Tuesday, 31 December 2013

புது வருட கவிதை !!


புது வருட கவிதை !!

"பிறக்கவில்லை புது வருடம்",
எதுவும் மாறவில்லை, 
அதுதான் காரணம்.

வானில் வேட்டு வேடிக்கை,
வாழ்வில் சோக வாசனை,
இது புது வருடம் அல்ல,
நேற்றய வருடங்களின் தொடர்சி.

பசி தீரவில்லை,
பஞ்சம் அகலவில்லை,
கண்ணீர் குறையவில்லை,
அகதிகள் அழியவில்லை,
வாழ்வில் பசுமையில்லை,
வாழவும் தெரியவில்லை,
மனிதரில் மனிதம் இல்லை,
மன்னிக்கத் தெரியவில்லை,

தாயின் பாசத்திலும் ஒரு கலக்கம்,
தந்தையின் அரவணைப்பிலும் ஒரு குழப்பம்,
பிள்ளையின் ஆதரவிலும் சில திருத்தம்,
கணவனின் காதலிலும் ஒரு காயம்,
மனைவியின் நேசத்திலும் ஒரு மாயம்,
நண்பனின் நட்பிலும் சில நடுக்கம்,
சொந்தங்களின் அன்பிலும் ஒரு சோகம்,
ஆகவே புது வருடம் இன்னும் பிறக்கவில்லை.

சமாதனம் மலர வேண்டும்,
சமத்துவம் ஓங்க வேண்டும்,
வசந்தம் வருட வேண்டும்,
பசுமையோடு உறங்க வேண்டும்.

செல்வம் பெருக வேண்டும்,
மகிழ்ச்சி தொடர வேண்டும்,
விவசாயம் செழிக்க வேண்டும்,
விஞ்ஞானம் வளர வேண்டும்.

பணம் பறிபோக வேண்டும்,
பண்டமாற்று மீண்டும் அறிமுகமாக வேண்டும்,
யாவரும் உழைக்க வேண்டும்,
எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

மழழைச் சிரிப்பொலி கேட்க வேண்டும்,
குழந்தை போல் நாமும் மாற வேண்டும்,
சொந்தங்கள் இணைய வேண்டும்,
சுகங்கள் தொடர வேண்டும்.

புது யுகம் மலர வேண்டும்,
பூமி பூமாலை அணிய வேண்டும்,
இப்படியொரு புது வருடம் பிறக்க வேண்டும்,
நானும் அதை ரசிக்க வேண்டும்.

எதிர்பார்க்கிறேன் ஆவலாய்.....
கற்பனை அடுத்த ஆண்டில் நிஜமாகும்,
என்ற நம்பிக்கையில்....பூத்தது புது வருடம்
பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்

நடந்து முடிந்தது முடிந்தது - இனி
நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.

எதிர்காலத்தை திட்டமிடுவோம்
எண்ணங்களை வசப்படுத்துவோம்

கடந்த வருடம்- நம்
கஷ்டங்களை கொண்டு போகட்டும்

புது வருடம் – பல
புதுமைகள் காண உதவட்டும்

நினைவுகளாய் இருக்கும் கனவுகள்
நிஜமாய் மாறட்டும்

இன்னொரு ஜென்மம் உண்டென்றால்
இந்த சொந்தங்கள் தொடரட்டும்

நம் வீட்டு சொந்தங்கள்
நலம் வாழ நாளும் பிராத்திப்போம்!!


இப் பூவுலகின் 
புது வருகையே .... 
வசந்தங்கள் -வாழ்த்து "பா" 
இசைக்கட்டும் 
பனி மழையாய்.... 
பன்னீர் மழைதுளிகள் , 
பூ....., 
நின் வருகைக்கு 
இயற்கையின் ஆசிர்வதிப்போ ! 
உந்தன் மீது 
எந்தன் அன்பாய்...

Wednesday, 25 December 2013

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல்..

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு...
வணக்கம். வளர்க நலம்.

'இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் சென்னையில் 'சிந்தனையாளர்கள்’ பங்கேற்ற அரியதோர் கருத்தரங்கில் நீங்கள் ஆற்றிய உரையில் வழங்கிய அபூர்வமான விளக்கங்களை நான் அறிய நேர்ந்தது.
'இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து விரிவான, தெளிவான, நேர்மையான, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்று ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம்’ என்று நீங்கள் சங்கநாதம் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

ஈழ நிலத்தில் இலங்கை அரசு இனப்படுகொலையை நடத்தியது என்று முதன்முதலாக நீங்கள் ஒப்புக்கொண்டதற்கு நன்றி. உங்கள் வாக்குமூலம் மத்திய அரசின் வாக்குமூலம் என்று நாங்கள் ஏற்கக்கூடுமா? மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் திரு. ராசா 'இனப்படுகொலை’ என்று பேசியதை அவைக்குறிப்பில் இருந்து உங்கள் அரசு அகற்றியது ஏன்? இன்றுவரை மத்திய அரசு ஈழத் தமிழர் அழிவை 'இனப்படுகொலை’ என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே. உங்களுக்குத் தெரிந்த இந்த உண்மை, நீங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் மன்மோகன் அரசுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது?

