Friday, 17 October 2008

பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்டு விடும் பட்டாசு காயங்களுக்கு முதலுதவி !! ஒரு சமூக விழிப்புணர்வு தவகல்..

தீபாவளி நெருங்கிவிட்டது. தெருக்களில் பட்டாசு சத்தம் கேட்கத் தொடங்கி விட்டது. பண்டிகை தினங்களில் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே பட்டாசு கொளுத்தும் பழக்கம் தோன்றியது. பட்டாசு வெடிக்கும்போது மிகுந்த கவனத்துடனும் அதிக எச்சரிக்கையுடனும் பட்டாசுகளைக் கையாள வேண்டும். அலட்சியம் ஆகாது. விளையாட்டுத்தனம் கூடாது. அப்போதுதான் ஆபத்து ஏற்படாது.

சரி, என்னதான் கவனமாக இருந்தாலும் எங்கோ தவறு நேர்ந்துவிட்டது. பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டு விட்டது. அப்போது என்ன செய்வது?

பட்டாசு காயங்களுக்கு முதலுதவி:

*காயம் ஏற்பட்ட உடல் பகுதியை உடனே தண்ணீரில் மூழ்கவிடுங்கள்.
*அல்லது தண்ணீரில் நனைத்த துணியால் காயத்தை அழுத்தமாக மூடுங்கள். 

பொதுவாக பட்டாசு காயங்கள் முகம், உள்ளங்கை மற்றும் கைவிரல்களில்தான் உண்டாகும். ஆனால், கையைத் தண்ணீரில் நனைப்பதற்குப் பல பேர் பயப்படுவார்கள். தண்ணீரில் நனைத்தால் கொப்புளம் ஏற்பட்டு விடும் என்று ஒரு தவறான எண்ணம் பலரிடம் உள்ளதுதான் இதற்குக் காரணம். இது உண்மையில்லை.  தீக்காயத்தைத் தண்ணீரில் எவ்வளவு விரைவில் நனைக்கிறோமோ, அந்த அளவுக்குக் காயம் ஏற்பட்ட இடத்தில் வெப்பம் குறைந்து, காயத்தின் தன்மை குறையும். அதில் கொப்புளம் ஏற்படுவதும் தடுக்கப்படும். எனவே, தீக்காயத்தைத் தண்ணீரில் நனைக்க யோசிக்க வேண்டியதில்லை.மேலும், பட்டாசு காயத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், இவ்வகைக் காயத்தில் வெப்பத்தைக் குறைப்பதே முதலுதவியின் முக்கிய நோக்கமாகும். 

*காயம் பட்ட இடம் முகமென்றால் உடனே முகத்தைத் தண்ணீரில் கழுவுங்கள்.
*கையென்றால் குழாய்த் தண்ணீரில் கையை நனையுங்கள்.
*இவ்வாறு சுமார் 15 நிமிடங்களுக்குத் தண்ணீரில் நனைத்த பின்னர், காயத்தின்மீது ’சில்வர் சல்ஃபாடயசின்’ மருந்தைத் தடவவும்.
*பிறகு, மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். 

இப்படிச் செய்யாதீர்கள்!

தீக்காயத்தின்மீது அரிசிமாவு, பேனா மை, சீனிப்பாகு, பச்சிலை மருந்து முதலியவற்றைப் பூசுவது நல்லதல்ல. தீக்காயத்துக்குத் துணிக்கட்டுப் போட வேண்டிய அவசியமும் இல்லை. கட்டு தேவை என்று எண்ணுபவர்கள் காயத்தில் ஒட்டிக்கொள்ளாத ‘ஃபுராமைசிடின் டூல்’ எனும் மருந்துத் துணியால் கட்டுப்போட வேண்டும். அப்போதுதான் கட்டைப் பிரிக்கும்போது வலி உண்டாகாது.


