Friday, 31 December 2010

பெண்கள் பேண வேண்டிய நாணம்!

மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும்  ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும்.
இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்.
மேலை நாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது. அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது. அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்து கொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச் செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது.
வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களும். அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?
கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தை உலகமறியக் காட்டுவது தான் நாகரீகமா? நங்கையர்களின் நாட்டம் தான் என்ன?
“கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதி பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி? (அவள் வெட்கப் படுவாளே)” என்று நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவள் மவுனமாக இருப்பதே அனுமதி” என்று கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5136
அனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட ஆம்’ என்று பதில் சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே? இந்தப் பெண்கள் எங்கே?
நல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப் போவது பெண் மட்டுமா? நல்ல ஆண்களும் கூடத் தானே?  வெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும் இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவி சாய்ப்பார்களா?
நறுமணம் பூசி, தன் கணவனை மயக்கச் செய்யவே ஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டு.
அதை விடுத்து தெருத் தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும் வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின் செயலுக்குச் சமமில்லையா? ஊரிலுள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும் இல்லையா?
“எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760
கடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக் கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்குக் காரணம், அதனால் மற்ற ஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறு என்னவாக இருக்கும்? வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன? வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே!
“எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: அஹ்மத் 109)
“ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281
எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24:31)
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும்,  நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:32-35)
தீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும். “தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26245), அபூதாவூத் (4166)
நன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது.  “மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?” என கேட்கப்பட்ட போது, “வாயும் பாலுறுப்பும்” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: அஹ்மத் (7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)
நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடக்கும்
நல்லொழுக்கமுள்ள பெண்களாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!
-ஃபைரோஸ் பானு

Thursday, 30 December 2010

சிவில் சர்வீஸ் தேர்வு!! ஒரு தவகல்..அன்பார்ந்த நண்பர்களே !

நம் பழைய  இராமநாதபுரம் மாவட்டத்தில்,  பத்தாவது பாஸ் செய்தால், அடுத்து பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டு வேலைக்கு பறப்பது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது நம் பிள்ளைகள் ஓரளவுக்கு கல்லூரிகளில் கால் பதித்து பட்டதாரிகள் ஆகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும் கூட, அவர்களும் வெளி நாட்டு வேலை வாய்ப்பையே முழுதாய் நம்பியுள்ளனர். நம் மண்ணிலேயே அரசாங்க உயர் பதவிகளுக்கு யாரும் முயற்சி செய்வது கிடையாது. அதை பற்றியான எந்த ஒரு விழிப்புணர்வும் அவர்கள் மத்தியில் இல்லை.

நம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூட அரசாங்க வேலை வாய்ப்புகள் பற்றி சொல்லி கொடுப்பது இல்லை. ஒரு சில மாணவர்களிடம் மட்டும் "நான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும்.. நான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும்.." என்ற கனவுகள் இருந்தாலும் கூட, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால், அது கனவாக மட்டுமே கரைந்து விடுகிறது. ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமென்றால், எங்கே அதற்கான விண்ணப்பம் கிடைக்கும் ? என்று கூட தெரியாத நிலையே இன்றும் இருந்து வருகிறது.

ஆகவே இனியும் இந்த அரசாங்க வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை நழுவ விடாமல், முறையாக பயன்படுத்தி கொள்ள, இந்த ஐ.ஏ.எஸ் வழிகாட்டி தளத்தினில், ஆர்வம் கொண்ட அனைவரும் இணையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு தேவையான தகுதி நிலைகள் பற்றிய தகவல்கள் இதோ:

கல்வித் தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறைந்தபட்ச தகுதி இளநிலைப் பட்டம்).
* இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.
* ஆனால், மெயின் தேர்வு எழுத செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.
* அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை (professional) மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத் தேர்வை எழுதலாம்.

தேசிய அடையாள தகுதி:
* இந்திய குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.
* மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக, நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோபியா, கென்யா, பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, IAS மற்றும் IPS ஆகலாம்.

வயது தகுதி
* சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
* OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 33 வயது வரை முயற்சி செய்யும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 35 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.
* மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள்:
 * பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
* இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 7 முறை முயற்சி செய்யலாம்.
* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 35 வயது வரை, எத்தனைமுறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். 

