Saturday, 4 June 2016

திருப்பூரில்மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள். ஏன் இப்படி? ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர். வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை’ என்று திருப்பூரில் பெயர்.
'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அடுத்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றின் மேனேஜர் சோலைமலை.
அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும்? முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது?’ என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை. கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது. மேலும், சொந்த ஊரில் இருந்தால் கல்யாணம், காட்சிக்குப் போக வேண்டும்; மொய் செய்ய வேண்டும்; ஊர்த் திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செலவு வரும் என்பனபோன்ற அன்றாட நெருக்கடிகள் இருக்கும். சம்பாதித்த பணத்தை அதற்கென செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இங்கு அது இல்லை. இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.
அதே நேரம் இந்தச் சிக்கலை தொழிலாளர்களின் கோணத்தில் இருந்து மட்டும் மதிப்பிடுவது சரியற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வெறுங்கையோடு திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்’ என்ற நிலை இருந்தது. அது உண்மையும்கூட. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படி திருப்பூரில் உழைத்து முன்னேறினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒற்றை ஆளாக திருப்பூர் வந்து கடும் உழைப்பால் சொந்த ஊரில் நிலபுலன் வாங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று அப்படியானவர்களைப் பார்ப்பது அரிது. முன்பு, வாங்கிய சம்பளம் குடும்பத்துக்குப் போனது. இப்போது நேராக டாஸ்மாக் செல்கிறது. 'ஏழைத் தொழிலாளர்கள் உழைக்கும் பணத்தை, குடியின் பெயரால் இந்த அரசு வழிபறி செய்கிறது’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை என்பதை திருப்பூரில் கண்கூடாகப் பார்க்கலாம்.
ஒரு  நிறுவனத்தின் கோணத்தில், தொழிலாளர்களின் குடி அவர்களைப் பாதிக்கிறதா? 'நிச்சயம் பாதிக்கிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைகிறது. மற்ற வார நாட்களை ஒப்பிட்டால், திங்கட்கிழமை அன்று 40 சதவிகித உற்பத்தி குறைகிறது. குடிக்கு அடிமையான ஒரு தொழிலாளியால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. அவரது வேலை செய்யும் திறன் மோசமாகக் குறைந்துகொண்டே செல்கிறது. அவரால் வேலையில் கவனம் செலுத்த முடிவது இல்லை. 

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு. அஜ்மல் கான்.

No comments:

Post a comment