இரண்டாம் உலகப் போரில் யூத இனத்தைப் படுகொலை செய்த ஹிட்லரின் நாஜிப் படையின் இரக்கமற்ற நடவடிக்கைகளால் அதிர்ந்துபோன சர்வதேச சமுதாயம், 'இனியரு முறை இதுபோன்ற அரக்க மனதுடன் எந்த அரசும் செயல்பட அனுமதிக்கலாகாது’ என்று தீர்க்கமான முடிவுடன்... ஐக்கிய நாடுகளின் பொதுக்குழுவில் டிசம்பர் 9, 1948 அன்று இனப்படுகொலையைத் தடுக்கவும். மீறுவோரைத் தண்டிக்கவும் ஓர் அமைப்பை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, ஜனவரி, 12, 1951 அன்று நடைமுறைப்படுத்தியது. அதுதான் ‘Genecide convention’ என்பதை அறிவார்ந்த நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். ஓர் அரசு இழைக்கும் கொடுமைகளிலேயே கடுமையானதும், மன்னிக்க முடியாததும் இனப்படுகொலை என்பதில் இரு கருத்து இருக்கவே இயலாது.
'இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என்று நீங்கள் மனிதகுல நாகரிகத்தின் உச்சத்தில் நின்று உரத்த குரலில் அறிவித்துவிட்டீர்கள். ஆனால், இனப்படுகொலை இலங்கை அரக்கர்களால் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியபோது நீங்களும், உங்கள் மத்திய அரசும் வெறும் மௌனப் பார்வையாளர்களாக மட்டும் இருக்கவில்லை; அந்த மாபாதகச் செயலுக்குப் பக்க பலமாகவும் இருந்தீர்கள் என்பதை உலகம் நன்கறியும். ஈழத் தமிழர் அழிவுக்கு நாள் குறித்த இலங்கை அரசுக்கு இணக்கமாக நடந்துகொண்ட நீங்கள், போரை நிறுத்த எவ்வளவோ முயன்றதாகச் சொல்கிறீர்கள். கேழ்வரகில் நெய்யென்றால் கேட்பவர்களுக்கா புத்தியில்லை?
'குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது’ என்கிறீர்களே... குற்றவாளிகள் ராஜபக்ஷே சகோதரர்களைத் தவிர வேறு யார்? ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்றுகுவித்த ராஜபக்ஷேவை உங்கள் அரசுதானே குடியரசு மாளிகையில் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று விருந்தோம்பி மகிழ்ந்தது? காமன்வெல்த் விளையாட்டு அரங்கில் அவருக்குத் தனிமரியாதை தந்து பரவசப்பட்டவர் நம் பாரதப் பிரதமர்தானே! புத்தகயாவிலும், திருப்பதியிலும் அவர் புனித யாத்திரை நடத்துவதற்கு அனுமதியும், பாதுகாப்பும் அளித்தது யார்? நீங்கள் அறிவாளி என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக, நாங்கள் எதையும் நம்பும் முட்டாள்கள் என்று நீங்கள் முடிவெடுத்துப் பேசுவதில் நியாயமில்லை.
'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர்களின்வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் பெற்றுத்தரும் 13-வது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை இந்தியா ஓயாது’ என்றும் நீங்கள் சுருதி பேதம் சிறிதும் இல்லாமல் சொல்லி இருப்பதைப் படித்தபோது சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை சிதம்பரம் அவர்களே!
ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-ல் உருவானது. அது, இடையில் அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தமாக நவம்பர் 14, 1987 அன்று அங்கீகரிக்கப்பட்டது. இடையில் 26 ஆண்டுகள் ஓடிவிட்டன. நீங்களும், இந்திய அரசும் இன்றுவரை இடையறாமல் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வை 13-வது திருத்தம் மூலம் பெற்றுத்தருவதற்கு இரவு பகல் பாராமல் முயன்றுகொண்டிருக்கிறீர்கள். ஆனால், அந்த அரசியல் தீர்வோ இந்திய அரசின் இயலாமையால் தொடுவானம்போல் பிடிபடாமல் விலகி நின்று வேடிக்கை காட்டுகிறது. ஏன் இந்த நிலை என்று எவரேனும் கேட்டால், விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என்று தயங்காமல் பழிதூற்றுவீர்கள்.
விடுதலைப் புலிகள் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கை ராணுவத்தால் மே 18, 2009 அன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக ராஜபக்ஷே ஆரவாரத்துடன் அறிவித்து நான்கரை ஆண்டுகள் நடந்துவிட்ட பின்பும், 13-வது திருத்தம் ஏன் நடைமுறைக்கு வரவில்லை நிதியமைச்சரே? போர் நடந்த நேரத்தில் 13-வது திருத்தம் வழங்கும் உரிமைகளோடு கூடுதலாகவும் சில உரிமைகள் ஈழத் தமிழருக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய ராஜபக்ஷேவின் வாய் மலர்ந்த அரசியல் தீர்வுதான் '13 ப்ளஸ்’ என்பதை அரசியல் விழிப்பு உணர்வுள்ள ஒருவராவது மறக்க முடியுமா? இன்று அதே ராஜபக்ஷே, 'தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது பற்றிப் பேச நான் என்ன முட்டாளா?’ என்று ஆணவத்துடன் பத்திரிகையாளர்களிடம் பதிவு செய்ததையும், '13 மைனஸ்’ என்று புதிய பல்லவி பாடுவதையும் மன்மோகன் அரசு ஏன் மனதில் கொள்ளவில்லை?
ஈழத் தமிழருக்குரிய உரிமைகள் அனைத்தையும் அள்ளி வழங்கும் அதிசய அட்சய பாத்திரம் 13-வது திருத்தம் என்பது போன்ற பொய்யான மாயத்தோற்றத்தை நீங்களும், காங்கிரஸ் அறிவு ஜீவிகளும் இன்னும் எவ்வளவு காலம் உருவாக்கி இந்த இனத்தை ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய மாநிலங்களுக்குரிய உரிமைகள் ஈழ மண்ணில் வடக்கிலும் கிழக்கிலும் சென்று சேர இந்த 13-வது திருத்தம் எந்த வகையில் உதவக்கூடும்? ராஜபக்ஷேவின் கண்ணசைவுக்கு ஏற்பக் காரியமாற்றும் ஆளுநரே உண்மையான நிர்வாக அதிகாரம்(executive power) உள்ளவர். அவருக்கு 'உதவுவதும் பரிந்துரைப்பதும்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் பணி. நிதி மேலாண்மை ஆளுநர் வசம். ஆளுநர் விருப்பத்துக்கு இசைய மறுக்கும் மாகாண சபை கலைக்கப்படும். அந்த அதிகாரம் இலங்கை அதிபர் கையில்... 13-வது திருத்தம் சொல்லும் செய்தி இதுதானே!
சட்டம்-ஒழுங்கு, காவல் துறை, அரசு நிலம் என்று எதன் மீதும் முற்றுரிமை மாகாண அவைக்கு அறவே இல்லை. 'தேசிய நலன்’ என்ற போர்வையில் இலங்கை நாடாளுமன்றம் தமிழர் நலனுக்கு எதிராக எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியும். இதுதானே நீங்கள் முயன்று உருவாக்கிய 13-வது திருத்தத்தின் அம்சங்கள்! 'வடக்கும் கிழக்கும் இணைந்து ஒரே மாகாணமாக மாறும். சிங்களத்துடன் தமிழ், இலங்கையின் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்படும்; ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும்’ என்ற இரண்டு அம்சங்கள் மட்டுந்தான் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உருப்படியானவை. ஆனால், அந்த இரண்டும் சிங்கள பௌத்த பேரினவாத கூட்டத்தால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டபோது, 'காந்தியின் குரங்குகளாக’ (இது தவறான சொற்பிரயோகம் இல்லை) நீங்கள் அனைவரும் காட்சி தந்தது ஏன்? விளக்குவீர்களா? எந்த உரிமையும் தமிழருக்குத் தருவதற்கு வழிவகுக்காத இந்த 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் சிங்கள அரசுக்குச் சம்மதம் இல்லை. இதை நடைமுறைப்படுத்தி ஈழத் தமிழரின் 'அரசியல் அதிகாரம்’ பழுதுபடாமல் பாதுகாக்கப்படும் வரை இந்திய அரசும் நீங்களும் ஓயப்போவதே இல்லை. நல்ல நாடகம்.
நீங்கள் ஒரு கற்றறிவாளர், புகழ்பெற்ற வழக்கறிஞர்; சர்வதேச சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர். இந்த ஏதுமறியாப் பாமரனுக்கு நீங்கள்தான் தெளிவான பதிலைத் தரக்கூடும். இரண்டு இறையாண்மை மிக்க நாடுகள் பலமுறை கூடிப் பேசி, விவாதித்து... இறுதியில் ஓர் ஒப்பந்தத்தில் கையப்பமிட்டால், அந்த ஒப்பந்தம் இரு நாடுகளையும் சம அளவில் கட்டுப்படுத்துவதுதானே நியாயம்? பின்னாளில் அரசுப் பொறுப்பில் அமரும் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப ஒரு நாடு தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தைக் குப்பைக்கூடையில் வீசியெறிந்தால், அந்த இழிசெயலை இன்னொரு நாடு பார்த்தும் பாராமல் நடந்துகொண்டால், இரண்டு அரசுகளின் 'இறையாண்மை’ என்னாவது? இறையாண்மை பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள்தான் இந்த அறிவிலிக்கு விளக்கவுரை வழங்க வேண்டும்.
ராஜபக்ஷே அரசு, இப்போது 13-வது திருத்தத்தை நிராகரித்தாலோ, நீர்த்துப்போகச் செய்தாலோ, தார்மிக அடிப்படையில் அது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் தகுதியை இழந்துவிடாதா? அதனுடைய தவறைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா? நீங்கள்தான் எனக்குத் தெளிவுரை தரவேண்டும். காரணம், காங்கிரஸில் உள்ள 'அறிவுஜீவிகளின் ஆதர்சம்’ நீங்கள் ஒருவர்தான் என்று பழைய காங்கிரஸ்காரனாகிய நான் பூரணமாக அறிவேன்.
'இலங்கை இறையாண்மை பெற்ற தனி நாடு. அங்கு சிறுபான்மையினர் தனி நாடு கேட்க முடியாது. இதில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது. அறிவுப்பூர்வமாக அரசியல் முடிவெடுக்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்கிய நீங்கள், இந்தியாவில் காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களின் பிரிவினை கோரிக்கையை நினைவூட்டியிருக்கிறீர்கள். இந்திரா காந்தி வங்கதேசத்தைப் பிரித்துக் கொடுக்கப் படை நடத்தியபோது 'பாகிஸ்தான் இறையாண்மை’ பறிபோவதை ஏன் சிந்திக்கவில்லை? ஈழத் தமிழரின் பசியாற்ற ராஜீவ் காந்தி வான்வழியாக விமானங்களை அனுப்பி உணவுப்பொருள்களை வீசியபோது 'இலங்கை இறையாண்மை’ மீறப்படுவதை ஏன் பொருட்படுத்தவில்லை? அப்போதெல்லாம் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பிரிவினைக்குரல் எழவில்லையா?
'ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவது எளிதல்ல’ என்று புத்தஞானம் போதிக்கிறீர்கள். அல்பேனியர்களுக்கும் செர்பியர்களுக்கும் ஒத்துவராத நிலையில் நடந்த இனப்போரில் 11 ஆயிரம் பேர் பலியானதும், பத்து லட்சம் அல்பேனியர்கள் துரத்தியடிக்கப்பட்டதும், செர்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட அல்பேனியர்கள் சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரத்துடன் 'கொ சோவா’ தனிநாடு கண்ட சரித்திரம் உங்களுக்குத் தெரியாதா? யுகோஸ்லேவியா இன அடிப்படையில் சிதறுண்டதைச் சிந்தியுங்கள்.
ஆப்பிரிக்காவில் எரித்ரியா, தெற்கு சூடான், இந்தோனேஷியாவின் பிடியில் இருந்து விடுபட்ட திமூர் ஆகியவற்றில் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தனி நாடு கண்ட வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பணிகளுக்கிடையில் கொஞ்சம் பிரித்துப் படியுங்கள். நீங்கள் மிகவும் 'சீரியஸான’ மனிதர் என்று இதுவரை நினைத்திருந்தேன். வடிவேலுவைவிட நகைச்சுவை உங்களுக்கு நன்றாக வருவதை இன்றுதான் அறிந்தேன். 'சர்வதேச அரங்கில் மன்மோகன் அரசு கடந்த நான்கரை ஆண்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சியினால்தான், கனடா போன்ற நாடுகள் கொழும்புக்கு எதிராகப் பேசிவருகின்றன’ என்று எப்படி உங்களால் இவ்வளவு நகைச்சுவையாகப் பேச முடிகிறது? கொஞ்சம் போனால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மன்மோகனிடம் நடத்திய ஆலோசனைப்படியே யாழ்ப்பாணம் போனதாகவும், காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகப் பேசியதாகவும் கதை சொல்ல முனைவீர்களோ?
சிதம்பரம் அவர்களே... சமத்துவம் இல்லாத இடத்தில் சமதர்மம் இருக்காது. சமதர்மம் நிலவாத சூழலில் சுதந்திரக் காற்றை யாரும் சுவாசிக்க இயலாது. சிங்கள பௌத்த பேரினவாத அரசும், ராஜபக்ஷே சகோதரர்களும், இனவாத அமைப்புகளும், வெறிபிடித்த பௌத்த துறவிகளும்(!) ஒருநாளும் ஈழத் தமிழருக்கு எந்த உரிமையும் வழங்கப்போவது இல்லை. இலங்கையைப் போன்ற போக்கிரி அரசை 'நட்பு நாடு’ என்று நீங்களும் உங்கள் அரசும் பாராட்டலாம். ஆனால், உலக நாடுகள் நீண்ட நாள் வேடிக்கை பார்க்காது. ஒரு நாள் அவை வெகுண்டு எழும். அப்போது ஈழ மக்கள் வாக்கெடுப்பு (Referendum) மூலம் நிச்சயம் தமிழீழம் மலரும்.
'குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்தியா ஓயாது’ என்றீர்கள். அடுத்த நாளே அந்தக் குற்றவாளிகளின் கடற்படையை வலுப்படுத்தி எங்கள் மீனவர்களை மேலும் கொன்று குவிக்க வழிவகுக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நம்பகத்தன்மை இல்லை என்பதை நீங்களே இதற்கு முன்பு நிரூபித்திருக்கிறீர்கள். தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகி, ஜனநாயகப் பேரவை நாயகராக நீங்கள் வலம் வந்தபோது ஒரு வார இதழில் 'நமக்கே உரிமையாம்’ என்று ஒரு கட்டுரைத் தொடரை வடித்துத் தந்தது உங்கள் நினைவில் நிழலாடுவது உண்டா? 'இந்தியாவின் தேர்தல் விதிகளை மாற்றுவதை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். முதலில் மாற்றப்பட வேண்டிய விதி எது தெரியுமா? யாரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ இருக்க முடியாது என்றொரு விதியை இயற்ற வேண்டும். அதேபோல் யாரும் மூன்று பதவிக் காலங்களுக்கு (15 ஆண்டுகளுக்கு) மேல் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் தடைவிதித்து சட்டம் இயற்ற வேண்டும். பழையன கழிவதற்கும், புதியன புகுவதற்கும் இதுவே சிறந்த வழி’ என்று அதில் ஊருக்கு உபதேசம் செய்தீர்களே... அதன்படி நீங்கள் நின்றீர்களா? 'தேர்தல் விதியையே மாற்றி எழுதிய’ மகத்தான மனிதரல்லவா நீங்கள்!
பாவம் நீங்கள்... 'இந்த கூட்ட அமைப்பாளரும் நான்தான். அழைப்பாளரும் நான்தான். பேச்சாளரும் நான்தான்’ என்று எவ்வளவு வெளிப்படையாக உங்கள் இதய வலியை இறக்கிவிட்டீர்கள்! முதலில் பல்குழுக்களாகப் பாழ்பட்டுக் கிடக்கும் தமிழ்நாடு காங்கிரஸை ஒன்றாக்கப் பாருங்கள். அதற்குப் பிறகு இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக்க ஓயாமல் போராடலாம்!

