Thursday, 30 June 2016

நமது பாரம்பரிய நெல்வகைகள் எத்த‍னை தெரியுமா?

Image result for நெல்சாகுபடியில் காணாமல் போன விவசாயிகள் மறந்துவிட்ட பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட வறட்சியையும், நோய்த் தாக்குதலையும் தாக்குப்பிடிக்கக்கூடிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர் என்றார் மிகையில்லை.
ஆயிரமாயிரம் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இயற்கையை அவற்றால் வெல்ல முடியாது என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ஒட்டு நெல் இரகங்களை உதாரணமாகக்கூறலாம். பெரும்பாலான ஒட்டு ரக நெல் வகைகள் நமது மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்றதாக இல்லை. “குறைந்த நாட்களில் அதிக விளைச்சல்” என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவைதான் இந்த குட்டை ரக நெல்கள். ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள், மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் ஆகிவற்றை உள்ளடக்கியதாக இருந்தன.

மொத்த‍ம் எண்ணிக்கை 153 வகையுள்ள‍ன• ஆனால் இன்றைய நவீன விவசாய த்தால் எத்த‍னை பாரம்பரிய நெல் வகைகள் அழிந்து கொண்டிருக்கின்றன, மேலும் எத்த‍னை நெல் வகைகள் இன்றைய இளம் தலை முறையினருக்கு தெரியும்?
இதோ நமது பாரம்பரிய நெல் வகைகள்
1. அன்னமழகி
2. அறுபதாங்குறுவை
3. பூங்கார்
4. கேரளா ரகம்
5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
6. குள்ளங்கார்
7. மைசூர்மல்லி
8. குடவாழை
9. காட்டுயானம்
10. காட்டுப்பொன்னி
11. வெள்ளைக்கார்
12. மஞ்சள் பொன்னி
13. கருப்புச் சீரகச்சம்பா
14. கட்டிச்சம்பா
15. குருவிக்கார்
16. வரப்புக் குடைஞ்சான்
17. குறுவைக் களஞ்சியம்
18. கம்பஞ்சம்பா
19. பொம்மி
20. காலா நமக்
21. திருப்பதிசாரம்
22. அனந்தனூர் சன்னம்
23. பிசினி
24. வெள்ளைக் குருவிக்கார்
25. விஷ்ணுபோகம் [19]
26. மொழிக்கருப்புச் சம்பா
27. காட்டுச் சம்பா
28. கருங்குறுவை
29. தேங்காய்ப்பூச்சம்பா
30. காட்டுக் குத்தாளம்
31. சேலம் சம்பா
32. பாசுமதி
33. புழுதிச் சம்பா
34. பால் குடவாழை
35. வாசனை சீரகச்சம்பா
36. கொசுவக் குத்தாளை
37. இலுப்பைப்பூச்சம்பா
38. துளசிவாச சீரகச்சம்பா
39. சின்னப்பொன்னி
40. வெள்ளைப்பொன்னி
41. சிகப்புக் கவுனி
42. கொட்டாரச் சம்பா
43. சீரகச்சம்பா
44. கைவிரச்சம்பா
45. கந்தசாலா
46. பனங்காட்டுக் குடவாழை
47. சன்னச் சம்பா
48. இறவைப் பாண்டி
49. செம்பிளிச் சம்பா
50. நவரா
51. கருத்தக்கார்
52. கிச்சிலிச் சம்பா
53. கைவரச் சம்பா
54. சேலம் சன்னா
55. தூயமல்லி
56. வாழைப்பூச் சம்பா
57. ஆற்காடு கிச்சலி
58. தங்கச்சம்பா
59. நீலச்சம்பா
60. மணல்வாரி
61. கருடன் சம்பா
62. கட்டைச் சம்பா
63. ஆத்தூர் கிச்சிலி
64. குந்தாவி
65. சிகப்புக் குருவிக்கார்
66. கூம்பாளை
67. வல்லரகன்
68. கௌனி
69. பூவன் சம்பா
70. முற்றின சன்னம்
71. சண்டிக்கார் (சண்டிகார்)
72. கருப்புக் கவுனி
73. மாப்பிள்ளைச் சம்பா
74. மடுமுழுங்கி
75. ஒட்டடம்
76. வாடன் சம்பா
77. சம்பா மோசனம்
78. கண்டவாரிச் சம்பா
79. வெள்ளை மிளகுச் சம்பா
80. காடைக் கழுத்தான்
81. நீலஞ்சம்பா
82. ஜவ்வாதுமலை நெல்
83. வைகுண்டா
84. கப்பக்கார்
85. கலியன் சம்பா
86. அடுக்கு நெல்
87. செங்கார்
88. ராஜமன்னார்
89. முருகன் கார்
90. சொர்ணவாரி
91. சூரக்குறுவை
92. வெள்ளைக் குடவாழை
93. சூலக்குணுவை
94. நொறுங்கன்
95. பெருங்கார்
96. பூம்பாளை
97. வாலான்
98. கொத்தமல்லிச் சம்பா
99. சொர்ணமசூரி
100. பயகுண்டா
101. பச்சைப் பெருமாள்
102. வசரமுண்டான்
103. கோணக்குறுவை
104. புழுதிக்கார்
105. கருப்புப் பாசுமதி
106. வீதிவடங்கான்
107. கண்டசாலி
108. அம்யோ மோகர்
109. கொள்ளிக்கார்
110. ராஜபோகம்
111. செம்பினிப் பொன்னி
112. பெரும் கூம்பாழை
113. டெல்லி போகலு
114. கச்சக் கூம்பாழை
115. மதிமுனி
116. கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
117. ரசகடம்
118. கம்பம் சம்பா
119. கொச்சின் சம்பா
120. செம்பாளை
121. வெளியான்
122. ராஜமுடி
123. அறுபதாம் சம்பா
124. காட்டு வாணிபம்
125. சடைக்கார்
126. சம்யா
127. மரநெல்
128. கல்லுண்டை
129. செம்பினிப் பிரியன்
130. காஷ்மீர் டால்
131. கார் நெல்
132. மொட்டக்கூர்
133. ராமகல்லி
134. ஜீரா
135. சுடர்ஹால்
136. பதரியா
137. சுதர்
138. திமாரி கமோடு
139. ஜல்ஜிரா
140. மல் காமோடு
141. ரட்னசுடி
142. ஹாலு உப்பலு
143. சித்த சன்னா
144. வரேடப்பன சேன்
145. சிட்டிகா நெல்
146. கரிகஜவலி
147. கரிஜாடி
148. சன்னக்கி நெல்
149. கட்கா
150. சிங்கினிகார்
151. செம்பாலை.
152. மிளகி
153. வால் சிவப்பு.