விண்ணப்ப நடைமுறைகள்: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒருவர், அதற்கான விண்ணப்பத்தை, தகவல் குறிப்பேட்டுடன் பெற வேண்டும். அதை எலக்ட்ரானிக் முறையில் ஸ்கேன் செய்ய முடியும் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் பெற முடியும்.
பூர்த்திசெய்த விண்ணப்பத்தை, அதற்கான Acknowledgement அட்டையுடன் Secretary, Union
Public Service Commission, Dholpur House, New Delhi - 110011 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் விபரம் அறிய..


http://www.upscexam.com/ias_syllabus_mains/Wednesday, 29 December 2010

எல்லாமே டிஜிட்டல்......

எதெல்லாம் டிஜிட்டலாவது என்ற வரைமுறையே இல்லாமல் போய் விட்டது.தொடக்கத்தில் அனலாகாக இருந்த சில விடயங்கள் கண் தெரிய மெதுவாய் டிஜிட்டலாயின. உதாரணமாய் முள் கடிகாரங்கள் குவாட்ஸ் எண் கடிகாரங்களாயின. பின் காகிதங்களை டிஜிட்டல் யுத்திகள் மெதுவாய் விழுங்க தொடங்கின.உதாரணமாய் ஈபுக்ஸ், ஈஸ்டேட்மென்ட்கள் etc. அதன் பின் கண் முன் தெரியாமல் எல்லாமே டிஜிட்டலாக தொடங்கின. வேதிய கேமெராக்கள் டிஜிட்டலாயின, கார்களில் டிஜிட்டல் டேஷ் போர்ட்கள், டிஜிட்டல் உபகரணங்கள், பொம்மைகள், இசை கருவிகள் எனப் பலப் பல.
இப்போது டிஜிட்டல் போட்டோ பிரேம். அந்தகாலத்தில்(?) பிளாக் அண்ட் ஒயிட் அல்லது கலர் காகித போட்டோக்களை பெரிதாய் பிரேம் போட்டு மாட்டி வைப்பது நம்மூர் வழக்கம். இப்போது அந்த பாரம்பரிய போட்டோ பிரேமை விழுங்க வந்து விட்டது டிஜிட்டல் போட்டோ பிரேம். பார்க்க அந்த கால போட்டோ பிரேம் போலவே இருக்க ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இவற்றில் ஸ்லைட் ஷோ போல போட்டோவானது மாறிக்கொண்டேயிருக்கும். பின்ணனியில் எதாவது ஒரு MP3 இன்னிசையை ஓடவிடலாம்.உங்கள் டிஜிட்டல் கேமராவை இதனோடு நேராக இணைத்து உங்கள் போட்டோக்களை இவற்றில் நேரடியாக இறக்கம் செய்து கொள்ளலாம்.கணிணியின் உதவி தேவை இல்லை.கலர் கலராய் வகை வகையாய் விலை விலையாய் வித விதமான வசதியோடு இந்த டிஜிட்டல் போட்டோ பிரேம்கள் இருக்குதுங்க.இனி இது தான் எதிர்காலம் போல.இது பற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள் பொறுத்தருள்க.


<> <> <>
Sungale AA8F - 8 LCD Digital Photo Frame with Built-In Memory
Sungale AA8F - 8 LCD Digital Photo Frame with Built-In Memory

SUNGALE AA8f 8 LCD Digital Photo Frame with Built-In 512 MB On Board Memory Hi-resolution digital LCD screen Accept all popular memory cards Built-in 128M (256M 2G optional)memory, store your photos directly Copy, transfer photos between the memory cards without using a computer USB Host(2.0) to read various external devices USB Slave to be connected to PC for file management Slide show, step show, background music, enjoy your photos in diversification Frame exchangeable TXT E-book reading Calendar, Clock, Alarm Support firmware upgrade

Sunday, 26 December 2010

சாமியார்களின் லீலைகள்....

இன்று போலி சாமியார்களின் லீலைகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன. இவர்கள் கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்திக்கொண்டு வருகின்றனர்.

நான் பல தடவை மனிதக் கடவுளர்களை கடவுளாக மதிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும் மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேன். நாம் ஏன் மனிதர்களை வணங்க வேண்டும். இந்து சமயம்தான் சொல்கின்றது ஆதியும் அந்தமும் இல்லாதவன்தான் இறைவன் என்று அப்படி இருக்கும்போது மனிதனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று கடவுளை வணங்குபவர்களைவிட மனிதக் கடவுளர்களை வணங்குபவர்களின் தொகை அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இப்படியே போனால் எதிர் காலத்தில் உண்மையான கடவுளை எவருமே வணங்கமாட்டார்கள் போலாகிவிட்டது. 

போலி சாமியார்களின் சுத்துமாத்துக்கள், லீலைகள் காரணமாக இன்று மக்கள் மத்தியிலே கடவுள் மீது இருக்கின்ற நம்பிக்கை இல்லாமல் போகின்றது. இந்து சமயத்தைப் பொறுத்தவரை மனித கடவுள்கள் (சாமியார்கள்) தேவை இல்லை இந்து சமயம் மக்களை நல்வழிப் படுத்துகின்றது.

நாம் மனிதர்களை ஏன் கடவுளாக வணங்க வேண்டும். இவர்கள் கடவுளை மீறிய ஒரு சக்தியா இல்லையே. மக்கள் சிந்திக்க வேண்டும். இந்து சமயம் சார்ந்த அமைப்புக்கள் இதிலே தலையிட வேண்டும். இந்து சமயத்தைப் பொறுத்தவரை மனிதக் கடவுளர்கள் தேவை இல்லை.

இந்த ஆசாமிகளின் மந்திர மாய, தந்திர காம லீலைகளில் நடிகைகள், பிரபலங்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் வசப்படுத்தப்படுகின்றனர். ஆனால் சாதாரண மக்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதில்லை.


இந்த ஆசாமிகளின் மாய வலையில் பல மக்கள் சிக்கித்தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை. இந்த ஆசாமிகளிளிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அத்தனை சாமியார்களும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் இவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் இல்லை..

Saturday, 25 December 2010

கடல்சார் பொறியியலில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள்....

கடந்த பல வருடங்களாகவே, கடல்சார் பொறியியல்(மெரைன் இன்ஜினீயரிங்) படிப்பில் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே.

அந்த படிப்பு தற்போது பல பொறியியல் கல்லூரிகளில் பாடப்பிரிவாக இருந்து கற்றுகொடுக்கப்பட்டாலும், அந்தப் படிப்பிற்கென்றே சில பிரத்யேக கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது மெரைன் பயிற்சிக்கான மத்திய பல்கலைக்கழகம். அதேசமயம் இதை தவிர்த்த வேறு சில முக்கிய கல்வி நிறுவனங்களும் இந்த படிப்பிற்காக உள்ளன. எனவே அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்வது மாணவர் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- கொல்கத்தா:
இந்த துறையில் இந்தியாவிலேயே இது ஒரு முன்னோடி கல்வி நிறுவனமாகும்
. கடந்த 1947 -இல் அமைக்கப்பட்ட இந்நிறுவனம், முதலில் கடல்சார் பொறியியல் பயிற்சி இயக்குனரகம் என்றுதான் அழைக்கப்பட்டது. பின்னர் 1994 -இல் கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. துவங்கப்பட்ட இத்தனை வருடங்களில், பலவிதமான மாற்றங்களை சந்தித்து, இன்றைக்கு உலகின் தலைசிறந்த கடல்சார் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு உயர்தர பயிற்சிகளை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் இங்கே உள்ளன
. அருகிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், கடல்சார் பொறியியலில் 4 வருட பி.டெக். படிக்கும் மாணவர்களுக்கு இது பயிற்சியளிக்கிறது. பாடத்திட்டமானது, மெக்கானிக்ஸ் ஆப் மெஷின்ஸ், மெடீரியல்ஸ், அட்வான்ஸ்ட் மேதமேடிக்ஸ், அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ப்லூயிட் மெகானிக்ஸ் மற்றும் பிற பொறியியல்/தொழில்நுட்ப படிப்புகள் அடங்கியவை.
இவைத்தவிர கூடுதலாக
, நிர்வாக சேவைகள், மேலாண்மை மற்றும் தொழில்முனைதல் படிப்புகள் போன்றவையும் அடக்கம். மேலும் உடற்பயிற்சி, அணிவகுப்பு, வீட்டு பராமரிப்பு, நீச்சல் மற்றும் வெளி விளையாட்டு போன்ற பயிற்சிகள் கடல்சார் பொறியாளர்கள் நல்ல உடல் மற்றும் மனோதிடத்துடன் இருப்பதற்காக அளிக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் பி.டெக். படிப்பில் 246 இடங்கள் உள்ளன. இது அங்கேயே தங்கி படிக்கும் படிப்பாகும். இங்கு படிக்கும் அனைவருக்கும் கேம்பஸ் இண்டர்வியூ முறையில் வேலை கிடைத்து விடுகிறது.
இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது
, ஐ.ஐ.டி -களால் நடத்தப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது. பொதுவாக பி.எஸ்சி(நாட்டிக்கல் அறிவியல்கள்) பட்டப்படிப்பிற்கான கல்வித்தகுதியே இந்தப் படிப்பிற்கும் பொருந்தும். இந்த படிப்பை முடித்தப்பிறகு, ஒருவர் பொறியாளர் என்ற முறையில் கப்பலில் பராமரிப்பு, இயந்திர இயக்கம் மற்றும் பாதுகாப்பு பணிகளை நன்கு மேற்கொள்வதற்கான தகுதி பெறுகிறார். இப்படிப்பை முடித்தவர் முதலில் இளநிலை(ஜூனியர்) பொறியாளர் என்ற நிலையில்தான் பதவி பெறுகிறார். ஆனால் பதவி உயர்வு பெறுவதற்கு, அவர் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் நடத்தப்படும் தகுந்த தேர்வுகளை எழுத வேண்டும்.

தேசிய கடல்சார் கல்வி நிறுவனம்:
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் இந்த கிளையானது
, கடல்சார் பொறியியல் சம்பந்தமாக 4 வருட பி.டெக். படிப்புகளை நடத்துகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை ஐ.ஐ.டி தேர்வுகள் மற்றும் கொல்கத்தாவின் கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக நடக்கிறது.

கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்- மும்பை:
இந்திய கடல்சார் கல்வித்துறையில் ஒரு சீரியப் பணியை இந்த கல்வி நிறுவனம் செய்து வருகிறது
. அதிகரித்துவரும் கடல்சார் நிபுணர்கள் தேவையை அதிகரிக்க, இக்கல்வி நிறுவனமானது, மெக்கானிகல் இன்ஜினீயரிங் மற்றும் நேவல் ஆர்கிடெக்சர் போன்ற துறைகளின் பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து, அவர்களை கடல்சார் பொறியாளர்களாக உருவாக்க ஒரு வருட பயிற்சி படிப்பை தொடங்கியுள்ளது.

இந்த ஒரு வருட படிப்பானது, கல்லூரியில் 6 மாதமும், கப்பலில் 6 மாதமும் நடைபெறும். இதைத்தவிர ஒரு புதிய கருத்தாக்கத்துடன், பல அம்சங்களைக் கொண்ட, கடல்சார் அறிவியலுக்கான 3 வருட பி.எஸ்.சி படிப்பை கடந்த 2003 -இல் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதற்கான மாணவர் தேர்வும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு மூலமே நடைபெறும். இப்படிப்பை முடித்தவர் நாட்டிக்கல் அறிவியல் மற்றும் கடல்சார் பொறியியல் ஆகிய 2 துறைகளிலும் தேர்ந்தவராக இருப்பார்.

பொதுவாக இத்தகைய பலஅம்ச படிப்பானது, இத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு நிபுணத்துவ படிப்பாக திகழ்கிறது. இந்தப் படிப்பானது, பொது கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளதோடு, மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டும் உள்ளது. இந்த பி.எஸ்சி படிப்பை முடித்தவர்கள், 18 மாத நடைமுறை கடல்சார் மற்றும் கப்பல் போக்குவரத்து பயிற்சியில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.

இதை முடித்தபிறகு, திறன் சம்பந்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நாட்டிக்கல் சம்பந்தப்பட்ட வாய்மொழித் தேர்வு ஆகியவற்றுக்கான 2 வது மேட்(வெளிநாடு செல்லுதல்) சான்றிதழ் தேர்வு அல்லது கிளாஸ் IV, பகுதி-’பி’ சான்றிதழ் – திறன் சம்பந்தப்பட்ட எழுத்து தேர்வு மற்றும் பொறியியல் சம்பந்தப்பட்ட வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ளலாம்.
இந்த இருவகை தேர்வுகளை எழுதுவதில், மாணவர்களுக்கு விருப்பத்தேர்வு நடைமுறை உண்டு. மேற்கண்ட பி.எஸ்.சி தகுதி மாணவருக்கு இருந்தால், அவர், கடல்சார் பொறியாளர் அதிகாரிக்கான பகுதி ‘ஏ’ தேர்வு திறன் அறிதலுக்கான கிளாஸ் IV சான்றிதழ் தேர்வு மற்றும் திறன் அறிதலின் 2 வது மேட் சான்றிதழுக்கான அடிப்படை படிப்பு போன்றவற்றிலிருந்து அவர் விலக்களிக்கப்படுவார். மேலும், 2 வது மேட்(வெளிநாடு செல்லுதல்) மற்றும் கடல்சார் பொறியாளர் அதிகாரி கிளாஸ் IV பகுதி ‘பி’ தேர்விலிருந்தும் விலக்களிக்கப்படுகிறார்.

லால்பகதூர் சாஸ்திரி கல்லூரி- நவீன கடல்சார் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி கல்வியகம்:

மும்பையில்1948 -இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், உலகளவில் இத்துறைக்காக இயங்கும் பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இதில் 1200 மாணவர்கள் படிப்பதோடு, ஏறக்குறைய 50 கடல்சார் படிப்புகளும் சர்வதேச தரத்தில்(ஐ.எம்.ஓ) வழங்கப்படுகின்றன. இக்கல்வி நிறுவனம் கடல்சார் அதிகாரிகளுக்கென்றே பரந்தளவிலான பயிற்சியை வழங்குகிறது.
இந்த உயர்நிலை கல்வியால், வெளிநாட்டு நிறுவன கப்பல்களிலும் சிறப்பாக பணிபுரியக்கூடிய திறன்களை இந்திய மாணவர்கள் பெறுகிறார்கள். கடல்சார்ந்த மற்றும் கப்பல் தொழில்சார்ந்த படிப்புகளின் அனைத்து அம்சங்களையும் தேவைகளையும் கருத்தில்கொண்டு, நவீன முறையிலான அனைத்து வசதிகளும் இங்கு உண்டு. சர்வதேச தரத்துடன் 1984 -இல் இங்கு ஆரம்பிக்கப்பட்ட “கூடுதல் முதுநிலை படிப்பு” மற்றும் 1994 -இல் ஆரம்பிக்கப்பட்ட “முதன்மை பொறியாளருக்கான கூடுதல் படிப்பு” ஆகியவை இக்கல்லூரியின் மற்றொரு சிறப்பம்சம்.

இவைத்தவிர இங்கு7 நிலையிலான படிப்புகளும் உள்ளன. அவை,
எல்.என்.ஜி. – எல்.பி.ஜி., புல் மிஷன் சிமுலேட்டர், லிக்யுட் கார்கோ ஹேண்ட்லிங் சிமுலேட்டர், இஞ்சின் ரூம் சிமுலேட்டர், ஹிப் மேனோவரிங் சிமுலேட்டர், ரேடார் சிமுலேட்டர், ரேடார், ஏ.ஆர்.பி.ஏ. மற்றும் நேவிகேஷன் சிமுலேட்டர் ஜி.எம்.டி.எஸ்.எஸ். போன்றவையாகும்.இத்தகைய புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிப்பதன் மூலம், அவர்களின் வருங்கால கனவுகள் எளிதில் வசப்படுகின்றன.


 மேலும் தெரிந்துகொள்ள எனது இங்கிலீஷ்
  கட்டுரையை படிக்கவும்.
 
தொகுப்பு : மு. அஜ்மல்கான்.
 

விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன் வரலாறு -ஒரு பார்வை...


வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்!

இன்று (25/12/2011) டிசம்பர்-25 பிறந்தநாள் காணும் அறிவியல் மேதையும், சிறந்த கணிதவியலாருமான விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன் அவர்களை பற்றி அறிவோமே ! 

ஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த இயற்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்று சிந்திக்கிறோமா? ஒருவர் சிந்தித்தார் அதன் மூலம்தான் புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தவர் இங்கிலாந்து தேசம் உலக்குத் தந்த தன்னிகரற்ற விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன். 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார் நியூட்டன். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை ஒரு கை பார்த்த பிறகு அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார்.

சிறுவயதிலேருந்து நியூட்டனுக்கு அறிவியலில் அலாதி பிரியம். தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்கு பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் சிறுது காலத்தில் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி (Trinity College) கல்லூரியில் சேர்த்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்ததுதான்.

வளைந்தப் பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள் அளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்து தந்தவைதான். ஒருமுறை அவர் தனது (Wools Thorpe) தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தார். நியூட்டனுக்கு முன் தோன்றி மறைந்த மானிடர் அனைவரும் தங்கள் காலகட்டத்தில் பார்த்திருக்கக்கூடிய காட்சிதான் அது. ஆனால் அதனை இயற்கை என்று நினைத்து அப்படியே விட்டு விடாமல் அதைப்பற்றி சிந்தித்தார். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழச்செய்கிறது என்று ஊகித்தார் நியூட்டன். அவர் நினைத்தது சரிதான். உலகில் புவி ஈர்ப்பு விசை என்ற சக்தி இருப்பதால்தான் எல்லாப் பொருள்களும் கீழே விழுகின்றன. நாமும் மிதக்காமல் நடக்கிறோம் என்பது இப்போது நாம் அறிந்த உண்மை. அதனை கண்டுபிடித்து சொன்னதுதான் நியூட்டனின் மகத்தான சாதனை.

1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன பலம் பொருந்திய தொலைநோக்கிகள்கூட நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு. 

* எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.

* ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.

* ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.

'சர்' ஐசக் நியூட்டனின் மேற்கூறிய கோட்பாடுகளை அறியாத அறிவியல் மாணவர் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் நியூட்டனின் பங்களிப்பு மகத்தானது. அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் நியூட்டன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரிதும் போற்றப்பட்டன.

நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு  "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே ஆகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார். 
1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார். இங்கிலாந்தின் ஆகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனு குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது.

நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது... 

"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது" 

இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! நியூட்டன் பிறவிலேயே ஒரு மேதை அதனால்தான் அவரால் இயற்கையின் விதிகளை கண்டறிந்து சொல்ல முடிந்தது. இறவாப்புகழும் பெற்று வானத்தை வசப்படுத்த முடிந்தது என்று நீங்கள் நினைக்கலாம். அது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் அந்த பிறவி மேதைக்குகூட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் தூண்களாக இருந்தன. அவருடைய கோட்பாடுகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட போதெல்லாம் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னம்பிக்கையோடு தனது ஆராய்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்தார். உங்களுக்கும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை தூண்களாக இருந்தால் நிச்சயம் நீங்கள் விரும்பும் வானம் வசப்படும். 

Tuesday, 21 December 2010

ஊட்டி-மலைகளின் அரசி( Ooty - Udhagamandalam)-ஒரு பார்வை.....
ஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங்கம் வைத்த பெயர் உதகமண்டலம்.  கடல் மட்டத்தில் இருந்து 2286 மீ அதாவது 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதகமண்டலம் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பையோஸ்பியர்(biosphere) நீலகிரி.  நீலகிரி மலைப்பகுதி உலகத்தில் இருக்கும் 14 hotspots களில் மிக முக்கியமான ஒன்று. 

உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர்.  எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி என்றானது.  ஊட்டியில் இருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பற்றி பார்கலாம்..


Government Botanical Garden,  Ooty:
1847இல் அன்றைய சென்னை மாகானத்தின் கவர்னரால் அடிக்கல் நாட்டப்பட்டு 22 ஏக்கர் பரப்பளவுடன் உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது.. 
1)கீழ் பகுதியில் உள்ள பூங்கா - Lower Garden
2)புதிய பூங்கா - New Garden
3)இத்தாலிய பூங்கா - Italian Garden
4)பாதுகாக்கப்படும் இடம் - Conservatory
5)தண்ணீர் மாடி - Fountain Terrace
6)சிறிய செடிகளுக்கான பூங்கா - Nurseries


பச்சை பசலேன தோற்றமளிக்கும் இந்த பூங்காவில் அரிய வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம் , 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகளை இங்கு காணலாம்.  இத்தாலிய வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகளை காணலாம். வருடந்தோறும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் இங்கு மே மாதம் மலர்க் கண்காட்சி நடைபெறும்.

Rose Garden:
நூறாவது மலர்க கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் இந்த பூங்கா உள்ளது. முதன் முதலில் 1919 வகையான் 17,256 ரோஸ் மலர்கள் நடப்பட்டது. பின்னர் மேலும் பல மல்ர்கள் நடப்பட்டு தற்போது 2241 வகையான 20,000க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம்.  தமிழக தோட்டக்கலைத்துறையால் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.  

Lake Park:
ஏரி பூங்கா ஊட்டியின் பிரதான ஏரியில் அமைந்துள்ளது. ஊட்டி ரயில் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஏரியின் ஒரு பகுதி 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்று ஊட்டியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மாலை நேரங்களில் இயற்கையின் அழகை ரசிக்க உகந்த இடம் இந்த ஏரி பூங்கா.  மேலும் 1978ஆம் ஆண்டு கண்ணாடியால் ஆன பூங்கா ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டது. ஏரியை சுற்றி யூகலிப்டஸ் மரங்களும், சிறுவர் பூங்காவும், சிறுவர் ரயிலும் உள்ளது.  Deer Park:
ஊட்டியில் உள்ள ஏரி பூங்கா அருகில் அமைந்துள்ளது இந்த மான் பூங்கா.  இந்தியாவில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் பல பூங்காக்களில் இந்த பூங்காவும் ஒன்று.  ஊட்டியின் அருமையான வானிலையில் வனவிலங்குகளை காண இந்த பூங்கா பெரிதும் உதவியாய் இருக்கிறது.  1986 ஆம் ஆண்டு மொத்தம் 22 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் 6 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பார்வைக்காக ஒதுக்கப்பட்டது.  தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்கா ஊட்டியில் இருக்கும் சில முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.


Boat House:
ஊட்டியின் பிரதான ஏரியில் இந்த படகு இல்லம் அமைந்துள்ளது. ஜான் சுலிவன் என்பவரால் உருவாக்கபட்ட இந்த ஏரி 4 சதுர கி.மீ அளவு கொண்டது. இந்த ஏரிக்கு அருகில் ஊட்டியின் புகழ்மிக்க குதிரை பந்தயம் நடக்கும் இடமான ரேஸ் கோர்ஸும் அமைந்துள்ளது. இரண்டு பேர் செல்லக்கூடிய படகுகள்,  குடும்பத்தோடு செல்ல படகுகள் என பலவகையான படகுகள் இங்கு இருக்கின்றன.  தமிழக சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த படகு இல்லத்தில் படகுகள் மூலம் ஏரியின் அழகையும், இயற்கை வளங்களையும் கண்டு களிக்கலாம்.

Government Museum:
ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். ஊட்டியில் முன்னர் தோடா இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தை பற்றிய செய்திகள்,  நீலகிரி மாவட்டத்திக்கு தொடர்புடைய சிற்பங்கள் மற்றும் மேலும் பல கலைப்பொருட்களும் இங்கு அணிவகுக்கின்றன.  மேலும் ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் லலித் கலா அகாடமியும் அமைந்துள்ளது.  இந்த அகாடமியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைப்பொருட்களும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.


Railway Station:
நீலகிரி மலை ரயில் unescoவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.  இந்த ரயில் ஊட்டியின் கரடுமுரடான மலைப்பாதையில் கம்பீரத்துடன் செல்கிறது. இந்த ரயிலில் செல்வதன் மூலம் ஊட்டியில் ரம்மியமான வானிலையையும்,  ஊட்டி மலையின் அழகையும் ரசிக்கலாம். கிட்டத்தட்ட 5 மணி நேர பயணம் மூலம் ஊட்டியை அடையலாம்.

மேலும் பார்க்ககூடிய இடங்கள் :  St, Stephen Church, Wax world(பார்க்க - மெலுகால் ஆன காந்தி படம்), கோல்ப் மைதானம்.


எப்படி செல்வது?
1)ஊட்டிக்கு சென்னை, மேட்டுப்பாளயம், பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2)ஊட்டியில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் விபரங்கள்(1) மேலும் விபரங்கள்(2)


3)அருகில் உள்ள விமான நிலையம் - கோயம்பத்தூர் 105 கி.மீ தொலைவில்

Monday, 20 December 2010

காரைக்குடி செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கலாம்....நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும்  கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால்  கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....
 

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை  அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின்  முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.

வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.
இந்த கதவுகளிலின் மேற்புறத்தில் பெரும்பாலும் லஷ்மியின் உருவம் அல்லது கும்பம் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும். இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.

போன பதிவில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து தகவல்களை அறிந்து கொள்வதை விட நேரே சென்றுவாருங்கள் என்று கூறியிருந்தேன். இப்போது ஒரு திரைப்படத்தைப் பாருங்கள் எனக் கூறுகிறேன்(மன்னிக்கவும்!!). இந்த வீடுகளைப் பற்றி மேலும் அறிய பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தைப் பாருங்கள், இப்படத்தின் முதல் பாதி நகரத்தார்களின் வாழ்க்கை முறையைச் சித்தரித்துள்ளது.

இங்கு எப்படி செல்வது? 

குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.

3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.மேலும் விபரங்களுக்கு படத்தைப் பார்க்கவும்.(A என்பது நாட்டரசன்கோட்டை)

எப்போதும் கோவில்கள், சரணாலயங்கள்,   அரண்மனைகள் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறோமே! வித்தியாசமான எதைப் பற்றியாவது சொல்லலாம் என்று தேடியபோது என் கண்ணில் பட்டது செட்டிநாட்டின் பாரம்பரியமிக்க கலைநயமுடன் கூடிய வீடுகள். சரி! இன்று சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.


 இன்றும் செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கலாம்.  இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது.  இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது.  இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.


இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம்.  அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது.  இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை. 


வீடுகளைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொண்டீர்கள்.. இப்போது இங்கு இருக்கும் மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்?  அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம்.  உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.  


பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர்.  இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது.  எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும்  பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
வீடுகள் என்று தலைப்பில் கூறிவிட்டு இதை எல்லாம் எதற்கு கூறுகிறேன் எனக் கேட்கலாம்.. இவை அனைத்தும் இந்த வீடுகளின் பாரம்பரியத்தையும் கலைநயத்தையும் கூற இந்த வீடுகளில் இருப்பவை. என்னைக் கேட்டால் செட்டிநாட்டு மக்கள் இவற்றைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கவும் மறந்துவிட்டார்கள்.. ஆனால் உணவுப் பொருட்கள் மட்டும் இன்றுவரை நடைமுறையில் உள்ளன.


இந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.  நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும்.  மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


சுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:
1)S.A.R Muthiah house.
2)Muthiah chettiar, raja of chettinad - kanadukathan.
3)Muthiah's brother house - kanadukathan.


மீண்டும் உங்களுக்காக இங்கு எப்படி செல்வது?
குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.


1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.


3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.

போன பதிவில் நமது நண்பர் டெக் ஷங்கர் பின்னூட்டத்தில் செட்டிநாட்டு வீடுகளின் புகைப்படத் தொகுப்பை அனுப்பியிருந்தார். அவை உங்கள் பார்வைக்காகஇங்கு செல்ல முடியவில்லை என்றால் சென்னையில் ECR ரோட்டில் முத்துக்காடு அருகில் இருக்கும் தக்ஸின் சித்ரா எனும் இடத்துக்கு சென்று வாருங்கள்,  செட்டிநாட்டு வீடுகளைப் போல் இங்கும் ஒரு வீடு இருக்கிறது.

தொழில் தொடங்க முனைவோருக்கு உதவ அரசு மானியம் வழங்குகின்றன?.


வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து திரும்பும் பலரும் தொழில் தொடங்க விரும்புவது இயற்கைதான். ஆனால் அதனை தொடங்குவதற்கு முன்பு தொழில் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய வளர்ந்த உலகில் இதனை அறிந்து கொள்ள பல வசதிகள் உள்ளன. அவற்றை முறையாக பயன் படுத்திக் கொள்வதில் தான் நம் திறமை உள்ளது. விடாமுயற்சியுடன் செயல்பட் டால் வெற்றி எனும் கனியை பறிப்பது ஒன்றும் கஷ்டமல்ல. தொழில் முனை வோருக்கு உதவ அரசாங்கமும் வங்கிகளும் தயார் நிலையில் தான் உள்ளன. அவற்றை நாம் அணுகவேண்டிய முறைதான் முக்கியம். அரசின் மாவட்ட தொழில் மையங்கள், தொழில் முனைவோருக்கு உதவ எப்போதும் தயாராகவே உள்ளன. என்ன தொழில் தொடங்க வேண்டுமென் றவுடனே சரியான திட்டமிடுதல் வேண்டும். அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக் கொண்டு தொழில்முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன.
சிப்காட் எனப்படும் சிறு தொழில் மையம் மூலம் இதுவரை 12 மாவட் டங்களில் 19 தொழில்மையங்கள் நிறுவப்பட்டு 1803தொழில் நிறுவனங் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.
மானியம் வழங்கப்படும் தொழில்கள், மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு மருந்துப் பொருட்கள் உற்பத்தி சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி ஏற்றுமதி ஆபரணங்கள் மாசுகட்டுப்பாடு உபகரணங்கள் விளையாட்டுப் பொருட் கள் சிக்கன கட்டுமானப் பொருட்கள் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவை.
அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவிகிதம் மானியமாக வழங்கப் படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவிகிதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தி தொடங்கி முதல் ஆறு ஆண்டு களில் செலுத்தப்படும் மதிப்புக் கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானிய மாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தி தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து அய்ந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்சம் 25 வேலையாட் களை கூடுதலாக அய்ந்து சதவிகிதம் அதிகபட்சமாக ரூபாய் அய்ந்து லட்சம் வரை வேலைவாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
அரசு வங்கிகளும் தாராளமாக கடனுதவி செய்கின்றன. தொழில் தொடங்க விரும்புவோர் தங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் குறித்து தெரிவிப் பதோடு, தாங்கள் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு, பங்குதாரர் விவரம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தும் முறை, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங் களை மனுவாக கொடுக்க வேண்டும். முறையான ஆய்வுக்குப் பின்னர் வழங்கப் படும் கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால், கூடுதலாக கடன் பெற லாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட் களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.
முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேயைன அனுமதி கிடைக் கும். செயல் துறைத் தலைவர் (வழிகாட் டுதல்  குழு) தமிழ்நாடு தொழில் வழிகாட் டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு.
எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன தெரியுமா?
1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

சரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.  

பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க ....
சுயவேலை தொழில் எப்படி தொடங்குவது?
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு.  வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!
ஓருங்கினைப்பு:
      முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:
செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044-28553118, 285553866
  ஃபேக்ஸ்: 28588364