Monday, 23 December 2013

உங்களுக்கு சர்க்கரை நோயா!! ஒரு விழிப்புணர்வு தகவல்...

சர்க்கரை நோயை குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய், பெரியவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்: 
அதிகப்படியான சிறுநீர் கழிப்பது, அதிக அளவில் தாகம் ஏற்படுவது, அடிக்கடி தோன்றும் பசி உணர்வு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் முதல் வகை குழந்தை சர்க்கரை நோயாளிகளுக்கு வெகு வேகமாக அதிகரிக்கும். ஆனால், இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளுக்கு (பெரியவர்கள்) மிக மிக மெதுவாகவும், கண்டுபிடிக்க முடியாதவாறும் அல்லது அறவே இல்லாதவாறும் தோன்றும்.
சர்க்கரை நோய்க்கான காரணங்கள்: 1. வாழ்வியல் மாற்றங்கள்; 2. முறையற்ற உணவுப் பழக்கங்கள்; 3. நீண்ட நேர பகல் தூக்கம்; 4. உடற்பயிற்சி இன்மை; 5. மன அழுத்தம்; 6. பாரம்பரிய காரணங்கள்.
நோயாளியின் உடற்கூறு, வயது, பாலினம், குடும்பப் பின்னணி, நோயின் நிலை இவற்றை ஆராய்ந்த பின்னரே ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதால், நோயாளிக்குப் பொருத்தமான அளவில் சிகிச்சை அமைகிறது. சாந்திகிரி ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவமனையில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன.இங்கு தரப்படும் பஞ்சகர்மா சிகிச்சை முறைகளில் உடலினுள் உள்ள நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன.

மாத்திரை  இல்லாமல் நோயின் பிடியில் இருந்து எளிதில் விடுபட இதோ ஒரு எளிய மூலிகை.தினமும் ஒரு   சிறுகுறிஞ்சான்  இலை,இனி சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டில் மதுமேகம் என்னும் நீரிழிவு (சர்க்கரை நோய்)  தோன்றும்  வழி அகத்தியரால்  பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.


 “கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுடணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே”

அதாவது பலருடன் அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல் / மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவு வகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி அதற்கேற்ப உடல் உறவு, மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போது மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது என்று குறிப்பிடபட்டுள்ளது.


 நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்” எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்” ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக” உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் சுரோணிதம் / எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.

 இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் நீரிழிவு உடையவர்களுக்கு இது ஒன்றன்பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைந்து உடல் நலிந்து சீர்கெடுகிறது.இது அளவில் மிகும்போது கண் மற்றும் சிறுநீரகம் ,கணையம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்க படுகிறது.


நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ மனைக்குச் சென்றால் அங்கு தேவையான சோதனைகளைச் செய்வார்கள். அவற்றுள் சில...

இரத்தம்:
- சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.
- கொழுப்பின் அளவு
- யூரியா(உப்பு)வின் அளவு
- ஈரலின் செயல்பாட்டை அறிந்து கொள்ள உதவும் சில சோதனைகள்

சிறுநீர்:

- சிறுநீரில் சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.
- சிறுநீரில் புரதம், அசிடோன்

- மேலும் சில சோதனைகள்

மேலும் ஒரு தேவையான சோதனை HbA1c எனப்படும் ஒரு குறுதிச் சோதனையாகும். இந்த சோதனை வசதி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. சர்க்கரை நோய் சிறப்பு நிலையங்களிலோ அல்லது பெரிய இரத்தச் சோதனை நிலையங்களிலோ இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சர்க்கரை அளவின் சராசரியை இந்தச் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். அவ்வப்போது செய்யப்படும் சர்க்கரைச் சோதனைகள் உணவிற்குத் தக்கவாறும் நேரத்திற்குத் தக்கவாறும் மாறுவதால் இந்த HbA1c சோதனை ஒரு சரியான அளவுகோலாகக் கருதப்படுகிறது. 

