Friday 7 May 2021

தமிழ் பாரம்பரியத்தின் புடவை வகைகள் ஒரு பார்வை...

 


தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பாரம்பர்ய ஆடையான புடவைகள்தான்.


நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து இன்னும் ஆயிரமாயிரம் பேஷன் ஆடைகள் வந்தாலும் பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவது புடவைதான் என்று இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் புடவைக்கு வாக்களித்துள்ளனர்.புடவைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றியவர்கள் நாம்.வளர்ச்சி என்கிற பெயரில் தமிழர்கள் அதிவேகமாக முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த வளர்ச்சியில் எத்தனையோ நன்மைகள் இருந்தாலும் அதற்கான விலையையும் நாம் கொடுக்கத் தவறவில்லை. உதாரணத்திற்கு நம் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற உணவு வகைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று துரித உணவு சாப்பிட்டு, நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது. அதிக பணமும் பொருளும் ஈட்டமுடிகிறது. ஆனால், அதற்கு நாம் கொடுத்துள்ள விலை மிகவும் பெரியது. ஆம்! நம் ஆரோக்கியத்தை அடமானம் வைத்துவிட்டே இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறோம். இதுவரை நாம் இதைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. ஆனால், இன்று அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பலர், சற்றே நிதானித்து இதை சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சிந்தனையின் வெளிப்பாடாகவே பாரம்பரிய வாழ்க்கைமுறையை பல வகைகளில் மீட்டு எடுப்பதாகும். இதன் வளர்ச்சி அதிவேகமாக முன்னோக்கி இருந்தாலும், அதன் மீட்சி அத்தனை வேகத்தில் இல்லை. என்றாலும் அதற்கான முயற்சிகள் நடந்து வருவது திருப்தியளிக்கிறது. ரசாயனங்களும் நச்சுப்பொருட்களும் நாம் உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் நிறைந்திருக்கின்றன. இன்றைய நவீன உலகில் எத்தனையோ பிராண்டுகள் மக்களை மூளைச்சலவை செய்து ரசாயனங்களை திணிக்கின்றன. இந்த இரைச்சல்களுக்கு மத்தியில் சிலர் சத்தமில்லாமல் பாரம்பரியத்தை மீட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களும் புடவைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் புடவை என்றாலே தமிழகம் நினைவுக்கு வருவதை தவிர்க்கவே முடியாது. தமிழகத்து புடவைகளில் பல வெரைட்டிகள் இருக்கின்றன. அதில் சிலவற்றை வாசகர்களுக்காக தொகுத்திருக்கிறோம்.


தமிழ்நாட்டின் புடவை வகைகள்...


பல்வேறு வித மனிதர்கள் வாழும் தமிழகத்தில் புடவை வகைகளும் பலவகையானவை. பட்டுப்புடவை முதல் செட்டிநாட்டு புடவைகள் வரை தமிழ்நாட்டின் புடவை வகைகள் சிறப்பான தோற்றம் தருபவை.

காஞ்சிவரம் சில்க் புடவைகள்

இந்த வகைப் புடவைகள் இந்தியாவுக்கே பெருமை தேடித் தருபவை. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றுமதி ஆவதிலும் முதலிடத்தை பிடித்திருக்கும் காஞ்சிவரம் பட்டுப் புடவைகள் நமது தமிழகத்தில் உள்ள காஞ்சிவரம் எனும் ஊரில் தயார் ஆகிறது. பல கை வேலைப்பாடுகள், கலைநுணுக்கங்கள் கொண்ட புடவைகள் இந்தியாவின் பெருமை.

ராசிபுரம் புடவைகள்

ராசிபுரம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். அங்கே கைத்தறி நெசவுகளும் பட்டுத்தறிகளும் தான் குலத்தொழில். நிறைய நெசவாளர்களை தன்னகத்தே கொண்ட ஊரில் கைத்தறி புடவைகளில் நெசவாளர்களின் கைவண்ணம் நம்மை ஆச்சரியப்படுத்தும். பட்டுபுடவைகளிலும் காஞ்சிவரம் புடவைக்கு நிகரான தரத்தை இவர்கள் வழங்குகிறார்கள்.