Wednesday, 29 June 2016

கணினி திரையை நீண்ட நேரம் பார்த்தால் என்ன ஆகும்?

கணினி திரையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பார்வையில் தற்காலிகமாக சில பிரச்னைகள் ஏற்படும் என்கிறது ஒரு ஆய்வு. இந்தப் பிரச்னையால் உலகம் முழுவதும் பலர் பாதிப்படைந்துள்ளனர்.
கணினியில் நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருத்தல், அல்லது தொலைக்காட்சியை நீண்ட நேரம் பார்த்தல், அல்லது மடிக் கணினியில் விளையாடுதல் என ஏதாவது ஒன்றில் தீவிரமாக உங்கள் கவனம் இருந்து கொண்டிருந்தால், அதிலிருந்து மீளும் போது உங்கள் கண் பார்வை சில மணித்துளிகள் மங்கலாவதை உணர்ந்திருப்பீர்கள்.
கணினித் திரையை நீண்ட நேரம் பார்த்துக் பார்த்து உங்கள் பார்வை ஒரு கட்டத்தில் மங்கத் தொடங்கும். இந்நிலை தொடர்ந்தால் விழிகளில் பார்வைக் கோளாறுகள் ஏற்படக்கூடும். இந்தப் பிரச்னைக்கு 'கம்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ (Computer Vision Syndrome (CVS) எனப் பெயரிட்டுள்ளார்கள் மருத்துவர்கள். இதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில் இது தற்காலிகமான பிரச்னைதான். எளிதில் குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள். ஆனாலும் கண்கள் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். இது போன்ற பிரச்னைகள் வரும் முன் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.
கண் பார்வை மங்குவதற்கான காரணம் என்ன?
கணினி உங்கள் வாழ்க்கையை எப்போதிலிருந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது சமகாலத்தில்தான். அமெரிக்காவில் 2011-ம் ஆண்டில் 74.6 சதவிகிதம் நபர்கள் கணினியை பயன்படுத்தினார்கள் என்கிறது யு எஸ் சென்ஸஸ் பீரோ. இதுவே 1984-ல் 8.2 சதவிகிதம் தான். ஒரே இடத்தில் ஆணி அடித்தது போல உட்கார்வது கணினித் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது நிச்சயம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அவ்வகையில் நம் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.
கம்ப்யூட்டரை நெடு நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களில் அதிகளவு அழுத்தம் ஏற்படுகிறது. அது பார்வையை பாதிப்படையச் செய்துவிடும். தவிர திரையில் நீங்கள் எழுத்துருக்களைத் தொடர்ந்து பார்ப்பதினால் கண்களுக்கு அழற்சி ஏற்படும். கணினித் திரையின் குறைவான ஒளி மற்றும் திரை வெளிச்சம் பிரதிபலித்து மீண்டும் உங்கள் கண்களில் படும் போது கூடுதல் அழுத்தம் ஏற்படும். கணினியின் முன் உட்காரும் போது சரியான அமைப்பில் உட்கார வேண்டும். அப்படி உட்காரவில்லை என்றால் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். அறையில் வெளிச்சம் குறைவாக இருந்தால் அதுவும் கண்களை பாதிக்கும். கணினித் திரைக்கும் உங்கள் கண்களுக்குமான தூரம் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும்.