என்ன. இந்த "இனிப்பு" நோயின் கசப்பான விளைவுகளை அறிந்து கொண்டதும் அச்சமாக இருக்கிறதா? இந்தக்கட்டுரையின் நோக்கம், சர்க்கரை நோயின் கொடிய விளைவுகளை அறியத்தருவதும் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் அதைச் சாமர்த்தியமாகவும் எளிதாகவும் கையாண்டு மேற்சொன்ன சிக்கல்களை தவிர்க்கும் வழிகளை அறியத் தருவதுமாகும். அச்சம் தவிருங்கள் இனி ஆக வேண்டியவைகளைக் காண்போம். இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை எப்படி மேலாண்மை செய்வது? எவ்வாறு மேலும் சிக்கல்கள் நேராமல் பார்த்துக் கொள்வது? கட்டுரையின்  நோக்கத்தை இனிக் காண்போம்.


சர்க்கரை நோயாளிகளுக்கு மூலிகை..
 இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன், பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது, கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்துவந்துள்ளது. ஆனாலும்   இந்திய மருத்துவ முறைகளில் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.

 சிறுகுறிஞ்சான் தென்இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோய்  ஆங்கில மருத்துவத்தில் இருபிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை
1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
2. இன்சுலின் தேவையற்றது..
இதில் சிறு குறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.
சிறுகுறிஞ்சானின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. இந்த  இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பிசெல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறுகுறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.இது  ஒரு கொடி வகையை சார்ந்த மூலிகையாகும்...இதனை எளியமுறையில் வீட்டில் தொட்டியில் வைத்தோ அல்லது வீட்டின் அருகில் உள்ள சிறிய இடத்திலோ எளிதாக  வளர்க்க முடியும்.போலி மருத்துவர்களையும்,போலி மருந்துகளையும் நம்பாமல் நாமே இது போன்ற நோய் தீர்க்கும் சிறு சிறு மூலிகை செடிகளை நட்டு பயன் பெறலாம்.சிறுகுறிஞ்சான் மற்றும் அனைத்து வகையான  மூலிகை நாற்றுகளையும்,

இரண்டாம் நிலை சர்க்கரை நோயா? இனி இன்சுலின் மருந்து எதற்கு?
இன்றைய சூழ்நிலையில் சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ்சை துடைத்து போடும் அளவுக்கு செலவாகிறது. இதில் சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என கவலைப்படுவோர்களுக்கு செலவில்லாமல் ஒரு இயற்கை வைத்தியம் கைகொடுக்கின்றது. 

இன்சுலின் செடிகளை வீட்டில் வளர்ப்பதினால் சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இந்த செடியின் இலை சிறந்த மருந்தாக செயல் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது தற்போதைய நிலை. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அதன் பலன் அறியலாம். 

இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க விஞ் ஞானிகள். ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு (costuspictus) காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இந்தச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் செடியின் இலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை யின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. பல்லாண்டு பயிரான காஸ்டஸ்பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடையலாம்..


சீத்தா இலை

நீரிழிவு நோயாளிகள் சீத்தா இலையை(துளிர் மற்றும் பழுத்த இலைகளை எடுக்கக்-கூடாது) மிதமான பச்சை இலைகளை 8க்கு மிகாமல் பறித்து நன்றாக கழுவி 300மில்லி தண்ணீருடன் சேர்ந்து இரவில் கொதிக்கவிட்டு முடி வைத்துவிட வேண்டும். தொடர்ந்து மறுநாள் காலையில் கொதிக்க வைக்க வேண்டும். 200 மில்லி குறையாமல்காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் அளவு மிதமான சூட்டில் சாப்பிட்டு வர படிப்படியாக உடம்பில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதன் சுவை உவர்ப்பு, கசப்பு எதுவும் இருக்காது. அருந்துவதற்கு சுவையாக தேநீர் போன்று இருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்பிடுபவர்களும் இந்த சீத்தா இலை மருந்தை சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) சாப்பிட்டு வர, மாத்திரை தேவைப்படாது. சர்க்கரை நோயாளிக் அனைத்து பலகார வகைகளை சாப்பிடலாம். இந்த இலைசாறின் மகிமை உடலில் மாற்றம் ஏற்படுத்துவதுடன், சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. பார்வை கோளாறுகளை சரி செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும். கால் வலியும் -குணமாகும் என்கிறார். 


மூன்று தலையாய விஷயங்கள் இந்த நோயை மேலாண்மை செய்வதிலே இருக்கின்றன.

1. உணவுக் கட்டுப்பாடு
2. தேவையான மருந்துகளைத் தவறாமல் எடுத்தல்
3. தேவையான அளவு உடற்பயிற்சி.

ஏன் உணவுக் கட்டுப்பாடு தேவை?
இந்தக் கட்டுரையின் துவக்கதில் கண்ட சில அடிப்படையான செய்திகளை மீண்டும் நினைவு கூர்ந்தால் உங்களுக்கு ஓர் உண்மை தெரியவரும். இரத்தத்தில் சேரும் அதிகப் படியான சர்க்கரையைச் சேமித்து வைத்துக் கொள்ள உடல் ஏதுவாக இருக்கவில்லை என்றும் அதனால்தான் மேற்கண்ட சிக்கல்கள்தோன்றுகின்றன என்றும் கண்டோமல்லவா? ஏதாவது ஒரு வழியில் அதிகப்படியான சர்க்கரையைச் சேரவிடாமல் செய்துவிட்டால்? சிக்கல்களைத்தவிர்க்கலாமல்லவா? ஆம் அதில் ஒன்றுதான் உணவுக் கட்டுப்பாடு. இந்த உணவுக் கட்டுப்பாட்டைக் கைக் கொள்ள வேண்டுமானால் முதலில்.உங்கள் உடலுக்குஎவ்வளவு கலோரி(சக்தி) தேவைப்படும் என்று அறிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் கலோரியின் அளவு வேறுபடும். ஒருவரின் உடல் வாகு, செய்யும் வேலை, அவர் உடல் சக்தியை எவ்வளவு பயன்படுத்துகிறார் என்பன போன்றவை இதில் அடங்கும். ஒரு நல்ல 'Dietitian"(சத்துணவு நிபுணர்) இதனை கணக்கிட்டுச் சொல்வார்கள்.