தமிழ்நாட்டு திருமணங்கள் எப்போதும் புடவைகளால் நிறைந்திருக்க கடவது என்று யாரோ ஆணையிட்டு விட்டதை போல இன்றும் நம் தமிழ் திருமணங்களில் பட்டுபுடவைகள் தான் முன்னிலை வகிக்கின்றன. அதிலும் டிசைனர் புடவைகள் பியூஷன் புடவைகள் என பல விதமான புடவைகள் வந்திருக்கின்றன. இதனைத் தவிர இப்போதெல்லாம் வடஇந்தியர்கள் போல லெஹன்கா அணியும் கலாச்சாரமும் வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும் பாரம்பர்ய திருமணப்புடவைகள் என்றாலே அது தமிழகம்தான்.


டிசைனர் புடவைகள்

கலாச்சாரம் வளர வளர புடவை நெசவுகளில் புதுமை புகுத்துவது எல்லா நாடுகளிலும் வழக்கம். ஆகவே அதற்காகவே டிசைனர் புடவைகள் தயார் ஆனது. எம்ப்ராய்டரி முதல் கண்ணாடி வேலைப்பாடுகள் வரை கலையின் கைவண்ணத்தை புடவையில் காட்டினார்கள். மனித கற்பனை திறனையும் அவர்கள் உழைப்பையும் நேரத்தையும் இந்த டிசைனர் புடவைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் அதிக விலை தர வேண்டி இருக்கிறது. ஆனாலும் அணிபவரை அழகாக்கும் அற்புதம் வாய்ந்தது.


கோவை பருத்தி புடவைகள்

கோவை காட்டன் புடவைகள் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவை. அணிந்து கொள்ள மிருதுவாகவும் சருமத்திற்கு நண்பனாகவும் இருக்கும் இந்தப் புடவைகளின் தரம் பல வருடங்களுக்கு நிலைக்கும் . தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் பருத்தி உற்பத்தி ஆகிறது என்பது சிறப்பு செய்தி. உற்பத்தி ஆகும் இடத்திலேயே தயாரிக்கப்படும் புடவைகள் தரத்திற்கான உத்தரவாதம் மற்றும் விலை மலிவு ஆகியவற்றை குறிப்பிடுகிறது.

நெகமம் புடவைகள்

பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமத்தில் தான் தமிழகமெங்கும் உள்ள ஆடைக் கடைகளுக்கு புடவைகள் தயார் ஆகின்றன. இங்கே விற்கப்படும் கிராமத்து பருத்தி புடவைகள் மற்றும் அதன் தனித்துவமான டிசைன் பெரியவர்கள் அணிய மிருதுவாக இருக்கும் தன்மை ஆகியவையால் புடவைகள் என்றால் நெகமம் புடவைகளை நாம் தவற விட முடியாது.

சேலம் புடவைகள்

சேலம் புடவைகள் இங்கும் நெசவு தொழில்தான். பருத்தியில் பல்வேறு வண்ண சாயங்கள் சேர்த்து பியூஷன் முறையில் புதுமையை புகுத்துவார்கள் சேலத்து நெசவாளர்கள். அதே சமயம் தரம் பல வருடங்கள் நிலைக்கும். பிளைன் புடவையில் ஜரிகை பார்டர் அல்லது கட்டம் போட்ட செக்ட் காட்டன் புடவைகள் இவர்கள் சிறப்பம்சம்.

ஷிபான் புடவைகள்

எடை குறைவான இந்த வகையான புடவைகளும் தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றன. அணிவதற்கு லேசாக இருக்கும் அதே சமயம் நினைத்து பார்க்க முடியாத நிறங்களில் கிடைக்கும் இவ்வகை புடவைகள் தமிழர்கள் அன்றாடம் பயன்படுத்த எளியது.

ஜார்ஜெட் புடவைகள்

அணிவதற்கு சுலபம் அதே சமயம் ஆடம்பர தோற்றம் ரிச் லுக் வேண்டும் என்பவர்கள் இந்த வகை ஆடைகளை அணியலாம். இவ்வகை ஆடைகளுக்கு இளைஞிகளிடம் வரவேற்பு அதிகம். புடவை கட்டுவதை ஒரு பெரிய சடங்காக பார்க்கும் இக்காலத்து யுவதிகளுக்கு ஜார்ஜெட் புடவைகள் அணிய சுலபமானது. 300 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.

சுங்குடி புடவைகள்

சுங்கிடி புடவைகள் தமிழகத்தின் பின்னிப் பிணைந்த பாரம்பர்ய புடவைகளில் ஒன்று. இதில் பல்வேறு விதமான வகைகள் இருக்கின்றன. மதுரை சுங்குடி இதில் பிரபலமானது. மிக அடர்த்தியாக நெய்யப்பட்ட நெசவுகளில் இந்தப் புடவைகள் இருக்கும். அடர் வண்ணங்கள் செக்ட் டிசைன் போன்றவை இதன் சிறப்பம்சம். கோயில்கள் செல்ல இவ்வகை புடவைகள் சரியான தேர்வாக இருக்கும்.

சின்னாளப்பட்டு புடவைகள்

இந்த வகை புடவைகள் பட்டுப் புடவைகளுக்கு மாற்றாக வந்த புடவைகள். முழுதும் ஜரிகைகளாலேயே நெய்யப்பட்டிருக்கும் ஆனாலும் பட்டுப் புடவை போன்ற தரம் இருக்காது என்பதால் இதன் விலை பட்டு புடவைகளை விடவும் மிக குறைவு. அணிவதற்கு சௌகர்யமாகவும் இருக்கும். ஏழைகளின் பட்டுப்புடவை சின்னாளப்பட்டு. இந்த ஊர் திண்டுக்கல் அருகே இருக்கிறது.


மதுரை காட்டன் புடவைகள்

மதுரையில் நெய்யப்படும் காட்டன் புடவைகள் மதுரை காட்டன் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இரண்டு நிறங்கள் மட்டுமே இதில் இணைந்திருக்கும். அதன் முடிவில் ஜரிகை பார்டர் சேர்த்திருப்பது புடவைக்கு அழகை அதிகரிக்கும். அடர் நிற புடவைக்கு வெளிர்நிற பார்டர்கள் வெளிர்நிற புடவைகளுக்கு அடர்நிற பார்டர்கள் என மாற்றி மாற்றி கொடுத்திருப்பது இதன் சிறப்பு.


செட்டிநாடு புடவைகள்

எங்கள்  ஊர் (காரைக்குடி) பக்கம் உள்ளவர்கள் நெய்யும் இந்த செட்டிநாடு புடவைகள்தான் இப்போதைய ட்ரெண்ட் ஆக இருக்கிறது. செட்டிநாடு புடவைகள் பருத்தியில் நெய்யப்பட்ட அதே சமயம் பார்டர்களில் கலைவண்ணம் காட்டக் கூடிய புடவைகள். இப்போது புத்தர் முகம் மற்றும் தஞ்சாவூர் சிற்பங்கள் ஆகிய பல கலை சிறப்புகளை இந்த புடவைகள் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

ஹாண்ட்லூம் புடவைகள்

கைத்தறி புடவைகள் தமிழ்நாட்டின் அடையாளம். காதி கிராப்ட் எனப்படும் அரசாங்கம் சார்ந்து இயங்கும் புடவைகளில் இந்த கைத்தறி புடவைகளும் ஒரு வகை. கோ ஆப்டெக்ஸ் கடைகளில் இதன் கலெக்ஷன்ஸ் அதிகமாக கிடைக்கும். அணிவதற்கும் தோற்றத்திற்கும் உயர்வாக காண்பிக்க வல்லது இந்த வகை புடவைகள்.

சில்க் காட்டன் புடவைகள்

தென்னந்தியாவின் மான்செஸ்டர் ஆன கோவையில் பட்டு மற்றும் பருத்தி இரண்டையும் ஒன்றாக நெய்து அதனை சில்க் காட்டன் புடவைகள் என அழைக்கின்றனர். இவ்வகை புடவைகள் உலக அளவில் பிரபலமானது. பட்டு போன்ற ஆடம்பரமும் இருக்காது அதே சமயம் பருத்தி போன்ற எளிமையும் இருக்காது. இரண்டிற்கும் நடுவிலான தோற்றத்தை தருவதால் இவ்வகை புடவைகள் பெண்களின் பெருமையாக பார்க்கப்படுகிறது.

கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment