Thursday, 29 June 2017

பேய்க்கரும்பில் உறங்கும் பேரன்பு கலாம்என்ன செய்தார் ??

கலாமைப் பற்றிய என்னுடைய பதிவுக்கு நண்பர்கள் பலரும் மாற்றுக் கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் வெளியிட்டிருந்தார்கள்.
வரவேற்க வேண்டிய ரொம்ப நல்ல விஷயமிது.நமக்குத் தெரியாத நாலு விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.அவர்கள் சொன்னதில் முக்கியமான ஒன்று கலாம்இந்துத்துவ கொள்கைகளை தூக்கிப்பிடித்தார்என்பது.


அப்படி அவர் என்ன செய்தார் என்றால் ...
சாமியார்களிடம் ஆசி வாங்கி இருக்கிறார்.
சில கோயில்களுக்கு சென்றிருக்கிறார்.
பகவத்கீதை படித்திருக்கிறார்.
வீணை வாசித்தார் .
குஜராத் கலவத்தின்போது மொவ்னம் காத்தார்.
என்று சில படங்களைப் போட்டு சேதி சொல்கிறார்கள்.


ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் எல்லா மக்களுக்கும் ஜனாதிபதி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கலாமின் இளமைப் பருவம் தொட்டு அவர் விஞ்ஞானியாக பணியாற்றிய காலம்வரை அவரோடு நெருக்கமாக இருந்தவர்கள் இந்துக்கள்.அவர்களில் பலர் பிராமணர்கள்....
நமது ஸ்ரீரங்கத்து சுஜாதா உட்பட.!

மலையாளத்து சேட்டன்மார் யாரையும் எளிதில் பாராட்ட மாட்டார்கள்.
அவர்களே கலாமை பாராட்டுகிறார்கள். மத சிந்தனைகள் ஏதுமில்லாத குழந்தைகள் மாணவ மாணவிகள் அவரை போற்றுகிறார்கள்.
கட்சி சாராத மக்கள் அவரை வாழ்த்துகிறார்கள். அனைத்துக் கட்சியினரும் அவரை பாராட்டுகிறார்கள்.  இவர்களோடு  இந்துத்துவவாதிகளும் அவரை கொண்டாடுகிறார்கள்.

மற்றவர்களுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ...
அவர்கள் கலாமை உயர்ந்த மனிதராக எண்ணிப் போற்றுகிறார்கள்.
காவிகளோ அவரை வைத்து அரசியல் ஆடுகிறார்கள்.

இவர்களைத் தவிர கலாமை விமர்சிப்பவர்கள் கொஞ்சம் பேர் முஸ்லிம்கள்.
இவர்கள் .... ஆழமான இஸ்லாமிய கோட்பாடுகளைஅடிப்படையாகக் கொண்டு கலாமை நல்ல முஸ்லிமில்லை என்கிறார்கள்.

கலாம் முஸ்லிமா ? அதுவும் நல்ல முஸ்லிமா இல்லையா என்பதை இறைவனே அறிவான்.
ஒரு மனிதனை நல்லவன் என்று சொல்ல அவன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நல்ல மனிதனாக இருந்தால் போதும்.
அந்த வகையில் கலாம் நல்ல மனிதர்தான்.

காவிகளும் மத்திய பாஜக அரசும் கலாமை வைத்து நடத்தும் அரசியலுக்கும்
அலப்பறைகளுக்கும் கலாம் பொறுப்பில்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்று ...
அரபு நாட்டில் இஸ்லாம் வேர்விட ஆரம்பித்தபோது மக்கத்து குறைஷிகள்
முஸ்லிம்களை கொடுமைப் படுத்தினார்கள்.
உயிருக்கு பயந்து பலர் நாட்டை விட்டு வெளியேறி அபிசீனியா நாட்டில் தஞ்சமடைந்தார்கள். அந்த நாட்டின் அரசர்நஜ்ஜாஷி.அவர் கிறிஸ்தவர்.
அப்படி இருந்தும் அவர் முஸ்லிம்களை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்தார். அவர் நினைத்திருந்தால் அபுசுப்யானோடு அடைக்கலம் தேடி வந்தவர்களை அனுப்பியிருக்கலாம்.அவர் அப்படிச் செய்யவில்லை.

நபிகளாரே அவரை பாராட்டி இருக்கிறார்கள்.அப்போதும் அபிசீனிய பாதிரிமார்கள் மன்னர் நஜ்ஜாஷியை குறை சொன்னார்கள்.
ஆனால் ...முஸ்லிம்கள் அவரை குறை சொல்லமாட்டார்கள்.இதுதான் அன்று முதல் இன்றுவரை நடைபெற்று வருகின்ற உலக நடப்பு.

மறைந்த எழுத்து சித்தர்வலம்புரி ஜான் அவர்கள் ஒரு சிறந்த கிறிஸ்தவர் என்றாலும் எல்லா ஆன்மீக மேடைகளிலும் பேசுவார்.எல்லாத் தலைவர்களோடும் படம் பிடித்துக் கொள்வார்.நபிகளாரைப் பற்றி ... நாயகம்எங்கள் தாயகம் என்று காவியமே எழுதினார்.

அவரை ... கிறிஸ்தவர்கள் யாரும் இஸ்லாமியவாதி என்று பட்டம் சூட்டி ஏசவில்லை.

கவிஞர்ஈரோடு தமிழன்பன்  தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கவிஞர்.
அவரும் ... என்னைக்கவர்ந்த பெருமானார்மற்றும் இடுகுறிப்பெயரல்ல இஸ்லாம் என்ற தலைப்புகளில் நபி புகழையும் இஸ்லாத்தின் சிறப்பையும் எழுதி இருக்கிறார்.அப்படி எழுதியதற்காக அவரை இந்துக்கள் யாரும் குறை சொல்லவில்லை.

மீலாது மேடைகளில் அறிஞர்அண்ணா பேசிய பேச்சுக்கள் அற்புதமானவை.
இன்றைக்கும் கம்பம்செல்வேந்திரன் ,வைகோ,
நாஞ்சில்சம்பத் போற்றவர்கள் மணிக்கணக்கில் நபிகளார் பற்றியும்
இஸ்லாம் குறித்தும் அருமையாக பேசுகிறார்கள்.

இந்து மத ஆன்மீகப் பேச்சாளர் சுகி சிவம்.அருமையான சிந்தனையாளர்.
அவர் பேசும் மேடைகளில் நபிகளாரின் சிறப்புக்களை சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இன்னும் எண்ணற்ற இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தின் மாண்புகளை நபிகளாரின் அருமை பெருமைகளை கேட்போர் காதினிக்க பேசுகிறார்கள்.எழுதுகிறார்கள்.இவர்களையெல்லாம் எந்த முஸ்லிமும் மேடைபோட்டு பாராட்டியதில்லை.

ஆனால் ... இவர்களை இவர்கள் சார்ந்த சமூகத்தார் பத்வாக்கள் கொடுத்து ஒதுக்கவில்லை என்பது பெரிய விஷயம்.

முஸ்லிம் கலாமுக்கு மட்டும் பத்வாக்களால் விபூதி பூசுகிறார்கள் முஸ்லிம் சாமியார்கள்.

கம்பராமாயணமும் ,சிலப்பதிகாரமும்,திருவிளையாடல் புராணமும் படிக்காமல் எவரும் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக முடியாது.
அப்படி தமிழைப் படித்து தமிழை நேசிப்பவர்கள் கம்பனின் கவித்திறனை வியக்கிறார்கள்.அதை மேடைகளில் பேசுகிறார்கள்.

சித்திரைத் திருவிழாக்களில் ...
கம்பன் கலைக்கழக மேடைகளில் ...
இலக்கியக் கூட்டங்களில் ...
முஸ்லிம் தமிழறிஞர்கள் உரையாற்றுகிறார்கள்.
அதை கேட்பவர்கள் ...
பேசக்கூடியவர்களை வியந்து போற்றுகிறார்கள்.
பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கிறார்கள்.

கவிக்கோ ...
தமிழகத்திற்கு கிடைத்த அற்புதமான இலக்கிய பொக்கிஷம்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவரை மதித்தவர்களும்
பாராட்டியொர்களும் முஸ்லிமல்லாதவர்களே. கவிக்கோ என்ற விருதை கொடுத்ததே இந்துக்கள்தான்.

கவிஞர்இன்குலாப் ... போராளிக் கவிஞர்.!
கவிஞர்முமேத்தா ...புதுக்கவிதைகளின் பிதாமகன்.!
தி மு அப்துல்காதர்....தமிழகத்தின் மிகச் சிறந்த சொற்பொழிவாளர்.!
இவர்களைப்போல் எத்தனையோ பேருண்டு.

முஸ்லிம் சமுதாயம் இவர்களை  போற்றுகிறதா ? கண்ணியப்படுத்துகிறதா ?
இல்லை. இல்லவே இல்லை. இவர்களை யாரும் கண்டுகொள்வதேயில்லை.!
முடிந்தால் இஸ்லாத்திற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமேயில்லை என்று வாழ்த்துப்பா வாசிப்பார்கள்.

திறமைமிக்க முஸ்லிம்களை உற்சாகமூட்டுவதற்கு மாறாக ...
எப்போதும் எங்கேயும்  மார்க்கத்தின் பெயரால் விவாதங்களும்
கொள்கைச் சண்டைகளும்தான் நடைபெறுகின்றன.
கலாமைப் போன்றவர்களை குறை சொல்வதில் மட்டும் எல்லோரும்
ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.

கலாம் ...
ஒரு சகாப்தம். சாதாரண மீனவக் குடும்பத்தில் ஏழையாகப் பிறந்து
அறிவால் உயர்ந்து இந்தியக் குடியரசுத் தலைவரானவர்.

அவரை ஜனாதிபதியாக்கியது முஸ்லிம்களில்லை.யாரோ ஆக்கினார்கள்.
யாரோ கொண்டாடுகிறார்கள்.

கலாம் உயிரோடு இருந்தபோது அவரைத் தூற்றியவர்கள் அவர் இறந்த பிறகும் அவரைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இதுபோன்ற செயல்பாடுகளாலேயே முஸ்லிம் சாதனையாளர்களும்
மரியாதைக்குரியவர்களும் இன்றைய தமிழக முஸ்லிம்களுக்கு
வெகு தூரம் ஆகி விட்டார்கள்.அல்லது  ஆக்கி விட்டார்கள்.

என்றாலும் ...
கலாம் முஸ்லிம்.அவர் இறந்ததும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.இஸ்லாமிய மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
பேராசிரியர்ஜவாஹிருல்லாஹ் போன்றவர்கள் முன்னின்று கலாமின்
நல்லடக்கத்தை நல்லபடி நிறைவேற்றினார்கள்.

வருடங்கள் இரண்டு கடந்து விட்டன.இன்றுவரை கலாமை கழுவிக் குளிப்பாட்டுவது குறையவில்லை.

மார்க்கத்தைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பவர்களுக்கு கலாம்
விருப்புக்குரியவராக இருக்க முடியாது.துனியாவும் வேண்டும்
ஆகிரத்தும் வேண்டும் என்பவர்களுக்கு அவர் வெறுப்பானவராக இருக்க முடியாது.

இதை பின்னூட்டமாக இட முடியாததால் தனிப்பதிவாக போட்டிருக்கிறேன்.உங்களை படிக்க சிரம்ப்படுத்தியதற்காக வருந்துகிறேன்.!!

Thursday, 15 June 2017

சேவை செய்யும் விதத்தில் இயங்கும் ஜன்சேவா சொசைட்டி (Janjevaa Co - Operative Credit Society) !!

உங்கள் ஜன்சேவா கிளையில் அக்கவுண்ட் ஓபன் செய்தால் ஏடிஎம் கார்டு, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் வசதியெல்லாம் உண்டா.?
மேற்படி கேள்வியை ஜன்சேவா பற்றி Anbudan Ungal Abbas என்ற சகோதரர் கேட்டிருந்தார். அவருக்கு அளித்த பதில்:
முதலில் இது 'உங்கள் ஜன்சேவா' அல்ல. 'நம் ஜன்சேவா'. ஜன்சேவா ஒரு கூட்டுறவு அமைப்பு ஆகும். ஆகையால் அதற்கென முதலாளி யாரும் கிடையாது. உறுப்பினர்களே முதலாளிகள்.
வட்டியில்லா நிதி அளிப்பை இந்தியாவில் செய்யும் முதன்மை நிறுவனம் ஜன்சேவா ஆகும். ஆனால் நீங்கள் கேட்ட வசதிகள் அனைத்தையும் கொடுக்கும் அளவிற்கு ஜன்சேவா தற்போதைக்கு வளரவில்லை.
காரணம், வட்டியில்லா நிறுவனத்தை வளர்க்க வேண்டிய கடமை உள்ள நாம் இது போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இருப்பதால் தான்.
முஸ்லிம்களாகிய நாம் வங்கிகளில் வாங்காத வட்டி மட்டும் பல ஆயிரம் கோடி வங்கிகளில் இருக்கிறது. அப்பணத்தையும் வட்டிக்கு விட்டு கூடுதலாக சம்பாதிக்கின்றன வங்கிகள்.
இதனையெல்லாம் களைய நாம் என்ன மாற்று வழிகளை உண்டாக்கியிருக்கிறோம்? மாற்றே இல்லை. இருக்கிற வங்கிகளிலேயே தொடருவோம் என்கிற நிலை முஸ்லிம்களிடம் இருந்து மாற வேண்டும்.
மாற்றத்திற்கான ஒரு முயற்சி தான் 'ஜன்சேவா'. ஹராமான உணவு வழங்கும் ஹோட்டலில் ஏசி வசதி, கிரடிட் கார்டு ஸ்வைப்பிங் வசதி இருந்தாலும், இவ்வசதிகள் இல்லாத ஒரு ஹலாலான சாதாரண ஹோட்டலைத் தான் முஸ்லிம் தேர்ந்தெடுப்பான்.
ஆகையால் நீங்கள் எதிர்பார்க்கும் இவ்வசதி தற்போது ஜன்சேவா வில் இல்லையென்றாலும் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உள்ளது.
தமிழ் நாடு மெர்க்கண்டைல் வங்கியை காப்பாற்ற நாடார் சமூகம் ஒன்றிணைந்து முயற்சி செய்தது. தன் மனைவியின் தாலியை அடகு வைத்து தன்னால் ஆன பங்கினை நாடார் சமுதாயம் வழங்கியது. இன்று 507 கிளைகளுடன் கொடி கட்டி பறக்கிறது இவ்வங்கி. இதற்கு காரணம் அச்சமுதாயத்தின் தியாகம்.
இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியால் ஜன்சேவா வும் இத்தகைய வசதிகளை வழங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவின் முண்ணனி நிறுவனமாக இனிவரும் காலங்களில் ஜன்சேவா கோலோச்சும்.
ஜன்சேவா வின் வட்டியில்லா திட்டங்களின் மகத்துவத்தை அறிந்து பல முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் ஜன்சேவாவில் அக்கவுண்ட் ஆரம்பித்துள்ளனர்.
மதுரை ஜன்சேவா ஆரம்பிப்பதற்கு முன்பே என் பங்காக இருக்கட்டும் என்று 20000 ரூபாய்க்கான ஷேரை முஸ்லிமல்லாத சகோதரர் ஒருவர் வாங்கினார்.
ஜன்சேவா போன்ற வட்டியில்லா இஸ்லாமிய வங்கியியலைக் கொண்ட நிறுவனங்கள் இந்தியாவில் வளர்வது காலத்தின் கட்டாயம். முஸ்லிம்களின் அத்தியாவசிய தேவை.
முஸ்லிம்களில் 25 சதவீதத்தினர் டெபாசிட் செய்தால் கூட போதும், நீங்கள் விரும்பும் அத்தனை வசதிகளையும் கொடுத்து விடலாம்.

Wednesday, 7 June 2017

இல்லத்தரம் உயர்த்தும் இல்லத்தரசிகள் !!

குடும்பத்தையும், வீட்டையும் நிர்வகிக்கும் தலையாய பொறுப்பு இல்லத்தரசிகளுக்கே உண்டு. கணவன், குழந்தைகள் மற்றும் வீட்டையும் பராமரிக்கும் பெண்கள் ஒரு குடும்பத்தின் கண்களாக இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை நலமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தின் மகிழ்ச்சியும் இல்லத்தரசிகளின் மகிழ்ச்சியை சார்ந்தே உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத் தலைவிகளால் தான் வீட்டின் தரத்தை உயர்த்த முடியும்.
இல்லத்தரசிகளின் மகிழ்ச்சியை குலைப்பது 'மன அழுத்தம்'. ஒரு சிறிய மன உளைச்சல் காலப்போக்கில் பெரும் மன அழுத்தமாக மாறி, பல விதமான பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இல்லத்தரசிகளின் மன அழுத்தம் குறைய, சில வழிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தனியே தன்னந்தனியே 
மன அழுத்தத்தின் மூல காரணம் தனிமை. இன்றைய தனிக்குடித்தன முறையில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிறைய பிரச்சினைகளை தாங்களே கையாளும் இல்லத்தரசிகளுக்கு மன அழுத்தம் மிக அதிகம். தனியே தன்னந்தனியே வாழும் போது குறுக்கிடும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது மிகவும் கடினம் என்பதை தனிக்குடித்தன பெண்கள் உணர்ந்து, கூட்டுக்குடும்பத்திற்கு மாற வேண்டும்.

தனிமையைப் போக்க பெரும்பாலான இல்லத்தரசிகள் தொலைக்காட்சிகளில் மெகா சீரியல் பார்த்து அழுது வடிகின்றனர். பணம் கொடுத்து வாங்கிய ஒரு தொலைக்காட்சி, நம் பொன்னான நேரத்தை விலைக்கு வாங்கிக் கொண்டிருப்பதை பெண்கள் உணர்ந்ததில்லை. நாள் முழுக்க தொலைக்காட்சி பெட்டி முன் பெட்டி பாம்பாக அடங்கி கிடக்கும் பெண்களின் மனநிலையில் பெரிய குழப்பங்கள் ஏற்படும். அதில் நல்ல கருத்துக்களை சொன்னால் பார்ப்பதில் தவறில்லை, முழுக்க முழுக்க தவறான கருத்துக்கள் நம் மனதில் திணிக்கப்படுகிறது என்று தெரிந்தே ஏன் பார்க்க வேண்டும்.

வழக்கமான வேலைகள் 
அன்றாட வீட்டு வேலைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. அரைத்த மாவை அரைப்பது போல செய்த வேலைகளையே மீண்டும், மீண்டும் செய்யும் போது சிலருக்கு அலுப்பை உண்டாக்கும். இவ்வித அலுப்பு நாளடைவில் மன அழுத்தமாக மாறுவிடுகிறது. நம் வழக்கமான வேலைக்கு இடயே வருமானம் தரும் வகையிலான ஏதாவது ஒரு சிறு தொழிலை வீட்டிலிருந்தபடியே செய்யலாம்.

சமூகத்தில் மதிப்பு 
வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்குச் செல்லும் பெண்களுடன் தங்களை ஒப்பிட்டு, தன்னால் வீட்டிற்கு வருமானம் பெற்று தர முடியவில்லை, வீட்டிலேயே கிடப்பதால் யாரும் மாதிப்பதில்லை போன்ற எண்ணங்களால் மனதில் பெரிய பாரத்தை சுமக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வீட்டை பராமரிப்பதும், நிர்வகிப்பதும் கூட ஒரு வேலை தான் என்பதை, குடும்பத் தலைவிகள் உணர்ந்திட வேண்டும்.

திட்டமிட்ட வேலைகள் 
காலை முதல் இரவு வரை செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிடுவது அவசியம். உதாரணமாக நாளை மின்சாரத் தடை ஏற்படப் போகிறது என்றால், முதல் நாளே தொட்டிகளில் நீரை நிரப்புவது, அயர்ன், வாஷிங் மெஷின்களை பயன்படுத்தவது போன்ற மின்சாரத்தை நம்பியிருக்கும் வேலைகளை முடித்து விட வேண்டும். இதில் ஏதாவது ஒன்றில் தாமதம் ஏற்படும் போது, அவசர கதியில் அதை செய்ய நேரிடும். இந்நிலையில் மனதில் ஏற்படும் பதட்டம், மன அழுத்தமாக உருமாறி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.வீட்டு வேலைகளை முடித்த பின், அருகில் இருக்கும் பெண்களுடன், ஒன்று கூடி அமர்ந்து பேசுவதில் கூட ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். முதல் நாள் பார்த்த சீரியல்கள் குறித்து விவாதிப்பது, தெருவில் வசிக்கும் யாராவது ஒருவரை பற்றி விமர்சிப்பது, சுய பெருமைகளை அள்ளி விடுவது போன்ற செயல்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

நேர மேலாண்மை 
நிறுவனங்களைப் போல வீட்டு வேலைகளுக்கும் கால அட்டவணை பின்பற்ற வேண்டும். குறித்த நேரத்தில் முடிக்காத வேலைகள் பளுவாக மாறும். இதற்கு ஒரு சுலபமான வழி, இருபத்தி நான்கு கட்டங்களை வரைந்து எந்த நேரத்தில் என்ன வேலை என்பதை அதில் குறித்தால், எந்த வேலையை எந்த நேரத்தில் செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் ஓய்வாக இருக்கிறோம் என்பதை கணக்கிட முடியும். இந்த ஓய்வு நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதையும் திட்டமிடலாம்.''எய்தற் கரியது இயைந்தகால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்''என்பது திருக்குறள். அதாவது கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி அப்போதே செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து விடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
பயனுள்ள செயல்களில் ஈடுபடுவது ஒருவரின் ஆர்வம், விருப்பம் மற்றும் தேவைகளைப் பொறுத்து மாறுபடும். இவ்வாறு ஈடுபடும் பயனுள்ள செயல்கள், வழக்கமான வேலைகளால் ஏற்படும் சோர்வை நீக்கி, தாமும் குடும்பத்தின் தரம் உயர பங்களித்த திருப்தியையும் இல்லத்தரசிகளுக்கு ஏற்படுத்தும், குடும்பத்தினரிடம் மதிப்பையும் உயர்த்தும். வீண்பேச்சால் உண்டாகும் மன அழுத்தம் குறையும்.

பொழுதுபோக்கில் மகிழ்ச்சி 
நம் மனதிற்கும் உடலுக்கும் ஊக்கமும், மகிழ்ச்சியும் தரும் தோட்டக்கலை, புதிய வகை உணவு தயாரித்தல், யோகா, உடற்பயிற்சி, ஓவியம், நடனம், பாட்டு, புத்தகம் வாசித்தல், கவிதை, கதை மற்றும் கட்டுரைகள் எழுதுவது, படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனம் லேசாகி சிந்தனைகளுக்கு சிறகு முளைத்து, நீல வானில் பரவசமாய் பறக்கும்.'வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற'அதாவது மற்றவை எல்லாம் இருந்தும், ஒருவரது மனதில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது. உறுதியுடன் செயல்பட்டு, பயனுடன் ஈடுபட்டால், மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். இம்மகிழ்ச்சி குடும்பத்துடன் கலந்து வாழ்வியில் சூழலை அழகாக்கும். பயனுள்ள செயல்கள் சமுதாயத்தையும் நல்வழிப்படுத்தும். தீய எண்ணங்களும் அறவே ஒழியும். நாடும் பொருளாதார வகையில் மேம்பட வேண்டுமெனில், அதன் துவக்கம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். நவீன கால இல்லத்தரசிகள் தங்கள் பங்களிப்பை செயல்படுத்தி வீட்டையும் நாட்டையும் தரம் உயர்த்த முன்வர வேண்டும்.- 

Monday, 5 June 2017

மாதம் ரூ.20,000 உதவித்தொகையுடன் மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை முதுநிலைப் பட்டயப்படிப்பு படிக்க வாய்ப்பு!!!


மாதம் ரூ.20,000 உதவித்தொகையுடன் மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் படிக்கலாம்!

இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் கூட்டாண்மை நிறுவனமாகச் செயல்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிதியுதவியுடன் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் ‘மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை’ (P.G.Diploma in Metro Rail Technology and Management) எனும் ஓராண்டுப் பட்டயப்படிப்பு அறிமுகமாகியுள்ளது. இந்த முதுநிலைப் பட்டயப்படிப்பில் சேர்க்கை பெற விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. 

கல்வித்தகுதி
விண்ணப்பிக்க ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் கட்டுமானப் பொறியியல் (Civil Engineering) பட்டப்படிப்பில் (BE / B.Tech) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கூட்டு மதிப்பெண்களாக (Aggregate Marks) 70% தேவை. விண்ணப்பிப்பவர்கள், GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களின் வயது 4-7-2017 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத்தளர்வு உண்டு. 

விண்ணப்பப் படிவம்
http://chennaimetrorail.org/ எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கி, விண்ணப்பப் படிவத்தை நிரப்பித் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் உறையின் மேல் “Application for PG Diploma Course” என்று குறிப்பிட்டு “The Course Coordinator, CMRL Sponsored PG Diploma Course, Department of Civil Engineering, IIT Madras, Chennai - 600036” எனும் முகவரிக்கு 4-7-2017 ஆம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பித்தரவேண்டும். 

மாணவர் சேர்க்கை 

விண்ணப்பதாரர் பொறியியல் தகுதித் தேர்வு (GATE) மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தகுதியுடைய மாணவர்கள் பட்டியல் ஒன்று தயார் செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும். அதன் பின்னர், இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உடற்தகுதிச் சோதனைக்குப் பிறகு இறுதியாகச் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும்.

பயிற்சி 

மாணவர்களுக்கு மாதம் ரூ. 20,000/- உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் பயிற்சிக் காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயிற்சி அதிகாரிகளாகவும் இருப்பார்கள். ஓராண்டு படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஐந்தாண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில், ரூ.40,000/- மாதச்சம்பளத்தில் ‘உதவி மேலாளர்’ பணியில் சேர்க்கப்படுவார்கள். 5 ஆண்டு நிறைவுக்குப் பின்பு இப்பணியிட ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வாய்ப்புண்டு.    

கூடுதல் தகவல்களுக்கு மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம். சென்னை, கோயம்பேட்டிலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அலுவகத்திற்கு நேரில் சென்றோ அல்லது நிறுவனத்தின் 044 - 23792000 எனும் தொலைபேசி எண்ணிலோ chennaimetrorail@cmrl.in எனும் மின்னஞ்சல் வழியிலோ தொடர்பு கொள்ளலாம். 


தொகுப்பு  : மு .அஜ்மல் கான்.