Monday, 14 November 2011

கிரீன்விச் உலக நேரம் மாறுகிறதா ? ஒரு சிறப்பு பார்வை..

இன்றுவரை, உலகின் நேர கணிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வரும், கிரீன்விச் தீர்க்க கோடு கணிப்பானது, இனி வரலாற்றுக் குறிப்பாக மட்டுமே ஆகிவிடலாம்.
புவி சுழற்சியின் அடிப்படையில் இல்லாது, அணு கடிகாரத்தின் அடிப்படையில், உலகின் நேரத்தைக் கணித்தல் என்ற திட்டத்தைப் பற்றி ஆலோசிக்க, உலகின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், பிரிட்டனில் கூடி விவாதித்து வருகின்றனர். நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும் கூட்டத்தில், புகழ்பெற்ற லண்டன் ராயல் சொசைட்டியின் ஆதரவில், லண்டன் மாநகரில் சுமார் 50 விஞ்ஞானிகள் இதுதொடர்பாக விவாதித்து வருகின்றனர். 
அடுத்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில், சர்வதேச தொலைதொடர்பு யூனியன்(International Telecommunication Union) கூட்டம் கூடி, உலகின் நேரம் கணித்தலில், இந்தப் புதிய முறையை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
இதேசமயத்தில், சுமார் 127 வருடங்களாக புழக்கத்தில் இருக்கும் கிரீன்விச் முறையை(Greenwich Mean Time - GMT) மாற்றுவதற்கு பிரிட்டன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனெனில், தங்களின் தேசியப் பெருமையை இழக்க அந்நாடு விரும்பவில்லை மற்றும் அதன் பழைய எதிரியான பிரான்ஸ், கிரீன்விச் முறையை மாற்றியே தீருவது என்று உறுதியாக உள்ளது.
கடந்த 1884ம் ஆண்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டில், கிரீன்விச் நேரத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே மாநாட்டில், பாரிஸ் தீர்க்க ரேகை நேரத் திட்டத்தை ஏற்க பிரான்ஸ் நாடு வலியுறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரீன்விச் நேரம் என்பது 1972ம் ஆண்டில், சர்வதேச ஒருங்கிணைந்த நேரம்(Universal Coordinated Time - UTC) என்று பெயர் மாற்றப்பட்டாலும், கிரீன்விச் நேரம் என்ற பெயரும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த GMT ஆனது, உலகின் பல பகுதிகளின் ஆய்வகங்களிலுள்ள சுமார் 400 அணு கடிகாரங்களின் இயக்க அடிப்படையில் கணிக்கப்பட்டு, பின்னர், "லீப் விநாடிகள்" மூலம் திருத்தப்பட்டு, புவியின் சுழற்சியோடு ஒத்தமைக்கப்படும். ஏனெனில் புவியின் சுழற்சி வேகம் அவ்வப்போது மாறுபடக்கூடியது.
புவியின் சுழற்சி வேகம் மற்றும் அணு வேகம் ஆகியவற்றுக்கிடையிலான சிறிய மாறுபாடானது, Global Positioning System - GPS எனப்படும் உலக நிலைத்தன்மை அமைப்பு மற்றும் மொபைல் போன் நெட்வொர்க் ஆகியவற்றில் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இந்தவகை தொழில்நுட்பம் மற்றும் இணைப்புகள், மில்லி விநாடிகள்(Milliseconds) அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டியவை. எனவேதான் மாற்றம் தேவைப்படுகிறது. எனவே, லீப் விநாடிகள் முறையை நீக்கிவிட்டு, முழுவதும் அணு அடிப்படையிலான நேரத்தை கொண்டு வருவது குறித்து சிந்திப்பதே லண்டன் விவாதத்தின் நோக்கம்.
ஒவ்வொரு 60 முதல் 90 வருடங்களுக்கும், சுமார் 1 நிமிடம் வரை, கிரீன்விச் நேரத்திலிருந்து அணு நேரம் வெளியேறுகிறது. கிரீன்விச் நேரம் என்பது, தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ள கிரீன்விச் வானிலை ஆய்வுக்கூடத்தின் நேரே உள்ள ஜீரோ மெரிடியன் லைன்(Zero Meridian Line) மீது சூரியன் கடந்து செல்வதை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகிறது.
நன்றி :கல்வி மலர் 

No comments:

Post a Comment