சிவிஎஸ் பிரச்னை உங்களுக்கு உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
பின்வரும் அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பார்வைக் குறைவு அதாவது காட்சிகள் மங்கலாகத் தெரிவது
வண்ணங்களைப் பார்ப்பதில் சிரமம் மற்றும் ஒளிக் கூச்சம்
நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் பணியாற்றிய பின் தூரப் பார்வையில் சிரமம் ஏற்படலாம்
கம்ப்யூட்டர் திரையில் உள்ள வடிவங்களைப் பார்ப்பதில் சிரமம்
களைப்பு ஏற்படுவது.
அடிக்கடி தலைவலி
அருகில் மற்றும் தொலைவில் கண் பார்வை மங்கலாகத் தெரிவது
கண்களில் சோர்வு, வலி, எரிச்சல், அரிப்பு, கண்கள் காய்ந்துபோதல்
கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படுவது
திரையை பார்த்த பின் மற்றவரைப் பார்க்கும்போது பிம்ப வேறுபாடுகள் தோன்றுவது
கம்ப்யூட்டர் திரையையும், மற்ற தாள்களையும் மாறிமாறிப் பார்ப்பதில் சிரமம்
பொருட்கள் இரட்டையாகத் தெரிவது (டிப்ளோபியா Diplopia (Double Vision))
கண் மருத்துவர் மேலும் சில பரிசோதனைகள் செய்த பின் உங்களுக்கு சிவிஎஸ் பிரச்னை உள்ளதா என்பதை உறுதி செய்வார். ஏற்கனவே கண்களில் பிரச்னை இருந்து, புதிதாக இந்த சிவிஎஸ் பிரச்னையும் சேர்ந்துவிட்டால் என்ன செய்வது?பயம் வேண்டாம், தகுந்த மருத்துவ உதவியுடன் குணம் பெற முடியும்.
சிவிஎஸ் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
உங்களில் பலருக்கு வேலையும் வாழ்வாதாரமும் கணினி சார்ந்துள்ளது எனும் போது, எப்படி அதைப் பார்க்காமல் இருக்க முடியும்? அன்றாட வாழ்விலிருந்து கணினியை முற்றிலும் தவிர்க்க முடியாது என்ற நிலைதான் பலருக்கு. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தையும் நிச்சயம் கவனம் கொள்ள வேண்டும். கணினிப் பயன்பாடு குறித்து சில பழக்க வழக்கங்களை பின்பற்றினால் சிவிஎஸ் பிரச்னை நிச்சயம் உங்களுக்கு வராது. கண் சிரமத்தைக் குறைக்கச் சில விஷயங்களை நீங்கள் தினமும் கடைபிடிக்க வேண்டும்.
கண் பார்வைக்கு நேராக கண்ணில் இருந்து 20 லிருந்து 28 அங்குல தூரத்தில் கணினித் திரை இருக்க வேண்டும். திரையின் மையம் சரியான கோணத்தில் இருப்பது நல்லது. உங்கள் பார்வையிலிருந்து சற்று கீழே 15 டிகிரியில் இருப்பது நலம்.
கண்ணுக்கு இதமான வெளிச்சப் பின்னணியில் எழுத்துக்கள் அடர்நிறத்தில் இருத்தல் வேண்டும்.
கால் பாதம் தரையில் தொடுமாறு இருக்க!!
இருக்கையில் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.
இரண்டு மணி நேரத்தில் 15 நிமிடம் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். கண் இமைகளை நிதானமாக கடிகாரச் சுற்றில் மூன்று முறையும் எதிர் கடிகாரச் சுற்றில் மூன்று முறையும் விழிகளை உருட்டி பயிற்சி செய்யவேண்டும்.
20-20-20 இந்த விகிதத்தை பின்பற்றவும். கணினித் திரையைப் பார்ப்பதில் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவெளி விடுவது நல்லது. திரையைப் பார்ப்பதற்கு முன் 20 நொடிகள் 20 அடி தூரத்தில் உள்ள பொருளைப் பார்க்க வேண்டும்.
இதையும் மீறி மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுகுங்கள்.

Friday, 24 June 2016

தமிழர்கள் அனைவரும் தற்காலத்தில் பின்பற்ற வேண்டிய இந்த தகவல்!!

பொது நலன் கருதி தமிழர்கள் அனைவரும் தற்காலத்தில் பின்பற்ற வேண்டிய அனைத்து செய்திகளையும் வெளியிடப்படுகிறது 
1. கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்! நமது மொழியை விட்டு விட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம். உங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும்.
2. உறவுகளை அழைக்கும் போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப் பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள்.
3. எதிர்ப்படுபவர் தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும்.
4. உங்களது முகவரி அட்டை (VISITING CARD) களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிர்ப்படுபவரிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும்.
5. உங்கள் அஞ்சல் தாள் (LETTER HEAD) போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள்.
6. நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்டமும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள்.
7. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது சோதிடர்கள், மத பெயர்கள் மூலம் பிற மொழி பெயர்களை தவிர்த்து தூய தமிழ்ப்பெயர்களை வையுங்கள். நீங்கள் வைப்பது தமிழ்ப்பெயர்தானா என்பதை நல்ல தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வடமொழி எழுத்துக்களான ஸ்,..ஷ், ஜ, போன்றவற்றைத் தவிருங்கள்.
8. திருமணப்பரிசு அளிக்கும் போது நல்ல தமிழ்ப் புத்தகங்ககளை அளியுங்கள்.
9. விழாக்களுக்கு அடிக்கும் அழைப்பிதழில் தமிழில் மட்டுமே அச்சிடுங்கள். ஆங்கிலம் தேவைப்படின் இதோடு கலக்காமல் தனியே அச்சிட்டு, தமிழே தெரியாதவர்களுக்கு மட்டும் கொடுங்கள்.
10. இரு சக்கர வாகனம், மகிழுந்து மற்றும் பிற வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதன் பதிவு எண்ணை தமிழில் எழுதுங்கள். எ.கா TN 20 A 1234 என்று இருந்தால் தமிழ்நாடு 20 ஏ 1234 என்று எழுதுங்கள்.
11. கடிதம் எழுதும்போது, ஆங்கில தேதி மாதம் வருடம் எழுதும்போது மறக்காமல் ஆங்கிலத்திற்கு மேல் தமிழில் திருவள்ளுவராண்டு தேதி மாதமும் எழுதுங்கள்.
எ.கா: திருவள்ளுவராண்டு 2047 துர்முகி (ஆனி) 29 / ஆங்கில தேதி 13 சூலை 2016. திருவள்ளுவராண்டிலிருந்து 31 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது ஆங்கில ஆண்டு.
12. தொலைபேசியில் பேசும்போது முதலில் ஹலோ என்பதை விட்டுவிட்டு வணக்கம்! என்று சொல்லி ஆரம்பியுங்கள். அதே போல் தாங்க்ஸ் என்பதை விட்டு விட்டு நன்றி என்று சொல்லி முடியுங்கள். (வணக்கம் ஐயா...வணக்கம் அம்மா, நன்றி ஐயா...நன்றி அம்மா..)
13. எதெற்கெடுத்தாலும் ‘EXCUSE ME’ என்பதற்கு பதிலாக மன்னிக்கவும்... மன்னிக்கனும்... மன்னிச்சுங்குங்க... என்று சொல்லுங்கள். அதே போல் ‘PLEASE’ என்பதற்கு பதிலாக ‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.
14. மகிழுந்துகளில் பெயரை எழுத விருப்பப்பட்டால் தமிழில் மட்டும் எழுதுங்கள்.
15. செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழில் எழுதி அனுப்புங்கள்.
16. ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு உள்ள படிவங்களை தமிழில் மட்டுமே பதிவு செய்யுங்கள். படிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. (தமிழ் வளரும்).
இதை நடைமுறைக்கு கொண்டு வருவது சிரமம் காரணம் நாம் ஆங்கில மோகத்தில் இருக்கிறோம் நாம் நினைத்தால் மட்டும் போதாது அனைவரும் இதை செயல் படுத்த முயற்சி எடுக்க வேண்டும். 

