Monday 20 December 2010

காரைக்குடி செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கலாம்....



நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும்  கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால்  கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....
 

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை  அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின்  முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.

வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.
இந்த கதவுகளிலின் மேற்புறத்தில் பெரும்பாலும் லஷ்மியின் உருவம் அல்லது கும்பம் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும். இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.

போன பதிவில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து தகவல்களை அறிந்து கொள்வதை விட நேரே சென்றுவாருங்கள் என்று கூறியிருந்தேன். இப்போது ஒரு திரைப்படத்தைப் பாருங்கள் எனக் கூறுகிறேன்(மன்னிக்கவும்!!). இந்த வீடுகளைப் பற்றி மேலும் அறிய பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தைப் பாருங்கள், இப்படத்தின் முதல் பாதி நகரத்தார்களின் வாழ்க்கை முறையைச் சித்தரித்துள்ளது.

இங்கு எப்படி செல்வது? 

குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.



1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.






2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.

3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.



மேலும் விபரங்களுக்கு படத்தைப் பார்க்கவும்.(A என்பது நாட்டரசன்கோட்டை)

எப்போதும் கோவில்கள், சரணாலயங்கள்,   அரண்மனைகள் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறோமே! வித்தியாசமான எதைப் பற்றியாவது சொல்லலாம் என்று தேடியபோது என் கண்ணில் பட்டது செட்டிநாட்டின் பாரம்பரியமிக்க கலைநயமுடன் கூடிய வீடுகள். சரி! இன்று சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.


 இன்றும் செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கலாம்.  இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது.  இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது.  இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.


இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம்.  அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது.  இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை. 


வீடுகளைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொண்டீர்கள்.. இப்போது இங்கு இருக்கும் மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்?  அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம்.  உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.  


பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர்.  இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது.  எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும்  பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.




வீடுகள் என்று தலைப்பில் கூறிவிட்டு இதை எல்லாம் எதற்கு கூறுகிறேன் எனக் கேட்கலாம்.. இவை அனைத்தும் இந்த வீடுகளின் பாரம்பரியத்தையும் கலைநயத்தையும் கூற இந்த வீடுகளில் இருப்பவை. என்னைக் கேட்டால் செட்டிநாட்டு மக்கள் இவற்றைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கவும் மறந்துவிட்டார்கள்.. ஆனால் உணவுப் பொருட்கள் மட்டும் இன்றுவரை நடைமுறையில் உள்ளன.


இந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.  நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும்.  மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


சுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:
1)S.A.R Muthiah house.
2)Muthiah chettiar, raja of chettinad - kanadukathan.
3)Muthiah's brother house - kanadukathan.


மீண்டும் உங்களுக்காக இங்கு எப்படி செல்வது?
குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.


1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.


3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.





போன பதிவில் நமது நண்பர் டெக் ஷங்கர் பின்னூட்டத்தில் செட்டிநாட்டு வீடுகளின் புகைப்படத் தொகுப்பை அனுப்பியிருந்தார். அவை உங்கள் பார்வைக்காக



இங்கு செல்ல முடியவில்லை என்றால் சென்னையில் ECR ரோட்டில் முத்துக்காடு அருகில் இருக்கும் தக்ஸின் சித்ரா எனும் இடத்துக்கு சென்று வாருங்கள்,  செட்டிநாட்டு வீடுகளைப் போல் இங்கும் ஒரு வீடு இருக்கிறது.

No comments:

Post a Comment