தேவையான மருந்துகளை எடுத்தல்:
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் தகுந்த அளவுப்படி தகுந்த நேரங்களில் எடுக்கவேண்டும். சில மாத்திரைகள் கணையத்தைத் தூண்டி இன்சுலினை அதிகம் சுரக்கவைக்கும் வகையாக இருக்கலாம். சில, இன்சுலின் உடம்பில் தேவையான அளவு இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையிலிருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றலாம். சிலருக்கு இன்சுலினை ஊசிமூலம் தேவைக்கேற்ற அளவு ஒரு நாளில் ஒருமுறை, இருமுறை அல்லது மும்முறை ஏற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அவற்றிலும் விரைவாச் செயல்படக் கூடியது, மெல்லச் செயல் படக்கூடியது என இருக்கின்றன. அவை இரண்டும் கலந்த வகையும் கிடைக்கிறது. இதையும் சரியான நேரத்தில் சரியான அளவு எடுக்க வேண்டும்.

உடற்பயிற்சி:
உடற்பயிற்சி மிக இன்றியமையாததாகும். வயதிற்கேற்ற, அவரவர் தேவைக்கேற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். எவ்வகையானது எவருக்கு உகந்தது என்பதையும் மருத்துவர் அறிவுறுத்துவார். உடற்பயிற்சிகளில் எல்லாம் சுலபமானது, எவ்வயதினரும் செய்யக் கூடியது நடையாகும். ஒரு நாளில்குறைந்த அளவு 40 நிமிடம் 5 கிலோ மீட்டர் அளவுக்கு நடப்பது மிகத் தேவையான ஒன்றாகும்.
மேற்சொன்ன மூன்றையும் முறையாகச் செய்வோர் அச்சத்தைத் தூர வைத்துவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடரலாம்.

இறுதியாக, இந்நோயாளிகள் செய்யக் கூடியன, கூடாதன பற்றியும் மேலும் சில தகவல்களையும் காண்போம்.

"உங்களுக்கு சர்க்கரை நோயா? அரிசிச் சோறு உண்ணாதீர்கள் கோதுமை உண்ணுங்கள்" என்றும் "கேழ்வரகு இதற்கு நல்ல மருந்து" என்றும் பலர் உபதேசம் செய்யக் கேட்டிருக்கிறோம். சர்கரை நோயாளி, தான் ஏதோ ஒதுக்கி வைக்கப் பட்டவர்போல் உணரத் தொடங்கி விடுவார். சர்க்கரை நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்ற பத்தியமில்லை. அடிப்படையை விளங்கிக் கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவு மெதுவாகச் செறிக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் செரிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும். கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு ஒன்றும் மருந்தல்ல. ஆனால் அதில் நார்ப்பொருள்(உமி) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம். மற்றப்படி அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே (70%) மாவுப் பொருள் இருக்கிறது. மேலும். எந்த வகை உணவு உண்கிறோம் என்பது பொருட்டல்ல் எவ்வளவு உண்கிறோம் என்பதே பொருட்டாகும். பொதுவாக கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நலம். கீரை வகைகள் மிக நல்லது. ஒரு நாள் உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் சர்க்கரை அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

மருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். நாம் முன்பு கண்டபடி மருத்துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவர். இது தவறாகும். மருத்துவர்காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர் பரிந்துரைத்தாரோ அவ்வாரே செய்ய வேண்டும். மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மறந்து விட்டால் போகட்டும் என விட்டுவிட வேண்டும். அவ்வறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளைஉண்டாக்ககூடும்.
 
அடுத்து உடற்பயிற்சி. பெரும்பாலும் நடையே பரிந்துரைக்கப் படுகிறது. உங்களுக்குள் ஒரு "வாக்" உறுதி(வாக்குறுதி) எடுத்துக்கொண்டு அதைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இதுவும் மருத்துவர் குறிப்பிட்ட அளவோடுதான் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகவும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செயதால் சர்க்கரை அளவு குறைந்து போகக்கூடும். ஆக, எதுவாயினும் ஒரு வரையரைக்குட்பட்டே இருக்கவேண்டும்.

சிலருக்கு ஓர் ஐயம் எழலாம். சர்க்கரை குறைவதற்குத்தானே இவ்வளவும் செய்கிறோம். குறைவதற்காக ஏன் அச்சப் படவேண்டும்? உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை கூடியிருப்பதைவிட வேண்டிய அளவில் மிகக் குறைந்திருப்பது அபாயகரமானதாகும். மயக்கம் வரலாம். இந்நிலை அதிக நேரம் தொடர்ந்தால் "கோமா"(Coma) நிலைக்குக் கூட போகலாம்.

சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

- உங்கள் சிறுநீரை அடிக்கடி (குறைந்தது வாரத்தில் மும்முறை) சோதித்துக் கொள்ளவேண்டும். இதற்காக Glucotest (strips) போன்ற உடனடியாகக் காட்டும் சோதனைக் குச்சிகளை உபயோகிக்கலாம்.
 
- வாரத்திற்கொருமுறை இரத்த சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காகக "One touch", "Gluco meter" போன்ற கையடக்க உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளலாம். சர்க்கரையின் அளவு காலை உணவுக்குப்பின் 160 mg/dL அளவுக்குக் கீழே இருக்க வேண்டும்.

- HbA1c குறுதிச் சோதனையை மூன்று மாததிற்கொருமுறை செய்து கொள்ள வேண்டும். அது உங்களின் இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சராசரியைக் காட்டும். அதை கீழுள்ள அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்:

 5.6%  க்குக் கீழே - நோயில்லா ஒரு மனிதருக்கு இருப்பது
 5.6% to 7% - சர்க்கரையின் அளவு நல்ல கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறதென்று பொருள்
 7% to 8% - ஒரளவு கட்டுப்பாடு
 8% to 10%- சரியான கட்டுப் பாட்டில் இல்லை
+ 10% க்கு மேல் - கட்டுப்பாடு மிக மோசம்

நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புக்கள்:
  • உங்களுடன் மிட்டாய் போன்ற சில இனிப்புப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். திடீரெனெ உங்கள் சர்க்கரை அளவு குறையலாம். அப்போது இது கை கொடுக்கும்.
  • உங்களுடன் இருப்பவர்களிடம் (அலுவலகத்தில் நெருங்கிய நண்பரிடம்) உங்களுக்கு சர்க்கரை திடீரெனெக் குறைந்து மயக்கம்போல் வந்தால் உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்.
  • உங்கள் பாதங்களை அடிக்கடி கவனித்து வாருங்கள். நீங்கள் அணியும் செருப்பை காலை நெருக்காத அளவுக்குத் தேர்ந்தெடுங்கள். கால் பகுதியில் தோல் கடினமாகி இருக்கிறதா என்று கவனியுங்கள்.
  • கையிலோ அல்லது காலிலோ சு10டு தெரியாமலோ அல்லது வலிதெரியாமலோ இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.
  • இரத்த அழுத்தை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள்.
  • வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடற் சோதனை செய்து கொள்ளுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக மனம் துவண்டு போகாதீகள்.

உங்கள் உடம்பை நீங்கள் ஆளக்கற்றுக் கொள்ளுங்கள் இனிமையான வாழ்வை இன்ஷா அல்லாஹ் எதிர் கொள்வீர்கள்!

 
ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 19 December 2013

தென் ஆப்பிரிக்க காந்தி,கறுப்பர் இன தலைவர் நெல்சன் மண்டேலா!! ஒரு வரலாற்றுப்பார்வை ...உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்ந்து மறைகிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே மாற்றங்களுக்குக் காரணமாயிருக்கிறார்கள்; மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரில், ஒருவர் நம்முடன் வாழ்ந்தார், இப்போது மறைந்துவிட்டார். அதிகாரம் என்ற போதையில் மயக்கநிலையில் உள்ள உலக தலைவர்களுக்கு நெல்சன் மண்டேலா ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினர்.

அண்ணல் காந்தியடிகளைத் தனது முன்னோடியாகக் கொண்டு, அவர் விட்ட இடத்திலிருந்து  தனது பணியைத் தொடங்கியவர் நெல்சன் மண்டேலா.அதனால் தென் ஆப்பிரிக்க காந்தி என்று இந்தியர்களால் பொற்றப்பெற்றர்.

பிறப்பும்  இளமையும்:
                                                                  நெல்சன் மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர்.

மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 
சிறுவயது முதல் குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார்.1941 ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரி யாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.

அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.

5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958.ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகள்.கறுப்பர் இன போராட்டம் ...

                                                     தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.


கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்” என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார்.


அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.
தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ம் ஆண்டு ஜுன் 12 ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. சிறையில் இவருடன் ரோப்பேன் தீவில் 30 இந்தியர்கள் இதில் 12 தமிழர்கள் கடும் சிறை தண்டனை அனுபவித்து உள்ளனர்.குஜராத்திகள், தெலுங்கர்கள் தமிழர்கள் என இந்தியர்கள் பலருடன் பழகி இந்திய உணவுகளை விரும்பி உண்டு வந்தவர் இவரது இழப்பு இந்தியாவுக்கு பெரிய இழப்பாகும் இந்தியாவிலேயே முதன் முதலாக 2010 இல் மண்டேலா வின் படத்தை தில்லையடியில் திறந்து வெய்த்த பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு.
27 ஆண்டு காராகிருகவாசம் அனுபவித்தபோது, கட்சியைக் கட்டிக் காத்தவர், போராட்டத்தின் வீரியம் குறையாமல் பாதுகாத்தவர் அவரது மனைவி வின்னி மண்டேலா. தென் ஆப்பிரிக்காவில் குடியரசு ஆட்சி அமைந்தபோது அதில் அமைச்சராகப் பொறுப்பும் ஏற்றார். அமைச்சரான தனது மனைவி அதிகார போதை தலைக்கேறி செய்த ஊழல்கள் வெளிவந்தபோது, சற்றும் தயங்காமல், அதை மறைக்க முயலாமல் சட்டம் தனது கடமையைச் செய்யப் பணித்தவர் நெல்சன் மண்டேலா.
இதனால் அவரது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தனிமைச் சிறையிலிருந்து விடுதலையானதும் தனிமை வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் நினைத்திருந்தால் தனது மனைவியைப் பாதுகாத்திருக்க முடியும். தவறுகளை மன்னித்திருக்க முடியும். பொது வாழ்க்கையில் நேர்மையும் தூய்மையும் பற்றி பலரும் பேசுவார்கள். நெல்சன் மண்டேலா வாழ்ந்து காட்டினார்.பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.

மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட் டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

“மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச் சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மண்டேலா விடுதலையானதும், பிரதமர் வி.பி.சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மண்டேலா விடுதலையான சிறிது நேரத்தில் அவரிடம் பிரதமர் வி.பி.சிங் எழுதிய பாராட்டுக் கடிதம் கொடுக்கப் பட்டது. “உங்களது சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வி.பி.சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

“இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.

நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை.1994 மே 10 ந் தேதி அவர் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.
1990ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுதலையானதை உலகமே வரவேற்றது. தென்னாப்பிரிக்காவில் குடியரசு மலரவும் மண்டேலா காரணமானார். அதோடு, .
அதே ஆண்டில்இந்தியாவின் பாரத ரத்னா விருதும் தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது

தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகவும் 1994ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் நெல்சன் மண்டேலா
அவர் அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

 அவரது பதவிக் காலம் முடிந்ததும், 2வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். 2008ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மண்டேலா.
அப்போதும் ஓயாமல், பல்வேறு நலப் பணிகளுக்காக மக்கள் சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் மண்டேலா.


மறைவு ;-
பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு குணமடைந்து, வீடு செல்வதும், சில நேரம் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்று வருவதுமாக இருந்த நெல்சன் மண்டேலா, கடந்த சில வாரங்களாக மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அவர் தனது பேசும் திறனை இழந்து, குடும்ப உறுப்பினர்களின் ஆறுதல் வார்த்தையாலும், உற்சாக மொழிகளாலும் உயிர் பிழைத்து வந்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க நேரப்படி வியாழக்கிழமை (2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு 8.50க்கு )நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் உலக மக்களை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு ஜோகனஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார்.

பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் 3 நாட்கள் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள அரசு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. சுமார் 1,00,000 திற்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் காத்திருந்து அந்த மாபெரும் தலைவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

பின்பு இறுதிச் சடங்கு அந்த கிராமத்தில் உள்ள மண்டேலாவின் இல்லத்தில் அவரது உடல் இன்று ராணுவ குண்டுகள் முழங்க, குடும்பத்தினரின் பாரம்பரிய சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டது ..இந்த இறுதி நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அமெரிக்க மக்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த ஜெஸ்ஸி ஜாக்சன், ஆப்பிரிக்க, கரீபியன் தலைவர்கள், ஈரான் துணை அதிபர் முகம்மது ஷரியத்மதாரி, லெசோதோஸ் 3-ம் மன்னர் லெட்சி, பிரான்சின் முன்னாள் பிரதமர்கள் லியோனல் ஜோஸ்பின், ஆலைன் ஜுப்பெ உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்..
நெல்சன் மண்டேலாவின் பிரம்மாண்ட சிலை திறப்பு...
                                     
  தென் ஆப்ரிக்காவின் இன மோதல்கள் முடிவுக்கு வந்த தினமாக டிசம்பர் 16 ஆம் தேதி கருதப்படுகிறது. தென் ஆப்ரிக்காவில் ஒருமைப்பாட்டுத் தினமாக அனுசரிக்கப்பட்டுவரும் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி  மறைந்த முன்னாள் தென் ஆப்பிரிக்கா அதிபர் நெல்சன்  மண்டேலாவின் உருவச் சிலையை தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா திறந்துவைத்தார்.மண்டேலாவின் வாழ்க்கை மூன்று கட்டங்கள் ...


நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை மூன்று கட்டங்களை  கொண்டது என்பதை இந்நாட்டு அரசியல் அதிகார தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும். 
முதலாவது அவர் இனவாத அடக்குமுறைக்கு எதிரான ஒரு சாத்வீக போராளி. 
இரண்டாவது சாத்வீக சமர் இராணுவ அடக்குமுறையால் நசுக்கப்பட போது ஆயுதம் தூக்க நிர்பந்திக்கபட்ட ஒரு ஆயுத போராளி.

 மூன்றாவது உலகத்தின் துணையுடன் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தை பெற்றதன் பின்இ சமரில் தோல்வியடைந்த வெள்ளையர் தரப்பையும் அரவணைத்து உண்மையான நல்லெண்ண தேசிய ஐக்கியத்தை உருவாக்கிய மனிதாபிமானமிக்க மகத்தான ஒரு தேசிய தலைவன். 


இந்த மூன்று கட்டங்களும் சேர்ந்ததுதான் மண்டேலா சிந்தனை. இந்த சிந்தனைதான் இந்நாட்டு தலைவர்களுக்கு வழி காட்டவேண்டும்.  இந்நாட்டில் துன்பத்துக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகியுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு மடிபா என்று செல்லமாக அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா வாழ்ந்தும் இறந்தும் வழி காட்டுகின்றார். 

இன்றைய நிலை :-

உலகம் இன்று பரந்து விரிந்து விட்டது. இனிமேல் இங்கு இந்த இனவாத பூச்சாண்டியெல்லாம விலை போகாது என மண்டேலா எங்களுக்கு வழி காட்டிவிட்டார். 
அவர் வழியில் நாம் பயணிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது 

நெல்சன் மண்டேலாவின் வாழ்வை சாத்வீக போராளி ஆயுத போராளி தேசிய தலைவன் என்ற மூன்று கட்டங்களாகவே நாம் பார்த்து புரிந்து கொள்ள  வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் மெய்யான அஞ்சலி. அதுவே மண்டேலா சிந்தனை அவரது இந்த சிந்தனையை  திருத்தி பகுதி பகுதியாக புரிந்துகொள்வது அவருக்கு செய்யும் அஞ்சலி அல்ல.

அவரது ஆயுத போராட்டத்தை சுட்டிக்காட்டி அவரை பயங்கரவாதி என்று பட்டம் சூட்டி மகிழ்ந்த வெள்ளையின அரசு அவர் ஏன் ஆயுதம் தூக்கினார் என்றும் அவர்  முன்னெடுத்த சாத்வீக போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என்றும் புரிந்துகொள்ள பிடிவாதமாக மறுத்தது.வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர்  வெள்ளையினத்தவரை நோக்கி தனது மெய்யான நல்லெண்ண கரத்தை நீட்டி தனது நாட்டில் மீண்டும்  ஒரு சிவில் யுத்தம் தோன்றாமல் இருக்க அடித்தளமிட்ட மகத்தான மனிதாபிமான தலைவனை பார்த்து உலகம் இன்று வியக்கிறது.


அச்சப்படாதவன் வீரன் அல்ல அச்சத்தை வெல்பவனே  வீரன் என்றும் சுதந்திர இலக்கை நோக்கிய பயணம் சுலபமானதல்ல; எங்களில் அநேகர் மரணத்தின் நிழலை மீண்டும் மீண்டும் தொட்டு வந்த பின்னரே அந்த இலக்கை அடைய முடியும் என்றும் ஆபத்து வரும்போது முன் வரிசையில் சென்று தலைமை தாங்கு; பாராட்டு வரும்போது பின் வரிசையில் நின்று வழிகாட்டு என்றும் மடிபா மண்டேலா  மனந்திறந்து சொல்லி சென்ற மகத்தான வார்த்தைகள் எனக்கும் எங்கள் கட்சிக்கும் எங்கள் மக்களுக்கும் வழி காட்டுகின்றன.


இன்றைய தீர்வு :-
                அண்ணல் காந்தியடிகளைப் போல, அவரும் வாரிசு அரசியலுக்கு வழிகோலவில்லை. தனது குழந்தைகளை முன்னிலைப்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, தனது அரசியல் வாரிசு என்று யாரையும் அறிவிக்கவில்லை, பதவிக்குப் பரிந்துரைக்கவும் இல்லை.

ஒரு சமுதாயப் போராளி, அரசியல் தலைவர், லட்சிய புருஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தனை நாளும் நம்மிடையே வாழ்ந்தவர் நெல்சன் மண்டேலா. நம்மில் பலர், குறிப்பாக அரசியல்வாதிகளில் பலர், அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கவில்லை. இப்போது மரணமடைந்து விட்டார். மரணமாவது அவரைப் பற்றிய உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தட்டும்.

 ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது, லட்சியவாதிகளுக்கும் சுயமரியாதை, சுதந்திரம் போன்ற கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோருக்கும் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருந்தது. இனி நாம், அண்ணல் காந்தியடிகளை நினைவில் நிறுத்தி செயல்படுவதுபோல, எங்கெல்லாம் இனவெறி எழுகிறதோ, எங்கெல்லாம் சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நெல்சன் மண்டேலாவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டாக வேண்டும்.

மனித குல தலைவர் மறைந்து விட்டாலும் அவர் புகழ் என்றென்றும் நிலைக்கும்.
நெல்சன் மண்டேலா பற்றி சொல்வதாக இருந்தால் இதுதான் சொல்ல முடியும் - "இனியொருவர் நிகரில்லை உனக்கு!'


ஆக்கம் & தொகுப்பு : .அஜ்மல் கான்.