Sunday, 19 June 2016

'அப்பாக்களின் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணங்கள்'!!

வாழ்வில், ஆணானாலும் பெண்ணானாலும் பல பரிணாமங்களைக் கடக்கின்றனர். ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக, தோழியாக எனப் பலவற்றைக் கூறலாம். ஆனால், நாம் யாரும் அநேகமாக பெண்ணுக்கு நிகரான ஆணின் பங்கைப் பற்றி பேசுவதில்லை. அதுவும் முக்கியமாக ஓர் ஆண் 'அப்பா'வாக மாறுவதைப் பற்றி யாரும் உரையாடுவது இல்லை. தாய்மை பற்றியும், குழந்தைப் பேறு பற்றியும் கவிதைகள் எழுதி எழுதி, அப்பாவைப் பற்றி சற்று யோசிக்க மறந்து விட்டோம். எந்த அளவுக்கு எனில் 'தாய்மை' என்ற சொல்லுக்கு இணையான ஆண்பால் சொல்லே நமக்குத் தெரியாதே!
தாயின் மனநிலையை பலமுறை, பல கோணங்களில் கேள்விப்பட்ட நாம் இன்று, சில நொடிகள் நம் தந்தையைப் பற்றிச் சிந்திக்கலாம். சில நேரங்களில் செல்லமாகவும், அநேகமாக கறாராகவும் இருக்கும் நம் அப்பாக்களின் வாழ்வில், அவர்கள் ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் மறக்க முடியாத தருணங்கள் பற்பல.
1. முதல் முத்தம்!
முதன்முதலில், தன் குழந்தையின் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட அந்த நொடி! அந்த உணர்ச்சியை எந்த கவிஞனாலும், எழுத்தாளனாலும் இன்று வரை கூற முடிந்ததே இல்லை. தன் ரத்தம், தன் வாரிசு, தன் குழந்தை, அடுத்த சில வருடங்களில் தன்னைத் தாங்கப் போகும் தூணான, அக்குழந்தையை முதன்முதலில் கையில் ஏந்தி, முத்தம் கொடுத்த அந்த நொடியை எந்த ஒரு அப்பாவாலும் மறக்கவோ, விளக்கவோ முடியாது.
2. ஆள்காட்டி விரல்!
குழந்தை தன் பிஞ்சு கைகளால், அந்த மெல்லிய விரல்களால், முழு கையையும் வைத்து அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பிடிக்கும். அந்த அழகை ரசிக்கவே அப்பாவிற்கு ஆயிரம் கண்கள் வேண்டுமே! என்ன செய்வார் அவர்? நேரம் கிடைக்கும் போது எல்லாம் தன் விரலை குழந்தையிடம் நீட்டி நீட்டி விளையாடும் அப்பாக்களை தினமும் பார்க்கலாம். அதன் பின்னால், எவ்வளவு பேரானந்தம் ஒளிந்து இருக்கிறது என்பதை நம்மால் ஒருகாலமும் உணர முடியாது.
3. ராஜகுமாரியின் சேட்டைகள்!
ஒரு அப்பாவுக்குப் பெண் குழந்தை பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அந்த குட்டி தேவதையை தன் மடியைவிட்டு இறக்கவே மாட்டார். தன் மார்பில் அவள் எட்டி உதைக்கும் சுகமும், அவளின் அழகிய கொஞ்சல் சிரிப்பும் அப்பாவை வீழ்த்தும் அஸ்திரங்கள். ராஜகுமாரியை கொஞ்சி கொஞ்சி நாட்களைக் கழிக்கும் அப்பாவின் மனதில் இருக்கும் ஒருவித உணர்ச்சி... அதை குறிக்க சொற்களை கண்டுபிடிக்கத்தான் வேண்டும்!
4. அப்பா...!
'ங', 'க', 'ஆ', 'ஊ' என தன் குழந்தையின் ஓசைகளையும், அழுகுரலையும் கேட்டு கேட்டு திருப்தி அடைவதற்குள் 'அப்பா' என ஒரு குரல் கேட்கும்! கட்டுக்கடங்காத காட்டாறு போன்ற மகிழ்ச்சிதான் அங்கு பாயும். ஆனால், நம் அப்பாக்களுக்குத்தான் அம்மாவைப் போல மகிழ்ச்சியை வெளிப்படுத்த தெரியாதே, அதனால் வாயெல்லாம் பல்லாக, 'அப்பா சொல்லு, அப்பா சொல்லு' எனக் கூறிக் கொண்டே இருப்பார்கள்!
5. முதல் அடி!
தன் மார்பிலும், முதுகிலும், தோளிலும் தவழ்ந்த அந்த பிஞ்சு பாதங்கள் முதல் அடியை எடுத்து வைத்ததும், அம்மாவின் சிரித்த முகம்தான் அநேகமாக முதலில் தெரியும். ஆனால், அப்பாவின் ஆனந்தக் கண்ணீரும், மகிழ்ச்சியும் நமக்கு அவ்வளவாக தெரிவதில்லை. காரணம், அவர்கள் நாம் விழாமல் இருக்க நமக்குப் பின்னால் நம்மைத் தாங்கிக் கொண்டு இருப்பார்கள்.
6. வெற்றி இல்லை சாதனை!
மெல்ல அப்பாவின் சுண்டு விரலை பிடித்து நடை பயின்ற தன் கண்மணியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அப்பாவின் வெளிப்படுத்தப்படாத குதூகலம் ஒளிந்து இருக்கும். நம்முடைய ஒவ்வொரு சிறு வெற்றியைக் கூட மிகப் பெரிய சாதனையாக எண்ணி நம் அப்பா கர்வப்படுவார். நம்முடைய ஒவ்வொரு செயலையும் சாதனையாக மாற்றுவதில் அப்பாவிற்கு பெரும் பங்கு இருக்கிறது! ஆனால், நம் அப்பா எதையும் வெளிக்காட்டுவதில்லை, கண்டிப்பைத் தவிர! ஆனால், அதே கண்டிப்புதான் நம்மை ஒரு சிறந்த ஆளுமையாக மாற்றுகிறது என்பதை காலம்தாதான் நமக்கு உணர்த்தும்.
7. குட்டிதேவதை வளர்ந்த நொடி!
தன் விரல் பிடித்து நடந்த தன் குட்டி தேவதை பருவ வயதில், பூப்பெய்தியதும், தன்னை அறியாமல் ஒரு ஆனந்தமும், பயமும் அப்பாவின் உடல் எங்கும் பரவும். அந்த உணர்வை எப்படி சொல்லலாம்? தன் பெண்ணைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும், அவளுக்குத் தேவையானதைச் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பும், இன்னும் வெகுசில வருடங்களில் அவள் இன்னொருவனின் மனைவி என்கிற எண்ணத்தின் தாக்கமும், பேரானந்தமும் ஒருசேர ஒருவித உணர்ச்சியை அப்பாவின் மனதில் உருவாக்கும். அதைப் பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களால் மட்டுமே உணர முடியும்.
8. திருமணம்!
காலங்கள் உருண்டோட 'நேற்று பிறந்த குழந்தை போல' தோன்றும் தன் பிள்ளைக்கு திருமண நாள் குறிக்கப்படும். மகனாக இருந்தால், அவனை நல்ல ஒரு ஆண்மகனாக வளர்த்து, தன்னை நம்பி வரும் பெண்ணை தன் தாய்க்கு நிகராக நடத்துபவனாக மாற்றி இருக்க வேண்டும். மகளாக இருந்தால், அவளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். தன் மகளின் கைகளை தன்னைவிட பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் ஓர் ஆடவனிடம் ஒப்படைக்கும் நொடி... நம் மகளின் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஒருபுறமும், இனி இவள் மீது இவள் கணவனுக்கே முதல் உரிமை என்ற நிதர்சனமான உண்மை மறுபுறமும் மாறி மாறி அலைக்கழிக்கும். ஆனாலும், உதட்டில் புன்னகையுடனும், கண்களில் ஒளிந்திருக்கும் கண்ணீருடனும் தன் மகளை, மருமகளாக இன்னொரு வீட்டிற்கு வழி அனுப்பி வைக்கும் அப்பாவின் மனதில்தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்!
இப்படி ஒரு அப்பாவின் வாழ்வு முழுவதுமே சிறு சிறு நெகிழ்ச்சியுறும் தருணங்களால் நிறைந்தவையே. ஆனால், நம் கண்களுக்குத்தான் அது தெரிவதில்லை. நாம் நம் அப்பாவிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அவரிடம் எவ்வளவு கோபப்பட்டாலும், அவர் நம் மீது வைத்திருக்கும் அன்பும் காதல் என்றும் குறையாது. சின்னச் சின்ன தருணங்களிலேயே மனநிறைவு அடையும்.
அப்பாக்களுக்கு நிகர் அப்பாக்கள் மட்டுமே!

தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

Wednesday, 15 June 2016

சவூதி அரபியாவில் வேலை செய்வோர்களுக்கு Exit அடித்து செல்லஅதிஷ்டம்

தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் நேரடியாக ஜவாஸத் சென்று Exit அடித்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எந்த கட்டணமும் கிடையாது. உங்களது இக்காமா காலாவதி ஆகியிருந்தாலும் அதற்கான கட்டணம் எதுவும் இல்லை.

உங்களது நிலையை மாற்றி வேலைசெய்ய விரும்பினால் அதற்கான கட்டணங்களை செலுத்தி பணியாறற்லாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எல்லா வகை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

முன்பு வேலை செய்த நிறுவனம் உங்களது இக்காமாவை புதிப்பிக்கவில்லையா? இக்காமா தேதி காலாவதி ஆகிவிட்டது. பாஸ்போர்ட்டும் தர மறுக்கிறாரா?

நீங்கள் நல்ல வேலை தேடிக் கொண்டு பழைய கபிலின் அனுமதியின்றி புதிய நிறுவனத்தில் உங்களை மாற்றிக் கொள்ளலாம். MOL மூலம் தனாஜூல் மாறியபின் தூதரகத்தின் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Domestic Labor: வீட்டு பணியாளர்கள் (ஹவுஸ் டிரைவர், வீட்டு துப்புவு பணியாளர், வீட்டுப் பணிப் பெண் ஆகியோர்) நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களது இக்காமா புதுப்பிக்கப்படாமல் விட்டு விட்டார்களா? அல்லது அந்த விஷா வில் வெளியில் வேலை பார்த்ததில் ஹூரூப் கொடுக்கப்பட்டுள்ளதா?

வேறு கபில் மூலம் மீண்டும் வீட்டு பணிக்கு செல்ல நேரடியாக ஜவாஸத் மூலம் உங்கள் தகுதியை மாற்றிக் கொள்ளலாம்.
அல்லது கம்பெனிகளுக்கு மாற வேண்டுமா? லேபர் ஆபிஸ் MOL மூலம் பச்சை வண்ண நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளலாம். எந்தக் கட்டணமும் கிடையாது.

ஊருக்கு செல்ல வேண்டுமா? எந்த கட்டணமும் நிபந்தனையும் இல்லாமல் ஊருக்குச் செல்லலாம்…
July 3, 2008 க்கு முன்பு ஹஜ் உம்ரா விசாவில் வந்து தங்கியவர்கள். தங்களது நிலையை மாற்றிக் கொள்ளலாம். வீட்டுப் பணியாளர்களாக பணியாற்ற நேரடியாக ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

நிறுவனங்களில் வேலைக்குச் சேர விரும்புபவர்கள் முதலில் லேபர் ஆபிஸ் அதன் பின் ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

ஊருக்குப் போக விரும்புபவர்கள் எந்த தண்டனையும் கட்டணமும் இல்லாமல் தாயகம் செல்லாம். வேறு விஷாவில் மீண்டும் திரும்பி வர எந்த தடையும் இல்லை…

ஹவுஸ் டிரைவர்கள் தங்களது புரோபசனலை எந்த கட்டணமும் இன்றி மாற்றிக் கொள்ளலாம். நேரடியாக ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.
சகோதரர்களே! Custodian of the Two Holy Mosques King Abdullah bin Abdulaziz அவர்கள் வழங்கி உள்ள இந்தச் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

சலுகை காலத்திற்குப் பின் கெடுபிடிகள் கடுமையாக இருப்பதுடன், கடுமையான தண்டனையும் 2 ஆண்டு சிறைவாசம் 1 இலட்சம் ரியால் வரை அபராமும் விதிக்கப்படும்.

Saturday, 4 June 2016

திருப்பூரில்மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள். ஏன் இப்படி? ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர். வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை’ என்று திருப்பூரில் பெயர்.
'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அடுத்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றின் மேனேஜர் சோலைமலை.
அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும்? முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது?’ என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை. கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது. மேலும், சொந்த ஊரில் இருந்தால் கல்யாணம், காட்சிக்குப் போக வேண்டும்; மொய் செய்ய வேண்டும்; ஊர்த் திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செலவு வரும் என்பனபோன்ற அன்றாட நெருக்கடிகள் இருக்கும். சம்பாதித்த பணத்தை அதற்கென செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இங்கு அது இல்லை. இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.
அதே நேரம் இந்தச் சிக்கலை தொழிலாளர்களின் கோணத்தில் இருந்து மட்டும் மதிப்பிடுவது சரியற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வெறுங்கையோடு திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்’ என்ற நிலை இருந்தது. அது உண்மையும்கூட. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படி திருப்பூரில் உழைத்து முன்னேறினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒற்றை ஆளாக திருப்பூர் வந்து கடும் உழைப்பால் சொந்த ஊரில் நிலபுலன் வாங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று அப்படியானவர்களைப் பார்ப்பது அரிது. முன்பு, வாங்கிய சம்பளம் குடும்பத்துக்குப் போனது. இப்போது நேராக டாஸ்மாக் செல்கிறது. 'ஏழைத் தொழிலாளர்கள் உழைக்கும் பணத்தை, குடியின் பெயரால் இந்த அரசு வழிபறி செய்கிறது’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை என்பதை திருப்பூரில் கண்கூடாகப் பார்க்கலாம்.
ஒரு  நிறுவனத்தின் கோணத்தில், தொழிலாளர்களின் குடி அவர்களைப் பாதிக்கிறதா? 'நிச்சயம் பாதிக்கிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைகிறது. மற்ற வார நாட்களை ஒப்பிட்டால், திங்கட்கிழமை அன்று 40 சதவிகித உற்பத்தி குறைகிறது. குடிக்கு அடிமையான ஒரு தொழிலாளியால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. அவரது வேலை செய்யும் திறன் மோசமாகக் குறைந்துகொண்டே செல்கிறது. அவரால் வேலையில் கவனம் செலுத்த முடிவது இல்லை. 

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு. அஜ்மல் கான்.

Thursday, 2 June 2016

ஏவுகணை விற்பனையில் கல்லா கட்டும் இந்தியா !!!


