Thursday 20 May 2021

தமிழரின் மரபு சார்ந்த வாழ்வை மீட்டு எடுத்த மருந்தில்லா கொரோனா கிருமிக்கு மணமார்ந்த நன்றிகள் !!

?

.

நீங்கள் ‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’ - கற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது. சார்த்தர் எழுதிய ‘மீள முடியுமா?’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது - ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்.’

பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன. இன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.

இந்த க‌ஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன. கங்கை நதி குடிநீராக மாறுகிறது. சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது. மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது. 

தீவிரமான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நண்பர் ‘கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது‘ என்கிறார். ‘நீங்கள் எல்லாருமே திருடர்கள். எனவே யாரும் என்னைப் பார்க்க வராதீர்கள்’ என்று கடவுளே தன் வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச் சொல்லிவிட்டார் என்கிறார் ஒரு முதியவர்.

நம் இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது. விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது. வல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை.

இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை. முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது. கவனித்துப் பார்த்தால் நம் இயல்புக்குப் பொருந்தாத எல்லாம் விடை பெறுகின்றன.

மண்டபங்கள் வரும் வரை நம் திருமணங்கள் வீட்டில் நடந்தன. இப்போது திருமணங்கள் எந்த புரோகிதமும் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டன. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அத்தனை டெஸ்ட்டுகள், ஸ்கேன்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் என்று வலியுறுத்தும் மருத்துவர்கள் இப்போது அதெல்லாம் தேவையில்லை. வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். தொற்றுக்காகத் தவிர்க்கப்படுகிறது என்றாலும் தவிர்க்கப்படுவதால் ஒன்றும் ஆகாது என்ற உண்மையும் அதில் இருக்கிறது.


கிராமத்திலிருந்து வந்தவர்கள் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்கள். ‘மகன் வெளிநாட்டில் இருக்கிறான்’ என்று ஒருமாதம் முன்புவரை பெருமையாக இருந்த இந்த விஷயம் இப்போது பெருமையாக இல்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரமாகப் பேசிய வாய்கள் அனைத்தையும் மாஸ்க் மூடிவிட்டது. மதம் பற்றிப் பேசியவர்கள் மலேரியா மாத்திரை குறித்தும் கபசுரக் குடிநீர் குறித்தும் பேசுகிறார்கள்.


துறை சார்ந்து அறம் தவறியவர்களாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும்தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். தேசத்தைக் காப்பதாக எப்போதும் பேசும் அரசியல்வாதிகள் அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் கொடுத்தது செய்தியாகிறது. என்ன சம்பளம் என்று தெரியாத துப்புறவுத் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பு மணி அடிக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. ‘யாரு?’ ‘குப்பை’. சமூக இடைவெளி மட்டும் எப்போதும் போல அப்படியேதான் இருக்கிறது.

ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை. உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். பிரிட்டிஷ் பிரதமராக... ஹாலிவுட் நடிகராக... மருத்துவராகக் கூட இருங்கள். எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன. பிரான்ஸில் 92 வயது மூதாட்டி நான் நன்றாக வாழ்ந்து விட்டேன்.போதும், அவரை வாழவையுங்கள் என்று தனக்குக் கொடுத்த வெண்டிலேட்டரை முப்பது வயது இளைஞருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு நோயுடன் வீடு திரும்புகிறார். கண்கள் கலங்குகின்றன. வெண்டிலேட்டர் இல்லாத தேசத்தில் சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக எத்தனை அணு ஆயுதங்கள் யுத்த விமானங்கள்.

கைகளைச் சோப்புப் போட்டுக் கை கழுவுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த லாகோஸ் நகரில் ஒருமுறை சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட ஆடம்பரம் என்கிறது செய்தி.

1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். 65 வயதுக் கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு தாய் நல்லதங்காள் போல தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசுகிறாள். இவையெல்லாம் வெறும் காட்சிகள் அல்ல. வரும் ஆண்டுகளுக்கான குறியீடுகள்.

பெரும்பாலான நாடுகள் மூத்த குடிமக்களை கைவிட்டு விட்டது. உடல் நலம் சரியில்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டது என்றால் இனி என்ன நடக்கும். அழுத்தம் தாளாமல் குக்கர் வெடிப்பது போல பல நாடுகளில் புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறது ஓர் ஆங்கிலக் கட்டுரை. திருக்குறளின் 56ஆவது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.

“உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக உரிய நேரத்துக்குள் கையாளாமல் விட்டால் நாட்டில் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும். பஞ்சாபில் ஆயிரக்கணக்கான டன் கோதுமை அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அறுவடை செய்ய வேண்டுமெனில் பிகாரில் இருந்து தொழிலாளர்கள் வர வேண்டும். அறுவடை செய்ததை நிரப்ப மேற்கு வங்கத்தில் கோணிப்பை தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும். கோதுமை மூட்டைகளை நாடு எங்கும் கொண்டு செல்ல டிரக்குகள் வேண்டும். ஒரு டிரக் டிரைவர் நூறு ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் இறங்குவார்? தொற்று இருந்தால் என்ன நடக்கும்? ‘ஒன்றை ஒன்று வெகுவாகச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதுதான் எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்’ என்கிறார் இந்தியக் குடிமையியல் அதிகாரி ஒருவர்.

‘உங்கள் வாழ்வில் நித்தியமானது மரணம் ஒன்றுதான். அதற்கு தயாராகாமல் நீங்கள் எதெதற்கோ தயாராகிறீர்களே ஏன்?’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கி ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்?’ என்று கேட்கிறார்.

இந்தக் கிருமியின் வளர்ச்சியைப் பற்றி உலகின் நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் யோசிக்காததன் காரணம் பல துறைகள் தனியார்வசம் போனதுதான் என்கிறது புள்ளிவிவரம். வாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. அமெரிக்காவுக்கு வியட்நாம் மருந்து அனுப்புகிறது நமது இந்தியா.

கதவில் இருக்கலாம். கைப்பிடியில் இருக்கலாம். செய்தித் தாளில் இருக்கலாம். பால் பாக்கெட்டில் இருக்கலாம். தும்மினால் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கலாம். ஒருமுறை இதன் சுற்று முடிந்தாலும் ஆறு மாதங்களில் இதன் மறு சுற்று ஆரம்பிக்கலாம். வதந்திகளும் செய்திகளும் கிருமியைவிட வேகமாகப் பரவுகின்றன. தொலைக்காட்சிக்கு நாள் முழுக்க பிரேக்கிங் நியூஸ். திகில் படத்துக்கான இசையுடன் மனிதர்கள் இறந்த செய்திகள்.

நல்ல வேளையாக இது பறவைகள் மூலம் பரவவில்லை. பறவைகள் மூலம் பரவினால் மனித குலம் பிழைத்திருப்பது கடினம் என்கிறார் ஒரு மருத்துவர். இப்போது வௌவால் மூலமும் பரவும் என்கிறார்கள். அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி பழங்குடியினருக்கும் தொற்று பரவிவிட்டது என்கிறது ஒரு மற்றொரு செய்தி. மேலும் கொரோனா  கிருமி உருமாறி  ஆல்பா, பீட்டா, டெல்டா, ஓமிகிரேன் என்று உருமாறிக்கொன்டே   செல்லும்  என்கிறார்கள் மருத்துவர்கள் .

மருந்தில்லா கொரோனா  கிருமிக்குப் பயந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பயத்தில் இருக்கிறது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டில் இருக்க வேண்டும். சீன அரசு எல்லாமே தந்தது. வீட்டுக்குள் இருந்தார்கள். இங்கு கூட்டம் கூட்டமாக வெளியில் வருகிறார்களே ஏன்? கிருமியை விடவும் பசியும் வேலையின்மையும் கொடுமையானது. கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றிய சீனாவில் டிசம்பரில் தொடங்கிய ஊரடங்கை ஏப்ரலில்தான் தளர்த்தினார்கள். எனில் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் நம் தேசத்தில் இந்தத் தொற்று கட்டுக்குள் வர எத்தனை மாதங்கள் ஆகும்?

ஒரு நாள். பிறகு 21. பிறகு 19. பிறகு? இது தொடரும் நிலையில் என்னென்ன நூல்கள் படிக்கலாம், என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகங்களில் வருகிற பொழுதுபோக்குத் திட்டங்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போகும். முதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து விட்டன. குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் குறித்த செய்திகள் அதிகம் வரத் தொடங்குகின்றன.

அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது. ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள். மாற்றுப் பாதையில் செல்க’ என்ற அறிவிப்பு சாலையில் இருப்பதைப்போல ‘இயற்கை வேலை செய்கிறது. நாம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். பரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.

அச்சு ஊடகங்கள் விடை பெறலாம். மக்கள் கூடுகிற வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் பல மாதங்களுக்கு மூடி இருக்கும் நிலை வரலாம்.

