Wednesday 7 June 2017

இல்லத்தரம் உயர்த்தும் இல்லத்தரசிகள் !!

குடும்பத்தையும், வீட்டையும் நிர்வகிக்கும் தலையாய பொறுப்பு இல்லத்தரசிகளுக்கே உண்டு. கணவன், குழந்தைகள் மற்றும் வீட்டையும் பராமரிக்கும் பெண்கள் ஒரு குடும்பத்தின் கண்களாக இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை நலமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தின் மகிழ்ச்சியும் இல்லத்தரசிகளின் மகிழ்ச்சியை சார்ந்தே உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத் தலைவிகளால் தான் வீட்டின் தரத்தை உயர்த்த முடியும்.
இல்லத்தரசிகளின் மகிழ்ச்சியை குலைப்பது 'மன அழுத்தம்'. ஒரு சிறிய மன உளைச்சல் காலப்போக்கில் பெரும் மன அழுத்தமாக மாறி, பல விதமான பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இல்லத்தரசிகளின் மன அழுத்தம் குறைய, சில வழிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தனியே தன்னந்தனியே 
மன அழுத்தத்தின் மூல காரணம் தனிமை. இன்றைய தனிக்குடித்தன முறையில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிறைய பிரச்சினைகளை தாங்களே கையாளும் இல்லத்தரசிகளுக்கு மன அழுத்தம் மிக அதிகம். தனியே தன்னந்தனியே வாழும் போது குறுக்கிடும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது மிகவும் கடினம் என்பதை தனிக்குடித்தன பெண்கள் உணர்ந்து, கூட்டுக்குடும்பத்திற்கு மாற வேண்டும்.

தனிமையைப் போக்க பெரும்பாலான இல்லத்தரசிகள் தொலைக்காட்சிகளில் மெகா சீரியல் பார்த்து அழுது வடிகின்றனர். பணம் கொடுத்து வாங்கிய ஒரு தொலைக்காட்சி, நம் பொன்னான நேரத்தை விலைக்கு வாங்கிக் கொண்டிருப்பதை பெண்கள் உணர்ந்ததில்லை. நாள் முழுக்க தொலைக்காட்சி பெட்டி முன் பெட்டி பாம்பாக அடங்கி கிடக்கும் பெண்களின் மனநிலையில் பெரிய குழப்பங்கள் ஏற்படும். அதில் நல்ல கருத்துக்களை சொன்னால் பார்ப்பதில் தவறில்லை, முழுக்க முழுக்க தவறான கருத்துக்கள் நம் மனதில் திணிக்கப்படுகிறது என்று தெரிந்தே ஏன் பார்க்க வேண்டும்.

வழக்கமான வேலைகள் 
அன்றாட வீட்டு வேலைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. அரைத்த மாவை அரைப்பது போல செய்த வேலைகளையே மீண்டும், மீண்டும் செய்யும் போது சிலருக்கு அலுப்பை உண்டாக்கும். இவ்வித அலுப்பு நாளடைவில் மன அழுத்தமாக மாறுவிடுகிறது. நம் வழக்கமான வேலைக்கு இடயே வருமானம் தரும் வகையிலான ஏதாவது ஒரு சிறு தொழிலை வீட்டிலிருந்தபடியே செய்யலாம்.

சமூகத்தில் மதிப்பு 
வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்குச் செல்லும் பெண்களுடன் தங்களை ஒப்பிட்டு, தன்னால் வீட்டிற்கு வருமானம் பெற்று தர முடியவில்லை, வீட்டிலேயே கிடப்பதால் யாரும் மாதிப்பதில்லை போன்ற எண்ணங்களால் மனதில் பெரிய பாரத்தை சுமக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வீட்டை பராமரிப்பதும், நிர்வகிப்பதும் கூட ஒரு வேலை தான் என்பதை, குடும்பத் தலைவிகள் உணர்ந்திட வேண்டும்.

