Wednesday, 29 June 2016

கணினி திரையை நீண்ட நேரம் பார்த்தால் என்ன ஆகும்?

கணினி திரையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பார்வையில் தற்காலிகமாக சில பிரச்னைகள் ஏற்படும் என்கிறது ஒரு ஆய்வு. இந்தப் பிரச்னையால் உலகம் முழுவதும் பலர் பாதிப்படைந்துள்ளனர்.
கணினியில் நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருத்தல், அல்லது தொலைக்காட்சியை நீண்ட நேரம் பார்த்தல், அல்லது மடிக் கணினியில் விளையாடுதல் என ஏதாவது ஒன்றில் தீவிரமாக உங்கள் கவனம் இருந்து கொண்டிருந்தால், அதிலிருந்து மீளும் போது உங்கள் கண் பார்வை சில மணித்துளிகள் மங்கலாவதை உணர்ந்திருப்பீர்கள்.
கணினித் திரையை நீண்ட நேரம் பார்த்துக் பார்த்து உங்கள் பார்வை ஒரு கட்டத்தில் மங்கத் தொடங்கும். இந்நிலை தொடர்ந்தால் விழிகளில் பார்வைக் கோளாறுகள் ஏற்படக்கூடும். இந்தப் பிரச்னைக்கு 'கம்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ (Computer Vision Syndrome (CVS) எனப் பெயரிட்டுள்ளார்கள் மருத்துவர்கள். இதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில் இது தற்காலிகமான பிரச்னைதான். எளிதில் குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள். ஆனாலும் கண்கள் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். இது போன்ற பிரச்னைகள் வரும் முன் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.
கண் பார்வை மங்குவதற்கான காரணம் என்ன?
கணினி உங்கள் வாழ்க்கையை எப்போதிலிருந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது சமகாலத்தில்தான். அமெரிக்காவில் 2011-ம் ஆண்டில் 74.6 சதவிகிதம் நபர்கள் கணினியை பயன்படுத்தினார்கள் என்கிறது யு எஸ் சென்ஸஸ் பீரோ. இதுவே 1984-ல் 8.2 சதவிகிதம் தான். ஒரே இடத்தில் ஆணி அடித்தது போல உட்கார்வது கணினித் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது நிச்சயம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அவ்வகையில் நம் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.
கம்ப்யூட்டரை நெடு நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களில் அதிகளவு அழுத்தம் ஏற்படுகிறது. அது பார்வையை பாதிப்படையச் செய்துவிடும். தவிர திரையில் நீங்கள் எழுத்துருக்களைத் தொடர்ந்து பார்ப்பதினால் கண்களுக்கு அழற்சி ஏற்படும். கணினித் திரையின் குறைவான ஒளி மற்றும் திரை வெளிச்சம் பிரதிபலித்து மீண்டும் உங்கள் கண்களில் படும் போது கூடுதல் அழுத்தம் ஏற்படும். கணினியின் முன் உட்காரும் போது சரியான அமைப்பில் உட்கார வேண்டும். அப்படி உட்காரவில்லை என்றால் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். அறையில் வெளிச்சம் குறைவாக இருந்தால் அதுவும் கண்களை பாதிக்கும். கணினித் திரைக்கும் உங்கள் கண்களுக்குமான தூரம் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும்.

சிவிஎஸ் பிரச்னை உங்களுக்கு உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
பின்வரும் அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பார்வைக் குறைவு அதாவது காட்சிகள் மங்கலாகத் தெரிவது
வண்ணங்களைப் பார்ப்பதில் சிரமம் மற்றும் ஒளிக் கூச்சம்
நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் பணியாற்றிய பின் தூரப் பார்வையில் சிரமம் ஏற்படலாம்
கம்ப்யூட்டர் திரையில் உள்ள வடிவங்களைப் பார்ப்பதில் சிரமம்
களைப்பு ஏற்படுவது.
அடிக்கடி தலைவலி
அருகில் மற்றும் தொலைவில் கண் பார்வை மங்கலாகத் தெரிவது
கண்களில் சோர்வு, வலி, எரிச்சல், அரிப்பு, கண்கள் காய்ந்துபோதல்
கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படுவது
திரையை பார்த்த பின் மற்றவரைப் பார்க்கும்போது பிம்ப வேறுபாடுகள் தோன்றுவது
கம்ப்யூட்டர் திரையையும், மற்ற தாள்களையும் மாறிமாறிப் பார்ப்பதில் சிரமம்
பொருட்கள் இரட்டையாகத் தெரிவது (டிப்ளோபியா Diplopia (Double Vision))
கண் மருத்துவர் மேலும் சில பரிசோதனைகள் செய்த பின் உங்களுக்கு சிவிஎஸ் பிரச்னை உள்ளதா என்பதை உறுதி செய்வார். ஏற்கனவே கண்களில் பிரச்னை இருந்து, புதிதாக இந்த சிவிஎஸ் பிரச்னையும் சேர்ந்துவிட்டால் என்ன செய்வது?பயம் வேண்டாம், தகுந்த மருத்துவ உதவியுடன் குணம் பெற முடியும்.
சிவிஎஸ் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
உங்களில் பலருக்கு வேலையும் வாழ்வாதாரமும் கணினி சார்ந்துள்ளது எனும் போது, எப்படி அதைப் பார்க்காமல் இருக்க முடியும்? அன்றாட வாழ்விலிருந்து கணினியை முற்றிலும் தவிர்க்க முடியாது என்ற நிலைதான் பலருக்கு. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தையும் நிச்சயம் கவனம் கொள்ள வேண்டும். கணினிப் பயன்பாடு குறித்து சில பழக்க வழக்கங்களை பின்பற்றினால் சிவிஎஸ் பிரச்னை நிச்சயம் உங்களுக்கு வராது. கண் சிரமத்தைக் குறைக்கச் சில விஷயங்களை நீங்கள் தினமும் கடைபிடிக்க வேண்டும்.
கண் பார்வைக்கு நேராக கண்ணில் இருந்து 20 லிருந்து 28 அங்குல தூரத்தில் கணினித் திரை இருக்க வேண்டும். திரையின் மையம் சரியான கோணத்தில் இருப்பது நல்லது. உங்கள் பார்வையிலிருந்து சற்று கீழே 15 டிகிரியில் இருப்பது நலம்.
கண்ணுக்கு இதமான வெளிச்சப் பின்னணியில் எழுத்துக்கள் அடர்நிறத்தில் இருத்தல் வேண்டும்.
கால் பாதம் தரையில் தொடுமாறு இருக்க!!
இருக்கையில் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.
இரண்டு மணி நேரத்தில் 15 நிமிடம் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். கண் இமைகளை நிதானமாக கடிகாரச் சுற்றில் மூன்று முறையும் எதிர் கடிகாரச் சுற்றில் மூன்று முறையும் விழிகளை உருட்டி பயிற்சி செய்யவேண்டும்.
20-20-20 இந்த விகிதத்தை பின்பற்றவும். கணினித் திரையைப் பார்ப்பதில் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவெளி விடுவது நல்லது. திரையைப் பார்ப்பதற்கு முன் 20 நொடிகள் 20 அடி தூரத்தில் உள்ள பொருளைப் பார்க்க வேண்டும்.
இதையும் மீறி மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுகுங்கள்.

No comments:

Post a Comment