Thursday, 29 June 2017

பேய்க்கரும்பில் உறங்கும் பேரன்பு கலாம்என்ன செய்தார் ??

கலாமைப் பற்றிய என்னுடைய பதிவுக்கு நண்பர்கள் பலரும் மாற்றுக் கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் வெளியிட்டிருந்தார்கள்.
வரவேற்க வேண்டிய ரொம்ப நல்ல விஷயமிது.நமக்குத் தெரியாத நாலு விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.அவர்கள் சொன்னதில் முக்கியமான ஒன்று கலாம்இந்துத்துவ கொள்கைகளை தூக்கிப்பிடித்தார்என்பது.


அப்படி அவர் என்ன செய்தார் என்றால் ...
சாமியார்களிடம் ஆசி வாங்கி இருக்கிறார்.
சில கோயில்களுக்கு சென்றிருக்கிறார்.
பகவத்கீதை படித்திருக்கிறார்.
வீணை வாசித்தார் .
குஜராத் கலவத்தின்போது மொவ்னம் காத்தார்.
என்று சில படங்களைப் போட்டு சேதி சொல்கிறார்கள்.


ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் எல்லா மக்களுக்கும் ஜனாதிபதி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கலாமின் இளமைப் பருவம் தொட்டு அவர் விஞ்ஞானியாக பணியாற்றிய காலம்வரை அவரோடு நெருக்கமாக இருந்தவர்கள் இந்துக்கள்.அவர்களில் பலர் பிராமணர்கள்....
நமது ஸ்ரீரங்கத்து சுஜாதா உட்பட.!

மலையாளத்து சேட்டன்மார் யாரையும் எளிதில் பாராட்ட மாட்டார்கள்.
அவர்களே கலாமை பாராட்டுகிறார்கள். மத சிந்தனைகள் ஏதுமில்லாத குழந்தைகள் மாணவ மாணவிகள் அவரை போற்றுகிறார்கள்.
கட்சி சாராத மக்கள் அவரை வாழ்த்துகிறார்கள். அனைத்துக் கட்சியினரும் அவரை பாராட்டுகிறார்கள்.  இவர்களோடு  இந்துத்துவவாதிகளும் அவரை கொண்டாடுகிறார்கள்.

மற்றவர்களுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ...
அவர்கள் கலாமை உயர்ந்த மனிதராக எண்ணிப் போற்றுகிறார்கள்.
காவிகளோ அவரை வைத்து அரசியல் ஆடுகிறார்கள்.

இவர்களைத் தவிர கலாமை விமர்சிப்பவர்கள் கொஞ்சம் பேர் முஸ்லிம்கள்.
இவர்கள் .... ஆழமான இஸ்லாமிய கோட்பாடுகளைஅடிப்படையாகக் கொண்டு கலாமை நல்ல முஸ்லிமில்லை என்கிறார்கள்.

கலாம் முஸ்லிமா ? அதுவும் நல்ல முஸ்லிமா இல்லையா என்பதை இறைவனே அறிவான்.
ஒரு மனிதனை நல்லவன் என்று சொல்ல அவன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நல்ல மனிதனாக இருந்தால் போதும்.
அந்த வகையில் கலாம் நல்ல மனிதர்தான்.

காவிகளும் மத்திய பாஜக அரசும் கலாமை வைத்து நடத்தும் அரசியலுக்கும்
அலப்பறைகளுக்கும் கலாம் பொறுப்பில்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்று ...
அரபு நாட்டில் இஸ்லாம் வேர்விட ஆரம்பித்தபோது மக்கத்து குறைஷிகள்
முஸ்லிம்களை கொடுமைப் படுத்தினார்கள்.
உயிருக்கு பயந்து பலர் நாட்டை விட்டு வெளியேறி அபிசீனியா நாட்டில் தஞ்சமடைந்தார்கள். அந்த நாட்டின் அரசர்நஜ்ஜாஷி.அவர் கிறிஸ்தவர்.
அப்படி இருந்தும் அவர் முஸ்லிம்களை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்தார். அவர் நினைத்திருந்தால் அபுசுப்யானோடு அடைக்கலம் தேடி வந்தவர்களை அனுப்பியிருக்கலாம்.அவர் அப்படிச் செய்யவில்லை.

நபிகளாரே அவரை பாராட்டி இருக்கிறார்கள்.அப்போதும் அபிசீனிய பாதிரிமார்கள் மன்னர் நஜ்ஜாஷியை குறை சொன்னார்கள்.
ஆனால் ...முஸ்லிம்கள் அவரை குறை சொல்லமாட்டார்கள்.இதுதான் அன்று முதல் இன்றுவரை நடைபெற்று வருகின்ற உலக நடப்பு.

மறைந்த எழுத்து சித்தர்வலம்புரி ஜான் அவர்கள் ஒரு சிறந்த கிறிஸ்தவர் என்றாலும் எல்லா ஆன்மீக மேடைகளிலும் பேசுவார்.எல்லாத் தலைவர்களோடும் படம் பிடித்துக் கொள்வார்.நபிகளாரைப் பற்றி ... நாயகம்எங்கள் தாயகம் என்று காவியமே எழுதினார்.

அவரை ... கிறிஸ்தவர்கள் யாரும் இஸ்லாமியவாதி என்று பட்டம் சூட்டி ஏசவில்லை.

கவிஞர்ஈரோடு தமிழன்பன்  தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கவிஞர்.
அவரும் ... என்னைக்கவர்ந்த பெருமானார்மற்றும் இடுகுறிப்பெயரல்ல இஸ்லாம் என்ற தலைப்புகளில் நபி புகழையும் இஸ்லாத்தின் சிறப்பையும் எழுதி இருக்கிறார்.அப்படி எழுதியதற்காக அவரை இந்துக்கள் யாரும் குறை சொல்லவில்லை.

மீலாது மேடைகளில் அறிஞர்அண்ணா பேசிய பேச்சுக்கள் அற்புதமானவை.
இன்றைக்கும் கம்பம்செல்வேந்திரன் ,வைகோ,
நாஞ்சில்சம்பத் போற்றவர்கள் மணிக்கணக்கில் நபிகளார் பற்றியும்
இஸ்லாம் குறித்தும் அருமையாக பேசுகிறார்கள்.

இந்து மத ஆன்மீகப் பேச்சாளர் சுகி சிவம்.அருமையான சிந்தனையாளர்.
அவர் பேசும் மேடைகளில் நபிகளாரின் சிறப்புக்களை சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இன்னும் எண்ணற்ற இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தின் மாண்புகளை நபிகளாரின் அருமை பெருமைகளை கேட்போர் காதினிக்க பேசுகிறார்கள்.எழுதுகிறார்கள்.இவர்களையெல்லாம் எந்த முஸ்லிமும் மேடைபோட்டு பாராட்டியதில்லை.

ஆனால் ... இவர்களை இவர்கள் சார்ந்த சமூகத்தார் பத்வாக்கள் கொடுத்து ஒதுக்கவில்லை என்பது பெரிய விஷயம்.

முஸ்லிம் கலாமுக்கு மட்டும் பத்வாக்களால் விபூதி பூசுகிறார்கள் முஸ்லிம் சாமியார்கள்.

கம்பராமாயணமும் ,சிலப்பதிகாரமும்,திருவிளையாடல் புராணமும் படிக்காமல் எவரும் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக முடியாது.
அப்படி தமிழைப் படித்து தமிழை நேசிப்பவர்கள் கம்பனின் கவித்திறனை வியக்கிறார்கள்.அதை மேடைகளில் பேசுகிறார்கள்.

சித்திரைத் திருவிழாக்களில் ...
கம்பன் கலைக்கழக மேடைகளில் ...
இலக்கியக் கூட்டங்களில் ...
முஸ்லிம் தமிழறிஞர்கள் உரையாற்றுகிறார்கள்.
அதை கேட்பவர்கள் ...
பேசக்கூடியவர்களை வியந்து போற்றுகிறார்கள்.
பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கிறார்கள்.

கவிக்கோ ...
தமிழகத்திற்கு கிடைத்த அற்புதமான இலக்கிய பொக்கிஷம்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவரை மதித்தவர்களும்
பாராட்டியொர்களும் முஸ்லிமல்லாதவர்களே. கவிக்கோ என்ற விருதை கொடுத்ததே இந்துக்கள்தான்.

கவிஞர்இன்குலாப் ... போராளிக் கவிஞர்.!
கவிஞர்முமேத்தா ...புதுக்கவிதைகளின் பிதாமகன்.!
தி மு அப்துல்காதர்....தமிழகத்தின் மிகச் சிறந்த சொற்பொழிவாளர்.!
இவர்களைப்போல் எத்தனையோ பேருண்டு.

முஸ்லிம் சமுதாயம் இவர்களை  போற்றுகிறதா ? கண்ணியப்படுத்துகிறதா ?
இல்லை. இல்லவே இல்லை. இவர்களை யாரும் கண்டுகொள்வதேயில்லை.!
முடிந்தால் இஸ்லாத்திற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமேயில்லை என்று வாழ்த்துப்பா வாசிப்பார்கள்.

திறமைமிக்க முஸ்லிம்களை உற்சாகமூட்டுவதற்கு மாறாக ...
எப்போதும் எங்கேயும்  மார்க்கத்தின் பெயரால் விவாதங்களும்
கொள்கைச் சண்டைகளும்தான் நடைபெறுகின்றன.
கலாமைப் போன்றவர்களை குறை சொல்வதில் மட்டும் எல்லோரும்
ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.

கலாம் ...
ஒரு சகாப்தம். சாதாரண மீனவக் குடும்பத்தில் ஏழையாகப் பிறந்து
அறிவால் உயர்ந்து இந்தியக் குடியரசுத் தலைவரானவர்.

அவரை ஜனாதிபதியாக்கியது முஸ்லிம்களில்லை.யாரோ ஆக்கினார்கள்.
யாரோ கொண்டாடுகிறார்கள்.

கலாம் உயிரோடு இருந்தபோது அவரைத் தூற்றியவர்கள் அவர் இறந்த பிறகும் அவரைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இதுபோன்ற செயல்பாடுகளாலேயே முஸ்லிம் சாதனையாளர்களும்
மரியாதைக்குரியவர்களும் இன்றைய தமிழக முஸ்லிம்களுக்கு
வெகு தூரம் ஆகி விட்டார்கள்.அல்லது  ஆக்கி விட்டார்கள்.

என்றாலும் ...
கலாம் முஸ்லிம்.அவர் இறந்ததும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.இஸ்லாமிய மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
பேராசிரியர்ஜவாஹிருல்லாஹ் போன்றவர்கள் முன்னின்று கலாமின்
நல்லடக்கத்தை நல்லபடி நிறைவேற்றினார்கள்.

வருடங்கள் இரண்டு கடந்து விட்டன.இன்றுவரை கலாமை கழுவிக் குளிப்பாட்டுவது குறையவில்லை.

மார்க்கத்தைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பவர்களுக்கு கலாம்
விருப்புக்குரியவராக இருக்க முடியாது.துனியாவும் வேண்டும்
ஆகிரத்தும் வேண்டும் என்பவர்களுக்கு அவர் வெறுப்பானவராக இருக்க முடியாது.

இதை பின்னூட்டமாக இட முடியாததால் தனிப்பதிவாக போட்டிருக்கிறேன்.உங்களை படிக்க சிரம்ப்படுத்தியதற்காக வருந்துகிறேன்.!!

No comments:

Post a Comment