திட்டமிட்ட வேலைகள் 
காலை முதல் இரவு வரை செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிடுவது அவசியம். உதாரணமாக நாளை மின்சாரத் தடை ஏற்படப் போகிறது என்றால், முதல் நாளே தொட்டிகளில் நீரை நிரப்புவது, அயர்ன், வாஷிங் மெஷின்களை பயன்படுத்தவது போன்ற மின்சாரத்தை நம்பியிருக்கும் வேலைகளை முடித்து விட வேண்டும். இதில் ஏதாவது ஒன்றில் தாமதம் ஏற்படும் போது, அவசர கதியில் அதை செய்ய நேரிடும். இந்நிலையில் மனதில் ஏற்படும் பதட்டம், மன அழுத்தமாக உருமாறி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.வீட்டு வேலைகளை முடித்த பின், அருகில் இருக்கும் பெண்களுடன், ஒன்று கூடி அமர்ந்து பேசுவதில் கூட ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். முதல் நாள் பார்த்த சீரியல்கள் குறித்து விவாதிப்பது, தெருவில் வசிக்கும் யாராவது ஒருவரை பற்றி விமர்சிப்பது, சுய பெருமைகளை அள்ளி விடுவது போன்ற செயல்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

நேர மேலாண்மை 
நிறுவனங்களைப் போல வீட்டு வேலைகளுக்கும் கால அட்டவணை பின்பற்ற வேண்டும். குறித்த நேரத்தில் முடிக்காத வேலைகள் பளுவாக மாறும். இதற்கு ஒரு சுலபமான வழி, இருபத்தி நான்கு கட்டங்களை வரைந்து எந்த நேரத்தில் என்ன வேலை என்பதை அதில் குறித்தால், எந்த வேலையை எந்த நேரத்தில் செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் ஓய்வாக இருக்கிறோம் என்பதை கணக்கிட முடியும். இந்த ஓய்வு நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதையும் திட்டமிடலாம்.''எய்தற் கரியது இயைந்தகால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்''என்பது திருக்குறள். அதாவது கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி அப்போதே செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து விடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
பயனுள்ள செயல்களில் ஈடுபடுவது ஒருவரின் ஆர்வம், விருப்பம் மற்றும் தேவைகளைப் பொறுத்து மாறுபடும். இவ்வாறு ஈடுபடும் பயனுள்ள செயல்கள், வழக்கமான வேலைகளால் ஏற்படும் சோர்வை நீக்கி, தாமும் குடும்பத்தின் தரம் உயர பங்களித்த திருப்தியையும் இல்லத்தரசிகளுக்கு ஏற்படுத்தும், குடும்பத்தினரிடம் மதிப்பையும் உயர்த்தும். வீண்பேச்சால் உண்டாகும் மன அழுத்தம் குறையும்.

பொழுதுபோக்கில் மகிழ்ச்சி 
நம் மனதிற்கும் உடலுக்கும் ஊக்கமும், மகிழ்ச்சியும் தரும் தோட்டக்கலை, புதிய வகை உணவு தயாரித்தல், யோகா, உடற்பயிற்சி, ஓவியம், நடனம், பாட்டு, புத்தகம் வாசித்தல், கவிதை, கதை மற்றும் கட்டுரைகள் எழுதுவது, படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனம் லேசாகி சிந்தனைகளுக்கு சிறகு முளைத்து, நீல வானில் பரவசமாய் பறக்கும்.'வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற'அதாவது மற்றவை எல்லாம் இருந்தும், ஒருவரது மனதில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது. உறுதியுடன் செயல்பட்டு, பயனுடன் ஈடுபட்டால், மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். இம்மகிழ்ச்சி குடும்பத்துடன் கலந்து வாழ்வியில் சூழலை அழகாக்கும். பயனுள்ள செயல்கள் சமுதாயத்தையும் நல்வழிப்படுத்தும். தீய எண்ணங்களும் அறவே ஒழியும். நாடும் பொருளாதார வகையில் மேம்பட வேண்டுமெனில், அதன் துவக்கம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். நவீன கால இல்லத்தரசிகள் தங்கள் பங்களிப்பை செயல்படுத்தி வீட்டையும் நாட்டையும் தரம் உயர்த்த முன்வர வேண்டும்.- 

No comments:

Post a Comment