு லட்சம் பேரில் 64.49 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். உலகம் முழுக்க 2012-ல் 82 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவு அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஆண்களுக்கு நுரையீரல், வாய், உணவுக்குழாய், வயிறு ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. பெங்களூர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, திரிபுரா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகம் பதிவாகியிருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரம், போபால் (ம.பி.) ஆகியவற்றில் வாய் புற்றுநோய் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.
முதல்முறையாக, வட கிழக்கு மாநிலங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவர்களுக்கு ஜீரண மண்டலத்தின் மேல்பகுதிகளில்தான் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வாய்க்குழி, வாயும் உணவுக்குழாயும் இணையுமிடம், தொண்டையின் கீழ்ப்புறம், குரல்வளையின் மேல் பகுதி ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. அசாமிலும் மேகாலயத்திலும் உணவுக்குழாய் புற்றுநோய் சகஜம். சிக்கிம், மிசோரத்தில் வயிற்றுப் புற்றுநோய் அதிகம்.
பெண்களைப் பொருத்தவரை மார்பகப் புற்றுநோயும் கருப்பைவாய்ப் புற்றுநோயும் அதிகம். மணிப்பூர், மிசோரத்தில் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகம். மேகாலயத்தில் உணவுக்குழாய் புற்றுநோய் அதிகம். தைராய்டு சுரப்பியிலும் மார்பகத்திலும் புற்றுநோய் ஏற்படுவது கேரளத்தின் கொல்லம், திருவனந்தபுரத்தில் அதிகம்.


வயது அடிப்படையில்
உலகம் முழுக்கப் புற்றுநோயைக் கணக்கிடவும் மதிப்பிடவும் வயதை அலகாகக்கொள்வது வழக்கம். அதை ஏ.ஏ.ஆர். (Age adjusted or Age standardized rate) என்பார்கள். மேகாலயம் (கிழக்கு காசி மலை மாவட்டம்), மிசோரம் (அய்ஜால் மாவட்டம்), அசாம் (காமரூபம் மாவட்டம்) ஆகியவற்றில் ஏ.ஏ.ஆர். அதிகம். இங்கெல்லாம் உணவுக்குழாய், உணவுக்குழாயும் வாயும் இணையும் பகுதி, குரல்வளை ஆகியவற்றில் புற்றுநோய் தாக்குதல் அதிகம்.


சிறுவயது புற்றுநோய்
முதல்முறையாக, சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்தும் தனிக் கவனம் செலுத்தித் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. புற்றுநோய் கட்டிகளால் பாதிக்கப்படும் நோயாளிகளில் குழந்தைகள் கணிசமாக இருக்கின்றனர். சிறுவர்களில் கிழக்குக் காசி குன்றுகள் (0.8%) குறைவாக உள்ள இடமாகவும் டெல்லி (5.8%) அதிகமாக உள்ள இடமாகவும் இருக்கின்றன. சிறுமிகளில் கிழக்கு காசி குன்றுகளில் குறைவாகவும் (0.5%) ஆமதாபாத் ஊரகப் பகுதிகளில் அதிகமாகவும் (3.4%) புற்றுநோய் காணப்படுகிறது. பெரியவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பைக் கணக்கிடும்போது லட்சத்தில் இத்தனை பேருக்கு என்று கணக்கிடுவது வழக்கம். சிறுவர், சிறுமியருக்குப் பத்து லட்சத்தில் இத்தனை பேருக்கு என்றுதான் கணக்கிடுவது வழக்கம். குழந்தைகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு மிகக் குறைவாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை.


நன்றி :  டாக்டர் அஸார் உசேன் , 
               அடையாறு புற்றுநோய்மையம்,               சென்னை.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.