இவற்றை அகற்றுங்கள்!
பட்டாசு காயம் பட்ட இடத்தில் மோதிரம், வளையல், கைக்கடிகாரம் போன்ற ஆபரணங்கள் இருந்தால் உடனே அகற்றிவிடுங்கள். காயம் வீங்கியபிறகு அவற்றை அகற்றுவது சிரமம் தரும்.
பட்டாசு காயம் கண்ணில் பட்டால்...?
*சுத்தமான குழாய்த் தண்ணீரைத் திறந்து, கண்களைத் திறந்தபடி குறைந்தது 15 நிமிடங்கள் காட்டவும்.

*அல்லது ஓர் அகன்ற பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் பாதிப்புக்குள்ளான கண்களை மட்டும் நனைத்தபடி, கண்களைத் திறந்து திறந்து மூடவும். இதையும் சுமார் 15 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும்.

*மேலே சொன்ன இரண்டு முறைகளையும் செய்ய வழியில்லை என்றால், பாதிக்கப்பட்ட நபரைப் படுக்க வைத்து, கண்ணை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கொள்ளவும். பின்பு, பாதிப்புக்குள்ளான கண்ணின் இமைகளை மட்டும் மெதுவாகப் பிரித்துக்கொள்ளவும். இப்போது ஒரு தம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு, விழியின்மேல் ஊற்றிக் கழுவவும்  

 தொடர்ந்து 15 நிமிடங் களுக்கு இவ்வாறு கண்களைக் கழுவ வேண்டும்.

*காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால் உடனே அகற்றிவிடவும்.
*சுத்தமான பஞ்சு மற்றும் பாண்டேஜ் பயன்படுத்தி கண்ணுக்குக் கட்டுப் போடவும்.
*பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.

உடலில் தீப்பிடித்துவிட்டால்...?

உடலில் தீப்பிடித்தவரை ஒரு கனத்த போர்வையால் அல்லது கம்பளியால் போர்த்தி, தரையில் சாய்த்து உருட்ட வேண்டும். இதனால் தீ அணைந்துவிடும். அதன் பின்னர், போர்வையை அகற்றி விட்டு, மேலாடைகள், உள்ளாடைகள், பெல்ட் போன்றவற்றையும் அகற்றுங்கள். தண்ணீரில் நனைத்த துணியால் காயங்களைத் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு ஒற்ற வேண்டும். காற்றோட்டமான இடத்துக்கு அவரை அப்புறப்படுத்துங்கள். சுழல்காற்றாடிகளால் அவருடைய வெப்பத்தைத் தணிக்க முயலுங்கள். பிறகு, ஏற்கெனவே சொன்னதுபோல், காயத்தின்மீது ‘சில்வர் சல்ஃபாடயசின்’ மருந்தைத் தடவ வேண்டும். காலதாமதம் செய்யாமல் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பாதுகாப்புக்கு 10 வழிகள்!
*பட்டாசுகளை வாங்கும்போது, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டுமே வாங்குங்கள். தனித்தனியாகப் பிரித்து குவித்து வைத்துள்ளவற்றை வாங்க வேண்டாம். அவை பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம்.

* வீட்டுக்குள் மற்றும் தெருக்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

*வீட்டு மாடி, பூங்கா அல்லது விளையாட்டு மைதானங்களில் பட்டாசு வெடிப்பது நல்லது.

*டெர்லின், நைலான், பாலிஸ்டர், பட்டு போன்ற ஆடைகள் அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்காதீர்கள்.

*பருத்தி ஆடைகளைத் தளர்வாக அணிந்துகொண்டு பட்டாசு வெடியுங்கள்.

