உங்கள் ஜன்சேவா கிளையில் அக்கவுண்ட் ஓபன் செய்தால் ஏடிஎம் கார்டு, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் வசதியெல்லாம் உண்டா.?
மேற்படி கேள்வியை ஜன்சேவா பற்றி Anbudan Ungal Abbas என்ற சகோதரர் கேட்டிருந்தார். அவருக்கு அளித்த பதில்:
முதலில் இது 'உங்கள் ஜன்சேவா' அல்ல. 'நம் ஜன்சேவா'. ஜன்சேவா ஒரு கூட்டுறவு அமைப்பு ஆகும். ஆகையால் அதற்கென முதலாளி யாரும் கிடையாது. உறுப்பினர்களே முதலாளிகள்.
வட்டியில்லா நிதி அளிப்பை இந்தியாவில் செய்யும் முதன்மை நிறுவனம் ஜன்சேவா ஆகும். ஆனால் நீங்கள் கேட்ட வசதிகள் அனைத்தையும் கொடுக்கும் அளவிற்கு ஜன்சேவா தற்போதைக்கு வளரவில்லை.
காரணம், வட்டியில்லா நிறுவனத்தை வளர்க்க வேண்டிய கடமை உள்ள நாம் இது போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இருப்பதால் தான்.
முஸ்லிம்களாகிய நாம் வங்கிகளில் வாங்காத வட்டி மட்டும் பல ஆயிரம் கோடி வங்கிகளில் இருக்கிறது. அப்பணத்தையும் வட்டிக்கு விட்டு கூடுதலாக சம்பாதிக்கின்றன வங்கிகள்.
இதனையெல்லாம் களைய நாம் என்ன மாற்று வழிகளை உண்டாக்கியிருக்கிறோம்? மாற்றே இல்லை. இருக்கிற வங்கிகளிலேயே தொடருவோம் என்கிற நிலை முஸ்லிம்களிடம் இருந்து மாற வேண்டும்.
மாற்றத்திற்கான ஒரு முயற்சி தான் 'ஜன்சேவா'. ஹராமான உணவு வழங்கும் ஹோட்டலில் ஏசி வசதி, கிரடிட் கார்டு ஸ்வைப்பிங் வசதி இருந்தாலும், இவ்வசதிகள் இல்லாத ஒரு ஹலாலான சாதாரண ஹோட்டலைத் தான் முஸ்லிம் தேர்ந்தெடுப்பான்.
ஆகையால் நீங்கள் எதிர்பார்க்கும் இவ்வசதி தற்போது ஜன்சேவா வில் இல்லையென்றாலும் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உள்ளது.
தமிழ் நாடு மெர்க்கண்டைல் வங்கியை காப்பாற்ற நாடார் சமூகம் ஒன்றிணைந்து முயற்சி செய்தது. தன் மனைவியின் தாலியை அடகு வைத்து தன்னால் ஆன பங்கினை நாடார் சமுதாயம் வழங்கியது. இன்று 507 கிளைகளுடன் கொடி கட்டி பறக்கிறது இவ்வங்கி. இதற்கு காரணம் அச்சமுதாயத்தின் தியாகம்.
இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியால் ஜன்சேவா வும் இத்தகைய வசதிகளை வழங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவின் முண்ணனி நிறுவனமாக இனிவரும் காலங்களில் ஜன்சேவா கோலோச்சும்.
ஜன்சேவா வின் வட்டியில்லா திட்டங்களின் மகத்துவத்தை அறிந்து பல முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் ஜன்சேவாவில் அக்கவுண்ட் ஆரம்பித்துள்ளனர்.
மதுரை ஜன்சேவா ஆரம்பிப்பதற்கு முன்பே என் பங்காக இருக்கட்டும் என்று 20000 ரூபாய்க்கான ஷேரை முஸ்லிமல்லாத சகோதரர் ஒருவர் வாங்கினார்.
ஜன்சேவா போன்ற வட்டியில்லா இஸ்லாமிய வங்கியியலைக் கொண்ட நிறுவனங்கள் இந்தியாவில் வளர்வது காலத்தின் கட்டாயம். முஸ்லிம்களின் அத்தியாவசிய தேவை.
முஸ்லிம்களில் 25 சதவீதத்தினர் டெபாசிட் செய்தால் கூட போதும், நீங்கள் விரும்பும் அத்தனை வசதிகளையும் கொடுத்து விடலாம்.
No comments:
Post a Comment