இந்தியா_ஏவுகணைஇந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவை MTCR எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Missile Technology Control Regime என்னும் கூட்டமைப்பில் ஓர் உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ள அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளார். MTCR அமைப்பு உறுப்பு நாடுகள் எந்த விதமான ஏவுகணைகளை மற்ற நாடுகளுக்கு விற்பது என்பது தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. MTCRஇல் இணைவதற்கு இந்தியா கொடுத்த விண்ணப்பத்திற்கு உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நாள் 2016 ஜுன் மாதம் 6-ம் திகதியுடன் முடிவடைந்ததால் இந்தியாவின் உறுப்புரிமை இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோக்கங்கள் வேறு
உலகில் தொழில்நுட்பப் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதெற்கு என Nuclear Suppliers’ Group, the Missile Control Technology Regime, the Australian Group and the Wassenaar Arrangement ஆகிய நான்கு அமைப்புக்கள் இருக்கின்றன. இவை தமது தொழில்நுட்ப ஆதிக்கத்தை நிலைநிறுத சில நாடுகளால் உருவாக்கப் பட்டவையாகும். இஸ்லாமிய நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக  ஈரானிற்கு புதிய தொழில்நுட்பம் போகமல் தடுப்பதும்  இவற்றின் பகிரங்கப்படுத்தப்படாத நோக்கமாகும்.
MTCRஅமைப்பின் இரட்டை வேடம்
1987-ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட MTCR ஏற்கனவே 34 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. ஏவுகணைத் தொழில்நுட்பம் பல நாடுகளுக்கும் பரவுவதையும் அணுக்குண்டு தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளை எல்லா நாடுகளும் உருவாக்கக் கூடாது என்பதிலும் இந்த MTCR அமைப்பு கவனம் செலுத்துகின்றது. வட கொரியா அணுக்குண்டை உற்பத்தி செய்த போதிலும் அவற்றைத் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைத் தொழில்நுட்பம் அதனிடம் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. MTCR உறுப்புரிமை இந்தியாவிற்கு இல்லாதிருந்த போது அதற்கு பல ஏவுகணைத் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது தடை செய்யப் பட்டிருந்தது. அதேவேளை பல ஏவுகணைத் தொழில்நுட்பங்களை பாக்கிஸ்த்தானிற்கு சீனா வழங்கிக் கொண்டிருந்தது. 2003-ம் ஆண்டு அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பேய் இது தொடர்பாக MTCRஅமைப்பைக் கடுமையாகச் சாடியிருந்தார்.  இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தின் தலைவர் சிவ தானு பிள்ளை இந்தியா முழுக்க முழுக்க உள்ளூர் அறிவிலேயே தங்கியிருந்து ஏவுகணைகளை உருவாக்கியது இன்னும் ஒரு சுதந்திரப் போராட்டம் போல் கடினமானதாக இருந்தது என்றார். இந்தியாவின் Defence Research and Development Organisationஇற்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உருவாக்க 15 ஆண்டுகள் எடுத்தன. MTCRஅமைப்பு 500கிலோ கிராமும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள குண்டுகளை 300கிலோ மீட்டர்களுக்கு மேல் எடுத்துச் செல்லும் கருவிகளின் விற்பனைக்குக் கட்டுப்பாடு விதித்திருந்தது. இது ஏவுகணைகளுக்கும் ஆளில்லாப் போர் விமானங்களுக்கும் பொருந்தும். இத் தொழில் நுட்பம் “பயங்கரவாதிகளின்” கைகளுக்குப் போக்கக் கூடாது என்பதில் “அரச பயங்கரவாதிகள்” அதிக கரிசனை காட்டினர். ஆனால் பிரான்ஸும் பிரித்தானியாவும் சவுதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தக் கட்டுப்பாட்டை மீறி படைக்கலன்களை விற்பனை செய்திருந்தன. ஏவுகணைக் தொழில்நுட்பங்களை சீனாவிடமிருந்து பாக்கிஸ்த்தான், ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் பெற்றுக் கொண்டன.
இந்தியாவிற்கு விதிவிலக்கு
அணுப்படைக்கலப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகள் மட்டுமே MTCRஇல் உறுப்புரிமை பெறலாம் என்ற நியதியில் இருந்து இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா பலவிதமான படைக்கலங்களை அமெரிக்காவிடமிருந்து விலைக்கு வாங்கலாம். அமெரிக்க உளவுத் துறை பரவலாகப் பயன்படுத்தும் Predator drone என்னும் ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்கலாம். ஆனால பாக்கிஸ்த்தானியப் படைட்த்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பாக்கிஸ்த்தானுக்குள் சென்று அங்குள்ள தலிபான் தலைவர்களைக் கொல்லக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்களை அமெரிக்கா பாக்கிஸ்தானிற்கு விற்பனை செய்யாது என எதிர்பார்க்கலாம்.

இந்திய ஏவுகணை வியாபாரம் இனிக் கல்லாக் கட்டும்
இந்தியாவின் ஒலியிலும் பார்க்க வேகமாகப் பாயக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு 2011-ம் ஆண்டில் இருந்தே வியட்நாம் ஆர்வம் காட்டி வருகின்றது. பிரம்மோஸ் இரசியாவுடன் இந்தியா இணைந்து தயாரித்த supersonic cruise missile ஆகும். இனி இந்தியா  வியட்நாமிற்கு பிரம்மோஸ்களை விற்பனை செய்யலாம். இந்தோனேசியா, தென் ஆபிரிக்கா, பிரேசில், சிலி ஆகிய நாடுகள் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க அக்கறை கொண்டுள்ளன. மேலும் பிலிப்பைன்ஸ், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து ஆகிய நாடுகளும் பிரம்மோஸை வாங்கலாம். வெளிநாடுகளுக்கு படைக்கலன்கள் விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவாகும் போது உற்பத்தித்திறன், தரம் ஆகியவை மேம்படும். உலகிலேயே அதிக படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியா இனி படைக்கலன்களை ஏற்றுமதி செய்வதிலும் முன்னேறலாம். இனிப் படைத்துறை ஏற்றுமதியில் இந்தியா சீனாவிற்கு சவாலாக அமையும். மேலும் இந்தியாவின் விண்வெளித் திட்டமும் தனக்குத் தேவையான தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில்  வாங்கலாம்.
விண்வெளியிலும் இந்தியாவிற்கு வாய்ப்பு
செவ்வாய்க் கிரகத்திற்கு செய்மதி அனுப்புவதில் சீனாவை முந்திய இந்தியாவிற்கு பல விண்வெளித் தொழில்நுட்பங்களை இதுவரை இரசியாவால் விற்பனை செய்ய முடியாமல் MTCR அமைப்பின் விதிகள் தடை செய்திருந்தன. இனி இரசியா இந்தியாவிற்கு விண்வெளிப் பயணத்தில் முன்னணி வகிக்கும் cryogenic rocket engineஐ இரசியாவிற்கு விற்பனை செய்யும்.  இந்தியாவும் இரசியாவும் இணைந்து ஏவுகணைப் பாதுகாப்பு முறைமைகளை உற்பத்தி செய்தால் பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டுகள் செல்லாக் காசாகிவிடும்.
என்ன இந்த பிரம்மோஸ்?
இந்தியாவும் இரசியாவும் இணைந்து 2004-ம் ஆண்டு முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை (Cruise Missiles) உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது. பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை. 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.

ஆத்திரப்படும் பாக்கிஸ்த்தான்
இந்தியா MTCRஅமைப்பில் இணைவதற்கு எதிராக அதன் உறுப்பு நாடுகளிடம் பாக்கிஸ்த்தான் பெரும் பரப்புரைச் செய்தது. இந்தியாவை MTCRஅமைப்பில் இணைத்துக் கொள்வதையிட்டு பாக்கிஸ்தானிய மூதவை உறுப்பினர் முஷாஹிட் ஹுசேய்ன் சயிட் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா எல்லா அரசுறவியல் முனைகளிலும் எம்மைத் தோற்கடித்து எம்மைச் சுற்றி வளைக்கின்றது என்றார் அவர். ஈரானுடனும் ஆப்கானிஸ்த்தானுடனும் பாக்கிஸ்த்தானிற்கு நல்ல உறவு இல்லாத நிலையில் அந்த இரு நாடுகளுடனும் இந்தியா தனது உறவை அபிவிருத்தி செய்கின்றது என்றார் அவர் மேலும். நரேந்திர மோடியின் ஈரானிற்கான பயணத்தின் போது ஈரான், ஆப்கானிஸ்த்தான், இந்தியா ஆகிய நாடுகளிடையான முத்தரப்பு கடப்பு ஒப்பந்தம் ( Trilateral Transit Agreement) 2016-ம் ஆண்டு மே மாதம் -24-ம் திகதி கைச்சாத்திட்டமை பாக்கிஸ்த்தானியருக்குப் பேரிடியாகவும் அமைந்திருந்தத்து. சீனாவும் இந்தியா MTCRஅமைப்பில் இணைவதை விரும்பாத போதிலும் கடுமையான எதிர்ப்பைக் காட்டவில்லை.

அடுத்த இலக்கு
இந்தியாவின் அடுத்த இலக்கு அணுவலு விநியோககர்கள் குழுவில் – Nuclear Suppliers Group (NSG) இணைவதாக இருக்கும். அதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. MTCRஅமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் Nuclear Suppliers Group (NSG) அமைப்பிலும் உறுப்பினர்களாக இருக்கின்றன. இதனால் NSG அமைப்பில் இணைந்து கொள்வது இந்தியாவிற்கு இலகுவாக இருக்கும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது ஆதரவைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். மெக்சிக்கோ, சுவிஸ் போன்ற நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.  இந்தியா NSG அமைப்பில் இணைவதற்கு எதிராக சீனா கடும் பரப்புரை செய்கின்றது, நியூசிலாந்து, அயர்லாந்து, துருக்கி, தென் ஆபிரிக்கா, ஒஸ்ரியா ஆகிய நாடுகளும் எதிர்ப்பதாக பாக்கிஸ்த்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டில் இருந்து NSG அமைப்பின் விதிகளில் இருந்து இந்தியாவிற்கு சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டன. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடக்கவிருக்கும் NSG அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவை அனுமதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோன் கெரி ஏற்கனவே NSG அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இந்தியாவை அனுமதிப்பதை எதிர்க்க வேண்டாம் எனக் கடித மூலம் கேட்டுள்ளார். NSG அமைப்பில் இந்தியாவை இணைத்தால் பாக்கிஸ்த்தானையும் இணைக்க வேண்டும் என சீனா அடம்பிடிக்கின்றது. ஆனால் அணுப்படைகலன்கள் பரவலாக்குதல் தொடர்பாக பாக்கிஸ்த்தானின் செயற்பதிவும் (track record) இந்தியாவின் செயற்பதிவும் வேறுபட்டவை. அணுக்குண்டு உற்பத்தித் தொழில்நுட்பம் பாக்கிஸ்த்தானிடமிருந்து ஈரானிற்கும் வட கொரியாவிற்கும் கைமாறியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் இந்தியா தனது தொழில்நுட்பத்தை எந்த நாட்டிற்கும் விற்பனை செய்யவில்லை.

அடுத்த ஏவுகணை
இந்தியாவின் பிரம்மோஸ் திட்டத்தின் தலைவர் சிவதாணு பிள்ளை புராணங்களில் உள்ள அஸ்த்திரங்களைப் போலவே எமது ஏவுகணைகள் அமையும். திருமாலின் கையில் இருக்கும் சுதர்சனாம் என்னும் பெயர் கொண்ட சக்கரத்தைப் போன்று எதிரி இலக்கைத் தாக்கி விட்டு மீண்டும் எமது கையில் வந்து சேரும் ஏவுகணைகளையும் உருவாக்கவுள்ளோம் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். கடவுள்களின் கட்டிட அமைப்பாளரான விஸ்வகர்மா சூரியனின் துகள்களில் இருந்து சிவபெருமானுக்கு திரிசூலமும், திருமாலுக்குச் சக்கரமும், தேவர்களுக்கு புட்பகவிமானமும் அமைத்தார் எனக் கதைகள் சொல்கின்றன. சுதர்சன சக்கரத்தில் ஒரு கோடி கூர்கள் இருக்கின்றன. ஆனால் சிவபுராணத்தின் படி திருமாலுக்கு சிவபெருமான் சக்கரத்தை வழங்கினார்.

அமெரிக்கா ஏன் இந்தியாவை MTCRஇல் அனுமதித்தது?
இந்தியாவிற்கான அமெரிக்காவின் படைக்கல விற்பனை இனி அதிகரிக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியின்றி இந்தியாவால் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த முடியும். அதற்கு துணையாக இரசியா இருக்கின்றது. இது இரசிய இந்திய உறவை நெருக்கமாக்குவதுடன் இரசியாவின் படைக்கல விற்பனையை அதிகரிக்கும். இந்தியாவை MTCR அமைப்பின் உறுப்பினராக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குப் பிடிக்காத நாடுகளிற்கு இந்தியா ஏவுகணைகளை விற்பனை செய்வதைத் தடுக்கலாம். மன்மோகன் சிங் – சோனியா ஆட்சியில் இந்தியாவிற்கு அணு வலு உற்பத்தித் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ய அமெரிக்கா கடும் முயற்ச்சி எடுத்தது. அதை நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி கடுமையாக எதிர்த்தது. இனி அந்த விற்பனை நடக்கப் போகின்றது.  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய முடியாது எனத் தடைவிதிக்கப்பட்ட நரேந்திர மோடியை அமெரிக்க நாடாளமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்ற வைத்ததும், அதற்குப் பலத்தை கைதட்டல்கள் கொடுத்ததும், அவருக்குப் பிடித்த ஷெல்ஃபியை பல நாடாளமன்ற உறுப்பினர்கள் அவருடன் நின்று எடுத்தது எல்லாம் ஒரு திட்டமிட்ட செயலா?
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.