*கம்பி மத்தாப்பு தவிர வேறு எந்தப் பட்டாசையும் கைகளில் வைத்துக் கொண்டு வெடிக்காதீர்கள். தரையில் வைத்துத் திரியைப் பற்ற வையுங்கள். முகத்தை வெடிக்கு நேராக வைத்துக் கொண்டு கொளுத்தாதீர்கள். பக்கவாட்டில் நின்று கொண்டு திரியைக் கொளுத்துங்கள். தீப்பொறி பட்டாசில் பற்றிக்கொண்டதும் பின்நோக்கி நகர்ந்து கொள்ளுங்கள்.

*பட்டாசுத் திரியில் தீப்பற்றியதும் அது வெடிக்கவில்லை என்றால் அதன் அருகில் சென்று ‘என்ன ஆயிற்று?’ என்று பார்க்காதீர்கள். அருகில் சென்றதும், திடீரென்று அது வெடித்துவிடலாம். மாறாக, அந்தப் பட்டாசின் மீது தண்ணீரை ஊற்றிவிடுங்கள்.

*சட்டைப்பையில் வெடிகளை வைத்துக்கொண்டு பட்டாசு வெடிக்காதீர்கள்.
*பட்டாசுகளை வெடிக்கும்போது ஒரு வாளி தண்ணீரை அருகில் வைத்துக்கொள்வது நல்லது.

*குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோர் மேற்பார்வையில் மட்டுமே அவர்கள் வெடிகளைக் கொளுத்த அனுமதிக்க வேண்டும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 16 October 2008

பங்குசந்தை என்றால் என்ன? ஒரு சிறப்பு பார்வை....

நிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட, அது புரிந்துகொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச் சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்!
எல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றது தான் பங்குச் சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச் சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள். காய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்திரிக்காய் போடுங்க’ என்று கேட்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்க’ என்று வாங்கலாம். பங்குச் சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்!
முன்பெல்லாம் காய்கறி வாங்க வேண்டும் என்றால் கடைக்குத்தான் போயாக வேண்டும். ஆனால் இப்போது பெரிய நகரங்களில் ஒரு போன் செய்தாலே நாம் கேட்கிற காய்கறியை நம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள். அது மாதிரிதான் முன்பெல்லாம், பங்குச் சந்தைக்கு நேரடியாகப் போய்த்தான் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். ஆனால் இப்போது நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே பங்குச் சந்தை புரோக்கருக்கு ஒரு போன் செய்தால் போதும்; நமக்குத் தேவையான பங்கை வாங்கித் தந்துவிடுவார், அல்லது விற்றுக் கொடுத்துவிடுவார்.
பங்குச் சந்தை பற்றி மேலும் அறிந்து கொள் வதற்கு முன்பாக, ஷேர் அல்லது பங்கு என்றால் என்ன என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஜூவல்லரி கடை நடத்தும் ஒரு பிஸினஸ்மேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான்கைந்து ஊர்களில் நகைக்கடை இருக்கிறது. கடந்த பல வருடங்களாக அவை லாபகரமாகவும் நடந்து வருகிறது... தரம், வாடிக்கையாளர் சேவை, குறைந்த விலை போன்றவற்றால் உங்கள் தொழிலுக்கு இன்னும் நல்ல வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் பிஸினஸை டெவலப் செய்தால் இன்னும் பெரிய லெவலுக்குப் போய்விடலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் தொழிலை விரிவு படுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை. கடன் வாங்கி இறங்கவும் விருப்பமில்லை... இதுபோன்ற நிலையில் என்ன செய்வது? ஒன்று செய்யலாம்... யாராவது ஒருவரையோ அல்லது சிலரையோ உங்கள் தொழிலில் பார்ட்னராகச் சேர்த்துக்கொண்டு இறங்கலாம்.
ஆனால், ஒருவரையோ அல்லது ஒரு சிலரையோ பார்ட்னர்களாகக் வைத்துக் கொள்வதைவிட பல பேர்களை பார்ட்னராகச் சேர்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம். எப்படி என்கிறீர்களா? ஒருவேளை யாராவது ஒருவரிடம் அதிகப் பங்குகள் இருந்தது என்றால் பின்னாளில் அவர்கள் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் அந்தத் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலைகூட ஏற்படலாம். அதுவே ஆளுக்குக் கொஞ்சமாக நிறைய பேர்கள் பங்குகளை வைத்திருந்தால் அவர்களால் உங்களுடைய தொழிலுக்கு பெரிய அளவில் சிக்கல்கள் ஏற்படாது. இது போல் இன்னும் பல சௌகரியங்கள் இதில் உள்ளன. (அதற்காக அசௌகரியங்களே இல்லாமல் போய்விடுமா என்ன! அதை பிற்பாடு பார்ப்போம்!)
சரி, நீங்கள் தொழிலை விரிவுபடுத்த பங்கு முதல்* (சிணீஜீவீtணீறீ) திரட்டுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். தற்போது உங்கள் தொழிலில் உங்களது பங்கு முதல் 8 கோடி (10 முகமதிப்பு* கொண்ட 80 லட்சம் பங்குகளாக இருக்கிறது) என்று வைத்துக் கொள்வோம். மேலும் சில நகரங்களில் கடை ஆரம்பிக்க இன்னும் நாற்பது கோடி தேவைப்படுகிறது. நீங்கள் உங்களது 80 லட்சம் பங்குகளை அப்படியே வைத்துக் கொண்டு, உங்கள் நிறுவனத்தில் புதிதாக 10 முகமதிப்புள்ள, 20 லட்சம் பங்குகளை சந்தையில் சென்று விற்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு நாள் தொழிலில் வெற்றிகரமாக இருந்ததால், பத்து ரூபாய் பங்கை 200 க்கு விற்கிறீர்கள். அதாவது, ஒரு பங்குக்கு 190-ஐ பிரீமியமாக வைத்து விற்கிறீர்கள்!
'இதென்ன கதை? பத்து ரூபாய் பங்கை இருநூறு ரூபாய் கொடுத்து யாராவது வாங்குவார்களா?’ என்று நீங்கள் கேட்கலாம். சாதாரண ஓட்டலில் இரண்டு இட்லி 8. இரண்டு தெரு தாண்டிப் போனால் அந்த பெரிய ஓட்டலில் இரண்டு இட்லி 14. 'அதே இட்லிதானே! எதற்கு 6 அதிகம் கொடுக்க வேண்டும்’ என்று நாம் கேட்பதில்லையே! காரணம், அந்த 6 தான் அந்த ஓட்டலுக்கு நாம் கொடுக்கும் பிரீமியம்! அந்த ஓட்டலில் நாம் இட்லி சாப்பிட வேண்டும் என்றால் அந்த விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த பிரீமியத்தை எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்பதை வரும் வாரங்களில் விளக்கமாகப் பார்ப்போம். இப்போதைக்கு, லாபகரமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கடையை நீங்கள் விற்றால் குட்வில் அல்லது நிந்தம் என்பதை எதிர்பார்ப்பீர்கள் அல்லவா? அது போலத்தான் இந்த 190 பிரீமியமும் என்பதைத் தெரிந்து கொண்டால் போதும்.
ஆக இப்போது உங்கள் நிறுவனத்தில் மொத்தம் ஒரு கோடி (ஏற்கனவே உங்களிடம் இருந்த பங்குகள் 80 லட்சம்+புதிதாக நீங்கள் விற்ற 20 லட்சம் பங்குகள்) பங்குகள் உள்ளன. பொதுமக்களிடம் இப்பங்குகளை விற்றதால், நீங்கள் உங்களது நிறுவனப் பங்குகளை பங்குச் சந்தையில் (என்.எஸ்.இ/பி.எஸ்.இ* போன்ற சந்தையில்) சென்று லிஸ்ட் செய்ய வேண்டும். இம்முறையினால் யார் வேண்டுமானாலும் உங்களது நிறுவனப் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். இதுதான் ஷேர் அல்லது பங்கு உருவாகும் கதை..