இதெல்லாம் முடிவுக்கு வரும்போது முதல் இரண்டு இடங்களுக்கு மக்கள் ஆர்வமாகத் திரும்புவார்கள். ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் மனித இடைவெளி சாத்தியம். மூன்றாவதான திரையரங்கு என்னாகும்? யாருமே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் பயத்துடன் இருந்தவர்களுக்கு அனைவரையும் காப்பாற்றும் நாயகர்களின் படங்கள் என்ன பொருள் தரும்? இணைய தளங்கள் வழியாக இத்தனை வாரங்கள் படங்கள் பார்த்துப் பழகியவர்கள் திரையரங்குக்குத் திரும்புவார்களா?

இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்’ என்று ஒரு அறிவிப்பு வரும். அதற்கு இணையான சூழல்தான் இப்போதும். முரண் என்னவெனில் அத்தியாவசியத்தோடு வீட்டுக்குள் இருங்கள் என்பதுதான். அன்றாட வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை இயற்கை முன் மொழிந்துவிட்டது. தொழில்நுட்பம் அதை வழிமொழியப்போகிறது.

சமீப வருடங்களில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிராக மினிமலிஸம் என்ற ஒரு கருத்து உலகம் முழுக்கப் பரவி வருகிறது. ‘கடந்த ஒரு வருடத்தில் எதை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அது உங்களுக்கு எப்போதும் பயன்படாது. எனவே அதைத் தூக்கி எறியுங்கள். பொருட்களைத் துடைக்க, பொருட்களை ஒழுங்கு செய்ய என்று உங்கள் ஆயுளை பொருட்களிடம் செலவழிக்காதீர்கள்’ என்பதுதான் அந்தக் கோட்பாடு. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்தான்.

இந்த மாதத்தில் எங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் வந்தது. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி கொண்டாட்டமாக நடத்துவது சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்தார்கள். கேக் இல்லை. கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்துச் சொன்னோம். முந்தைய பிறந்தநாட்கள் எல்லாம் நிழற்படங்களாக ஹார்டு டிரைவில் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாள் முழு வாழ்க்கைக்கும் மனத்தில் இருக்கும்.

பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன. குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் கீரையும், மிளகு ரசமும் வந்துவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.

இத்தனை நாளும் பணத்தின் பின்னால், அதிகாரத்தின் பின்னால் பெருமைகளின் பின்னால் நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்கள் சக்கரங்களை நிறுத்துங்கள். உங்கள் அருகில் ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டம் இவர்களுக்காகத்தான் எனில் அவர்களின் உண்மையான தேவை என்ன?

வெளியேறுவது என்பது கதவின் வழியாக மட்டும் அல்ல ஒரு நூலின் வழியாக, சமூக ஊடகம் வழியாக, திரைப்படத்தின் வழியாகவும் வெளியேற முடியும். எனவே தனித்திரு என்பதை வள்ளலாரின் பொருளில், விழிப்புடன் இருங்கள் என்பதை  என் கணவர் மு.அஜ்மல் கானின்  பொருளில், விலகி இருங்கள் என்பதை ஓஷோவின் அர்த்தத்தில் யோசிக்கும்போது இந்தத் தனிமையின் அர்த்தம் என்ன?

எதிர்மறை உணர்வுகளும், பயமும், அவ நம்பிக்கையும் சூழ்ந்த இந்தக் கடினமான நாட்கள் சீக்கிரமே முடிந்துவிடும். இதுபோல பல நூறு தொற்றுக்களைப் பார்த்த மனிதகுலம் ஆரோக்கியமாக மீண்டு எழுந்து வரும். எனவே இது மாதிரியான தனிமை உங்கள் வாழ் நாளில் திரும்பவரப் போவதில்லை. எனவே தனித்திருங்கள். பல வருடங்கள் கழித்து இதையெல்லாம் நம் சந்ததியினருக்கு ஒரு கதையாகச் சொல்ல முடியும்.

தொற்று தொடங்கிய முதல் வாரத்தில் எதிர்வீட்டில் ஒன்று நடந்தது. ஆண்டன் செகவ் பார்த்திருந்தால் ‘பால் பாக்கெட்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார். பக்கத்து ஃப்ளாட்காரர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கதவில் இருக்கும் பால் பாக்கெட்டை கைபடாமல் ஒரு குச்சியின் உதவியால் எடுத்து எப்படி மஞ்சளும் உப்பும் கலந்த வாளியில் போட்டார் என்பதுதான் கதை. 

‘கடுமையான நெருக்கடிக்குள்தான் காமெடி இருக்கிறது’ என்று சாப்ளின் சொல்லுவார். நெருக்கடி மிகுந்த இந்த நாட்களை மன அழுத்தமில்லாமல் எளிதாகக் கடந்து வருவோம். இந்தச் சூழலில் நமக்குத்தேவை நம்பிக்கை. சக மனிதனுக்கு நம்பிக்கையையும் நம்மால் முடிந்ததையும் கொடுப்போம்.

ஸ்பார்டகஸ் நாடகத்தில் ‘மண்ணிலிருந்து வந்தேன். மண்ணுக்கே திரும்புகிறேன்’ என்று ஒரு வரிவரும். அதன் வெவ்வேறு அர்த்தங்களை யோசித்துப் பார்க்கிறேன். ‘நமக்கான உணவை நாமே உருவாக்கும் அளவுக்கு ஒரு தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் போதும். எத்தகைய வீழ்ச்சியில் இருந்தும் நம்மால் மீண்டு எழுந்துவிட முடியும் என்கிற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.

இந்தப் பேரிடரை முன்வைத்து தமிழரின் மரபு சார்ந்த வாழ்வை, விவசாயத்தை, மரபு சார்ந்த மருத்துவத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

நாம் தனித்திருப்போம், கைகளைக் கழுவிக்கொண்டே இருப்போம். ஏனெனில் நம் கைகளில் கண்களுக்குத் தெரியாத கொரோனா  கிருமிகள் இருக்கிறதோ இல்லையோ பல வருடங்களாக நாம் கொன்ற இயற்கையின் ரத்தம் கறையாக இருக்கிறது. 


ஆக்கம்  மற்றும்  தொகுப்பு  :  அ.தையுபா அஜ்மல் .



Thursday 13 May 2021

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகும் போது தரும் பில்லை (Final bill) சரிபார்த்தது உண்டா? அதில் நீங்கள் பார்க்க வேண்டியது என்னென்ன?




கொச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 23 மணி நேரம் மட்டுமே இருந்த ஷபீனாவுக்கு ரூ 24,760ஐ கட்டணமாக செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அந்த பில்லில் பிரேக்கப்பை பார்த்த போது பாதுகாப்பு கவச உடைகளுக்கு ரூ 10,416 போடப்பட்டுள்ளது. வெறும் அரிசி கஞ்சியே கொடுக்கப்பட்ட நிலையில் உணவு என போட்டு ரூ 1,380 போடப்பட்டது. காய்ச்சல் மருந்துக்கு ரூ 24 போடப்பட்டிருந்தது.

எதற்காவது ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி, ஒரு சில நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பும் போது, ஒரு பெரிய லிஸ்ட் கையில் கொடுப்பாங்க. இதுவே அ றுவை சி கிச்சை நடந்துள்ளது என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி கொடுப்பாங்க. யாருமே அந்த நேரத்தில் இதனை கவனிக்க மாட்டோம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால், எப்படா வீட்டுக்கு போகலாம்? என்ற உணர்வு வாட்டி எடுக்கும். சீக்கிரம் வீட்டுக்கு போய் சேர வேண்டும் என மட்டுமே மூளை உணர்த்திக்கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் பில்லாவது? டிஸ்சார்ஜ் சம்மரியாவது? கொடுத்தா போதுமென ஓட்டம் பிடிப்போம். அதில் என்ன இருக்கோ, அத்தனைக்கும் சேர்த்து பில் கட்டிவிட்டு வருவோம். இந்த நேரத்தில் கொஞ்சம் ப தற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுபவர்களை அழைத்து இந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டால், பல மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம். நிறைய இடங்களில் மருத்துவமனை ஊழியர்கள் செய்யும் தவறால், வேறொருவருக்கு போக வேண்டிய பில் மாற்றிக்கூட நம்மிடம் கொடுக்கப்படலாம்.

இந்த பதில் கண்டிப்பாக எதாவது ஒரு இடத்தில் பயன்படும்.
நாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டிற்கு சென்றால் போதும் என்று தான் கண்டிப்பாக நினைப்போம். இருந்தாலும் ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி வைத்து, டிஸ்சார்ஜ் பில்லை (Discharge bill) சரி பாருங்கள். (நோயாளியுடன் இருப்பவர்களாவது இதை கவனிக்க வேண்டும்)