கவிஞர் கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!! ஒரு சிறப்பு பார்வை ...

இஸ்லாமியத் திருமறையின் பெருமைகளையெல்லாம் நன்குணர்ந்த கவிஞர் கண்ணதாசன் திருக்குர்அனின் சிறப்புகளையெல்லாம் ஓர் அழகிய கட்டுரையாக வழங்கியுள்ளார். கண்ணதாசனின் இஸ்லாமிய புலமைக்கு அந்தக் கட்டுரை சான்றாக அமைகின்றது. 'ஞானரதம்' 1978 மே இதழில் வெளியான அந்தக் கட்டுரையில் கவிஞர் கண்ணதாசன் கீழ்க் கண்டவாறு திருக்குர்ஆனின் சிறப்புக்களை எடுத்துறைக்கிறார்.

'உலகமெங்கும் பல மொழிகளில் இஸ்லாமியத் திருமறை திருக்குர்ஆன் வந்துள்ளது. இந்தத் திருமறை ஒரு ரமளான் மாதத்தில் துவக்கப் பட்டு பல கட்டங்களில் இருபத்து மூன்று ஆண்டுகளில் இறைவனால் கூறப்பட்டது.

மக்காவில் உபதேசிக்கப் பட்டது ஒரு பகுதி. மறு பகுதி மதினாவில் உபதேசிக்கப் பட்டது.

பெரும்பாலும் எல்லா மதத்து வேதங்களுக்குள்ளும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. எல்லாமே சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டவை. மக்களை ஒழுங்காக வாழ வைப்பவை.

இறைவனுக்கு இணை வைத்துப் பேசக் கூடாது: வணங்கக் கூடாது என்று இத்திருமறையிலேயே கூறப்படுகிறது. அதனால் பிற மத நூல்களை ஒப்புவமை கூற நான் விரும்பவில்லை.

பொது நோக்கில் இஸ்லாமியத் திருமறை சமூக வாழ்க்கையைப் பேசுகிறது: பொருளாதாரத்தைப் பேசுகிறது: லாபத்தில் எவ்வளவு சதவீதம் ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பதையும் கூறுகிறது: சொத்துப் பிரிவினை, பெண்ணுரிமை அனைத்தையும் விவரிக்கிறது.

இத்திருமறை ஒரு வேதமாக மட்டுமின்றிச் சமய மக்களுக்கு சிவில் சட்டமாகவும் பயன்படுகிறது.

எனக்குத் தெரிந்து ஒரு மூல வேதம் குடும்ப வாழ்க்கையை இவ்வளவு விவரமாக விவரிப்பது இத்திருமறை ஒன்றே!

திருக்குர்ஆனை முழுமையாகப் படித்தவர்கள் சராசரி குடும்ப வாழ்க்கையை ஒழுங்காக நடத்த முடியும்.

இது ஒரு தெய்வீக போதனை நூலாக மட்டுமின்றி சமூக வாழ்க்கைக்கான நியாய நூலாகவும் இருப்பதால் எல்லா மக்களும் இதைப் படிக்க வேண்டும்.

அல்லாஹ் எல்லையற்ற பேராளன்: கருணைக் கடல்: கஷடப்படுபவர்களை எப்போதும் அவன் திரும்பிப் பார்க்கிறான் - இந்தச் செய்தி ஒரு மனிதனை மத நம்பிக்கையில் அழுத்தமாக வேரூன்றச் செய்வதற்கு நிச்சயமாகப் பயன்படும்.

இறைவன் அனுப்பிய தூதுச் செய்தியை உலகுக்குத் தெரிவித்த திருத் தூதராகவே நபிகள் பெருமகனாரும் கருதப் படுகிறார்.

பெருமகனாருக்கு முன்னால் வேறு சில தூதர்களையும் வேறு சில வேதங்களையும் உலகின் பல்வேறு பாகங்களுக்கு இறைவன் அனுப்பியிருந்தான் என்ற செய்தியும் இதில் காணப்படுகிறது. நம்பிக்கை வைப்பதை இது மேலும் அதிகப் படுத்துகிறது.

இது ஒரு சமய நூல் மட்டும் அன்று: சரித்திர நூல்: சமூக நூல்.

எல்லா மதத்தவரும் இதைப் படிக்க வேண்டும்.

-கண்ணதாசன்,
ஞானரதம
மே, 1978

திருமறையின் தோற்றுவாய்க்கு கண்ணதாசனின் மொழி பெயர்ப்பு :

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்எல்லையில்லா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்

அர் ரஹ்மானிர் ரஹீம்அவன் அருளாளன்:
அன்புடையோன்:

மாலிகி யவ்மித்தீன்

நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்:

இய்யாக்க நவ்புது
வ இய்யாக்க நஸ்தயீன்


உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்:
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்

இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்:

ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்
ஹைரில் மஹ்லூபி அலைஹிம்
வலள்ளால்லீன்
எவர் மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!

எவ்வளவு அழகாக எளிய தமிழில் கவிஞரின் மொழி பெயர்ப்பு வந்துள்ளது! இது அல்லாமல் திருக்குர்ஆன் முழுமைக்குமே விளக்கவுரை எழுத கண்ணதாசன் அவர்கள் விருப்பப் பட்டார். அந்த எண்ணம் முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப் பட்டுப் போயிற்று. குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரை எழுதக் கூடாது என்று மார்க்க அறிஞர்கள் ஒரு சிலரின் எதிர்ப்பால் அந்த முயற்சி தடைப் பட்டது. குர்ஆன் என்பது எந்த ஒரு நபருக்கும் சொந்தமானதல்ல. உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்று.

'இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்'
-குரஆன் 2 : 185

என்று இறைவன் பல இடங்களில் மனித குலத்துக்கு சொந்தமானது என்று கூறியிருக்க எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கண்ணதானின் மொழி பெயர்ப்பை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்தனர். முகமது நபியை வெட்டுவதற்கு வாள் எடுத்து வந்த உமரை இஸ்லாமிய ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியாக்கியது இதே குர்ஆன் வசனங்கள் அல்லவா! கண்ணதாசன் குர்ஆனை மொழி பெயர்க்கும் காலங்களில் இறைவனின் வார்த்தைகளில் கட்டுண்டு மதுவையும், மாதுவையும் விடுவதற்கு மொழி பெயர்ப்பு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் அல்லவா!

இது சம்பந்தமாக கவிஞரே 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளி வந்த 'ஞானரதத்தில்' அறிக்கை ஒன்றும் விடுத்துள்ளார்:

'இஸ்லாமிய நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கினங்க திருக்குர்ஆன் உரை எழுதுவதை நான் நிறுத்தி விட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இஸ்லாமியத் திருமறையின் தமிழுரையைத் துவக்கி வைத்ததோடு அப்பணியை முடித்துக் கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'
-கண்ணதாசன், 30.12.1977

Wednesday, 15 October 2008

திருக்குர்ஆனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் ஏன்திருக்குறளை பின்பற்றக் கூடாது ?

ஓர் மாற்று மத நண்பர் கேட்ட கேள்வி. திருக்குறள் 2000 ஆண்டிற்கு முந்தையது ஏன் நீங்கள் திருக்குறளை பின் பற்றி வாழக்கூடாது?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செல்களை பற்றி அறிவியல் பற்றி சித்தர்கள் கூறியுள்ளனர் நீங்கள் குர்ஆன் இறைவேதம் என்பதற்கு அறிவியலை சான்றாய் எடுத்து அதை பின் பற்றுங்களேன் ....என்று கேட்கிறார்.இதுகுறித்து விளக்குங்களேன் !