நீங்கள் சரி பார்க்க வேண்டியவை : -

  1. முதலில் பில்லில் பார்க்க வேண்டியது - உங்களுடைய பெயர் மற்றும் உங்கள் வயது தான் இருக்கிறதா என்று. (அதே பெயரில் வேறு யாராவது கூட இருக்கலாம் அதனால் வயது கண்டிப்பாக பார்க்க வேண்டும்)
  2. எத்தனை நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றீர்கள் என்று பார்க்க வேண்டும். எதற்காக என்றால் அத்தனை நாட்கள் மட்டும் அறை வாடகை (Room rent) கொடுத்தால் போதும்.
  3. நீங்கள் குளிர் சாதன வசதியுடன் இருந்த அறையில் (A/C room) இருந்தால் மட்டும் ஏசி சார்ஜ் கொடுங்கள். அதே போல் ஐ.சி.யு (ICU) வில் இருந்தால் மட்டும் அதை கொடுங்கள்.
  4. உங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இல்லாமல் வேறு யாராவது பெயர் இருந்தால், அந்த சார்ஐ் பற்றி மருத்துவமனையில் கேட்டு குறைக்கலாம்.
  5. உங்களுக்கு எடுத்த ஸ்கேன்க்கு மட்டும் பில் போடப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். (ஏன் என்றால் சில சமயங்களில் தவறுதலாக கூட உங்களுக்கு எடுக்காத ஸ்கேன் சேர்க்கப் பட்டிருக்கலாம்)
  6. ரிட்டன் (Returned medicine) பண்ண மருந்துகளுக்கும் சார்ஜ் செய்தார்களா என்று பார்க்க வேண்டும்.
  7. நீங்கள் கை காசு போட்டு கட்டினாலும் சரி அல்லது தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கட்டினாலும் சரி (ஏன் என்றால் நீங்கள் சரி பார்க்காத தொகை அனைத்தும் காப்பீடு தொகையில் இருந்து குறையும்), இவை அனைத்தும் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவஅறை வாடகை குளிர்பதனம் இல்லாது போனால் அதுவும் பில்லில் சேர்ந்துள்ளதா? நீங்கள் வாங்கி replace செய்த பொருட்களின் விலை மீண்டும் பில்லில் உள்ளனவா? டாக்டர் fees எத்தனை? ட்ரிப்ஸ் எத்தனை பாட்டில்கள் ஆயின, எத்தனை பில்லில் உள்ளன? Etc etc.ஆனால் நம் பிரியமுள்ள உறவு வீட்டுக்கு வந்தால் போதும் என்று இருக்கும்போது நாம் இதையெல்லாம் கணக்கெடுப்பு செய்யும் மனநிலையில் இருக்க மாட்டோம். இதே வேலையாக இருப்பது கஷ்டம். முக்கியமான items சரி பார்த்து பணம் கட்டி விடுவோம்.! 
  8. பில் போலவே discharge summary மிக முக்கியம். அதை வாங்க மறக்காதீர்கள். மருத்துவ காப்பீடு இருந்தால், விரிவான பீல் வேண்டும் என கேட்டு வாங்குங்கள். ஒரு சில காப்பீட்டு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் காப்பீட்டு தொகையில் வராது என்கிற நிபந்தனை எல்லாம் வெச்சிருக்காங்க அதற்கு கண்டிப்பா தேவைப்படும். பீல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு டிஸ்சார்ஜ் சம்மரியும் முக்கியம். அது கொடுத்தால் மட்டுமே ஹா ஸ்பிட்டலை விட்டு வெளிய வாங்க. அட்மிட் ஆனதில் இருந்து, டிச்சார்ஜ் ஆகும் வரைக்கும் என்ன எல்லாம் பண்ணாங்க? அடுத்து என்னவெல்லாம் செய்யணும்? எடுத்துக்கொள்ள வேண்டிய ம ருந்துகள் குறித்த விவரம் எல்லாம் அதில் இருக்கும். இதெல்லாமே கவனிக்கும் அளவுக்கு அந்த நேரத்தில், நமக்கு தெளிவு இருக்குமான்னு தெரியல. முடிந்த வரையில் முயற்சிக்கலாம்.
தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.

Friday 7 May 2021

தமிழ் பாரம்பரியத்தின் புடவை வகைகள் ஒரு பார்வை...

 


தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பாரம்பர்ய ஆடையான புடவைகள்தான்.


நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து இன்னும் ஆயிரமாயிரம் பேஷன் ஆடைகள் வந்தாலும் பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவது புடவைதான் என்று இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் புடவைக்கு வாக்களித்துள்ளனர்.புடவைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றியவர்கள் நாம்.வளர்ச்சி என்கிற பெயரில் தமிழர்கள் அதிவேகமாக முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த வளர்ச்சியில் எத்தனையோ நன்மைகள் இருந்தாலும் அதற்கான விலையையும் நாம் கொடுக்கத் தவறவில்லை. உதாரணத்திற்கு நம் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற உணவு வகைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று துரித உணவு சாப்பிட்டு, நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது. அதிக பணமும் பொருளும் ஈட்டமுடிகிறது. ஆனால், அதற்கு நாம் கொடுத்துள்ள விலை மிகவும் பெரியது. ஆம்! நம் ஆரோக்கியத்தை அடமானம் வைத்துவிட்டே இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறோம். இதுவரை நாம் இதைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. ஆனால், இன்று அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பலர், சற்றே நிதானித்து இதை சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சிந்தனையின் வெளிப்பாடாகவே பாரம்பரிய வாழ்க்கைமுறையை பல வகைகளில் மீட்டு எடுப்பதாகும். இதன் வளர்ச்சி அதிவேகமாக முன்னோக்கி இருந்தாலும், அதன் மீட்சி அத்தனை வேகத்தில் இல்லை. என்றாலும் அதற்கான முயற்சிகள் நடந்து வருவது திருப்தியளிக்கிறது. ரசாயனங்களும் நச்சுப்பொருட்களும் நாம் உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் நிறைந்திருக்கின்றன. இன்றைய நவீன உலகில் எத்தனையோ பிராண்டுகள் மக்களை மூளைச்சலவை செய்து ரசாயனங்களை திணிக்கின்றன. இந்த இரைச்சல்களுக்கு மத்தியில் சிலர் சத்தமில்லாமல் பாரம்பரியத்தை மீட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களும் புடவைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் புடவை என்றாலே தமிழகம் நினைவுக்கு வருவதை தவிர்க்கவே முடியாது. தமிழகத்து புடவைகளில் பல வெரைட்டிகள் இருக்கின்றன. அதில் சிலவற்றை வாசகர்களுக்காக தொகுத்திருக்கிறோம்.


தமிழ்நாட்டின் புடவை வகைகள்...


பல்வேறு வித மனிதர்கள் வாழும் தமிழகத்தில் புடவை வகைகளும் பலவகையானவை. பட்டுப்புடவை முதல் செட்டிநாட்டு புடவைகள் வரை தமிழ்நாட்டின் புடவை வகைகள் சிறப்பான தோற்றம் தருபவை.

காஞ்சிவரம் சில்க் புடவைகள்

இந்த வகைப் புடவைகள் இந்தியாவுக்கே பெருமை தேடித் தருபவை. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றுமதி ஆவதிலும் முதலிடத்தை பிடித்திருக்கும் காஞ்சிவரம் பட்டுப் புடவைகள் நமது தமிழகத்தில் உள்ள காஞ்சிவரம் எனும் ஊரில் தயார் ஆகிறது. பல கை வேலைப்பாடுகள், கலைநுணுக்கங்கள் கொண்ட புடவைகள் இந்தியாவின் பெருமை.

ராசிபுரம் புடவைகள்

ராசிபுரம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். அங்கே கைத்தறி நெசவுகளும் பட்டுத்தறிகளும் தான் குலத்தொழில். நிறைய நெசவாளர்களை தன்னகத்தே கொண்ட ஊரில் கைத்தறி புடவைகளில் நெசவாளர்களின் கைவண்ணம் நம்மை ஆச்சரியப்படுத்தும். பட்டுபுடவைகளிலும் காஞ்சிவரம் புடவைக்கு நிகரான தரத்தை இவர்கள் வழங்குகிறார்கள்.

தமிழ்நாட்டு திருமணங்கள் எப்போதும் புடவைகளால் நிறைந்திருக்க கடவது என்று யாரோ ஆணையிட்டு விட்டதை போல இன்றும் நம் தமிழ் திருமணங்களில் பட்டுபுடவைகள் தான் முன்னிலை வகிக்கின்றன. அதிலும் டிசைனர் புடவைகள் பியூஷன் புடவைகள் என பல விதமான புடவைகள் வந்திருக்கின்றன. இதனைத் தவிர இப்போதெல்லாம் வடஇந்தியர்கள் போல லெஹன்கா அணியும் கலாச்சாரமும் வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும் பாரம்பர்ய திருமணப்புடவைகள் என்றாலே அது தமிழகம்தான்.


டிசைனர் புடவைகள்

கலாச்சாரம் வளர வளர புடவை நெசவுகளில் புதுமை புகுத்துவது எல்லா நாடுகளிலும் வழக்கம். ஆகவே அதற்காகவே டிசைனர் புடவைகள் தயார் ஆனது. எம்ப்ராய்டரி முதல் கண்ணாடி வேலைப்பாடுகள் வரை கலையின் கைவண்ணத்தை புடவையில் காட்டினார்கள். மனித கற்பனை திறனையும் அவர்கள் உழைப்பையும் நேரத்தையும் இந்த டிசைனர் புடவைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் அதிக விலை தர வேண்டி இருக்கிறது. ஆனாலும் அணிபவரை அழகாக்கும் அற்புதம் வாய்ந்தது.


கோவை பருத்தி புடவைகள்

கோவை காட்டன் புடவைகள் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவை. அணிந்து கொள்ள மிருதுவாகவும் சருமத்திற்கு நண்பனாகவும் இருக்கும் இந்தப் புடவைகளின் தரம் பல வருடங்களுக்கு நிலைக்கும் . தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் பருத்தி உற்பத்தி ஆகிறது என்பது சிறப்பு செய்தி. உற்பத்தி ஆகும் இடத்திலேயே தயாரிக்கப்படும் புடவைகள் தரத்திற்கான உத்தரவாதம் மற்றும் விலை மலிவு ஆகியவற்றை குறிப்பிடுகிறது.

நெகமம் புடவைகள்

பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமத்தில் தான் தமிழகமெங்கும் உள்ள ஆடைக் கடைகளுக்கு புடவைகள் தயார் ஆகின்றன. இங்கே விற்கப்படும் கிராமத்து பருத்தி புடவைகள் மற்றும் அதன் தனித்துவமான டிசைன் பெரியவர்கள் அணிய மிருதுவாக இருக்கும் தன்மை ஆகியவையால் புடவைகள் என்றால் நெகமம் புடவைகளை நாம் தவற விட முடியாது.

சேலம் புடவைகள்

சேலம் புடவைகள் இங்கும் நெசவு தொழில்தான். பருத்தியில் பல்வேறு வண்ண சாயங்கள் சேர்த்து பியூஷன் முறையில் புதுமையை புகுத்துவார்கள் சேலத்து நெசவாளர்கள். அதே சமயம் தரம் பல வருடங்கள் நிலைக்கும். பிளைன் புடவையில் ஜரிகை பார்டர் அல்லது கட்டம் போட்ட செக்ட் காட்டன் புடவைகள் இவர்கள் சிறப்பம்சம்.

ஷிபான் புடவைகள்

எடை குறைவான இந்த வகையான புடவைகளும் தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றன. அணிவதற்கு லேசாக இருக்கும் அதே சமயம் நினைத்து பார்க்க முடியாத நிறங்களில் கிடைக்கும் இவ்வகை புடவைகள் தமிழர்கள் அன்றாடம் பயன்படுத்த எளியது.

ஜார்ஜெட் புடவைகள்

அணிவதற்கு சுலபம் அதே சமயம் ஆடம்பர தோற்றம் ரிச் லுக் வேண்டும் என்பவர்கள் இந்த வகை ஆடைகளை அணியலாம். இவ்வகை ஆடைகளுக்கு இளைஞிகளிடம் வரவேற்பு அதிகம். புடவை கட்டுவதை ஒரு பெரிய சடங்காக பார்க்கும் இக்காலத்து யுவதிகளுக்கு ஜார்ஜெட் புடவைகள் அணிய சுலபமானது. 300 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.

சுங்குடி புடவைகள்

சுங்கிடி புடவைகள் தமிழகத்தின் பின்னிப் பிணைந்த பாரம்பர்ய புடவைகளில் ஒன்று. இதில் பல்வேறு விதமான வகைகள் இருக்கின்றன. மதுரை சுங்குடி இதில் பிரபலமானது. மிக அடர்த்தியாக நெய்யப்பட்ட நெசவுகளில் இந்தப் புடவைகள் இருக்கும். அடர் வண்ணங்கள் செக்ட் டிசைன் போன்றவை இதன் சிறப்பம்சம். கோயில்கள் செல்ல இவ்வகை புடவைகள் சரியான தேர்வாக இருக்கும்.

சின்னாளப்பட்டு புடவைகள்

இந்த வகை புடவைகள் பட்டுப் புடவைகளுக்கு மாற்றாக வந்த புடவைகள். முழுதும் ஜரிகைகளாலேயே நெய்யப்பட்டிருக்கும் ஆனாலும் பட்டுப் புடவை போன்ற தரம் இருக்காது என்பதால் இதன் விலை பட்டு புடவைகளை விடவும் மிக குறைவு. அணிவதற்கு சௌகர்யமாகவும் இருக்கும். ஏழைகளின் பட்டுப்புடவை சின்னாளப்பட்டு. இந்த ஊர் திண்டுக்கல் அருகே இருக்கிறது.


மதுரை காட்டன் புடவைகள்

மதுரையில் நெய்யப்படும் காட்டன் புடவைகள் மதுரை காட்டன் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இரண்டு நிறங்கள் மட்டுமே இதில் இணைந்திருக்கும். அதன் முடிவில் ஜரிகை பார்டர் சேர்த்திருப்பது புடவைக்கு அழகை அதிகரிக்கும். அடர் நிற புடவைக்கு வெளிர்நிற பார்டர்கள் வெளிர்நிற புடவைகளுக்கு அடர்நிற பார்டர்கள் என மாற்றி மாற்றி கொடுத்திருப்பது இதன் சிறப்பு.


செட்டிநாடு புடவைகள்

எங்கள்  ஊர் (காரைக்குடி) பக்கம் உள்ளவர்கள் நெய்யும் இந்த செட்டிநாடு புடவைகள்தான் இப்போதைய ட்ரெண்ட் ஆக இருக்கிறது. செட்டிநாடு புடவைகள் பருத்தியில் நெய்யப்பட்ட அதே சமயம் பார்டர்களில் கலைவண்ணம் காட்டக் கூடிய புடவைகள். இப்போது புத்தர் முகம் மற்றும் தஞ்சாவூர் சிற்பங்கள் ஆகிய பல கலை சிறப்புகளை இந்த புடவைகள் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

ஹாண்ட்லூம் புடவைகள்

கைத்தறி புடவைகள் தமிழ்நாட்டின் அடையாளம். காதி கிராப்ட் எனப்படும் அரசாங்கம் சார்ந்து இயங்கும் புடவைகளில் இந்த கைத்தறி புடவைகளும் ஒரு வகை. கோ ஆப்டெக்ஸ் கடைகளில் இதன் கலெக்ஷன்ஸ் அதிகமாக கிடைக்கும். அணிவதற்கும் தோற்றத்திற்கும் உயர்வாக காண்பிக்க வல்லது இந்த வகை புடவைகள்.

சில்க் காட்டன் புடவைகள்

தென்னந்தியாவின் மான்செஸ்டர் ஆன கோவையில் பட்டு மற்றும் பருத்தி இரண்டையும் ஒன்றாக நெய்து அதனை சில்க் காட்டன் புடவைகள் என அழைக்கின்றனர். இவ்வகை புடவைகள் உலக அளவில் பிரபலமானது. பட்டு போன்ற ஆடம்பரமும் இருக்காது அதே சமயம் பருத்தி போன்ற எளிமையும் இருக்காது. இரண்டிற்கும் நடுவிலான தோற்றத்தை தருவதால் இவ்வகை புடவைகள் பெண்களின் பெருமையாக பார்க்கப்படுகிறது.

கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

Saturday 1 May 2021

இன்னும் 10 வருடத்தில் எதிர்காலம் எப்படி இருக்கும் ??

 இன்னும் 10 வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது கூர்ந்து கவனித்துப் படியுங்கள்புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் ???


 வேணாம், 2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?என்னென்ன தொழில்கள் இருக்காது ??


நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!


உதாரணமாக 1998 ல தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!


இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.


*பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!.*


தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, *STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??*


எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்,  ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்,  வாக்மேன், டிவிடி  பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப LED பல்பு தான்.


எதனால ? ஏன் இப்படினு கேட்டா?


டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையா செயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.!


உதாரணத்துக்கு சொல்லணும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?


Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது..!


இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?


அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா...!


இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.*


IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது..!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்!!!!


ஆடிட்டர்கள் வேலையை cleartax,  taxman போன்ற இணையதளம்!,


டாக்டர்கள் வேலையை Ada app!,


ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்!,


கார் விற்பனையை carwale, cars24 இணையதளம் !


என சேவை இலவசமாக தருகின்றன.


UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.


ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.


நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்  தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை.


இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்.

 

80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்..!


2025 ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.


2021 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.


*அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.*


அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.


இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கனரக வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.


Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்


எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு  நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை,  நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.


எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10 -15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.


*இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??*


சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?


*முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.*


அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.


*ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.*


*விவசாயம்:*👇 இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.


*இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும். விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு  மாத்திரை தான் உணவு.*  


காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.


'Moodies' ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது.. 2022 ல நீங்க பொய் சொல்றீங்களா, இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.


இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.


இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012 ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.


Tricoder - X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சுக் காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் *Clinic* வைக்கத் தேவையில்லாம, Online -ல யே ஒரு Op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .


மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.


கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.


சந்திக்க தயாராவோம். 

எதிர்காலம்  நம் கையில் இல்லை.  

கடந்த காலமும் நிகழ்காலமும், 

நம் கையிலா இருந்தது என்கிறீர்களா..?  

ஆக்கம் மற்றும் தொகுப்பு :  மு.அஜ்மல் கான்.