ஒரு மிக்சியோ கிரைண்டோ பைக்கோ எதுவாக இருந்தாலும் அதை விலை கொடுத்து வாங்கிய நம் இஷ்டப்படி பயன்படுத்தினால் அதிலிருந்து கிடைக்கவேண்டிய பலனைப் பெற முடியாது ! அதை தயாரித்த நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி பயன்படுத்தினால்தான் அதன் பலனைப் பெறமுடியும் அதுபோலத்தான் மனிதனும் தன் மனோஇச்சையில் உருவான வழிகாட்டுதலின் படி நடந்தால் பலனிருக்காது ! மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டுதலின் படி நடந்தால் தான் பிறவிக்கான பயனை அடையமுடியும்!
முஸ்லிகளாகிய நாங்கள் முக்காலங்களையும் உணர்ந்த இறைவனுடைய திருக்குர்ஆன் எனும் இறைவழி காட்டலின்படி வாழ்கிறோம்!
ஆனால் திருக்குறள் என்பது திருவள்ளுவர் எனும் மனிதருடைய வழிகாட்டுதல்! அதில் ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு இல்லாமை என நிறைய இஸ்லாத்துக்கு உடன்பாடான கருத்துக்கள் உள்ளன ! ஆனால் அது ஒரு மனிதன் அன்றைக்கு தன காலத்தில் இருந்த அறிவைக் கொண்டு கூறி இருப்பதால் அது இன்றைய வாழ்வுக்கு முழுமையாகப் பொருந்தாது !
உதாரணமாக அறிவியலுக்கு முரணாக சந்திரனை பாம்பு விழுங்குவதால் கிரஹணம் ஏற்படுவதாக கூறுகிறது!
கொல்லாமை புலால் உண்ணாமை பற்றிப் பேசுகிறது உலகின் 80 % மக்கள் புலால் உண்ணாமல் இருந்தால் என்னாகும் ! ஆடு மாடெல்லாம் பல்கிப் பெருகி மனிதன் வாழ இடமின்றி போகும்! துருவப் பிரதேசங்களில் மீனை மட்டும் உண்டு வாழும் மக்களும் , மீனவர்களும் வாழ முடியாது!
பிற தெய்வம் தொழாது தன் கணவனாகிய தெய்வத்தைத் தொழுது துயில் எழுபவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யுமாம்! என்று பெண்ணடிமைத்தனமான கருத்து மட்டுமில்லாமல் அறிவியலுக்கு முரணான இது போன்ற ஏராளமான கருத்துக்கள் உள்ளன ! இதுபோன்ற எந்த முரணையும் நீங்கள் குர்ஆனில் காணமுடியாது
மேலும் சித்தர்கள் என்ன செல் ஆராய்ச்சி செய்தார்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்! அப்படி ஓரிரு விஷயங்கள் இருக்கலாம்! பிறப்பு முதல் இறப்பு வரை முழு மனித வாழ்வுக்கும் வழி காட்டும் மறையா அது ? இல்லை!
ஒரு தத்துவம் எல்லாக் காலத்திற்கும், எந்த நிலப்பகுதி க்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்! எந்த ஒரு மனிதனும் பின்பற்றக் கூடியதாக இருக்க வேண்டும் !
மேலும் இஸ்லாம் மனிதர்கள் சுயசிந்தனையில் உதித்த சட்டதிட்டங்களைக் கொண்டதில்லை! அது காலத்திற்கு ஏற்ப மாறுவதில்லை ! அது எந்நாளும் எவ்விடமும் பொருந்தும் இறைவன் வகுத்த சட்டங்கள் !
படைத்த இறைவன் தந்த இறை வழிகாட்டுதல்!
மேலும் அறிவியலை துணைச் சான்றாக கூறுகின்றோமே தவிர அதுவே முழுச் சான்றாக கூறுவதில்லை ! இஸ்லாம் இறைவழிகாட்டுதல் தான் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன!